(Reading time: 10 - 20 minutes)

15. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

யுவியின் கண்கள் ஆச்சரியமும், உவகையும், மாறி மாறி பிரதிபலித்தபடியே இருந்தது பல மணித்துளிகள்…

இன்னமும் அவனால் நம்பமுடியவில்லை…. நடப்பது உண்மைதானா?... தான் பார்ப்பது உண்மைதானா என்று….

விழிகள் அப்படியே வள்ளியிடத்தில் நிலைகுத்தி நின்றது ஒருங்கே…

Piriyatha varam vendum

ஆம்… அவனது மனைவி, வள்ளி, சோபாவில், கை கால்களை சுருக்கிய வண்ணம், யுவியின் டீ-சர்ட்டை அணிந்து அதை இறுக பற்றியபடி உறங்கிக்கொண்டிருந்தாள்….

அவள் அவனது டீசர்ட்டை இறுக பற்றியபடி உறங்கும் விதம் கண்டு, அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது…

கூடவே அவள் பயமும் புரிந்தது…

மெல்ல அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான் யுவி… அவளை நெருங்கியவன், புன்னகை மாறாமல் அவளைப் பார்த்து ரசித்தபடியே சட்டென குனிந்து அவளை கைகளில் அள்ளிக்கொண்டு அவள் முகத்தினையே பார்த்தான்…

அவன் முகம் முழுவதும் இன்னதென்று புரியாத சந்தோஷம் நிறைந்திருந்தது அழகாய்…

அடி மேல் அடி எடுத்து வைத்து கட்டிலை அடைய முயன்றான்… ஆனால், எவ்வளவு மெதுவாக நடக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக நடந்து, கட்டிலை அடைந்தவன், அவளை கைகளில் இருந்து மெத்தையில் கிடத்தவும் அவசரப்படவில்லை சிறிதும்…

அவள் முகத்தில் இருந்து அவன் பார்வையும் அகலவில்லை கொஞ்சமும்… பின் என்ன நினைத்தானோ, மெல்ல அவளை மெத்தையில் படுக்க வைத்தவன், சற்று நேரம் நின்று அவளையே பார்த்துவிட்டு பின், அவளருகில் படுத்துக்கொண்டான் கட்டிலின் மறுபக்கத்தில்…

அவள் முகத்தையேப் பார்த்திருந்தவன், மெல்ல உறங்கியும் போனான் தானாக…

திகாலை வெளிச்சம் அறையினுள் பரவ ஆரம்பிக்க, நித்திரை கலைந்து எழ முயற்சித்தாள் வள்ளி…

கண்களை கசக்கி, மெல்ல விழித்தவள், தன் அருகே தனக்கு எதிரே தூங்கிக்கொண்டிருந்த கணவனைப் பார்த்து அவசரம் அவசரமாக அங்கிருந்து அகன்றாள்…

பின், குளித்து முடித்து, அவனுக்காக காலை உணவு தயார் செய்தவள், காஃபியைக் கொடுக்க மேலே அறைக்கு எப்படி செல்ல என்று யோசித்துக்கொண்டிருந்தாள்…

பின், என்ன நினைத்தாளோ, வேகமாக மேலே சென்றாள்…

அறை வாயிலில் அவள் நிழலாட, “வா…” என்றழைத்தான் அவன் தலைஅசைத்து…

காஃபியை அவனிடம் கொடுத்தவள், “வந்து… நான்… நேத்து… அது…வந்து….” என இழுத்தாள்…

அவன் தீர்க்கமாக அவளைப் பார்க்க, “சாரி… நான் உங்க சட்டையை எடுத்துப் போட்டதுக்கு… பயமா இருந்துச்சு… நேத்து… மழை வேற, இடி, மின்னல் வேற பயங்கரமா இருந்துச்சு… அதான்…” என்றவள், கைகளை பிசைந்த வண்ணம், அவன் என்ன சொல்லப்போகிறானோ என தரையை பார்த்தபடி நிற்க,

அவனோ, அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாது, “காஃபி நல்லா இருக்கு… இன்னைக்கு… ரொம்பவே….” என்றான் சிரித்தபடி…

அவன் சிரிப்பதை அதும் வெகு அருகில் இருந்து முதன் முதலாக பார்த்தவளுக்கு, ஒரு நிமிடம் ஒன்றுமே ஓடவில்லை…

அவனையே இமைக்காமல் பார்த்தாள் அவள் ரசித்து….

எவ்வளவு அழகாக இருக்கிறான் சிரிக்கும்போது… இத்தனையையும் தனக்குள்ளே புதைத்து வைத்துக்கொள்கிறானே… அனைத்தும் த்வனிக்காகவா?... என எண்ணியவளுக்கு ஏனோ அவன் மேல் கோபம் வரவில்லை சிறிதும்… மாறாக காதல் தான் வந்தது அவளுக்கு அவனிடம்…

பின், அவன் வழக்கம் போல் வரும் 6 மணிக்கு வராமல் சற்று தாமதாகவே வர ஆரம்பித்தான் ஒரு வாரம் முழுவதும்… இரவு 10 மணி அளவில்…

தனக்காக காத்திருக்க வேண்டாம் எனவும், சாப்பிட்டு நீ தூங்கு எனவும் அவன் சொல்லியிருந்தபடியால், அவளும் உறங்கிவிடுவாள்… அவள் உண்ணுவதற்கு மறந்த நாட்கள் கூட உண்டு… ஆனால், அவனது உடையை அணிந்து உறங்க மறந்ததில்லை அவள் ஒருநாளும்…

தினமும் அவனது ஏதாவது ஒரு டீ-சர்ட்டை அணிந்து கொண்டு தான் உறங்குவாள்… முதல் நாள் போர்வையை போர்த்திக்கொள்ளவில்லை… ஆனால், அதன் பின், அவனது உடையை அணிந்த பின், மேலே அவன் பார்த்திடாத வண்ணம் போர்வையை போர்த்திக்கொள்வாள் கழுத்து வரை…

பின் அவன் சீக்கிரம் வீட்டிற்கு வர ஆரம்பித்த வேளையிலும், அவன் சோபாவில் சென்று படுத்த பின், அவன் உறங்கி விட்டான் என உறுதி செய்துகொண்டு, அவனது உடையை எடுத்து அணிந்து உறங்கிவிடுவாள்…

அவள் என்னதான் அவனுக்கு தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டாலும், அவனுக்கு அனைத்தும் தெரிந்து தான் இருந்தது… ஆனால், அவன் அது தெரிந்தது போலே காட்டிக்கொள்ளவும் இல்லை… ஏன் என் உடையை எடுத்துப் போட்டுக்கொண்டு உறங்குகிறாய் என்று கேள்வி கேட்கவும் இல்லை…

அது அவளுக்கு வசதியாய் போக, அவள் தன் பணியை செவ்வனே தொடர்ந்தாள் அச்சுப்பிசராமல்…

ரியாக ஒருமாதம் முடிவடைந்திருந்த வேளையில்…

ஞாயிற்றுக்கிழமை ஆதலால், அவன் வீட்டில் இருந்தான்…

சாயங்காலம் அவன் தோட்டத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் நேரம்பார்த்து அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது போனில்…

“வேலா… வள்ளி எப்படி இருக்குறாப்பா?”

“நீ எப்படி இருக்குற தேவிம்மா…”

“நான் தான் முதலில் உன்னை கேட்டேன்… சொல்லு… எப்படி இருக்குற?...”

“வள்ளி நல்லா இருக்குறாம்மா…”

“நிஜமாவா?...”

“நிஜம் தான்ம்மா… வேணும்னா அவகிட்ட போன் கொடுக்குறேன்…. நீயே பேசு…”

“வேண்டாம்… இருக்கட்டும்….”

“என்னாச்சு தேவிம்மா… ஏன் டல்லா பேசுற?...”

“ஒன்னுமில்லப்பா…”

“எங்கிட்ட சொல்லமாட்டியா தேவிம்மா…”

“அம்மா உன்னை எப்படி இருக்குறன்னு கூட முதலில் கேட்காம வள்ளியை எப்படி இருக்குறான்னு கேட்டேன்… உனக்கு புரிஞ்சதா அது ஏன்னு?... கோபம் வந்துச்சா அம்மா இப்படி உன்னை விசாரிக்காம வள்ளியை விசாரிக்குறேன்னு…”

“அவ என் மனைவிம்மா… நீ என்னை விசாரிச்சா என்ன, அவளை விசாரிச்சா என்ன?... ரெண்டும் ஒன்னுதான்… நாங்க வேற வேற இல்லம்மா… என்னில் சரிபாதி அவள், அவளில் சரிபாதி நான்… அப்படித்தான் நான் நினைக்கிறேன்…. அப்படி இருக்கும்போது இதுல கோபம் எப்படிம்மா வரும்?...”

மகனின் வாய்மொழி வார்த்தைகளை கேட்டு பூரித்தவர், அவனிடம் அதைக் காட்டாமல், “சரிபாதின்னு சொல்லிட்டு நீ இப்படி அவளை வீட்டுல விட்டுட்டு வேலைக்குப் போயிட்டு லேட்டா வந்தா என்ன அர்த்தம் வேலா ஹனிமூன் கூட கேன்சல் பண்ணிட்டு?...”

“இல்ல… தேவிம்மா… அது வந்து…”

“உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு புரியும் வேலா… நீ என் பையன்… இப்போ கூட வள்ளியை என் மனைவின்னு சொல்லியது மனசுல இருந்து தான்னு எனக்கும் புரியுது… ஆனா, எதுவோ ஒன்னு என் மனசுக்கு கொஞ்சம் நெருடலா இருக்கு வேலா…”

“தேவிம்மா… மனசை போட்டு குழப்பிக்காத… வள்ளி மட்டும் தான் என் மனைவி… இன்னைக்கும் என்னைக்கும்… உன்னை நான் பார்க்குறப்போ உன்னோட நெருடல் கண்டிப்பா உன்னை விட்டு போயிடும் தேவிம்மா…” என்றான் யுவி திடமாக….

மகனின் திடமான பதிலில் சற்றே நிம்மதியடைந்தவர், “சரி வேலா…” எனவும்,

“ஹ்ம்ம் சரி தேவிம்மா… நீ எப்போ ஊருக்கு வருவ?...” என்ற அவனின் கேள்விக்கு அவரும் பதில் சொல்லிவிட,

அவனும், “சரிதேவிம்மா… சீக்கிரம் வர முயற்சி பண்ணுறேன்…” என்றபடி போனை வைத்தான்…

பின், ஒரு பெருமூச்சோடு மனைவியைத் தேடி சென்றவன், அவள் தோட்டத்தின் வாசலிலேயே நிற்பதை பார்த்துவிட்டு அவளருகில் சென்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.