(Reading time: 14 - 27 minutes)

11. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ரே நொடி, எல்லாம் முடிந்து விட்டது.  அஞ்சலை அலறும் சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்த சுகுணா, தீயை அணைக்க முயல, எந்தப்  பயனும் இல்லை.  அவள் புடவையில் சிதறி இருந்த மண்ணெண்ணெயின் காரணத்தால் தீ மளமளவென்று அவள் உடம்பு முழுவதும் பரவி அஞ்சலையை கரிக்கட்டையாக்கி விட்டது.  அந்த சத்துணவுக் கூடம் முழுவதும் ஓலையால் வேயப்பட்டதால் தீ ஓலையிலும் படற ஆரம்பிக்க சுகுணாவும், வெளியே ஓடி வந்து விட்டாள்.  இவர்களின் கூச்சலைக் கேட்டு பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள் வெளியில் வந்து பார்க்க, அந்த இடமே திகு திகுவென எரிய ஆரம்பித்தது.  அவர்கள் தீயை அணைக்க எடுத்த முயற்சி அத்தனையும் வீணானது.  தலைமை ஆசிரியை சென்று தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்க, அவர்கள் அடுத்த ஊரிலிருந்து வந்து சேர எடுத்துக்கொண்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பே, அந்த இடம் முற்றிலும் எரிந்து கரிக்காடாக இருந்தது.  கெட்டதிலும் ஒரு நல்லதாக பள்ளிக்கூட கட்டிடத்தை விட்டு சத்துணவுக்கூடம் தள்ளி இருந்ததால், பள்ளிக்கூடம் தப்பித்தது.

(மிக வேதனையான விஷயம்.  இன்னும் நம்ம ஊரில் உள்ள பல அரசாங்கப்  பள்ளிக்கூடங்களில் தீயணைப்புக் கருவிகள் இல்லை.  நிறைய பள்ளிக்கூடங்களில் தண்ணீர் வசதி கூட இல்லாமல்தான் இருக்கிறது. சத்துணவுக் கூடங்களும் அப்படித்தான்.  சமைக்கும் இடத்தில் தீ பரவினால், அதை உடனே அணைக்க எந்தவித கருவிகளும் இல்லை.  அதேப் போல் தீயணைப்பு நிலையங்களோ, இல்லை அவசர உதவி வாகனங்களோ பல கிராமங்களில் இல்லாத நிலைதான் இன்றும் தொடர்கிறது)

தேர்வை நல்லபடியாக முடித்து விட்டு மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த தேவியை அவளின் கணித ஆசிரியை அழைப்பதாக ஒரு மாணவி வந்து கூற, தேவி பரீட்சை பற்றிக் கேட்கத்தான் கூப்பிடுகிறார்கள் என்று அவரை பார்க்க சென்றாள்.  அவள் உள்ளே செல்லும்போது அவரின் முகம் வேதனையில் வாடியும், மிகுந்த பதட்டத்திலும் இருப்பதைப் பார்த்த தேவி, விரைந்து அவரருகே சென்றாள்.

Vidiyalukkillai thooram

“டீச்சர் கூப்பிட்டீங்களா?”, என்று கேட்டபடியே கணித ஆசிரியரின் முன் சென்று நின்றாள் தேவி. 

“தேவிம்மா, சீக்கிரமாப் போய் உன் புத்தகப் பையை எடுத்து வா.  உடனே நாம உங்க வீட்டுக்குப் போகணும்”

“என்ன ஆச்சு டீச்சர், காலைல வரும்போதே அம்மாக்கு காய்ச்சல் இருந்துச்சு.  இப்போ அது அதிகம் ஆகிடுச்சா”

“ஆமாம்மா, ரொம்ப அதிகம் ஆகிடுச்சாம்.  உங்க அம்மா வேலை செய்யற வீட்டுல இருந்து போன் வந்துச்சு”

“சரி டீச்சர்.  HM கிட்ட சொல்லிட்டு நான் பையை எடுத்துட்டு கிளம்பறேன்”

“அதெல்லாம் நானே சொல்லிட்டேன்.  நீ போய் பாக் எடுத்துட்டு வா.  நானும் உன் கூட வீடு வரைக்கும் வர்றேன்”

“என்னது நீங்களும் வர்றீங்களா?  அம்மாக்கு ரொம்ப முடியலையா டீச்சர்.  எதுவா இருந்தாலும் சொல்லுங்க”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை.   அடுத்து அடுத்து கேள்வி கேக்காம சீக்கிரம் வா”, என்று துரத்த, ஒரு சாதாரண காய்ச்சலுக்கு எதற்கு டீச்சர் இத்தனை பதட்டப்படறாங்க, அதுவும் கூடவே வீடு வரைக்கும் வர்றாங்க, ஏதோ சரியில்லையே என்று யோசித்தபடியே புத்தகப் பையை எடுத்து வந்தாள் தேவி.

தேவியும், அவளின் கணித ஆசிரியையும், அவளின் வீட்டை அடுத்த ஒரு மணி நேரத்தில் அடைய, அவள் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தைப் பார்த்து என்னவோ, ஏதோ என்று உள்ளே ஓடிச் சென்று பார்த்தாள் தேவி.  அங்கு அவளின் வீட்டை சுற்றி இருக்கும் பெண்கள் மற்றும் உறவுக்காரர்கள் அனைவரும் கூடி அழுது கொண்டிருக்க, யாருக்கு என்ன ஆயிற்றோ என்று புரியாமல் அவளின் சித்தியின் அருகில் சென்றாள் தேவி.

“சித்தி என்ன ஆச்சு.  எதுக்கு அழுதுட்டு இருக்க.   ஆயாக்கு எதுனா ஆகிடுச்சா?  அம்மா எங்க, ஆயாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் இருக்கா”, தன் பாட்டிக்குத்தான் ஏதோ முடியவில்லை போல் என்று அவளின் சித்தி அழுவதைப் பார்த்து கேட்க ஆரம்பித்தாள்.

“ஐயோ கண்ணு, உன்னைய இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாளே, எப்படித்தான் மனசு வந்துதோ?”, என்று தேவியை கட்டி அணைத்தபடியே இன்னும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் தேவியின் சித்தி.

“ஐயோ, அழுவறத மொதல்ல நிறுத்திட்டு யாருக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு சித்தி, நைனாவையும், அண்ணனையும் வேறக் காணும்”, இது என்ன எதுவும் சொல்லாமல் இப்படி ஒரு அழுகை, என்று எரிச்சல்பட்டபடியே கண்களில் நீருடன் கேட்டாள் தேவி.

“நான் என்னன்னு சொல்லுவேன் கண்ணு.  யாருக்குமே எந்தக் கெடுதலுமே செய்யாத நல்ல மனசுக்காரிக்கா இந்த நிலைமை வரணும்.  ஆயிரம் தப்பை பண்ணிட்டு, எத்தனை பாவிங்க நல்லபடியா சுத்திட்டு இருக்குதுங்க”, மறுபடியும் விஷயத்தை சொல்லாமல் அழுதாள் தேவியின் சித்தி.

அப்பொழுது அவளின் அருகில் வந்த அவளின் கணித ஆசிரியை, தேவியை அவளின் சித்தியிடமிருந்து பிரித்து தனியாக அழைத்து வந்தார்.

“தேவிம்மா,  மனச திடப்படுத்திக்கோ, இன்னைக்க்கு சத்துணவுக் கூடத்துக்கு வேலைக்குப் போன உங்கம்மா அங்க ஏற்பட்ட தீ விபத்துல இறந்துட்டாங்க.  அவங்க உடலை எடுத்துட்டு வர்றதுக்குதான் உன்னோட அப்பாவும், அண்ணனும் போய் இருக்காங்க”, டீச்சர் விளக்க, தேவிக்கு அவர் சொன்ன விஷயத்தை நம்ப முடியவில்லை.

“என்ன டீச்சர் சொல்றீங்க.  எங்க அம்மாவுக்கா.  இருக்காது டீச்சர்.  இன்னைக்கு காலைல கூட என்கூட நல்லாப் பேசினாங்களே.  என்னைப் படிக்க வச்சுப் பெரியாளாக்காம என்னை விட்டுட்டு அவங்க போக மாட்டாங்க டீச்சர்.  இவங்களுக்கெல்லாம் ஏதோ தப்பா செய்தி வந்திருக்கு”, என்று அவள் அழுதுகொண்டே சொல்ல, அந்த நேரத்தில் மணியும், வெற்றியும் நல்லதம்பியின் காரில் வந்து சேர்ந்தார்கள்.   அவர்கள் இறங்குவதைப் பார்த்த தேவி தன் தந்தையிடம் ஓடிச் சென்றாள்.

“நைனா, இவங்க சொல்றது பொய்தானே, அம்மாக்கு ஒண்ணும் ஆவல இல்லை, நல்லாத்தானே இருக்குது”, என்று மணியை உலுக்கியபடி கேட்க  மணியும், வெற்றியும்  அழ ஆரம்பித்தார்கள்.

“ஐயோ தேவிம்மா, அம்மா நம்மளை விட்டுட்டு போய்ட்டாங்க.  அவங்க மொகத்தை கூட பாக்க முடியாத பாவியாப் போய்ட்டோம் நாமெல்லாம்”. வெற்றி அழுதபடியே கூறினான்.

“அண்ணா நீ என்ன சொல்ற.  நான் நம்ப மாட்டேன்.  எங்க அது வேல செஞ்ச ஸ்கூல்லதானே இப்படி ஆச்சுன்னு சொன்னாங்க.  நான் இப்போவே அங்கப் போய் பாக்கறேன்”, தேவி அவள் அன்னை வேலை செய்த பள்ளியை நோக்கி ஓட ஆரம்பிக்க, வெற்றி அவளை தடுத்து நிறுத்தப் போராடினான்.  அவனைத் தள்ளிவிட்டு விட்டு தேவி ஓட ஆரம்பிக்க, இரண்டு மூன்று பேராக சேர்ந்து தேவியைப் பிடித்து இழுத்து நிறுத்தினார்கள்.

“சொன்னாக் கேளு தேவி.  அம்மா நிஜமாவே நம்மளை விட்டுட்டு போய்டுச்சு.  எந்த நேரத்துல அம்மா பொட்டுன்னு போய்டும்ன்னு சொன்னேனோ அப்படியே பலிச்சிடுச்சு”, வெற்றி தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

ஒரு வழியாக தேவியின் மூளைக்கு அவள் அன்னையின் இறப்பு எட்ட, அப்படியே தரையில் விழுந்து கதற ஆரம்பித்தாள்.  சிறிது நேரம் அவளை அழவிட்ட  அவளின் கணித ஆசிரியை அவளைத் தூக்கி உள்ளே அழைத்து செல்ல முயன்றார்.

“இல்லை டீச்சர், எனக்கு எங்க அம்மாவைப் பாக்கணும்.  நான் அங்க போயிட்டு வர்றேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.