(Reading time: 8 - 15 minutes)

14. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

மேஜையில் இருந்த தனது தாயின் புகைப்படத்தை கையில் எடுத்தவ யுவி, “எப்ப தேவிம்மா வருவ??... மிஸ் யூ சோ மச்…” என்றபடி அதை அணைத்துக்கொண்டான் நெஞ்சோடு…

அப்போது, கதவு தட்டும் ஓசை கேட்க,

“யெஸ் கமின்…” என்றான் யுவி…

Piriyatha varam vendum

“சார்… நீங்க சைன் பண்ண வேண்டிய ஃபைல்ஸ்…” என்று அவனது அலுவலக மேனேஜர் வந்தார்…

“குடுங்க…” என்று அதை வாங்கி கையெழுத்து இட தொடங்கிய போது,

“சார்… உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?...” என்று மேனேஜர் கேட்க…

“கேளுங்க...” என்றான் யுவி…

“நீங்க வர இரண்டு மாசமாவது ஆகும் என்று பெரிய சார் சொல்லியிருந்தாங்க… ஆனா நீங்க ஒருவாரத்திலேயே வந்துட்டீங்க… பெரிய சார் கிட்டயும் விஷயத்தை சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க… அதான்…” என்று அவர் இழுக்க…

“அப்பாகிட்ட இப்போ எதையும் சொல்லவேண்டாம் மேனேஜர் சார்… சொன்னா வருத்தப்படுவாங்க… அதனால தான் வேண்டாம்னு சொன்னேன்…”

“வெளியூர் சுத்தி பார்க்க ஆசைப்படலையா?...”

“நம்ம ஊருல இல்லாததா வெளியூருல இருக்கு மேனேஜர் சார்?... இங்க இருக்குற பசுமையும், உயிர்ப்பும் வேற எங்கயும் இருக்காது, கிடைக்காது, தெரியாது…” என அவன் சின்ன சிரிப்புடன் சொல்ல…

“நீங்க வெளிநாட்டுல இருந்தவரான்னு ஆச்சரியமா இருக்கு…”

“நான் அங்க போனது சந்தர்ப்பத்தினால்…” என்றவன் சில வினாடி அமைதிக்குப்பின், “மேலும் தொழிலை விரிவுபடுத்த அங்க போயாக வேண்டிய சூழ்நிலை… அது உங்களுக்குத் தெரியாதா என்ன?...”

“ஹ்ம்ம்… தெரியுது…”

“அப்ப சரி…”

“ஏன்ப்பா யுவி… இப்படி அடம் பிடிக்கிற?...”

“உங்களை விடவா?...”

“நீ வா போன்னு நான் சொல்லணும்னா, நீங்க என்னை மரியாதை கொடுத்து பேச கூடாதுன்னு சொல்லிட்டு இப்போ வர அதை ஃபாலோ பண்ணுற… ஹ்ம்ம்…”

“ஹ்ம்ம்… தெரிந்தால் ஒகே தான் அங்கிள்…”

“நல்ல பிள்ளைப்பா நீ…” என சிரித்த நமச்சிவாயம்,

“வள்ளி எப்படி இருக்குறாப்பா?... கேட்டதா சொல்லு…” என சென்றுவிட,

வள்ளியின் நினைவில் மூழ்கினான் அவன்…

னிமூன் போயிட்டு வாங்க என்று தேவி சொன்ன போது மறு பேச்சு பேசாது அவனுடன் கிளம்பினாள் வள்ளி…

வெளிநாட்டில் அவன் இதுவரை தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்…

வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டவளிடம், “இது நம்ம வீடுதான்… இங்க நான் வந்தப்போ வாங்கினது… தேவிம்மா, நான், மையன், மூணு பேரும் இங்க தான் இருந்தோம் பல வருஷம்… இப்போ ஹனிமூன் கிளம்பணும்னு சொன்னதும், எனக்கு உன்னை இங்க தான் கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு…” என்றான் அவன் மெதுவாக…

“ஹ்ம்ம்…. வீடு நல்லா இருக்கு…” என்றவளிடம்,

“உள்ளே வா…” என்றான்…

அப்போது, “அட… யுவி தம்பி… வாங்க… வாங்க… நீங்க வருவீங்கன்னு தேவி சொன்னா… வாங்க வாங்க…” என்று வரவேற்ற மரகதம், வள்ளியைப் பார்த்துவிட்டு,

“எங்க யுவி தம்பிக்கு ஏற்ற பொண்ணு தான்… அழகா, லட்சணமா இருக்கேம்மா… என் கண்ணே பட்டுடும் போல இருக்கு…. இரு வரேன்…” என்றவர், உள்ளே சென்று ஆரத்தி தட்டை எடுத்து வந்தார்…

மூன்று சுற்றுகள் முடிந்து பொட்டும் இட்ட பின்னாடி, இப்போ உள்ளே வாங்க… என்றார்….

“ஆமா, பாட்டி, நான் இங்கே வரப் போறது பத்தி அம்மா உங்ககிட்ட சொன்னாங்களா?...”

“ஹ்ம்ம்… ஆமா யுவி…”

“நான் அம்மாகிட்ட இங்க போகப்போறேன்னு சொல்லவே இல்லையே?...”

“அவகிட்ட நீ சொல்லலைன்னாலும் அவ புரிஞ்சிப்பா யுவி… அவ உன் அம்மா… அவளுக்கு தெரியும் உன் மனசு…” என்றபடி சொல்ல அவனுக்கு தன் தாயின் முகம் மனதில் வந்து போனது… கூடவே புன்னகையும்…

அங்கே வள்ளி, அவன் நிழலாய் அவனுடனே அவனருகே இருந்தாலும், இருவரிடையே பேச்சுக்கள் இன்றி இருந்தது ஒவ்வொரு நாளும்…

வெளியே செல்லும்போது அவளையும் உடன் அழைத்து செல்வான்… பின் அந்த வீட்டில் மரகதம் பாட்டியுடன் அவள் சிறிது நேரம் பொழுதை கழிப்பாள்… பின் அறைக்கு சென்று விடுவாள்… இப்படியே ஐந்து நாட்களும் கழிய, ஆறாவது நாள் அங்கிருந்து கிளம்பினான் யுவி வள்ளியுடன்…

ந்தியா வந்து ஆறு நாட்களாச்சு… காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து உடை மாற்றி அவன் வரும்போது தயாராக காலை டிபனை எடுத்து வைத்திருப்பாள் வள்ளி…

பின் மதிய உணவை தயார் செய்து மதிய உணவு வேளை நெருங்கும்போது வீட்டு டிரைவரிடம் கொடுத்து விடுவாள்…

சாயங்காலம் 6 மணிக்கெல்லாம் அவன் வந்துவிடுவான்… அவள் தனியாக இருக்கிறாள் பகல் முழுதும் என்ற எண்ணம் மனதில் வந்ததும் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விடுவான்…

அவன் வரவை எதிர்நோக்கி காத்திருப்பாள் அவள் வீட்டு வாசலில் அமர்ந்தபடி…

அவன் வந்ததும் எழுந்து கொள்பவள், சிறு புன்னகையுடன், உள்ளே சென்று அவனுக்கு காஃபி தயார் செய்வாள்…

அவன் முகம் கழுவி வந்ததும், சிற்றுண்டியுடன் காஃபியும் கொடுத்துவிட்டு தோட்டத்திற்கு சென்று விடுவாள்… ஏனெனில் அவன் அங்கே தான் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பான்…

இன்றும் காலையில் சாப்பிடும்போது, அவனுக்கு பிடித்த பூரி, உருளைக்கிழங்கு செய்திருந்தாள்…

வழக்கமாக அவள் எது செய்தாலும் நல்லா இருக்கு என்று சொல்பவன், அன்று எதுவும் சொல்லவில்லை… பேசாமல் சாப்பிட்டு முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவன் அவளது நினைவாகவே இருக்க… போன் செய்தான்…

வீட்டு தொலைபேசி திடீரென்று ஒலி எழுப்ப, “யாரு போன் பண்ணுறா?...” என கேள்வியுடன் போனை எடுத்தாள் வள்ளி…

“ஹலோ…”

மனைவியின் குரல் முதன் முதலாக போனில் கேட்டதும், சிறிது நேரம் என்ன பேச என்று தெரியாது போனான்…

“ஹலோ… யார் பேசுறது?...” என அவள் கேட்டுக்கொண்டே இருக்க, அவன் அமைதியாக இருந்தான்…

“ஹலோ… போன் பண்ணிட்டு பேசாம இருக்குறீங்க…” என அவள் சற்றே குரல் உயர்த்தி சொல்லிவிட்டு, போனை வைக்க போன போது,

“வள்ளி…” என்ற தன் கணவனின் அழைப்பில் அமைதியானாள் அவள்…

“வள்ளி…” என அவன் மறுமுறையும் அழுத்தி அழைக்க,

“சாரிங்க… நான் யாரோன்னு நினைச்சு…” என அவள் சொல்லி முடிக்கும் முன்,

“ஹ்ம்ம்… புரியுது…” என்றவன்,

“சாப்பிட்டியா?....” எனக் கேட்க….

அவள் உள்ளம் மட்டும் அல்ல, இதழ்களும் உவகை கொண்டது…

“சாப்பிட்டேன்… நீங்க?...” என்று அவள் கேட்டதற்கு, “ஹ்ம்ம் சாப்பிட்டேன்…” என்றான் அவனும்…

பின் இருவரும் அமைதியாக என்ன பேச என்று தெரியாமல் இருக்க, “சொல்ல மறந்துட்டேன், இப்போ மதியம் மட்டுமில்ல, காலையில டிபனும் ரொம்ப நல்லா இருந்துச்சு… தேவிம்மா சமைச்சு சாப்பிடுற மாதிரி இருக்கு…” எனவும், அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

“ஹ்ம்ம்…” என்றாள் அமைதியாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.