(Reading time: 19 - 37 minutes)

10. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ன்ன ராசாத்தி.  எப்படி இருக்கற.  ஊருக்குப் போய் இருந்தானே உன் புருஷன்.  அவன் வந்துட்டானா”, சிகரட்டைப் பற்ற வைத்தபடியே கேட்டான் நல்லதம்பி. 

பெயரில் மட்டுமே நல்லவன், மற்றபடி அனைத்துக் கல்யாண குணங்களும் கொண்டவன்.  நாற்பது வயதில் நாய்க் குணம் என்பார்கள், இவன் இருபது வயதிலேயே அப்படி, அப்பொழுது, அவனின் தற்போதைய நாற்பது வயதில் எப்படி இருப்பான், நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.  பத்திலிருந்து ஐம்பத்து ஐந்து வயது வரை உள்ள பெண்கள் அவன் கண்ணில் தாங்கள் பட்டு விடக்கூடாது என்று தினமும் மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தப் பின்பே  வீட்டை விட்டு கிளம்புவார்கள்.  அவனின் மூதாதையர்கள் ஏகப்பட்ட சொத்துக்களை குவித்து வைத்திருக்க அதை எப்படி செலவு செய்து தீர்ப்பது என்று தெரியாமல் குழம்புபவன்.  போதாத குறைக்கு அவனுக்கு வாய்த்த மனைவியும் மிகப் பெரிய இடம்.  அதனால், பொறந்த வீடு, புகுந்த வீடு என எல்லாப் பக்கமிருந்தும் பண மழைதான். 

அவனின் குணக்கேடுகளை சகிக்காமல், எல்லாப் பெற்றோர்களையும் போல ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் திருந்தி விடுவான் என்று தப்புக் கணக்கு போட்ட நல்லதம்பியின் பெற்றோர், பக்கத்து ஊர் மிராசுதாரரின் மகள் மீனாவை  அவனின் இருபத்து இரண்டாம் வயதில் திருமணம் செய்து வைத்தார்கள்.  அவன் மனைவி அவனுக்கு மேல்.   திருமணம் ஆகி வந்து ஒரே வருடத்தில் மாமனாரையும், மாமியாரையும் பேசியே பரலோகம் அனுப்பிய புண்ணியவதி.  இவர்களுக்கு ஒரே மகள்.  தன் மகளின் குணங்கள் நன்கு தெரிந்ததால் அவர்களுடனேயே தங்கள் பேத்தியை வைத்துக் கொண்டு படிக்க வைக்கின்றனர் மீனாவின் பெற்றோர்.  அது இன்னமும் நல்லதம்பிக்கும், அவனின் மனைவிக்கும் வசதியாகப் போய் விட்டது.  மகளும், தங்களுடன்  இல்லாத காரணத்தால் தங்கள் இஷ்டப்படி ஆடிக்கொண்டிருக்கின்றனர்.  தன்னை தொல்லை பண்ணாமல், அடக்காமல் இருக்கும்வரை நல்லதம்பியின் ஆட்டத்தை அவன் மனைவியும் கண்டு கொள்ள மாட்டாள்.

Vidiyalukkillai thooram

“நேத்து ராவுக்கே அது வந்துடுச்சு எசமான்”

“அடப்பாவி வந்துட்டானா.  இன்னைக்கு உன்னைய நம்ம தோப்பு வீட்டுக்கு சாயங்காலமா வரச் சொல்லலாம்ன்னு இருந்தேன்.  இப்படி என் நினைப்புல மண்ணள்ளி போட்டுட்டியே புள்ள”, மிக வருத்தத்துடன் பேசினான் நல்லதம்பி.

“ஐயா, வெசனப்படாதீங்க.  நீங்க கூப்பிட்டு நான் வர மாட்டேன்னு சொல்லுவேனா.  எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு ஒரு ஆறு மணிக்கா அங்க வந்துடறேன், சரிங்களா’

“என் மனசுப்படி நடக்கறவ நீ ஒருத்திதாண்டி.  உனக்காகவே புதுசா சீலை கூட எடுத்து வச்சிருக்கேன்.  சரியா ஆறு மணிக்கு வந்துடு”

““ஐயா, அப்பறம் பையனுக்கு சைக்கிள் வாங்க பணம் கேட்டு இருந்தேனே.  அதையும் அப்படியே சாயங்காலம் கொடுத்தீங்கன்னா உதவியா இருக்கும்.  அடுத்த வாரம் அவனுக்கு பொறந்த நாளு வருது.  அப்போ வாங்கிக்கொடுத்தா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான்”

“ஹ்ம்ம், என்னதான் இனிப்பா பேசினாலும் காசு விஷயத்தில கறாரா இருப்பியே.  சாயங்காலம் வர சொல்ல காசும் சேர்த்து எடுத்து வரேன்.  சரி,  நான் போய் மேக்கால தோப்புல தேங்காய் இறக்கிட்டாங்களான்னு பார்த்துட்டு அப்படியே வீட்டுக்குப் போறேன்”, ராசாத்தியின் கன்னத்தில் தட்டியபடியே தோப்பை நோக்கி நடந்தான் நல்லதம்பி.

அவனின் தோப்பில் உலக அதிசயமாக மணியும், அவன் மகன் வெற்றியும் தென்னை மட்டைகளைக் களையும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.  இருவரும் வேலை செய்யாவிட்டாலும், வாய் பேச்சில் வல்லவர்கள் என்பதால், நல்லதம்பிக்கு ஜால்ரா அடித்தே அவனின் வலது மற்றும் இடது கையாக இருப்பவர்கள்.  நல்லதம்பி விட்டு வைத்த விரல் விட்டு எண்ணும் பெண்களில் அஞ்சலையும், தேவியும் அடக்கம்.  தனக்கு என்று இருக்கும் இரண்டே இரண்டு  அல்லக்கைகளின் ஆட்கள் மேல் கை வைக்க வேண்டாம் என்ற எண்ணமா, இல்லை தன் மனைவி அஞ்சலையிடம் தனிப் ப்ரியம் வைத்திருப்பதால் வந்த பயமா அது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

யாரிடமும் பச்சாதாபமோ, பரிதாபமோ காட்டாத நல்லதம்பியின் மனைவி அஞ்சலையிடம் மட்டும் காட்டும் நேசத்தின் காரணம்,  ஒரு முறை அவளிற்கு அம்மை போட்டிருந்த போது அவளை அஞ்சலை கவனித்து பார்த்துக் கொண்டதின் எதிரொலிதான்.  சிறிது கூட மனம் சுணங்காமல், வேப்பிலை குளியல், பத்திய சாப்பாடு என்று பார்த்து பார்த்து செய்தது.  அதுவும் எரிச்சல் தாங்காமல் அவள் பேசும் சுடு சொற்களை காதில் வாங்காமல் தன் பணிவிடையை தொடர்ந்தது.   அதுவும் தவிர அனாவசியமாக வம்பு பேசுவதோ, இல்லை தன் நன்மதிப்பை  தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவோ செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது.  இப்படி  எல்லாமாக சேர்ந்து நல்லதம்பியின் மனைவிக்கு அஞ்சலையை பிடிக்க வைத்தது.

“இன்னாயா மணி, வேலை எல்லாம் செய்யுற.  மானம் வேற மப்பா இருக்குது.  புயல், கியல் வந்துறப் போகுதுய்யா”, அவர்களை கிண்டல் அடித்தபடியே அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தான் நல்லதம்பி.

“என் பொண்ணு அவ படிச்ச ஸ்கூல்ல மொதோ மார்க் வாங்கி இருக்கறாங்க ஐயா.  இதுவரை எதுவுமே அதுக்கு வாங்கிக் கொடுத்தது இல்லை.  சரி இப்போவாச்சும் எதாச்சும் வாங்கிக் கொடுக்கலாமேன்னுதான் வேலைக்கு வந்தோம்.  இன்னைக்கு கூலி வாங்கிட்டுப் போய் அந்த சின்னக் குட்டிக்கு எதாச்சும் வாங்கிட்டு போவணுங்க ஐயா”

“அய்யயோ, இன்னைக்கு கண்டிப்பாவே புயல்தான் வரப்போகுது.  பாரு நீ எல்லாம் திருந்தி பொறுப்பான அப்பனா மாறிட்ட”

“ஹி ஹி ஹி, இல்லைங்கய்யா இப்படி என்னக்காச்சும் வேல செஞ்சு கொஞ்சச்சமாச்சும் பொறுப்பா இருந்தாத்தான், அஞ்சல நான் கேக்கரட்ப்போ துட்ட  கண்ணுல காட்டும், இல்லைன்னா  காசுக்கு சிங்கிதான் அடிக்கணும்”, தலையை சொரிந்து அசடு வழிந்தபடியே கூறினான் மணி.

“செம்ம விவரம்தான்ய்யா நீயி.  உன் பொண்ணு  பக்கத்து ஊருல படிக்குது இல்லை.   நம்ம ஊருலயும் இம்புட்டு படிச்ச புள்ளையா.  பரவா இல்லையே.  உன்னை மாதிரி தற்குரிக்கு அந்த மாதிரி அறிவாளிப் பொண்ணு.  ஏன்யா, இங்க இருந்து கிளம்பி ரெண்டு தெரு தாண்டி போற வரைதானே உன்கிட்ட காசு இருக்கும்.  அப்பறம் அது சரக்கா இல்லை மாறிடும்”, வெற்றியையும், மணியையும் நக்கல் பார்வை பார்த்தபடியே நல்லதம்பி கேட்டான்.

“இல்லைங்க, நம்ம செல்லாயி அக்கா துணி வாங்கி விக்குது இல்லை.  அதுக்கிட்ட பாவாட, சட்டை  தோப்புக்கே எடுத்தாற சொல்லி இருக்கேன்.  இங்கயே கூலி வாங்கி அப்படியே அதுல துணியும் வாங்கிடுவேன்.  அதும் இல்லாம இன்னைக்கு என் பொஞ்சாதி, மவ பாஸ் பண்ணினதுக்கு கோவில்ல ஏதோ பூசைக்கு கொடுத்திருக்கு.  அதனால இன்னைக்கு தண்ணி அடிக்காம வீட்டுக்கு போவணும் ஐயா”

“ஓ ஒழுங்கா போகலைன்னா  உன் பொஞ்சாதி உனக்கு பூசை போட்டுடுவாளாக்கும்”, தன் ஜோக்கை தானே பாராட்டி சிரித்துக் கொண்டான் நல்லதம்பி.  இந்தாளு கொடுக்கற பிசுநாறி காசுக்கு எதை எல்லாம் கேட்க வேண்டி இருக்கிறது என்று மணியும் மறுபடி  அசடு வழிய ஒரு சிரிப்பு சிரித்து வைத்தான். 

“ஏன்யா பொண்ணைக் கண்ணுலேயே காட்ட மாட்றையே,  மொதோ மார்க் வாங்கி இருக்குது.  நான் அதை பாராட்டியே ஆகணும்.  நீ என்ன பண்ற நாளைக்கு உன் பொண்ணையும், பொஞ்சாதியையும் கூட்டிட்டு வீட்டுக்கு வா.  என் வீட்டுக்காரிக்கும் உன் பொஞ்சாதியை ரொம்பப் பிடிக்கும்.  என்ன நாளைக்கு கூட்டி வர்றியா”

ஐயோ, இந்தாள் வீட்டுக்கா.  இந்தாள் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி நடந்தாலே என் பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லையே,  இதுல வீட்டுக்கே கூட்டிப் போனா என்ன ஆகுமோ.  இதை சொன்னா அஞ்சலை வேற என்னை வகுந்துடுவாளே, என்ற யோசனையில் கதிகலங்கினான் மணி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.