(Reading time: 19 - 37 minutes)

ன்னையா ரொம்ப யோசிக்கற.  நம்ம பொண்ணை நானே பாராட்டலைனா நல்லா இருக்காது மணி.  அதாலதான் சொல்றேன்.  தவிரவும் அது மேல படிக்கறேன்னு சொல்லுது இல்லை.   அதுக்கும் எதுனா உதவி செய்யலாமான்னு பார்க்கறேன்.  இதெல்லாம், இங்க வர வச்சு பேசினா நல்லா இருக்குமா.  அதுதான் உன்னை வீட்டுக்கே கூட்டிட்டு வர சொல்றேன்”

“ஐயா, இன்னைக்கு வீட்டுக்கு போனாத்தான் ஸ்கூல்ல என்ன சொன்னாங்கன்னு தெரியும்.  அதால அஞ்சலை கிட்ட பேசிட்டு நாளைக்கு ஒண்ணும் வேலை இல்லைன்னா கூட்டிட்டு வரேன் ஐயா”, தன் மனைவியின் பெயரை சொல்லி தப்பிக்க பார்த்தான் மணி.

“ஏன்யா, காலைல எப்படியும் எட்டு மணிக்கு எங்க வீட்டு வேலைக்குதான் அஞ்சலை வருமே.  அப்போவே  உன் பொண்ணையும் சேர்த்து கூட்டிட்டு  வர சொல்லு”, என்னிடமேவா என்று பதிலடி கொடுத்தான் நல்லதம்பி.

வேறு வழி இல்லாமல் மணியும் அழைத்து வருவதாகக் கூறி தன் வேலையைத் தொடர சென்றான். 

ணியும், வெற்றியும் வேலை முடிந்து வீடு வந்து சேர, அங்கு தேவியும், அஞ்சலையும் கோவிலிற்கு செல்ல தயாராக இருந்தார்கள்.  இருவரும் நடனம் ஆடாமல் நல்ல படியாக வந்ததை பார்த்து தேவியும், அஞ்சலையும் மனம் மகிழ்ந்து போனார்கள். 

“யோவ், இன்னைக்கு நல்லதுக்கு மேல நல்லாதா நடக்குதுய்யா.  தேவிப் பொண்ணப் பத்தி அவங்க டீச்சருங்க எல்லாம் அம்புட்டு பெருமையா பேசினாங்க.  நீங்களும் புத்தியோட ஒழுங்கா வீடு வந்து சேர்ந்திருக்கீங்க.  நான் பட்ட கஷ்டத்தை பாத்து ஆத்தா கண்ணத் தொறந்துட்டான்னு நினைக்கறேன்”

“எம்மா, நாங்க ஆடாம வந்ததுக்கே இம்புட்டு சந்தோஷப்படறியே.   இன்னும் நாங்க தேவிக்கு வாங்கி வந்ததைப் பாத்தா என்னா சொல்லுவியோ.  நைனா, எதுக்கும் பார்த்துக் குடு.  சந்தோஷத்துல பட்டுன்னு பூடப் போகுது அம்மா”

“டேய் வாயக் கழுவுடா.  எனக்கு இருக்கறதே ஒரே ஒரு பொண்டாட்டி.  அவளும் போய் சேர்ந்துட்டா, அப்பறம் யாரு எனக்கு நெதமும் துட்டு தருவா”, என்று மணி சிரித்தபடியே கேட்க, அஞ்சலை அவனை முறைத்து தோளில் இடித்தபடியே உள்ளே சென்றாள்.

“தேவிம்மா, இந்தா நீ பள்ளிக்கூடத்துல மொதோ மார்க் வாங்கின இல்ல, அதுக்கு இந்த நைனாவும், அண்ணனுமா சேர்ந்து உனக்கு என்ன வாங்கி இருக்கோம் பாரு”, தான் வாங்கிய துணியை தேவியிடம் கொடுத்தான் மணி.

“ரொம்ப தேங்க்ஸ் நைனா.  சூப்பரா இருக்குது.  நேத்துதானே அம்மா எனக்கு துணி எடுத்து குடுத்துது.  திருப்பி நீயும் ஏன் அதே வாங்கின?”

“தேவி, உங்க நைனா மனசு வந்து குடுக்கும்போதே வாங்கிக்கோ.  கல்யாணம் ஆகி இம்புட்டு வருஷத்துல எனக்கு ஒரு ஜாக்கெட் துணி கூட இந்தாள் வாங்கினது இல்லை.  கலர், துணி ரெண்டும் நல்லா இருக்குதுய்யா.  எங்க வாங்கின?”

“செல்லாயி அக்காக்கிட்ட வாங்கினேன் புள்ள”

“சரி வாங்க நேரம் ஆகுது நாம கோவிலுக்கு கிளம்பலாம்”, தேவியின் குடும்பம் கோவிலிற்கு சென்று சாமி கும்பிட்டு வீடு திரும்பினர்.  மறுநாள் தேவியை நல்லதம்பி வீட்டுக்கு அழைத்து செல்வது பற்றி அஞ்சலையிடம் எப்படிக் கூற என்று யோசித்தபடியே அறையை அளந்தான் மணி.

“யோவ், வந்து படுய்யா.  நாளைக்கு பொழுதோட நான் வூட்டு வேலை செய்யப் போவணும்.  குறுக்காலையும், நெடுக்காலையும் நடந்து தூக்கத்தை கெடுக்காத”

“அஞ்சல, நான் ஒண்ணு சொல்லுவேன்.  கோவப்படாம கேக்கணும், சரியா”

“நீ இம்புட்டு நல்லவனா பேசும்போதே எனக்கு சந்தேகமாத்தான் இருக்குது.  என்னா, செல்லாயி அக்காக்கிட்ட கொடுக்க துட்டு இல்லையா?”

“அய்யோ, அது இல்ல புள்ள.  அதெல்லாம் முழு துட்டு குடுத்துத்தான் வாங்கியாந்தேன்.  இது வேற.  இன்னைக்கு நானும், வெற்றியும் நம்ம நல்லதம்பி ஐயாவோட தோப்புலதான் வேலை செஞ்சோம்.  அப்போ ஐயாக்கிட்ட நம்ம தேவி மொதோ மார்க் வாங்கினது பத்தி சொன்னேனா.  அய்யாவும் அவளைப் பாராட்டணும்.  அதால நாளை காலில நீ வேலைக்கு வரசொல்ல தேவியைக் கூட்டிட்டு வர சொன்னாரு”

“யோவ் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்காய்யா.  அந்தாள் பொறந்த குழந்தையைத் தவிர மத்த எல்லாப் பொண்ணுங்களையுமே ஒரு மார்கமாத்தான் பார்த்து வைப்பேன்.  நானே அந்தாளோட சம்சாரத்தால, அவன்  கைல மாட்டாம தப்பிச்சு வரேன்.  இதுல நீ  பொண்ணைக் கூட்டிட்டு போவனும்ன்னு சொல்ற”

“இல்ல அஞ்சல.  அவரு தேவிக்கிட்ட அப்படி தப்பாலாம் நடக்க மாட்டாரு.  நம்மப் பொண்ணுக்கு படிக்கக்கூட உதவி செய்யறேன்னு சொல்லி இருக்காரு தெரியுமா? இன்னைக்குக்கூட வாங்கின துணிக்கு காசு பத்தலை.  ஐயாதான் கொடுத்தாரு”

“அந்தாள் உதவி செஞ்சு கிழிச்சான்.  சரி, நாளைக்கு காலைல நாள் வேலைக்குப் போவ சொல்ல இட்டுட்டுப் போறேன்.  அந்தம்மாவும் இருக்க சொல்லோ அவன்  ரொம்ப நச்சு வேல பண்ண மாட்டான்”, என்று ஒரு வழியாக சம்மதம் சொன்னாள் அஞ்சலை.

றுநாள் காலை அஞ்சலை வேலைக்கு செல்லும்போது மணியும் சேர்ந்து கிளம்ப, “இப்போ நீ எதுக்கு கூட வர்ற”, என்று கடுப்படித்தாள் அஞ்சலை.

“இல்ல புள்ள, நீ அய்யாவைப் பார்த்துட்டு அப்படியே அவங்க வீட்டுல வேலை பாக்க ஆரம்பிச்சுடுவே.  தேவிப்பொண்ணு அங்கவே சும்மா உக்காரணும்.  அதான் நான் உங்க கூடவே வந்துட்டு தேவியை வீட்டுக்கு இட்டுட்டு வந்துடறேன்”

“உனக்கே அந்தாள் மேல நம்பிக்கை இல்லை பாத்தியா.  அதான் கூட வர.  இதுக்கு ஒரு சால்ஜாப்பு வேற.  சரி சரி வா, எனக்கு நேரம் ஆவுது.  பெரிய வீட்டு வேலை முடிச்சுட்டு இன்னும் நாலு வூட்டுக்குப் போவணும்”, என்று அஞ்சலை கூற, எப்படியோ சரியா கண்டுபிடிக்கறாளே என்று மணி நினைக்க, வெற்றியைத் தவிர மற்ற மூவரும் நல்லதம்பி வீடு நோக்கி சென்றனர்.

நல்லதம்பி வீட்டு வாசல் திண்ணையிலேயே அமர்ந்து பேப்பர் படிக்கிறேன் பேர்வழி என்று ரோடில் செல்லும் பெண்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.  அவனின் நோட்டத்தை உள்ளே உள்ள ஊஞ்சலில் அமர்ந்திருந்த அவன் மனைவி நோட்டமிட்டாள்.  யாரோ தன்னை கவனிக்கிறார்கள் என்ற உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்த்த நல்லதம்பி தன் மனைவி மீனா தன்னை கண்காணிப்பதைப் பார்த்து பதைபதைத்து எழுந்து உள்ளே சென்றான்.

“என்னாய்யா மொத்தம் எத்தனை பொண்ணுங்க இன்னைக்கு தெருவோட இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும்  நடந்தாங்க.  எண்ணி வச்சிருப்பியே.  வயசு வாரியா சொல்லு பாக்கலாம்”, தன் நகப்பூச்சை அழகு பார்த்தபடியே கேட்டாள் மீனா.

“நீ என்ன கேக்கற மீனு.  எனக்கு ஒண்ணுமே புரியல.  நான் உக்கார்ந்து பேப்பர்தான் படிச்சுட்டு இருந்தேன்”, மிக சாதுவாக முகத்தை வைத்துக்கொண்டு நல்லதம்பி பதிலளிக்க, அவனை சேதுவாக மாற்றும் யோசனைக்கு போனாள் மீனா.

“இந்த டகால்ட்டி பேச்செல்லாம் நம்ப நான் என்ன அஞ்சாங்கிளாஸ் பாப்பாவா.  உன்னோட யோக்கியம் எனக்குத் தெரியாது.  வீட்டுக்குள்ள இருக்கும்போது கொஞ்சம் அடக்கியே வாசி.  ஒரு சமயம் போல இருக்காது.  திடீர்ன்னு எனக்கு கோவம் வந்து எங்க அண்ணன்களுக்கு  ஃபோனை போட்டேன்னு வைய்யி, அப்பறம் கலவரம் ஆயிடும், ஜாக்கிரதை”, மீனா மிரட்ட, ஜெர்க் ஆனான் நல்ல தம்பி. 

மீனாவின் அண்ணன்கள் பிரபல அரசியல் கட்சியில், மாவட்ட செயலாளர் பதவியில் இருப்பவர்கள்.  அவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் குறைந்தபட்ச தண்டனையே கை, காலை எடுப்பதுதான்.  இதை நன்கு அறிந்திருந்த காரணத்தாலும், நல்லதம்பி மீனா பேசுவதற்கு எதிர்பேச்சு பேசாமல் அமைதியாகப் போய் விடுவான்.

“ச்சே, ச்சே என்ன மீனு இது.  நான் நிஜமாவே பேப்பர்தான் படிச்சுட்டு இருந்தேன்.  இனிமே என்ன, வீட்டுக்குள்ள..... ஐயோ அதுக்கூட வேண்டாம், என் ரூம்லேயே படிக்கறேன் போதுமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.