(Reading time: 14 - 27 minutes)

தேவிம்மா, அங்க போய் பாக்க எதுவுமே இல்லை.  எல்லாமே மொத்தமா எரிஞ்சு போச்சு.  அதுவும் அங்க ஓலை எல்லாம் எரிஞ்சு மொத்தமா அம்மா மேல விழுந்து இருக்கு.  உடம்பே தெரியலை.  ஒரு வழியா எல்லாத்தையும் கலைச்சுப் பார்த்து தொட்டாலே உதிர்ந்து போறா மாதிரி இருக்கற உடம்போட சில பகுதி மட்டும்  கண்டு பிடிக்க முடிஞ்சுது.  ஒண்ணுமே பாக்கி இல்லை.  அதை எடுத்துட்டு வர முடியாதுன்னு   வந்த வண்டில எல்லாத்தையும் சேர்த்து அள்ளிப் போட்டுட்டு போய்ட்டாங்க”,என்று வெற்றி அழுதபடியே சொல்ல,  கடைசி முறையாக அன்னையின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று அழ ஆரம்பித்தாள் தேவி. 

“ஆமாம்மா,  இன்னைக்கு காலைல வேலைக்கு போக சொல்லையே நல்ல காய்ச்சல்.  அதோட போக விட்டுருக்கவே கூடாது.  காய்ச்சலோட வேல செய்ததால்தான் இப்படி ஆகிப் போச்சு”, வெற்றியும் தாயை நினைத்து அழ ஆரம்பித்தான்.

மணியோ, அஞ்சலை இல்லாத வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயத்திலேயே அழுது கொண்டிருந்தான்.

ஆயிற்று, இன்றோடு தேவியின் அன்னை இறந்து இரண்டு வாரங்கள் ஓடி விட்டன.  தேவி அவள் அன்னையை நினைத்து அழுதே நாட்களைக் கடத்தினாள்.  வெற்றியும், மணியும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், அஞ்சலை இருந்தபோது  சேர்த்து வைத்திருந்த காசை வைத்து நாட்களை ஒட்டினர்.

ஞ்சலை இறந்து முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ஒழுங்காக இருந்த வெற்றியும், மணியும் மூன்றாவது நாளே அஞ்சலை சேர்த்து வைத்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொண்டு சாராயக் கடையை நோக்கி சென்று விட்டார்கள்.  காரணம் இல்லாமலேயே குடிப்பவர்கள், இப்பொழுது அவர்கள் குடிப்பதற்கு அஞ்சலை இறந்த துக்கம் என்ற காரணம் வேறு சேர்ந்துவிட்ட பிறகு கேட்கவா வேண்டும்.  தினம் தேவி சமைத்து வைக்கும் உணவை சாப்பிடுபவர்கள் மதியம் கிளம்பி போனால் அத்துடன் இரவில் தள்ளாடியபடியேதான் வந்து படுப்பார்கள்.  அஞ்சலை இல்லையே இனித் தான்தான் வீட்டிற்கு பெரியவனாகப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற நினைபெல்லாம் மணிக்கு இல்லை.  மணியே இப்படி இருக்கும்போது வெற்றியிடம் எங்கிருந்து பொறுப்பை எதிர்பார்ப்பது.

“தேவி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே அழுதுட்டு இருக்கப் போற.  போறவ போய்ட்டா.  இருக்கற நம்மளைப் பத்தி யோசிக்க வேணாமா”

“நைனா, என்னால முடியவே இல்லை நைனா.   அம்மா இல்லைன்னு என்னால இன்னும் நம்பவே முடியலை.  எங்கப் பார்த்தாலும் அம்மா நிக்கறா மாறியே இருக்குது”

“எனக்கும்தான் கஷ்டமா இருக்குது.  என்னதான் திட்டினாலும் நான் காசு கேக்கும்போதெல்லாம் உடனே குடுத்துடும், அதே மாறி ஒரு நாள் கூட எனக்கு சோறு போடாம இருந்ததே இல்ல.  இனிமே யாரு அப்படி எல்லாம் செய்யப் போறா”, இத்தனை கொடுமையான நிலைமையிலும் தன் சுகம் பறிபோய்விட்டதே என்ற கவலையிலேயே பேசினான் மணி.

அவன் பேசும்போதுதான், வீட்டின் நிலைமை தேவிக்குப்  புரிய ஆரம்பித்தது.   வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஜீவனும் இப்பொழுது இல்லை, இனி அனைவரின் நிலைமை??? மணியோ, வெற்றியோ வேலைக்கு செல்வார்கள் என்று நம்பிக்கை அணு அளவு கூட தேவிக்கு கிடையாது.  இனித் தான்தான் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.   மணிக்கு அஞ்சலையின் ஞாபகம் வந்துவிட்டதால், மறுபடி குடிக்கப் போய்விட, தேவி வீட்டை பூட்டி விட்டு நேராக மீனாவைப் பார்க்க சென்றாள்.

“வா தேவி.  அம்மா இறந்ததை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.  எத்தனை நல்ல மனுஷி.  ஒரு ஒத்த பைசா அதிகமா கொடுத்தா கூட வாங்க மாட்டா.  அதே போல எத்தனை நேர்மையான மனுஷி தெரியுமா, நான் பலமுறை அவக்கிட்ட காசக்கொடுத்து சாமான் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்.  பாக்கி பணத்தை பத்து பைசா பாக்கி இல்லாம ரசீதோட கைல கொடுத்துட்டுதான் போவா.  ஹ்ம்ம் நல்லபடியா வாழத்தான் கொடுத்து வைக்கலை பாவம்”, மீனா, தேவியிடம் வருத்தத்துடன் அஞ்சலையைப் பற்றி பேசினாள்.

மீனா பேசப்பேச தேவிக்கு கண்ணீர் வர ஆரம்பித்தது.  அதைத் துடைத்தபடியே மீனாவைப் பார்த்து, “மீனாக்கா நான் இப்போ உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத்தான் வந்திருக்கேன், செய்வீங்களா”, என்று தழுதழுத்தபடியே கேட்டாள்.

“சொல்லு தேவி என்ன வேணும், பள்ளிக்கூடத்துக்கு கட்ட பணம் ஏதானும் வேணுமா?”

“இல்லைக்கா, அதெல்லாம் அம்மா ஏற்கனவே எல்லாம் கட்டிட்டாங்க.   எனக்கு இங்க எதாச்சும் வேலை போட்டுத் தர்றீங்களா.  அம்மா செஞ்சுட்டு இருந்தாங்களே, அதை நான் வந்து செய்யட்டுமா”

“என்னது இது தேவி.  நீ படிச்சு பெரியாளா வரணும்ன்னு உங்கம்மா எத்தனை ஆசைப்பட்டா.  அதை செய்யாம வீட்டு வேலை செய்ய வரேன்னு சொல்ற”

“அக்கா, நான் நல்லா படிப்பேன்க்கா.  எங்கம்மாவோட ஆசையை கண்டிப்பா நிறைவேத்துவேன்.   காலைல ஸ்கூலுக்கு போக முன்னாடி இங்க வந்து வேலை எல்லாம் முடிச்சுட்டு அப்படியே போய்டுவேன்”

“அப்படி என்னத்துக்கு நீ வேலை செய்யனும்.  உங்க வீட்டுல ரெண்டு தடிமாடுங்க தண்டத்துக்கு சுத்திட்டு இருந்துச்சே.  அதுங்க என்ன செய்யுதுங்க.  மணியையும், வெற்றியையும் என்னை வந்து பாக்க சொல்லு.  பக்கத்து ஊருல எங்கண்ணன் பாக்டரியில் ஏதானும் வேலை போட்டு கொடுக்க சொல்றேன்.  அவங்க வழியை அவங்க பாத்துக்கட்டும்”

“இல்லைக்கா அவங்க வேலைக்கெல்லாம் போறா மாதிரியே இல்லை.  அம்மா போனதுலேர்ந்து அந்த துக்கத்திலையே இன்னும் நிறைய குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.  அதான்க்கா, அம்மா வேல செஞ்ச வீட்டுல எல்லாம் நான் போய் செய்யலாம்ன்னு இருக்கேன்.  மொதல்ல உங்க வீட்டுக்குத்தான் வந்தேன்”

“உங்கம்மா மாதிரியே நீயும் இருக்கியே தேவி.  அவங்க ரெண்டு பேரும் எப்படியோ ஒழியறாங்கன்னு விட்டுட்டு நீ பாட்டுக்கு உன் வேலையைப் பாரு.  இங்க இருக்க முடியலையா சொல்லு, உன்னை  ஹாஸ்டல் வசதி இருக்கற ஸ்கூல்ல சேர்த்து விடறேன். இருக்கற ரெண்டு வருஷம் உன்னை படிக்க வச்சுடறேன். அப்பறம் காலேஜ் பத்தி யோசிச்சுக்கலாம்”, தேவிக்கு அன்று நல்ல நேரமா, இல்லை மீனாவின் மேல் அன்று ஏதேனும் நல்ல தேவதை புகுந்து பேச வைத்தாளா என்று தெரியாது, தேவிக்கு மிகப் பிரகாசமான ஒரு எதிர்காலத்தை வழங்க அன்று மீனா தயாராக இருந்தாள்.  ஆனால் இதே மீனாதான் தேவியின் பிற்கால இருண்ட வாழ்க்கைக்கும் காரணமாக இருக்கப் போகிறவள்.

“உங்கள எதிர்த்துப் பேசறதுக்கு சாரி மீனாக்கா.  அப்பாவையும், அண்ணனையும் அப்படியே விட்டுட்டு என்னால போக முடியாது.  எப்பாடு பட்டாவது நான் படிச்சுடுவேன்.  நீங்க எனக்கு வேலை மட்டும் போட்டு கொடுங்கக்கா”

“ஆமாம் அவங்க அப்படியே, பால் குடி மாறாத பச்ச பிள்ளைங்க, உன்னை விட்டா அவங்கள பார்த்துக்க ஆளே இல்லை பாரு.  உன் நல்லதுக்குத்தான் சொன்னேன்.  நீ கேக்கத் தயாரா இல்லை.  இங்க அஞ்சல காலைல வந்து மொறவாசல் செய்யறதுலேர்ந்து ஆரம்பிச்சு, கடைசியா மாட்டுத்தொழுவத்தைக் கழுவறது வரை செஞ்சுட்டுதான் கிளம்பும்.  அது எல்லாம் நீ செய்யணும்ன்னா, அப்பறம் பள்ளிக்கூடத்தை எங்க வீட்டுக்குத்தான் மாத்தணும்.  அதனால நீ தினம் வந்து வீடு, வாசல் எல்லாம் பெருக்கி தொடைச்சுட்டு பாத்திரம் மட்டும் கழுவிட்டு கிளம்பிடு.  மத்த வேலைக்கு நான் வேற ஆளை போட்டுக்கறேன்.  பாதி வேலைதான் செய்வ அப்படிங்கறதால உங்கம்மாக்கு கொடுத்த சம்பளத்துல பாதிதான் கொடுப்பேன் சரியா?”, சற்று முன் மீனாவின் உடம்பில் ஏறி இருந்த நல்ல தேவதை இறங்கி விட்டாள் போல.  பழையபடியே கறாராக பேச ஆரம்பித்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் மீனாக்கா.  நாளைலேர்ந்து கரெக்டா வந்து எல்லா வேலையும் செஞ்சுடறேன்”, என்று மீனாவிற்கு நன்றி கூறிவிட்டு, அஞ்சலை வேலை செய்த மற்ற வீடுகளுக்கும் சென்று மருநாளையிலிருந்து வேலைக்கு வருதாக உறுதி அளித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் மீனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.