(Reading time: 18 - 36 minutes)

மௌனமாக மனதிற்குள் சதீஷ் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டித்தாள் நல்லிசை. நவ்யாவோ வித்யாசமாக வேறுவிதமாக தகவமைந்தாள். இன்னுமாய் இறுகிப் போனாள். பேச்சு குறைந்து கிட்டதட்ட பேச்சே இல்லை என்ற நிலைக்குப் போனாள் அவள். ஆம் சதீஷைப் பற்றி கூட அவள் எதுவும் விசாரிக்கவில்லை. விசாரிக்க முனையவும் இல்லை. அழுகையோ கண்ணீரோ அதுவும் இல்லவே இல்லை. புதிராகிப் போனாள்.

ஆனால் மறு வகையில் தெளிவாக இருந்தாள். குழந்தையைப் பற்றி எத்தனைவிதமாய் எப்படிக் கேட்டுப் பார்த்த போதும் பதிலே சொல்லவில்லை. நவ்யா மதுரனின் சித்தப்பா மகளாக இருந்த போதும் அவனுக்கும் தங்கையைப் பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தன் அண்ணன்மாருக்கு இன்னும் திருமணம் ஆகாத காலத்திலேயே குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு போனவராம் நவ்யாவின் தந்தை. அதன்பின் அவர் எங்கிருக்கிறார் என கூட குடும்பத்திற்கு பலவருடங்கள் தெரியாதாம். பின்பு ஒரு நாள் மரணபடுக்கையில் தன் அண்ணன்மாரை தொடர்புகொண்டாராம். அப்பொழுது நவ்யா +2 மாணவி. அவளது அம்மாவும் இறந்து பலகாலம் ஆகியிருந்தது அப்பொழுது. நவ்யாவுக்கு இயல்பில் தன் தகப்பனாரின் குடும்பத்தினருடன் எந்த ஒட்டுதலும் தோன்றவே இல்லையாம். தன் அம்மாவை ஏற்காதவர்கள் என்ற எண்ணமிருந்திருக்கலாம்.

அதனால் தன் தகப்பனாரின் மறைவுக்குப் பின் அவள் எந்த பெரியப்பா குடும்பத்துடனும் சேர்ந்திருக்க மறுத்துவிட்டு ஹாஃஸ்டலிலேயே படிப்பை தொடர்ந்தாள் போலும். அவள் அப்பா சேர்த்து வைத்திருந்த சேமிப்பு அதிகம்.

விடுமுறை விழாக்காலம் என எதற்கும் அழைத்தாலும் உறவினர் வீட்டிற்கு வருவது அவள் வழக்கம் இல்லை போலும். ஏன் இவர்கள் தொலைபேசியில் அழைத்து பேசி தொடர்புடன் இருக்க முயன்றால் கூட  அவள் வருடத்திற்கு இருமுறை அழைப்பை ஏற்றால்  அது பெரிய விஷயமாம்.

ஆனால் மதுரனிடம் மட்டும் நட்பு என்ற அளவு சொல்ல முடியாதாகினும் சற்று இயல்பாய் நடந்து கொள்வாள் போலும். இப்படி எந்த தொடர்பும் இன்றி இருந்தவள் திடீரென இந்த கல்வியாண்டில் தான் இந்த கல்லூரியில் வந்து சேர்ந்திருக்கிறாள். அதன்பின்னேதான் மதுரனுடன் மிக இயல்பாய் உறவாடல். ஆக அவளைப் பற்றி மதுரனுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

சதீஷ் முன்பு நவ்யாவுடன்  பேச முயல்வதை மதுரனும் பார்த்திருக்கிறான், அவனைப் பார்த்தாலே நவ்யா ஓடி ஒளிவதையும் அவன் அறிவான். அவ்வளவுதான் தகவல்.

நவ்யாவின் நடவடிக்கைகளை வைத்து நல்லிசையாக ஒரு யூகத்திற்கு வந்தாள். நல்லிசை விரும்பாத வகையில் குழந்தை வந்திருக்கிறது. அந்த காரணமாகவே அவள் சதீஷை தவிர்க்கிறாள் என்பதுதான் அது.

ப்படி இப்படி என்று நாட்கள் நகர்ந்தன. மதுரனுக்கு நேற்று இன்டர்வியூ. முடிந்ததும் அவன் பேசிய குரலே காட்டியது அவன் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறான் என. அப்பா திருமணம் நடத்தவே பச்சை கொடிகாட்டி இருந்த போதும் வேலை உறுதிப் படும் வரை வீட்டில் அந்த பேச்சை கூட எடுக்கமுடியாது என்று மறுத்துவிட்டிருந்தான். இருப்பினும் அப்படி ஒரு குதுகலத்தில் இருந்தான் அவன்.

அவனை அப்படிப் பார்ப்பது நல்லிசைக்கு அதுவே முதல் முறை. எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதுதான் அவன் இயல்பு என்றாலும் இவள் வரையில் அவன் மிகவும் அமைதியாய் அமர்தலாய் செல்ல வைத்திருந்த சூழல் இப்பொழுது மாறுகிறது என்பதால் போலும்.

அன்று இரவு வெகு நேரம் அவனிடம் தொலை பேசியில் பேசி இருந்தாள் அவள். ஆம் இப்பொழுதெல்லாம் அவ்வப்பொழுது அவனுடன் உரையாடிக் கொள்வதுதான். காரணம் அம்மா.

இட்லி பொடி எள்ளுப் பொடியிலிருந்து இன்ஸ்டன்டா சாப்பிட இது நல்லது அது சரி என எதையாவது அவனுக்கு அனுப்ப தொடங்கிய அம்மா, “கண்ணுக்கு நல்லது இந்த கீரை குழம்பு சாப்டுங்க…” “இன்னைக்கு அரேபியன் சிக்கன் செய்தோம் சாப்டுப்பாருங்க…”என எதாவது ஒரு காரணத்தோடு தினமும் ஒருவேளையாவது வீட்டு சாப்பாடு அனுப்பும் அளவு முன்னேறி இருந்தார்.

அவன் ஆரம்பத்தில் தயங்க “எனக்கு மகன் கிடையாது…மக வழியா மருமகனால எனக்கு மகன் வருவான்னு நான் நம்பிகிட்டு இருந்தேன்…” என்ற சென்டிமென்ட் ஆயுதத்தால் அவனை வாயடைத்துவிட்டார்.

ஆக இதற்காகவெல்லாம் அம்மா மதுரனை அவ்வப்பொழுது அலைபேசியில் தொடர்பு கொள்பவர் தான் பேசிமுடித்ததும் அப்படியே மொபைலை இவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தும்விடுவார்.

“உங்கப்பாவுக்கு சரியான ஆள் உங்க அம்மாதான்” என மதுரன் கிண்டல் செய்தான்.

“ஏன் உங்களுக்கு கூட அம்மா டெக்னிக்தான் ஒர்க் அவ்ட் ஆகுது….என்ட்ட பேச மாட்டேன்னு எவ்ளவு சீன் போட்டீங்க…”

“ஹேய்….அது உங்கம்மாப்பா சம்மதம் இல்லாம செய்றதுதான் கஷ்டமா இருக்குன்னு சொன்னேன்…இப்பதான் ராக் சாலிடா அத்தை சப்போர்ட் இருக்குதே….அதுவும் எதுவுமே உங்கப்பாவுக்கு தெரியாமலும் இல்லை….”

‘புத்தியுள்ள ஸ்த்ரீ தன் குடும்பத்தை கட்டுகிறாள்’ உண்மைதான் அம்மா திசைக்கொருவராய் நிற்கும் மாமனாரையும் மருமகனையும் இணைந்து கட்டிவிடுவார்தான் போலும்.

ஏனெனில் மதுரன் சொன்னது போல் இந்த நடபடிகள் எதுவும் அப்பா அறியாமல் ரகசியமாகவும் நடை பெறவில்லை. அப்பாதான் நாம பழக நினச்சாலும் மாப்ள ஒதுங்கிப் போறார்னு சீன் போட்டு வச்சிருந்தாரே....அதனால் அவரால் இதற்கு தடை சொல்லவும் முடியவில்லை. இவளுக்குத் தான் அப்பாவைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

யோசித்துப் பார்த்தால் மதுரனை விட அவர் இவள் மீது அதிக பாசம் வைத்திருப்பதாக எப்படியும் நிரூபித்துவிட வேண்டும் என போராடுவது போல் தோன்றியது.

 இப்பொழுதெல்லாம் அப்பா மதுரனிடம் போட்டியிட்டு அப்படி எதையாவது சொன்னாலோ செய்தாலோ அந்த நிமிஷமே அவரை கட்டி அணைத்து ஒரு முத்தம் வைத்து “என் செல்ல அப்பா” என கொஞ்சிவிட்டுப் போவாள் இவள்.

அப்புறம் அவர் எங்கு முறைப்பதாம்? “குட்டி கழுத…கன்னத்தை எச்சியாக்கிட்டு போகுது….” என்று அவர் சொல்லும் நேரம் முகம் முழு பூரிப்பில் மின்னும்.

அடுத்து நாட்கள் போகப் போக அப்பாவே கூட “சண்டே சாப்பாடு குடுத்துவிடுறதுக்கு பதிலா மாப்ளய அவர் தங்கச்சிய கூட்டிட்டு இங்க வரச் சோல்லேன்….” என்ற ரேஞ்சுக்கு டெவலப்பாகிப் போனார்.

அப்படிபட்ட தினங்களில் நவ்யாவும் மறுப்பு சொல்லாமல் வருவாள். கலகல என்று இல்லை எனினும் ஏனோ எப்படியோ அவளுக்கு நல்லிசையின் அம்மாவிடம் மட்டுமல்ல அப்பாவிடம் கூட சுமுகமாக பழக முடிந்தது.

ஆக காதல் தடைகள் காற்றில் கரைய, காதலர் கனவில் கண்ட மணநாள் உற்சவம் நெருங்க தொடங்கியதாய் தோன்றியது. அப்பொழுதுதான் அந்த இன்டர்வியூவும் வந்து முடிந்தது. இரவில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தூங்கச் சென்றதால் காலை கண்விழிக்க கஷ்டமாக இருந்தது.

இழுத்துச் சேர்ந்த இமைகளுடன் போராடி ஒருவழியாய் கண்விழிக்கும் போதே முடிவு செய்துவிட்டாள் நல்லிசை இன்று காலேஜ் கட். வகுப்புக்கு செல்ல மனம் இல்லை. பஞ்சு மெத்தைக்குள் பதுங்கிக் கொள்ள பாவை மனம் பிடிவாதம்.

ஆக வெகு தாமதமாக எழுந்தவள் குளித்து முடித்து ஒரு வெண்ணிற நைட்டியுடன் பால்கனியில் நின்று தலை முடியை உலர்த்துவதாய் பேர் செய்து கொண்டிருந்தாள்.

“வாவ்….மேரேஜுக்கு பிறகு நான் டெய்லி பார்க்கப்போற மார்னிங் ஷோ இதுதானா…” சத்தியமாக மதுரனை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை. உடல் தூக்கிவாரிப் போட திரும்பிப் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.