(Reading time: 15 - 29 minutes)

ணி மத்த இடத்துக்கு வேலைக்குப் போனாத்தானே உனக்கு கஷ்டம்.  நீ என்கிட்டயே வேலைக்கு சேர்ந்திடு.  எப்படியும் தினமும் காலைல பதினோரு மணிக்கு ஆஜராய்ட்டு மூணு மணி வரைக்கும் நீயும் வெற்றியும் இங்கதான் சுத்திட்டு இருக்கீங்க. அந்த நேரத்துல நம்ம தோப்புல வேலையை செஞ்சுட்டு கூலி வாங்கிக்குங்க”, என நல்லதம்பி கூற, ஐயோ இந்தாள் என்ன  என்னைய வேலை செய்ய சொல்றாரு, இதெல்லாம் நடக்கற காரியமா என்று முழித்தான் மணி.

“என்னையா வேலைக்கு வர சொன்னா இந்த முழி முழிக்கற......”

“ஐயா, உங்களுக்கே எங்க ரெண்டு பேரை பத்தியும் தெரியும்.  இங்க வேலைக்கு வந்து கூலி வாங்கினாலும் வாங்கற துட்டை அப்படியே சாராயக்கடைல செலவழிச்சுட்டுத்தான் போவோம்.  அதால தேவிப் பொண்ணு வேலைக்கு வர்றதுதான் சரி”

“ஏன்யா பொண்ணு வேலைக்கு போய் நம்மளை காப்பாத்துதேன்னு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பேசற.  அது சரி பொண்டாட்டி வேலைக்குப் போய் காப்பாத்தினதையே பெருமையா சொன்ன  ஆளுதானே நீயி”, தேவியை வேலையை விட்டு நிறுத்த முடியாதோ என்ற கடுப்பில் நல்லதம்பி சொல்ல, வெக்கம், மானத்தைப் பத்தி எல்லாம் இந்தாள் பேசி நாம கேக்க வேண்டிய நிலைமையாப் போச்சே என்று மணி வருந்தினான்.

“ஹி ஹி ஹி.  அது அப்படி இல்லை ஐயா.  இத்தனை நாளா வேலை வெட்டிக்குப் போகாம அப்படியே இருந்துட்டோமா. திடீர்ன்னு எப்படி பண்றதுன்னுதான்”, மணியை மிரட்டாமல் இந்த சோம்பேறிகளை வேலைக்கு வர வைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான் நல்லதம்பி.

“யோவ் ஏற்கனவே மீனா உங்க ரெண்டு பேர்கூடவும் சேர்ந்துதான் நான் கெட்டுப் போறேன்னு சொல்லி கத்திட்டு இருக்கா........”, நல்லதம்பி சொல்ல, என்னது இந்தாள நாங்க கெடுக்கறோமா, மீனாம்மாக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையே என்று மனதிற்குள் மீனாவை வைதான் மணி.

“அஞ்சலை இருந்த போதே நீங்க  வேலைக்குப்  போகாம இருக்கறதைப் பத்தி கத்துவா, இப்போ அஞ்சலையும்  போய் சின்னப் பொண்ண வேலை செய்ய விட்டுட்டு நீங்க ரெண்டு பெரும் ஊரை சுத்தி வர்றதைப் பார்த்துட்டு நெதம் எனக்குத்தான் திட்டு விழுது.  என்கூட உங்களை வச்சிருக்கறதாலதான் நீங்க வேலைக்கு போகறதில்லைன்னு.  இப்போ நீங்க இங்கவே வேலைக்கு சேர்ந்துட்டா மீனாக்கிட்ட அதையே சொல்லி சமாளிச்சுடுவேன்.  அப்படி சேரலைன்னா இனிமே நீங்க இங்கயும் வரமுடியாது”, நல்லதம்பி சொல்ல, நல்லதம்பியைப் பார்க்காமல் இருப்பது மணிக்கும் சந்தோஷமே என்றாலும், அவன் அவ்வப்பொழுது தரும் காசு வராமல் போய் விடுமே, ஆனால் அதற்காக வேலைக்கு வருவதா என்று அடுத்து என்ன சாக்கு சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

“நீங்க சொல்றது சரிதான்யா.  ஆனா எங்களை, வேலைக்கு வச்சுட்டு சம்பளம் கொடுத்தாலும் அது உபயோகப்படாது. போற வழிலேயே போய்டுமே.  அதுதான்  சொன்னேன்”

“நீ சொல்றதும் சரிதான்.  பேசாம இப்படி பண்ணினா என்ன, தினம் உனக்கு கூலி தந்தாத்தானே பிரச்சனை.  பேசாம மாச சம்பளத்துக்கு ரெண்டு பேரும் சேர்ந்துடுங்க.  மொத்தமா காசை நான் மாசா மாசம் தேவிக்கிட்டையே கொடுத்துடறேன்.  அப்போ பிரச்சனை இல்லை இல்ல”, அவளை வேலையை விட்டு நிறுத்திய மாதிரியும் ஆயிற்று, அப்படியே மாதத்திற்கு ஒரு முறை அவளை பார்த்த மாதிரியும் ஆயிற்று என்று உற்சாகமாக வழி சொன்னான் நல்லதம்பி.  இந்தாள் எப்படியும்  நம்மளை  வேலைக்கு வர வைக்காமல் விட மாட்டான் என்று அறிந்த மணி தானும், வெற்றியும் வேலைக்கு வருவதாக ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்தான்.

“சரிங்கைய்யா நீங்க சொன்னா மாதிரியே நானும், வெற்றியும் நாளைல இருந்து வேலைக்கு வந்துடறோம்.  ஆனா நீங்க என்கிட்டயே சம்பளத்தைக் கொடுத்துடுங்க.  நானே ஒழுங்கா அதை தேவிக்கிட்ட கொடுக்கறேன்.  அது வந்து வாங்கிட்டு போனா அவ்ளோ நல்லா இருக்காதுங்க”

“அதெல்லாம் வேணாம் மணி.  உன்கிட்ட கொடுத்தா கண்டிப்பா செலவழிச்சுடுவ.  அதால மாசத்துக்கு ஒரு வாட்டி தேவியையே  வந்து சம்பளத்தை வாங்கிட்டு போக சொல்லு”, தேவியைப் பார்ப்பதற்காகத்தான் இவர்களுக்கு வேலையேக் கொடுப்பது.  அதை கெடுக்கிறானே, என்று கடுப்பானான் நல்லதம்பி. வேறு வழி இல்லாமல் மணியும் நல்லதம்பி கூறியதற்கு ஒத்துக்கொண்டு மறுநாளில் இருந்து வேலைக்கு வருவதாகத் தெரிவித்தான்.

வீட்டிற்கு வந்த மணி  வெற்றியிடம் நல்லதம்பி தன்னிடம் கூறியதை சொல்ல, அவனும் வேலைக்கா என்று முதலில் யோசித்து, பின்பு எப்படியும் தாங்கள் நல்லதம்பிக்கு ஜால்ரா தட்டும் வேலையைத்தான் செய்யப் போகிறோம் அந்த நேரத்தில் வேலை பார்க்கலாமே, என்று ஒத்துக்கொண்டான்.  அன்று இரவு வந்த தேவி பள்ளியில் கொடுத்த வீட்டுப் பாடங்கள் நிறைய இருப்பதால் தன்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்றும்,  பக்கத்தில் இருக்கும் பாட்டிக் கடையிலிருந்து இட்லி வாங்கி சாப்பிடுமாறும் சொல்லிவிட்டு படிக்க உட்கார்ந்தாள்.  அவள் படிக்க உட்கார்ந்ததால் அவளிடம் பேச முடியாமல் போக மறுநாள் அவர்கள் இருவரும் எழுவதற்குள் தேவி கிளம்பி வேலைக்கு சென்று விட்டாள். இப்படியே தேவியிடம் பேசாமலேயே இரண்டு நாட்கள் ஓடியது.  அந்த வார ஞாயிறன்று தேவியிடம் பேச வேண்டும் என்று மணியும், வெற்றியும் முடிவு செய்தார்கள்.   தந்தையும், அண்ணனும் வேலைக்கு செல்வது தேவிக்கு தெரியாமலேயே ஒரு வார காலம் ஓடி அந்த ஞாயிறும் வந்தது.

“தேவி வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டியா?”, அவள் வேலை முடிந்து திரும்பி வந்த பத்து மணிக்குத்தான், மணி துயில் கலைந்து எழுந்தான்.  வெற்றி அப்பொழுதும் எழும்பவில்லை.  இது எப்பொழுதும் நடப்பதுதான் என்பதால் தேவிக்கு எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. 

“முடிஞ்சுடுச்சு நைனா.  இனி நம்ம வீட்டு வேலை மட்டும்தான் பாக்கி.  சமைச்சுட்டு ரெண்டு நாள் துணி கிடக்குது, தொவக்கணும்”

“அதெல்லாம் அப்பறம் செய்யலாம்.  நான் வெற்றியை எழுப்பறேன்.  எங்க ரெண்டு பேருக்கும் காப்பித் தண்ணி வைய்யி.  உன்னாண்ட கொஞ்சம் பேச வேண்டிது இருக்குது”

“என்னாண்ட பேச என்ன இருக்குது நைனா.  உனக்கு துட்டு எதுனா வேணுமா.  என்கிட்ட இப்போ இல்லியே.  சம்பளமும் அடுத்த வாரம்தான் வரும்.  நான் வேணா நாளைக்கு மீனாக்கா கிட்ட கேட்டுப் பாக்கட்டா.  அது குடுத்துச்சுன்னா ராத்திரி வந்தோண தர்றேன்”, தன் தகப்பன் தன்னை பணத்துக்காக மட்டுமே தேடுவான் என்று நினைத்து பதில் கூறினாள் தேவி.

“துட்டுக்காக இல்லை தேவி.  இது வேற விஷயம்.  நீ போய் முதல்ல காபி போடு.  நாம அப்பறமா பேசலாம்.  அப்படியே அந்த வெற்றி பயலை எழுப்பி விடு”, என்று கூறிவிட்டு மணி நடக்க, என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே சென்று வெற்றியை எழுப்பினாள் தேவி.

வெற்றியும் அத்தனை சீக்கிரம் தன்னை எழுப்பிய தங்கையை வசை பாடிக்கொண்டே சென்று காலைக் கடனை முடித்து வந்தான்.  மணிக்கும், வெற்றிக்கும் காப்பியைக் கொடுத்துவிட்டு அவர்கள் எதைப் பற்றி பேசப்போகிறார்கள் என்ற யோசனையுடன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள் தேவி.

“நைனா, எதுனா பிரச்சனையா,  எதுக்கு பேசணும்ன்னு சொன்ன?”

“அதுல்லாம் இல்ல தேவிம்மா.  உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும்.  நானும், அண்ணனும் ஒரு வாரமா நல்லதம்பி ஐயாக்கிட்ட வேலைக்குப் போறோம்”, மணி சொல்ல, சந்தோஷத்தில் வாய் பிளந்தாள் தேவி.

“நைனா மெய்யாலுமா சொல்ற,  உண்மையாவே வேலைக்குப் போறீங்களா?”

“ஆமாம் தேவி.  எவ்ளோ நாளுதான் உன்னைய போட்டு கஷ்டப்படுத்தறது.  அதுதான் நானும், வெற்றியும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டோம்.  இனி மாசா மாசம் சுளையா எங்க சம்பளத்தை உன் கைல கொடுத்துடுவோம்”, நல்லதம்பி வற்புறுத்தி செய்ய வைத்த வேலையை ஏதோ இவர்களே மனம் திருந்தி சென்று செய்வது போல சொன்னான் மணி.

“நைனா எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்குது தெரியுமா.  அம்மா இருந்தா அவ்ளோ பூரிச்சு போய் இருக்கும்.  அம்மாதான் தெய்வமா இருந்து உன் மனசை நல்ல விதமா மாத்தி இருக்குதுன்னு நினைக்கறேன்”, தேவி கடவுளைப் பார்த்து கை கூப்பிக்கொண்டே சொல்ல,  அஞ்சலை எங்கே மாற்றினாள், எல்லாம்  அந்த நாசமாப்போன நல்லதம்பியால் என்று மனதில் நினைத்தான் மணி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.