(Reading time: 9 - 18 minutes)

08. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ரதன் அறிமுகப்படுத்திய பெண், தன் வழக்கை எடுத்து நடத்தக்கூடாது என்று சொல்ல ஸ்ரீதரும்,  கமலும் அதிர்ந்து போய் வரதனைப் பார்க்க, அவரும் இதென்ன என்பது போல் அவளைப் பார்த்தார்.

“என்ன சார் பார்க்கறீங்க.  நான் சீரியஸ்ஸாகத்தான் சொல்றேன்.  இவங்களை போக சொல்லுங்க”

“என்ன தேவி இது.  இப்படி பேசற.  உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.  டக்குன்னு கோவப்படாதேன்னு.   விசாரிக்காம இது என்ன ஒரு முடிவுக்கு வர்றது”

Vidiyalukkillai thooram

“சார் நீங்க அந்தப் ப்ரோக்ராம் பார்த்தீங்களா தெரியல.  அதுதான் இவங்களை உக்கார வச்சு பேசிட்டு இருக்கீங்க”

“ஏம்மா டிவில காமிக்கறதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மையா.  அப்படியே நம்பிடுவியா.  அப்படின்னா நீ இத்தனை நாள் வக்கீலா இருந்ததுக்கு அர்த்தமே இல்லை.  வக்கீலோட முதல் வேலை என்ன தெரியுமா.  என்ன நடந்ததுன்னு கேக்கறதுதான்.  அதை விட்டுட்டு கட்சிக்காரங்களை பேசவே விடாம பண்றது இல்லை”

“என்ன சார் நீங்க.  நான் இவங்க கேஸே எடுக்க வேண்டாம்ன்னு சொல்றேன்.  நீங்க என்னடான்னா கட்சிக்காரங்கன்னு சொல்றீங்க”, தான் சொல்ல சொல்ல புரியாமலேயே பேசுகிறாரே என்று கோவப்பட்டாள் தேவி.

“தேவிம்மா, அப்பாக்கிட்ட கோவப்படாதடா.  எனக்கு கமலை கிட்டத்தட்ட பத்து வருஷமாத் தெரியும்.  அவங்க மோசமானவங்க கிடையாதும்மா”,ரவி விளக்க அவனை முறைத்தாள் தேவி.

“ரவி சார்.  உங்களுக்குத் தெரியாதா,  வெளித்தோற்றத்தை வச்சு ஒருத்தரை நம்பக் கூடாதுன்னு.  எல்லாம் நடிப்பு ரவி சார்”

“ஏம்மா ஒருத்தன் பத்து வருஷமாவா நடிக்க முடியும்.  கொஞ்சம் யோசிச்சு பேசு தேவி”

“என்ன பெரிய பத்து வருஷம்.  சரி அப்படியே இருந்தாலும், உங்களுக்கு கமலைத்தானே தெரியும், அவங்க குடும்பம் எப்படி அவங்க மாமியார் குடும்பம் எப்படின்னு எல்லாம் தெரியுமா”, தேவியும் விடாமல் வாதாடினாள்.

“தேவி, என்ன இது.  இவங்களை உக்கார வச்சுட்டே அநாகரிகமா பேசிட்டு.  உன்னை நான் அப்படி வளர்க்கலைன்னு நினைக்கறேன். ஒரு சைடு மட்டுமே எந்த விஷயத்தையும் பார்க்கக் கூடாது.  நீ அப்படி ஒரு கண்ணோட்டத்துலதான் இப்போ இருக்க.  ரவி நீ தேவியைக் கூட்டிட்டு உள்ளப் போ”

“சார், என்ன சார் நீங்க .........”

“இல்லை தேவி, நீ சொல்றா மாதிரி என்ன விஷயம்ன்னு கூட கேக்காம இவங்களை அனுப்ப முடியாது.    இவங்க கூட இப்போ பேசப்போறேன்.  நான் உன்னை இவங்க கிட்ட பேசிட்டு வந்து பாக்கறேன்”, என்று கறார் குரலில் கூற, அதற்கு மேல் மறுத்துக்கூற முடியாமல் தேவி ஸ்ரீதரை முறைத்தபடியே ரவியுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

“சாரி ஸ்ரீதர்.  என் பொண்ணு அவசரப்பட்டு ஏதோ பேசிட்டா நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க”

“பரவாயில்லை சார்.  டிவி பார்த்தவங்க யாரா இருந்தாலும் எங்க மேல கோவமாத்தான் இருப்பாங்க”

“அது மட்டும் இல்லைப்பா.  ஆண்களால அவ நிறைய அடி பட்டுட்டா.  அதனால ஒரு பொண்ணுக்கு இன்னொரு ஆணால கஷ்டம் அப்படின்ன உடனே கத்திட்டா அவ்வளவுதான்.  சரி இந்தப் பேச்சை விடுங்க.  இப்போ நீங்க ஏன் கல்யாணம் நின்னுதுன்னு உண்மையான விஷயத்தை சொல்லுங்க”, என்று வரதன் கேட்க, ஸ்ரீதர் விமலாவை பொண்ணு பார்த்ததில் ஆரம்பித்து, எந்த சூழ்நிலையில் கல்யாணம் நின்றது என்பது வரை சொல்லி முடித்தான்.  அதைக் கேட்ட வரதன் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் யோசனையில் இருந்தார்.  அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பதைபதைப்பில் ஸ்ரீதரும், கமலும் வரதனைப் பார்த்தார்கள்.

“ஹ்ம்ம், உங்க கதையைக் கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியலை.  நீங்க சொன்னதை என் பொண்ணுக்கிட்ட சொன்னேன்னு வச்சுக்குங்க.  கண்டிப்பாவே நீங்க பொய்தான் சொல்றீங்கன்னு முடிவாவே சொல்லிடுவா”

“சார், என்ன இது, நாங்க சொன்னதை கதைன்னு சொல்றீங்க.  இதுதான் சார் நடந்த உண்மை”

“சாரிப்பா நான் அந்த ஆங்கிள்ல சொல்லலை.  உங்க கேஸ் நான் எடுத்து நடத்தறேன்.  நீங்க ரவிக்குத் நல்லாத் தெரிஞ்சவங்க அப்படிங்கறத விட, நீங்க பேசும்போது எனக்கு உண்மை மட்டும்தான் தெரியுது, அதனாலயும்தான்”

“சார், எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.  ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்.  ஆனா உங்கப் பொண்ணு இந்தக் கேஸ் எடுத்ததுக்காக உங்க மேல கோவப்படப் போறாங்க சார்”

“இல்லைப்பா, அவ சொன்னாப் புரிஞ்சுப்பா.  அவளுக்கு ஆண்கள் மேலத் தீராத கோவம் இருக்கு.  அது சமயத்துல இப்படி வெடிச்சுடும்”

“அப்படி என்ன சார் கோவம்.  நீங்களும், ரவி சாரும் கூட ஆண்கள்தானே?”, சிறு கோவத்துடன் ஸ்ரீதர் கேட்க, மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார் வரதன்.

“அது, அவ ஏன் அப்படி இருக்காங்கறதுக்கு காரணம் இருக்கு.  அது அவ மரண அடி வாங்கின காரணம்”

“என்ன சார் சொல்றீங்க? நீங்க இத்தனை புகழ் பெற்ற வக்கீல்.  ரவி சாரும் நல்ல நிலைமைல இருக்கற ஒரு தொழில் அதிபர்.  அப்படி இருக்கும்போது எப்படி சார் உங்க பொண்ணு மரண அடி வாங்கற வரைக்கும் விட்டீங்க.  ஏதானும் காதல் தோல்வியா சார்?”

“இல்லைப்பா காதல் தோல்வி எல்லாம் இல்லை.  ஹ்ம்ம் நீங்க ரவிக்குத் தெரிஞ்சவங்க.  வெளில விஷயத்தை விட மாட்டீங்கன்னு நம்பி நான் இப்போ உங்ககிட்ட தேவி பத்தி சொல்றேன்”

“கண்ணடிப்பா சார்.  எங்க ரெண்டு பேர்கிட்ட நீங்க சொல்றது எதுவா இருந்தாலும் அது வெளில போகாது. கவலைப்படாம சொல்லுங்க”

“ஹ்ம்ம், நீங்க கவனிச்சீங்களா தெரியலை.  நான் தேவியைப் பொண்ணுன்னு அறிமுகப்படுத்தி வச்சேன்.  ஆனா அவ என்னை சார் அப்படின்னுதான் கூப்பிட்டா”

“ஆமாம் சார்.  எனக்கே ஆச்சர்யமாத்தான் இருந்தது.  அப்பறம் ஒரு வேளை அலுவலக வேலையா நீங்க  இருக்கறதால அப்படி கூப்பிட்டாங்களோன்னு நினைச்சேன்”

“இல்லைப்பா அவளுக்கு அப்பா, சகோதரன், கணவன் இந்த உறவுகள் மேல எல்லாம் ஏகப்பட்ட வெறுப்புல இருக்கா. அதனாலதான் அவ என்னையும், ரவியையும் சார்ன்னு கூப்பிடறா”

“சார், உங்க மாதிரியும் ரவி சார் மாதிரியும் அப்பாவும், அண்ணனும் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.  அவங்க இப்படி இருக்கறதைப் பார்த்து எனக்கு அவங்க மேல கோவம்தான் வருது”

“இல்லைப்பா, என் பொண்ணு மாதிரியே நீயும் விஷயம் தெரியாம கோவப்படாத.  நீங்க ரெண்டு பேரும் நினைக்கறா மாதிரி தேவி என்னோட சொந்தப் பொண்ணு கிடையாது”, என்று கூற ஸ்ரீதரும், கமலும் அதிர்ந்து வரதனைப் பார்த்தார்கள்.

“என்ன சார் சொல்றீங்க.  அவங்க உங்க சொந்தப் பொண்ணு கிடையாதா? நீங்க தத்து எடுத்து வளர்த்தீங்களா?”

“ஒரு விதத்துல அப்படித்தான்.  ஆனால் இல்லை.  ரொம்ப குழப்பறேன் இல்லை.  உங்களுக்கு ஆரம்பத்துல இருந்து சொன்னாத்தான் அவ ஏன் இப்படி இருக்கான்னு புரியும்”, என்று தேவியின் கதையைக் கூற ஆரம்பித்தார் வரதன்.

(மக்களே கொசுவர்த்தி கொளுத்தி முதல் பிளாஷ்பேக்குக்கு ரெடி ஆகிக்கோங்க)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.