(Reading time: 19 - 37 minutes)

யோவ் நடிக்காதையா.  நேத்துத்தானே தோப்புவீட்டுக்குப் போய் ராசாத்திக் கூட ஜல்சா பண்ணிட்டு வந்த....”, என்று கேட்க, மறுபடி ஜெர்க் ஆனான் நல்லதம்பி, அதுக்குள்ள எந்த நாய் வந்து இந்த  பீப்பாய்க்கிட்ட  போட்டுக்கொடுத்தது என்று மனதிற்குள் அதிர்ந்தபடியே மீனாவைப் பார்த்தான்.

“என்னையா பாக்கற.  நீ அவளுக்கு சேலை வாங்கிக்கொடுத்த மேட்டர் வரைக்கும் என் காதுக்கு வந்துடுச்சு”

“ஐயோ  மீனு,  உன்கிட்ட யாரோ வந்து தப்பா சொல்லி இருக்காங்கம்மா.  நேத்து ஃபுல்லா நான் தென்னந்தோப்புலதான் இருந்தேன்.  நீ வேணா அஞ்சலை புருஷன் மணிக்கிட்ட கேட்டுப் பாரு”

“யாரு அந்தக் குடிகாரன்கிட்டையா, ஒரு பாட்டில் சாராயம் வாங்கிக்கொடுத்தா, நீதான்   கொலை பண்ணின அப்படின்னு சொல்லுன்னு சொன்னாக்கூட சொல்லுவான்.  அவன்கிட்ட  உன்னைப்பத்தி கேக்க சொல்ற”, எந்தப் பக்கமும் நகர முடியாமல் கிடுக்கிப் பிடி போட்டாள் மீனா.

“சத்தியமா சொல்றேன் மீனு.  நான் ராசாத்தியைப் பாக்கவே இல்லை.  இப்படி நம்பாம இருக்கறியே”

“நான்தான் நடிக்காதன்னு ஒரு வாட்டி சொல்லிட்டேன் இல்லை.  மறுபடி மறுபடி அதையேப் பண்ணிட்டு.  இங்க பாரு நீ எவளை வேணாப் பாரு, யார் கூட வேணா இரு, எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை.  ஆனால் எவளாச்சும் வயத்தை தள்ளிட்டு வந்து நின்னான்னு வச்சுக்க, எங்க அண்ணங்க கிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன்.  நானே உன்னைய வகுந்துடுவேன், புரியுதா”, மீனா நல்லதம்பியை மிரட்டிக் கொண்டிருக்கும்போதே மணி தன் குடும்பத்தாருடன் அங்கு வந்து சேர்ந்தான்.

“வா அஞ்சல, என்ன குடும்பத்தோட வந்திருக்க?”, என்று மீனா கேட்க, ஐயோ இப்போத்தான் ராசாத்தி விஷயத்துல மாட்டினோம், மறுபடி நாமதான் தேவியைப் பார்க்கணும்ன்னு சொன்னோம்ன்னு தெரிஞ்சுது, சிக்கனுக்கு பதிலா நம்மை வருத்துடுவாளே என்று பயந்தான் நல்லதம்பி.

“அம்மா, தேவி பத்தாங்கிளாஸ்ல அவ படிச்ச பள்ளிக்கூடத்துல மொதோ மார்க் வாங்கி இருக்கும்மா.  அதான் உங்களாண்ட சொல்லிட்டு போவலாம்ன்ன்னு அவளையும் சேர்த்து கூட்டி வந்தேன்”

“ஓ ரொம்ப சந்தோஷம் அஞ்சலை.  நீ படற கஷ்டத்துக்கு உன் பொண்ணு ஒருத்திதான் நல்லபடியா இருக்கா”, என்று மணியைப் பார்த்தபடியே கூற, அவன் தலையைக் குனிந்தான்.

“மேல என்ன படிக்கப்போற தேவி?”, என்று மீனா கேட்க, தேவியும் வணிகப் பாடத்தை படிக்கப் போவதாக சொல்ல, அவளின் மேல்படிப்புக்கு ஆகும் செலவைத் தானே கொடுப்பதாக  மீனா அஞ்சலையிடம் கூறினாள்.  அஞ்சலையின் குடும்பமும் மீனாவிடம் நன்றி கூறி விடைபெற்றது.  நல்லதம்பியோ தேவியின் அழகில் வாயில் ஈ போவதுக் கூட தெரியாமல் ஜொள்ளு விட்டபடி நின்றிருந்தான். 

நல்லதம்பி வாயில் ஜொள்ளு வழிய  நிற்பதைப் பார்த்த மீனா அவன் முதுகிலேயே பளார் என்று ஒரு அடிப்போட்டாள்.  அவளின் அடியில் விட்ட ஜொள்ளை அப்படியே உள்ளிழுத்துக்கொண்ட நல்லதம்பி அய்யயோ இவ பார்த்துட்டாளா, சாதாரணமா கைல தீச்சட்டி இல்லாமையே அந்த எப்பெக்ட் கொடுத்து ஆடுவா, இப்போ அதை வேற கொடுத்துட்டோமே  என்று பயந்தபடியே மீனாவைப் பார்த்து ஒரு இளிப்பு இளித்து வைத்தான்.

“சகிக்கலை, இளிக்கறதை கொஞ்சம்  நிறுத்தறியா, என்ன பார்வை எல்லாம் ஒரு பக்கமா போகுது”

“இல்லை மீனா, நம்ம ஊருல இத்தனை படிச்ச பொண்ணா, அதுவும் மணிக்கு இப்படி ஒரு அறிவாளிப் பொண்ணா அப்படின்னு  ஆச்சர்யத்துல பாத்துட்டு இருந்தேன்”, அப்பாடி ஒரு வழியா சமாளித்து விட்டோம் என்று  நினைக்க, அவன் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டாள் அவன் மனைவி.

“யாரு நீயி அவளை அறிவாளிப் பொண்ணுன்னு பார்த்த.  அவ்ளோ நல்லவனா நீயி.  நம்பிட்டேன்.  நீ அவளை அறிவாளிப் பொண்ணுன்னு பார்த்தியா, இல்லை அழகானப் பொண்ணுன்னு பார்த்தியான்னு எனக்கு நல்லாத் தெரியும்.  அஞ்சல கிட்டயோ, இல்லை அவ பொண்ணுக்கிட்டயோ உன் வேலையைக் காட்டினேன்னு வைய்யி, நீ அத்தோட தொலைஞ்ச, ஞாபகம் வச்சுக்கோ”, நல்லதம்பியை மிரட்டிவிட்டு உள்ளே சென்றாள் மீனா.

உஷ்  அப்பா, இவளோட ஒன்றக்கண்ணுக்கு ஒரு விஷயமும் தப்பறதில்லை.  மீனா இருக்கும்போது இனி உஷாராத்தான் இருக்கணும்.  இருந்தாலும் அந்த தேவிப் பொண்ணு என்னா அழகு, எப்படி இத்தனை நாளா நம்மக் கண்ணுல மாட்டமா போச்சு என்று யோசனையில் ஆழ்ந்தான் நல்லதம்பி.

ரண்டு வாரக்காலம் வேகமாக ஓட, தேவியை பதினொன்றாம் வகுப்பில் கொண்டு போய் மணியும், அஞ்சலையும் சேர்த்து விட்டு வந்தார்கள்.  தேவியின் கணித ஆசிரியையே தேவையான அனைத்துப் புத்தகங்களையும் கொடுத்து விட்டதால், மீனா கொடுத்த பணத்தை அஞ்சலை வேண்டாம் என்று மறுத்துவிட வழக்கம் போல் மீனா அஞ்சலையின்  நேர்மையில் வியந்து நின்றாள்.

பள்ளி ஆரம்பித்து இரண்டு  மாத காலம் விரைந்து சென்றது.  அன்று தேவிக்கு முதல் மாதத் தேர்வு.   அதிகாலையில் நான்கு மணிக்கே எழுந்து அவள் படித்துக்கொண்டிருக்க, அஞ்சலை ஆறு மணியாகியும் எழுந்து கொள்ளாமல் இருப்பதைப் பார்த்து அவளை எழுப்பினாள் தேவி.

“அம்மா, மணி ஆறு ஆகுதும்மா,  எழுந்துக்கோ.  இன்னைக்கு மீனாம்மா வீட்டுக்கு சீக்கிரம் போகணும்ன்னு சொன்ன இல்லை”

“ஹ்ம்ம் அம்மாக்கு ராவெல்லாம் ஒரே காய்ச்சல் கண்ணு.  உடம்பு வலி வேறப் பின்னுது.  எழும்பவே முடியலை”

“என்னமா நீயி, என்னை எழுப்பி சொல்லி இருக்கலாம் இல்லை.  கஷாயம் போட்டுக் கொடுத்திருப்பேனே.  சரி நீ இன்னைக்கு வேலைக்குப் போக வேண்டாம்.  நான் மீனாம்மா வீட்டுக்குப் போய் சொல்லிட்டு அங்க இருந்தே போன்ல மத்த வீடுங்களுக்கும் சொல்லிடறேன்”

“இல்ல தேவிம்மா, இன்னைக்கு மீனாம்மா வீட்டுல ஏதோ பூசை போடறாங்களாம்.  அதால கண்டிப்பா போயி ஆகணும், மத்த வீட்டுக்கானும் லீவு சொல்லிடலாம். அதே மாதிரி பள்ளிக்கூடத்துக்கும் சத்துணவு சமைக்க  போய்தாம்மா ஆகணும்.  கூட வேலை செய்யற பொண்ணால தனியா வேலை செய்ய முடியாது”

“ப்ச், உடம்பு நெருப்பாக் கொதிக்குது, இதுல நீ எப்படி வேலை செய்வ.  சத்துணவுக் கூடத்துல அத்தனை பெரிய பாத்திரம் எல்லாம் எப்படி தூக்கி வைப்ப”

“பாவம்டி, சுகுணா ஒண்டியா வேல செய்ய முடியாது.  அதுவும் அங்க வர்ற குழந்தைங்கள்ல பாதி மதிய சாப்பாட்டுக்காகத்தான் பள்ளிக்கூடத்துக்கே வருதுங்க”

“எல்லாரையும் பார்த்து பரிதாபப்படு, ஆனா உன் உடம்பை பார்த்துக்காத.  சரி விடு, மீனாம்மா வீட்டுக்கு நீ போக வேண்டாம்.  நான் போறேன்.   மத்த வீட்டுக்கெல்லாம் லீவு சொல்லிடறேன்.  இப்போ உனக்கு கஷாயம் போட்டுத்தர்றேன்.  குடுச்சுட்டு திரும்பி படுத்துத் தூங்கு”

“உனக்கு பள்ளிக்கூடத்துல பரிட்சை இருக்குன்னு சொன்னியே கண்ணு.  நீ வேலைக்குப் போனா எப்படி படிப்ப.   எனக்கு கஷ்டம் ஒண்ணும் இல்லை தேவி.  கஷாயம் மட்டும் வச்சுக் குடு.  அதைக் குடுச்சுட்டு நானே போயிட்டு வர்றேன்”

“இந்தப் பேச்சே வேணாம்,  நான் நல்லாப் படிச்சுட்டேன்.  கஷாயம் போட்டுட்டு அப்படியே இட்லியும் அவிச்சு வைக்கறேன்.  தூங்கி எழுந்த பிறகு அதை சாப்பிடு.  சத்துணவு வேலைக்கு மட்டும் போ போதும்.  சாயங்காலம் செய்யற வீட்டு வேலைக்கும் நானே ஸ்கூல்லேர்ந்து நேராப்போய்ட்டு வந்துடறேன்”, என்று அஞ்சலையிடம் கூறிவிட்டு மடமடவென்று வேலைகளை கவனிக்க சென்றாள் தேவி. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.