(Reading time: 10 - 20 minutes)

சீரான நடை வேகத்துடன் அவன் அவளை நெருங்கிக்கொண்டிருந்தான்… அவனை அப்படியே கண்களுக்குள் பொத்தி வைத்துக்கொண்டாள் அவள்…

அருகில் வந்தவன், அவளது தடுமாற்றத்தில் தன்னை மறந்தான் சில வினாடிகள்…

பின், தன்னை சரிசெய்துகொண்டு, “வள்ளி… தேவிம்மா போன் பண்ணினாங்க… கோவில் திருவிழா அடுத்த மாசம் நடக்குதாம்… நம்மளை வர சொன்னாங்க… துணா-விழியனுக்கும் தகவல் சொல்லிட்டாங்களாம்… அவங்க நேரா அங்க வந்துடுறதா சொல்லிட்டாங்களாம்…” என்றான்

“ஹ்ம்ம்… சரிங்க…” என்றவள் குரலே அவள் பயத்தினை சொல்லாமல் சொல்ல…

“என்னாச்சு வள்ளி…” என்றவன் குரல் அவளை ஆதரவாக அணைப்பதுபோல் இருக்க…

“இல்ல…. எதுவுமில்லை…” என்றாள் அவள் மெல்ல…

அவளருகே இன்னும் நெருங்கியவன், “பாலா பத்தி கவலைப் படுறீயா?... இந்த தடவை முன்னாடி நடந்த மாதிரி எதுவும் நடக்காது… நான் பார்த்துக்குறேன்…. நம்புடா…” என்று சொல்ல…

அவள் விழிகளில் சட்டென நீர் சூழ்ந்துவிட்டது… இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் என்ற அதிர்ச்சி ஒருபுறமும், அவன் பேசிய விதமும் அவளை நிலை தடுமாற வைக்க, கண்ணீர் அவளது கன்னங்களை எட்டியது…

சட்டென உயர்ந்து விட்ட கரங்களை அடக்கியவன், “ப்ளீஸ், அழாத வள்ளி… என்னை நம்ப மாட்டீயா?... நான் சொல்லுறேன்ல… என் வார்த்தையில உனக்கு நம்பிக்கை இல்லையா?...” என கேட்க…

கண்ணீரை துடைத்துக்கொண்டவள், “நிறைய இருக்குங்க…” என அவனிடம் சொன்னவள், “என் நம்பிக்கையே நீங்க தான்… நீங்க மட்டும்தான்…” என தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் அவனைப் பார்த்துக்கொண்டே…

“ஹ்ம்ம்… சரி...” என்றான் அவனும் புன்னகையுடன் அவள் வாய் வார்த்தையின் மூலம் சொன்னதையும், அவள் கண்களின் மூலம் சொன்னதையும் புரிந்துகொண்டு….

அவன் “டா…” போட்டு பேசியதில் குளிர்ந்த அவள் உள்ளம், இப்போது “ஹ்ம்ம் சரி…” என்றதிலும் குளிர்ந்து தான் போனது… விழிகள் மட்டும் நீரை மேலும் உதிர்த்துக்கொண்டு இருக்க,

“இப்போதான சொன்னேன்… மறுபடியும் அழற நீ?...” என அவன் கேள்வியாக சொல்ல….

“இல்லங்க அழல…” என சிரித்தவள், தன் கண்களை துடைக்க…

“ஹ்ம்ம்… குட் கேர்ள்…” என அவள் கன்னத்தை ஒரு விரலால் தொட்டு சொல்லிவிட்டு அவன் அகல, அவள் நகராமல் அப்படியே நின்றாள்…  

ரண்டு நாட்களுக்குப் பிறகு,

அலுவலகத்திற்கு காலையில் கிளம்பி போனவன், ஒரு மணி நேரத்திலேயே திரும்பி வந்துவிட,

“என்னங்க… என்னாச்சு…??” என பதட்டத்துடன் அவனை மேலும் கீழும் ஆராய்ந்தாள் அவள்…

அவன் ஒன்றும் சொல்லாமல் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்து விட,

“என்னங்க.. உடம்புக்கு எதும் முடியலையா?...” என அக்கறையாய் அவள் கேட்க…

அவன் மெல்ல சிரித்துவிட்டு, “உன்னை இன்னைக்கு வெளியே கூட்டிட்டு போகணும்னு தோணுச்சு… அதான் சீக்கிரம் வந்துட்டேன்… எனக்கு எதுவும் இல்லை… பாரு… நல்லா தான இருக்கேன்….” என எழுந்து இரண்டு கைகளையும் விரித்து சொல்ல,

அவளுக்கோ, அந்த கைகளுக்குள் எப்போது தான் ஒளிந்து கொள்வேன் என்றிருந்தது…

அதை அவளது முகம் சொல்லாமல் சொல்ல, அவள் திரும்பிக்கொண்டாள்…

“என்னாச்சு வள்ளி?... உனக்குப் பிடிக்கலையா வெளியே போக?...” என்று அவன் கேட்ட மாத்திரத்தில்,

சட்டென்று திரும்பியவள், “இல்லங்க… அதெல்லாம் இல்லங்க…” என்றாள் உடனேயே…

“சரி… ஹ்ம்ம்… எங்க போகலாம் சொல்லு…. உன் விருப்பம் தான்….”

“சொன்னா கோச்சுக்க மாட்டீங்கல்ல?...”

“இல்ல சொல்லு…” என அவன் எடுத்துக்கொடுக்க…

“கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?...” என அவள் கேட்க…

“இதுக்குத்தான் இவ்வளவு யோசனையா?... கண்டிப்பா போகலாம்…” என்றபடி சிரித்துக்கொண்டே நகன்றவன், “நான் ரெடி ஆகிட்டு வரேன்…” நீயும் ரெடி ஆகு….” என்றபடி சென்றவன், சட்டென்று திரும்பி வர,

அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்…

“கோவிலுக்குப் போகலாம்னு சொல்லுற… ஹ்ம்ம்… இதை போட்டுக்கறீயா?....” என புதிராய் கேட்க…

அவள் அவனையே கேள்வியாய் பார்த்தாள்…

“உனக்குப் பிடிக்குமான்னு தெரியலை… காலையில் ஆஃபீஸுக்கு போற வழியில ஒருத்தரை மீட் பண்ண காம்ப்ளெக்ஸ்க்கு போக வேண்டியதா இருந்துச்சு… அவரைப் பார்த்து பேசிட்டு ஆஃபீஸுக்கு போயிட்டிருந்தப்போ, அவர் எனக்கு போன் பண்ணி கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னார்… நானும் காரை வழியிலேயே ஸ்டாப் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தேன்… அப்ப தான் ஒரு சின்ன பையன், படிக்கிற நேரம் போக, இந்த சின்ன வியாபாரம் பண்ணுறேன்… ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்கும்… அதை வச்சி நோட்டு, பேனா, எனக்கு ஆகுற படிப்பு செலவுல ஓரளவு சமாளிச்சிக்க முடியும்னு தன் நண்பனிடம் சொல்லிட்டிருந்ததை கேட்டேன்.… அவனா வந்து வாங்கிக்கீங்கன்னு சொல்லலை… ஆனா, எனக்கு அவனுக்கு உதவி செய்யணும்னு தோணுச்சு… அவன் என்ன விக்குறான்னு கூட தெரியலை… சரி பக்கத்துல போய் பார்க்கலாம்னு போனப்போ, என்னை தாண்டி போன ஒரு அம்மாகிட்ட அவன் வாங்கிக்கோங்கம்மான்னு சொல்லிட்டிருந்தான்… அவங்க போயிட்டாங்க எதுவும் வாங்காம வேண்டாம்னு.… ஆனா எனக்கு மறுக்கத் தோணலை… வாங்கிட்டு வந்துட்டேன்…” என அமைதியாக சொல்லியவன், அவளிடத்தில் தயங்கி தயங்கி நீட்டினான் அந்த பெட்டியை…

அதை வாங்கியவள், பிரித்து பார்த்த போது, அவள் மனதில் சொல்லொண்ணா சந்தோஷமும், வருத்தமும் உண்டானது ஒரு சேர…

அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, “என்ன வள்ளி பிடிக்கலையா?... பிடிக்கலைன்னா வச்சிடு… பரவாயில்லை…” என அவன் சொல்லி முடிக்கும்போது

“ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றாள் அவள் பட்டென்று…

“நிஜமாவா?...” என அவன் கேட்க

“நிஜம் தான்…” என்றாள் அவளும்…

“அப்ப சரிதான்…” என்றான் அவன்…

“ஹ்ம்ம்… ஏன் பிடிக்காதுன்னு சொல்லிடுவேன்னு நினைச்சீங்களா?...” என அவள் சட்டென்று கேட்க…

“ஹ்ம்ம்… இல்ல… ஆனா, நீ இதை போட்டு நான் பார்த்ததே இல்ல… அதான்…” என்றான் அவனும் அமைதியாக…

“சின்ன வயசில போட்டது… அப்ப ரொம்ப பிடிக்கும்… இடையில… ஹ்ம்ம்… போட தோணலை… அதான்…” என்றாள் அவளும் அழுத்தமாக…

“அப்போ பிடிக்கலை… சரி… இப்போ பிடிச்சிருக்கா?...” என அவன் கேட்டதற்கு,

“சத்தியமா பிடிச்சிருக்கு… போதுமா…” என்றாள் அவளும் வெடுக்கென்று…

“இது போதும்டா…” என்றவனும் சிரித்துக்கொண்டே சென்றுவிட, அவன் புன்னகை அவளை ஈர்த்தது மிக…

அவன் கொடுத்த கண்ணாடி வளையல்களைத் தொட்டு ரசித்தவள்,

அவன் செல்லும் திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்…,

பின் அவனது சிரிப்பே கண்களுக்குள் நிற்க, தன்னையும் அறியாமல் புன்னகைத்தவள், “சிரிச்சே என்னை ஒருவழி பண்ணிடுறீங்க…” என வெட்கம் கொண்டாள் அழகாய்…

அதை மேலே இருந்து கவனித்துக்கொண்டிருந்தவன் முகத்திலும் புன்னகை மாறாமல் அப்படியே இருக்க… “என்னைக் கொல்லாதே பெண்ணே…” என்றவன், தன் சட்டைப் பையை தொட்டு தடவிப் பார்த்துக்கொண்டான்…

அவன் முகத்தில் மெல்லிய கவலையும், பெருமூச்சும் எழுந்தது தானாய்…

வரம் தொடரும்…

Episode # 14

Table of Contents

Episode # 16

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.