(Reading time: 12 - 24 minutes)

02. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

தறிப் போய் அமர்ந்திருந்த துளசியை , டாக்டர் கிரிதரன் அழைக்க மாமி, மாமாவுடன் உள்ளே சென்றாள் துளசி.

மருத்துவமனையில் சேர்த்த உடனேயே பாட்டியைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதைக் கண்டு உடனே அதற்கான முதலுதவியை செய்தார்.

ஏற்கனவே துளசியையும், பாட்டியையும் அறிந்திருந்த டாக்டர்,

Nizhal nijamagirathu

"அம்மா துளசி, ஏற்கனவே உன் பாட்டிக்கு ஒரு முறை சின்ன நெஞ்சுவலி வந்திருக்கிறது.. இந்த முறை கொஞ்சம் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்துள்ளதால், 'ஆஞ்சியோகிராம்' டெஸ்ட் முதலில் எடுத்துப் பார்க்க வேண்டும்.. உடனடியாக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவருக்கு சர்ஜரி செய்ய வேண்டி இருக்கும்.. அதற்கு முன்பு கிட்னிக்கு செல்லும் ரத்தக் குழாயில் 'ஸ்டன்டிங்' வேறு செய்ய வேண்டுமோ என்னவோ தெரியவில்லை.. அதற்கு சில டெஸ்ட்டுக்கள் எடுக்க வேண்டும்".

அதைக் கேட்ட துளசியோ, கண்ணீர் வழிய "டாக்டர்" என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

"துளசி, நீ படித்தப் பெண்.. இப்படி அழலாமா? பின்னர் பாட்டிக்கு யார் எடுத்துச் சொல்லுவது? உன் பக்க பலமாகத்தான் மாமா, மாமி உன் கூடவே இருக்கிறார்களே? எப்பொழுதும் பெண்கள் தைரியத்தை விடக் கூடாது".

"இன்னொன்று, இங்கே பார் துளசி, இதுவோ ஒரு சின்ன கவர்மெண்ட் ஹாஸ்பிடல்.. போதிய வசதிகள் அந்தளவிற்கு கிடையாது".

எப்படியும் பாட்டிக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டி இருக்கலாம்.. சில பேஷண்ட்ஸுக்கு எமெர்ஜென்சியாக உடனே சர்ஜரி செய்ய வேண்டி இருக்கும்.. நல்ல வேளையாக பாட்டிக்கு அப்படி ஒரு நிலைமை இல்லை.. நல்ல உழைத்த சரீரம்.. என்ன கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்".

'சர்ஜரி' தான் பாட்டியின் பிரச்சனைக்கு தீர்வு.. கண்டிப்பாக ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும்.. முதலில் 'ஸ்டெண்டிங்' செய்யலாமா , என்ன ஏது என்று தீர்மானிக்க சில டெஸ்ட்டுக்கள் பண்ண வேண்டும்.. இரண்டு நாட்கள் இங்கேயே தங்கி இருக்கட்டும்.. பாட்டியின் தற்போதைய நிலையும் தெரிந்து விடும்.. அதற்குப் பின் நீ ஹார்ட் சர்ஜரி செய்ய சென்னைக்குத் தான் செல்ல வேண்டி இருக்கும்.

"அய்யோ சென்னைக்கா? நான் என்ன செய்வேன்? டாக்டர், உங்களுக்கு தெரியாதா, எனக்கு பாட்டியை தவிர இந்த உலகில் யாருமே இல்லை என்று?"

"இவ்வளவு பெரிய ஹார்ட் சர்ஜரியா? அதுவும் சென்னையிலா? சென்னையில் எங்கு செல்ல வேண்டும் டாக்டர்?"

"டாக்டர், ஹார்ட் சர்ஜரி என்றால் நிறைய நாட்கள் சென்னையில் ஹாஸ்பிடலில் தங்க வேண்டி இருக்குமோ? எனக்கோ இந்த கிராமமும், அதன் சுற்றுப் புறமும் தவிர வேறு எதுவும் தெரியாது.. இந்த கிராமத்தை விட்டு வேறு ஊர்களுக்கு நான் சென்றதே இல்லை.. எது எப்படியோ, நீங்கள் தான் எனக்கு சென்னையைப் பற்றியும், அங்கு நான் எந்த ஹாஸ்பிடலுக்கு பாட்டியை அழைத்துக் கொண்டு சென்று காட்ட வேண்டும் என்று கொஞ்சம் சொல்ல வேண்டும்".

"டாக்டர், என்னைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. ஹார்ட் சர்ஜரி என்றால் நிறைய செலவு ஆகுமோ?"

"எது எப்படியோ, எனக்கு என் பாட்டியின் உயிர் தான் முக்கியம்.. எவ்வளவு செலவானாலும் சரி, பாட்டி சரியானாலே எனக்கு போதும். எங்க வீட்டையும், வேண்டுமானால் நிலத்தையும் கூட விற்று விடுகிறேன்.. டாக்டர், ஒரு லட்சம் போதுமா? நீங்கள் தான் உதவ வேண்டும் டாக்டர்.. எனக்கு எதுவும் வேண்டாம்.. பாட்டியை மட்டும் சரி பண்ணி திருப்பிக் கொடுங்கள்.. அது மட்டும் போதும்", என்று மீண்டும் அழ ஆரம்பித்தவளை,

கைகளை பற்றிக் கொண்டு ஆறுதல் கூற முயன்றார் மாமி.

"அம்மாடி, துளசி, கண்ணீரைத் துடைத்துக் கொள்.. ஆண்டவன் வழி காட்டுவான்.. தைரியமாக இரு.. முதலில் டாக்டர் கூறுவதை முழுவதுமாக கேள்".

டாக்டரோ, "துளசி, எனக்கு உன் நிலைமை புரிகிறது.. கட்டாயம் பாட்டிக்கு ஹார்ட் சர்ஜரி செய்யத்தான் வேண்டும்.. பாட்டியைப் பற்றிய ரிப்போர்ட் தயார் செய்து நான் தருகிறேன்.. நீ முதலில் சென்னைக்கு போ".

"என் அக்காவும், அவர் கணவரும் ஒரு பெரிய தனியார் ஹாஸ்பிடலில் சென்னையில் டாக்டர்களாக பணி புரிகிறார்கள்.. அவர்கள் வேறு துறையில் மருத்துவர்களாக இருந்தாலும், உனக்கு எப்படியும் உதவி புரிவார்கள்.

"மேலும், அவர்கள் முன்பு, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடலில் பணி புரிந்தவர்கள்.. அவர்களுக்கு இப்பொழுதும், அங்கு தொடர்பு இருக்கிறது".

"முதலில், நீ, நான் தரும் இந்த ரிப்போர்ட்டுக்களுடன் போய் அவர்களைப் பார்.. பணத்தைப் பற்றி இப்பொழுது கவலைப் படாதே.. சில தொண்டு நிறுவனங்கள், உன்னை போல பெரிய சர்ஜரிக்கு பணம் கட்ட கஷ்ட்டப் படுபவர்களுக்காக உதவி செய்ய தயாராக இருக்கின்றனர்.. அவர்களே அங்கு பாட்டியை ஜி.ஹெச்சில் அட்மிட் செய்ய உதவி புரிவார்கள்.. அங்கு எல்லா வசதியும் இருக்கின்றன.. நான் அவர்களுக்கு போன் செய்து உன்னைப் பற்றி கூறி விடுகிறேன்".

"நீ முதலில் நாளைக் காலை சென்னைக்கு சென்று அவர்களைப் பார்.. இரண்டு நாட்கள் பாட்டி இங்கேயே இருக்கட்டும்.. நாளை கிளம்பும் முன் இங்கு வா" என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அயர்ந்து உறங்கும் பாட்டியை சென்று ஒரு முறைப் பார்த்து விட்டு, மருத்துவமனை சிமெண்ட் பெஞ்ச்சில் மாமியுடன் அமர்ந்து கொண்டாள் துளசி.

முகம் வெளுத்து களையிழந்து, வாழ்க்கையே முடிந்தது போல் சோர்ந்து அமர்ந்திருந்தாள் துளசி.

சோகமாக இருந்தவளை பார்த்த மாமி மெல்ல, "துளசி, உன்னிடம் ஒரு உண்மையை நான் இப்பொழுது சொல்லத்தான் வேண்டும்" ,

என்று தொடங்கியவரை மெல்ல ஏறிட்டுப் பார்த்த துளசி, ஒன்றும் பேசாமல் இருக்க,

"அம்மாடி, துளசி, நீ நினைப்பது போல உன் பாட்டி ஒன்றும் வெறும் நிலத்தின் மீது மட்டும் கடன் வாங்கி இருக்க வில்லை.. மொத்த நிலத்தையும் தன் பேரில் மாற்றிக் கொண்டு விட்டான் அந்த பாவி கடங்காரன் தாசில்தார்.. எதோ, கொஞ்சம் குத்தகைப் பணம் மட்டும் போனா போகுது என்று தருவதாக சொல்லி விட்டான்.. போன வருடம் பூமி பொய்த்து போனதால், நிலத்தில் இருந்து அதிக வருமானம் ஒன்றும் பெரிதாக வரவில்லை."

"உன் பாட்டி, அதனால் வீட்டையும், அதிக வட்டிக்கு அவனிடம் கடனுக்கு எழுதி கொடுத்து விட்டார்கள்.. போகிறது, என்று வீட்டையே அவனுக்கு விற்றாலும், ஒன்றும் பெரிதாக தேறாதும்மா.. வட்டி பணத்துக்கே வீடு முழ்கி அசல் என்ன பெரிதாக வந்து விடப் போகிறது? இதுவோ ஒரு சின்ன கிராமம்.. அவனைத் தவிர வேறு ஒருவருக்கும் வீட்டை விற்க முடியாது".

"சரி, உன் நகைகள் எதையாவது விற்கலாம் என்றாலும், அவைகள் எந்த மூலைக்கு வரும்?" பத்து பவுன் நகை விற்றால் என்ன பெரிதாக வந்து விடும்?"

"நான் நினைக்கிறேன், நேற்று அந்த கடங்காரன் தாசில்தார் நீ இல்லாத வேளையில் உன் வீட்டுக்கு வந்து பாட்டியிடம் , நிலத்தின் மீதான வட்டிப் பணம் நிறைய பாக்கி இருப்பதால் ,அதை பாட்டி கட்டத் தவறி விட்டதால், அதை ஈடு கட்ட வீட்டை அவன் பெயருக்கு மாற்றுவது ஒன்று தான் சரியாக வரும் என்று அவரிடம் பிடிவாதம் பிடித்து கத்தி விட்டுச் சென்றான்.. அதனால் தானோ என்னவோ பாட்டி இன்று படுத்து விட்டார் போலும்?.. இந்த நிலையில் பணத்துக்கு என்னம்மா செய்யப் போகிறாய்?"

"துளசி, உனக்கே தெரியும்.. மாமாவிற்கு வரும் ஆசிரியர் பென்ஷனில் தான் ஜீவிக்கிறவர்கள் நாங்கள் என்று.. உனக்குத்தான் தெரியுமே, இருந்த இந்த சின்ன வீட்டை விற்று, எங்கள் ஒரே பெண் கல்யாணத்தை போன வருடம் நடத்தினோம்.. விற்ற அந்த வீட்டிலேயே வாடகை கொடுத்துக் கொண்டு காலம் தள்ளுகிறோம்.. இதில் எங்களிடம் என்ன மிச்சம் இருக்கும்? .. ஏதோ எங்களால் ஒரு ஐந்தோ பத்தோ புரட்ட முடியும்.. அவ்வளவுதான்".

"அதனால் என்ன, பண உதவி செய்ய முடியவில்லை என்றாலும் உடலில் எங்களுக்கு வலு இருக்கிறது.. எங்களால் ஆன எல்லா உதவிகளையும் சரீரத்தால் செய்ய காத்திருக்கிறோம்" என்று தழு தழுத்தார்.

"அய்யோ மாமி, எனக்குத் தெரியாதா உங்கள் நிலைமை?.. உங்களை நான் தப்பாகவே நினைக்க மாட்டேன்".

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.