அவசரமாக தன் உடையில் கைவைத்து அதன் உடை நேர்த்தியை உறுதி செய்து கொண்டாலும் முகத்தில் இன்னும் அவஸ்தையின் களை.
“இங்க என்ன செய்றீங்க?”
“வேற என்னவாம்? இப்போதைக்கு சைட் அடிச்சுட்டு இருக்கேன்….”
“ஹான்…?
“அடுத்து கிட்நாப் செய்யப் போறேன்….”
“கீழ அப்பா இருக்காங்க….”
“என்ன பாசம் உனக்கு உன் அப்பா மேல….உன்னை கிட்நாப் செய்ய வந்தா உங்கப்பாவையும் சேர்த்து கிட் நாப் செய்ய சொல்லுற…சரி செஞ்சிடுவோம்…….”
அவளுக்கு மிக அருகில் வந்திருந்தான் அவன்.
“ப்ளீஃஸ்…” அவள் எதையோ ஆரம்பிக்க “ உனக்கு டென் மினிட்ஸ் டைம் அதுக்குள்ள கிளம்பி கீழ வந்துடு…இல்லனா நான் இங்க வந்துடுவேன்…”
அவன் திரும்பிக் செல்ல அவன் சந்தோஷத்தின் அளவை உணர்ந்தபடி அந்த ரெட் கலர் லாங்க் ஸ்கர்ட், அதே நிற ஷார்ட் டாப்ஃஸை அணிந்து உயர்த்தி போட்ட போனியுடன் அவசர அவசரமாக கீழிறங்கினாள்.
மதுரன் வீட்டிற்கு வரும் நேரங்களில் வீட்டின் வரவேற்பறை டைனிங் ரூம் இவ்வளவுதான் அவன் எல்லை.
இன்றுதான் இங்கு வரை.மிக சந்தோஷமாக இருக்கிறான் என புரிகிறது.
“என்ன நீ அப்பா அப்படியே சின்னதா எங்கேஜ்மென்ட் வச்சுடலாம்னு சொல்லிகிட்டு இருக்காங்க நீ இப்டி கிளம்பி வர்ற…?“ அம்மா இவள் உடையைப் பார்த்து சற்றே கடிதலாக சொல்ல, மதுரனோ “இருக்கட்டும் அத்தை அங்க போய் பார்த்துகிடலாம்…இப்போ ட்ராவல் தானே” என்று இவளுக்கு சப்போர்ட் செய்வது போல் இன்னுமாய் குழப்பினான்.
அதே நேரம் அவன் பார்வையோ அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய எல்லாம் மாறிக் கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. முழு மனதாய் எந்த மனதடையும் இன்றி இவளை தன்னவளாய் பார்க்கிறான்.
அதன் பின் எதைப் பற்றியும் யோசிக்க அவளுக்கு விருப்பம் இல்லை. ஊட்டி அதாவது இவளது தந்தையின் பூர்வீகம் செல்வதாக திட்டம். மகளின் திருமணத்தைதான் அங்கு வைக்க முடியாது, அதனால் இதுவாவது அங்கு நடக்க வேண்டும் என்றார் அப்பா. மதுரன் பெற்றோர் முறைப்படி திருமணம் பேச அங்கு வருவதாக ஏற்பாடு.
தன் பெற்றோரிடம் மதுரன் எப்பொழுது சொன்னான் எப்படி சொன்னான் எதுவும் இவளுக்குத் தெரியாது. ஆனால் தலை கால் புரியாத சந்தோஷம்.
மதுரன், இவள், நவ்யா மூவரும் ஒரு காரிலும், அம்மாவும் அப்பாவும் ஒரு காரிலுமாக கிளம்பினர்.
அவசர அவசரமாக பெங்களூரில் ஒரு ஷாப்பிங். அவளுக்கு எப்பொழுதும் சிவப்பின் மேல் ஈடுபாடு. ஆக சிவப்பு நிறத்தில் ஒரு புடவையும் வாங்கிக் கொடுத்தான். அவன் முதன் முதலாக தந்த பரிசு.
படு சந்தோஷமாக கொண்டாட்டம் குதுகலமாக தொடங்கியது பயணம்.
அப்பாவின் காரை ஓட்டியது இவர்களது டிரைவர். பெங்களூர் – ஊட்டி பாதையில் அடிக்கடி கார் ஓட்டிய அனுபவம் உள்ளவர் அவர். அதோடு அப்பா சீக்கிரமே ஊட்டி சென்றடைய விரும்பினார். விழா ஏற்பாடுகள் செய்தாக வேண்டும் என்றார். அதனால் அவர்கள் வேகமாக சென்றுவிட்டனர்.
மலைப் பகுதியை அடையும் வரை அவர்களை பின் தொடர்ந்து அதே வேகத்தில்தான் சென்றான் மதுரனும். ஆனால் மலைப் பகுதியை அடைந்ததும் அப்பா இவளை அலை பேசியில் அழைத்தார்.
“லிசிமா…இனி மாப்ளைய மெதுவா வரச் சொல்லு….அவருக்கு பழக்கமில்லாத ரோடு, அதோட மலைய பார்த்துட்டு வர மெதுவா வந்தாதான் நல்லா இருக்கும்…எங்களுக்குத்தான் வேலை இருக்குது….நீங்க மெதுவா வந்து சேருங்க…” அப்பாவின் வார்த்தைகளை இவள் நிறை வேற்ற செய்தது சரியா தவறா என இப்பொழுது புரியவில்லை.
ஆனால் அன்று அதை சந்தோஷமாக செய்தாள். மதுரனும் இவள் சொல்லும் எதையும் செய்யும் மன நிலையில் இருந்தான் அன்று.
ஆக ஓரளவு மெதுவாகவே மலையேறியது இவர்களது கார். இவளுக்கு நன்றாக தெரியும் அந்த வெண்ணிற ட்ரக் வந்து மோதியது எதிர்பாராத செயல் இல்லை. அது திட்டமிட்ட ஒன்று என்று.
ஆம் ஒரு வளைவில் அந்த ட்ரக் நின்று கொண்டுதான் இருந்தது. குறைந்த வேகத்தில் அதை இவர்கள் கார் கடக்க முயன்ற நிமிடம் சட்டென நகர்ந்து இவர்களது காரை பக்கவாட்டில் இடித்தது அது. பெரிய அளவிலான இடி கூட கிடையாது.
வளைந்து கொண்டிருந்தது அல்லவா இவர்கள் கார், இடிபட்ட வேகத்தில் அப்படியே பாதையை விட்டு விலகி நழுவி இடப்புறமிருந்த பெரும் பள்ளத்தாக்கிற்குள் போய் மெதுவாகவே விழுந்தது.
“மதுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்………….” அந்த விழுந்து கொண்டிருந்த வேளையிலும் பாய்ந்து சென்று அவன் கை பற்றியதுதான் கடைசி ஞாபகம். சட்டென்று எதோ ஒரு கயிறில் மாட்டியது போல் ஒரு உணர்வு.
மீண்டும் இவளுக்கு விழிப்பு வந்த போது 2 மாதம் 6 நாட்கள் கடந்திருந்தன காலண்டரில். இவளைத் தவிர யாரும் சடலமாகக் கூடக் கிடைக்கவில்லை.
ஆனால் ஏனோ இவளால் மதுர் இறந்துவிட்டான் என உணரவோ நம்பவோ முடியவே இல்லை. உள்ளுணர்வில் எப்பொழுதும் அவன் ப்ரசன்னம்.
நாட்கள் எத்தனை நகர்ந்தாலும் இவளால் அவனைத் தேடுவதை நிறுத்த முடியவில்லை. முதலில் இவளுக்கு அப்பா மீது எந்த சந்தேகமும் இல்லைதான்.
“மதுர் உயிரோட இல்லை….அத நீ நம்பித்தான் ஆகனும்…இந்த கற்பனை உலகத்தைவிட்டு வெளிய வா” ந்னு அவர் சொல்ல தொடங்கிய போது கூட அவளுக்கு சந்தேகம் வரவில்லைதான்.
ஆனால் நாட்கள் போக போக அவர் அந்த வார்த்தைகளில் காட்டிய ஆக்ரோஷம் அவளை யோசிக்க வைத்தது.
அவன் இறந்துவிட்டான் என அப்பா எப்படி உறுதியாக சொல்கிறார்? ஊட்டிக்கு செல்ல வேண்டும் என்றது அப்பா. காரை மெதுவாக வரச் சொன்னது அப்பா. இவள் மேல் ஏதோகயிறு போல் விழுந்ததே. இவளை விழவிடாமல் தடுத்துவிட்டனரோ?
தோன்றிய சந்தேகம் உறுதியாக உண்மை எனத் தோன்றியது அப்போது.
கடைசியில் நம்ப வைத்துக் கொன்றுவிட்டார் அவர் தன்னவனை. பண வகை பேதம் தானே இத்தனைக்கும் காரணம். மதுரனை கொல்ல காரணமாய் இருந்த பணம் இவளுக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். அப்பாவிடமிருந்து ஐந்து பைசா வாங்க கூடாது என அவள் முடிவு செய்தது அதனால் தான்.
மதுரனின் பெற்றோர் சென்னையில் இருக்கிறார்கள் என்பது வரை இவளுக்கு தெரியுமே தவிர அவர்களுடன் இவளுக்கு அறிமுகம் கிடையாது. அவர்கள் முகவரி என்றும் எதுவும் தெரியாது. ஆக இனி இவள் வாழப் போகும் இடம் சென்னை என முடிவு செய்து கொண்டாள்.
அவர்கள் தங்கள் மகனை இழக்க இவள் தகப்பனார் காரணமாக இருந்திருக்கிறார்தானே….அதனால் அவரும் தன் மகளை இழந்தாக வேண்டும். “என்னை ஃபாலோ பண்றீங்கன்னு எனக்கு சந்தேகம் வந்தா கூட நான் சுசைட் செய்துப்பேன்….நியாயப் படி நான் செத்துதான் உங்களை தண்டிக்கனும்…பட் உயிரோட இருந்து உங்களோட இன்னொரு தப்ப சரி செய்யலாம்னு நினைக்கிறேன்….அது வேண்டாம் நான் சாகத்தான் வேணும்னு நினைச்சீங்கன்னா தேடி வாங்க” தன் தகப்பனிடம் சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டாள். அதுவும் நேரடியாக சென்னை வரவில்லை.