(Reading time: 12 - 24 minutes)

"யாரும் இல்லாத அனாதைகளாக இருக்கும் என்னையும், பாட்டியையும் இவ்வளவு தூரம் நீங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளுவதே போதாதா? இந்த காலத்தில் யார் மாமி இப்படி சரீர உதவி கூட செய்யத் தயாராக இருக்கிறார்கள்? .. நமக்கு என்ன வந்தது என்று இல்லாமல், இத்தனை தூரம் நீங்கள் ஆதரவளிப்பது போதாதா?"

"மாமி அந்த தாசில்தார் இத்தனை மோசமானவனா? இப்படி கூட ஒரு வயதானவரை ஏமாற்றக் கூடுமா? மனசாட்சியே அவனுக்கு கிடையாதா? இவனை எல்லாம் என்ன செய்வது? கேட்க யாருமே இல்லையா? பாட்டி என்னிடம் இது பற்றி ஒன்றுமே கூற வில்லையே? இப்பொழுது என்ன செய்வது மாமி? எனக்கு எதுவும் தெரியவில்லையே?"

கவலையுடன் புலம்பியவளை,

"கலங்காதே துளசி, டாக்டர் சொன்னபடியே நீ, நாளை சென்னைக்கு சென்று அந்த டாக்டர் தம்பதிகளைப் பார்.. ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்க்கலாம்.. பிறகு ஆண்டவன் விட்ட வழி" என்ற மாமி, அப்பொழுது அங்கு மாமா அவர்களை நோக்கி வருவதைப் பார்த்தவர்,

"நானும், மாமாவும் இப்பொழுது வீட்டிற்குச் செல்கிறோம்.. உனக்கு சாப்பாடு மாமாவிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்.. நாளை, நீ சென்னைக்கு செல்லும் பொழுது, நான் பாட்டிக்கு துணை இருக்கிறேன்.. கவலைப் படாமல் நீ நல்ல படியாக போய் வா", என்று கூறி விடை பெற்று சென்றனர், அந்த நல்ல உள்ளம் கொண்ட தம்பதியர்.

மறு நாள், விடியற் காலையிலேயே புறப்பட்டாள் துளசி.. டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டுக்களுடன், அவர் கொடுத்த அட்ரெஸ்ஸை எடுத்துக் கொண்டு.. எங்கே செல்கிறாய் என்று கேட்ட பாட்டிக்கு, சென்னையில் இருக்கும் பெரிய டாக்டரிடம் ரிப்போர்டை காட்ட வேண்டும் என்று டாக்டர் கிரிதரன் சொன்னதாக சொல்லிவிட்டு, பாட்டிக்கு பயப்படும் படி ஒன்றுமில்லை என தைரியமளித்து விட்டு சென்னையை நோக்கி விரைந்தாள், துளசி.

டாக்டரின் சங்கடமான பார்வையை எதிர் கொண்டான் கரண்.

"சொல்லுங்கள் டாக்டர், நான் சீக்கிரம் சாகப் போகிறேனா? இனி என்ன மணி அடித்தாகிவிட்டதா?" என வேதனை ததும்பும் குரலில் பிடிவாதமாகக் கேட்டான்.

டாக்டர் அதற்கு, "இன் எ வே, அப்படித்தான்" என்றார்.

"இனி கான்சர், கொஞ்சம் கொஞ்சமாக சீக்கிரம் உடல் முழுவதும் பரவத் தொடங்கி விடும்.. இத்தனை நாட்களாக சில லிம்ப் நோட்ஸில் மாத்திரம் இருந்தது, இனி முழுவதும் பரவத் தொடங்கி விடும்.. உங்கள் உடலில் ஒவ்வொரு பாகமாக பாதிப்பு ஏற்பட தொடங்கும்.. இப்பொழுது நுரையீரல் பக்கத்தில் ஒர் இடத்தில் மட்டுமே தொடங்கி பரவி இருக்கிறது.. அதனால் மூச்சு திணறல் ஏற்படும்.. வலியும் வேதனையும் சற்று அதிகமாகும்.. அப்பொழுது நாங்கள், கீமோ ட்ரீட்மெண்டை நிறுத்தி விட்டு உங்கள் வலி குறைய மருந்து தருவோம்.. இந்த நிலையில் வேறு ஏதும் செய்வதற்கில்லை" என வருத்தப் பட்டவரை,

கரண், அவசர அவசரமாக இடை மறித்து, "டாக்டர் எவ்வளவு செலவானாலும் சரி, அமெரிக்கா போய் வைத்தியம் செய்து கொள்ளும் அளவுக்கு எனக்கு வளம் இருப்பது உங்களுக்கே தெரியுமே? ஏதாவது முயற்சி செய்யட்டுமா?" எனக் கேட்டவனைப் பரிதாபமாக பார்த்த டாக்டர்,

"கரண், நீ சொல்லி தான் உன் செல்வ நிலை எனக்குத் தெரியுமா என்ன? நீ என் நண்பனின் மகன்.. உங்கள் இருவரையும் சிறு பிராயத்திலிருந்து நானறிவேன்".

"அப்படியானால் டாக்டர்" என்ற சரணிடம் திரும்பியவர்,

"சரண், உன் சகோதரனுக்கு வந்திருப்பது கொடுமையானது தான்.. அதுவும், நான் அன்றே சொன்ன மாதிரி லேட் டயக்னாஸிஸ் ஆகி விட்டது.. படித்த நீங்களே இப்படி கோட்டை விட்டு விட்டீர்களே?"

"சில பல சந்தர்ப்பங்களில் நாம் உதாசீனப் படுத்தும் சிறு விஷயங்கள் கூட பெரிய ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்த நோய் ஒர் உதாரணம்.. கான்சருக்கான அறிகுறிகளை சரியாக நாம் புரிந்து கொள்ளாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் இழப்பின் அளவை அதிகரிக்கவே செய்யும்.. இனி நீங்கள் எந்த பிரபல மருத்துவமனைக்குச் சென்றாலும் அவர்களும் இதைத்தான் சொல்லுவார்கள்.. இது தான் புரொசிஜர். . ஸ்டேஜ் 4 கான்ஸரில் இருக்கும் போது சிகிச்சை கொஞ்சம் கஷ்டம் தான்.. ஏதற்கும் முன்னேற்பாடாக அனைத்து வேலைகளையும் முடித்து விடுங்கள்.. நேரம் இனி குறைந்து கொண்டே வரும்.. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையப்பா" என்று சொன்னவர்,

"மனதை தேற்றிக் கொள்.. இனி ஆக வேண்டியதை பார்" என்று கரணின் அருகில் வந்து அவன் கையை பிடித்து அழுத்தி ஆறுதல் கூறினார்.

அந்த பிசினஸ் சாம்ராஜ்ய அதிபதி சிறு பாலகன் போல் கண்களில் நீர் நிறைந்திருக்க, வேதனையுடன் டாக்டரை பார்த்தவன்,

"தாங்க்ஸ் டாக்டர், மீண்டும் பார்க்கலாம்.. ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் உங்களிடம் வருகிறேன்", என்றவன் , டாக்டர் நீட்டிய மருந்து பரிந்துரை சீட்டினை எடுத்துக் கொண்டு வாயில் நோக்கி சென்றான்.

சரண் டாக்டரிடம்," நானும் வருகிறேன் டாக்டர்" என்று கூறி விட்டு அங்கிருந்து வேகமாக சகோதரனிடம் சென்றான்.

வெளியே வந்து மூலையில் இருந்த இருக்கையில் அமர்ந்த சகோதரர்கள் இருவரும் ,ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

கணமாகக் கழிந்த அந்த சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட கரண்,

"டேய், இது எதிர்பார்த்தது தானே!! நான் இறப்பதைப் பற்றி கவலைப் படவில்லை.. உங்கள் அனைவரையும் இவ்வளவு சீக்கிரம் விட்டு பிரிய வேண்டியிருக்கிறதே.. தாய், தகப்பன், சகோதரன் என இவ்வளவு நல்ல உறவுகளையும், வசதி, வளங்களையும் தந்த இறைவன், ஏன் இப்படி அவசரமான முடிவை எனக்குக் கொடுத்தார்? நான் என்ன பாவம் செய்தேன்? தொழிலில் எவ்வளவு சாதித்திருக்கிறேன்.. நம் அப்பாவும், அம்மாவும் என் சாதனைகளைப் பார்த்து, 'சான்றோன் என கேட்ட தாய்' என் பூரித்திருக்கிறார்கள்.. ஆனால்.... இனி என்னுடைய அடையாளம் என்ன?"

"நான் நடந்த தடங்களில் என்னுடையது என ஒரு சுவடையும் பதிக்காமல் போகிறேன்.. ஏதோ காருண்யாவை திருமணம் செய்திருந்தால், என் மனைவி, என் குழந்தை, என் குடும்பம் என் வாழ்ந்ததற்கு ஒர் சான்று இருந்திருக்கும்.. இரண்டு வருடம் முன்னரே நம் தாய் சொன்னபடி மணந்திருந்தால் இந்நேரம் என் சுக துக்கத்தை பகிர ஒர் உயிர் இருந்திருக்கும்" என் யோசிக்காமல் பேசிய சகோதரனைப் பார்த்த சரண்,

"டேய், என்ன பேசுகிறாய்? உனக்கு வந்தது கொடுமையானது தான்.. ஆனால் உன்னால் தன் வாழ்வை ஒருத்தி தொலைக்க வேண்டுமா? உன் இறப்புக்குப் பின் அவள் என்ன செய்வாள்? அப்பனற்ற பிள்ளையாக உன் குழந்தை வளர வேண்டுமா? " என்று சற்று கோபமாக கேட்டான்.

இன்னமும், தன் வாழ்வைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்த கரண், "இல்லை டா. நீ என்ன சொன்னாலும் எனக்கென்று இப்பொழுது யார்? நம் அம்மா, அப்பாவிற்கு நான் போனாலும் நீ இருக்கிறாய்.. உனக்கு அவர்களும் நாளை வரப் போகும் உன் வருங்கால மனைவியும் சந்ததிகளும் இருப்பார்கள்".

"ஆனால் நான்.. எதிலும் தனித்து விளங்கியவன் தனியாகவே போகப் போகிறேன்.. காருண்யாவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் திருமணம் என்று அப்பொழுது சொல்லிவிட்டாள்..போதாதற்கு வேறு யாருக்கும் என்னுடைய காதலை பற்றி சொல்லவும் இல்லை.. இன்றோ, .. அவளிடம் இதைப் பற்றி கூறத் தான் வேண்டும்.. பாவம் அவள் எவ்வளவோ கனவுகளை சுமந்து நிற்பவள்."

சகோதரனின் சற்றே இகழ்ச்சியான புன்னகையை கண்டவன் ...

'சரி சரி,.. ஒத்துக் கொள்கிறேன்.. சற்று ஆடை, ஆபரணப் பிரியை..ஏதோ இல்லாத குறை எதைப் பார்த்தாலும் கொஞ்சம் ஆசைப் படுவாள்..ஆனாலும் கூட அவள் பாவம் நல்லவள் தான்."

"கொஞ்சமாக ஆசை படுவாளா?" என்ற சரணுக்கு,

"டேய், அவள் உன் அண்ணியாக வந்திருக்க வேண்டியவளடா..அதனால்.. கொஞ்சம் நிதானம் பேச்சில் .. சரி விடு ..இன்று அவளை அந்த ஹோட்டலுக்கு வரச் சொல்லி இருக்கிறேன்.. அவளிடம் நான் என்னைப் பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டும்.. வாடா, போகலாம், ஏற்கனவே லேட் ஆகி விட்டது" என்று சரணின் கையை பிடித்து இழுத்து சென்றான்.

உடன் நடந்த சரணுக்கு டென்ஷனில் வியர்வை ஆறாக பெருகியது.

"கடவுளே, இவன் என்ன இப்படி யோசிக்கிறான்? அம்மாவிடம் என்ன சொல்லுவது, என்று எண்ணியவாறு பான்ட்டின் பாக்கெட்டில் கை விட்டு கர்ச்சீப்பை எடுத்தவாறு சகோதரனுடன் விரைந்தான்.

இனி....

Episode # 01

Episode # 03

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.