(Reading time: 15 - 29 minutes)

12. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

தேவி மீனாவின் வீட்டில் வேலை செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது.  காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டில் வேலைகளை முடித்து குளித்துக் கிளம்பி ஆறரை மணிக்கு மீனாவின் வீட்டை அடைவாள் தேவி.  அங்கு சரியாக ஒரு மணி நேர வேலை.  மற்ற வீடுகள் அவள் பள்ளிக்கு அருகிலேயே இருந்ததால், அவளுக்கு போய் வருவது தொந்தரவாக இல்லாமல் இருந்தது. 

இந்த இரண்டு மாதங்களும் எப்படியோ நல்லதம்பியின் கண்ணில் மாட்டாமல் தப்பித்து விட்டாள் தேவி.  அதற்கு முக்கிய காரணமும் மீனாதான்.  மீனா நல்லதம்பிக்கு போட்ட பல கட்டளைகளில் மிக முக்கியமானது அவன் எட்டு மணிக்கு முன்னால் அறையை விட்டு வரக்கூடாது என்பதுதான்.  அதை சில முறை மீறி,  அதற்கு மீனாவிடம் இருந்து சில, பல விழுப்புண்களை பெற்றிருந்ததால் அந்தக் கட்டளையை  மட்டும் சரியாக கடைபிடித்தான்.  எப்படியும் இதே முகங்களை வேறு இடத்தில் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையிலும் அதைக் கடை பிடித்தான் என்று சொல்லலாம்.  அதேப் போல் அவன் அறையையும் அவன் வீட்டில் இல்லாத பொழுதுதான்  வேலை ஆட்கள் சென்று சுத்தம் செய்வார்கள்.

தேவி மீனாவின் வீட்டிற்கு சென்று வேலை கேட்ட சமயம் நல்லதம்பி வீட்டில் இல்லை, அதேப் போல அவள் வேலை செய்ய வரும் நேரமும், நல்லத்தம்பிக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயமாக இருந்ததால், அவனால் அவளை பார்க்க முடியாமல் போனது.  அஞ்சலை இறந்த அன்று தேவியைப் பார்த்ததுடன் சரி.   அப்பொழுதுதான் பள்ளியில் அஞ்சலையின் எறிந்த சடலத்தைப் பார்த்த அதிர்ச்சியில் அவன் இருந்ததால் அவனால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.  அதன் பின், நல்லதம்பிக்கும் பக்கத்து ஊரிற்கு  வெளியூரிலிருந்து வந்து வேலை செய்து வந்த, ஒரு புதுப் பெண்ணின் தொடர்பு கிடைத்திருந்ததால், அந்த மயக்கத்தில் தேவியை மறந்திருந்தான்.  இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ச்சீ, ச்சீ இந்தப் பழம் புளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள்  அந்தப் பெண்.  அவளும் முடிந்தவரை நல்லதம்பியிடமிருந்து கறந்து விட்டதால், எப்படி அவனை விட்டு விலகுவது என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள். நல்லதம்பியும் அதே நிலையில்தான் இருந்தான்.

Vidiyalukkillai thooram

தேவி அன்று மீனாவின் வீட்டிற்கு சென்ற பொழுது மீனா அவளின் தாய் வீட்டிற்கு செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.  அவளுடன், நல்லதம்பியும் செல்வதாக இருந்தது.  இருவரும் இறங்கி வந்து ஹாலைக் கடக்கும் வேளையில் உள்ளே நுழைந்தாள் தேவி. 

“வா தேவி, இன்னைக்கு நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்.  வர்றதுக்கு ஒரு ரெண்டு, மூணு நாள் ஆகும், அதனால இன்னைக்கு வேலைக்கு அப்பறம், நீ நாலு நாள் கழிச்சு வந்தாப் போதும்”, தான் இல்லாத சமயத்தில் நல்லதம்பி பெண்களிடத்தில் அத்துமீறும் முறை தெரிந்து இருந்ததால், வயதான கிழவிகளைத் தவிர மற்றவர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை கொடுத்து அனுப்பி இருந்தாள் மீனா.

“சரிங்க அக்கா, எனக்கும்  மன்த்லி டெஸ்ட் இருக்குது.  படிக்கறதுக்கு ரொம்ப வசிதியா இருக்கும்”,  மகிழ்ச்சியுடன்  மீனாவிற்கு தலை ஆட்டியபடியே வேலை செய்ய உள்ளே சென்றாள் தேவி.

“என்ன மீனு.  இந்தப் பொண்ணு எப்போதுல இருந்து நம்ம வீட்டுல வேலை செய்யுது.  அந்த மணிப் பய எங்கிட்ட சொல்லவே இல்லை”, தேவியைப் பார்த்தபடியே மீனாவிடம் கேட்டான் நல்லதம்பி.

“என்ன பார்வை எல்லாம் ஒரு பக்கமாப் போகுது.  போகறது எங்கப்பா வீட்டுக்கு, அங்க என் அண்ணங்க இருப்பாங்க.  மறந்து போச்சா?”

“ச்சே ச்சே, என்ன மீனு இது.  படிக்கற வயசுல அது நிலைமை இப்படி ஆகிப்போச்சேன்னு ஒரு கரிசனைலதான் கேட்டேன்.  நீ தப்பா எடுக்காத”, அசடு வழிந்தபடியே கூறினான் நல்லதம்பி.

“உன்னோட கரிசனைலாம் எனக்கும் தெரியும்.  அதால பொத்திட்டு கிளம்பு”, என்று நொடித்தபடியே காரை நோக்கி நடந்தாள் மீனு.  தேவி சென்ற திசையை நோக்கி ஒரு பெருமூச்சு விட்டபடியே மீனாவைத் தொடர்ந்தான் நல்லதம்பி.

மீனா அவள் தந்தை வீடு சென்று வந்தபின் வழக்கம்போல் தேவி. மீனாவின்  வீட்டு வேலைக்கு வர ஆரம்பித்தாள்.  இப்பொழுது தேவி வரும் நேரம் குறித்து அறிந்து கொண்ட நல்லதம்பி, அந்த நேரத்தில் ஏதோ ஒரு சாக்கு வைத்துக் கீழே வரத் தொடங்கினான்.  இரண்டு, மூன்று நாட்கள் பொறுத்த மீனா,  அவனின் தடை உத்தரவை முழு அளவில் கொண்டு வந்தாள்.  எட்டு மணி என்பது ஒன்பது வரை நீட்டிக்கப்பட்டது.  இன்னும் ஏதேனும் செய்தால் முழு நாளும் ரூமிலேயே வைத்து மீனா பூட்டி விடுவாள் என்ற பயம் இருந்ததால், நல்லதம்பியும் மீனாவின் கட்டளையை ஒழுங்காக பின்பற்றினான்.

னாலும் தேவியின் அழகு அவனை சும்மா இருக்க விடவில்லை.  எப்படியாவது அவளை அடைந்து விடுவது என்ற முடிவில் இருந்தான்.  அன்று அவன் தோப்பை அடைந்தவுடன்,  மணி மட்டும் வந்தான்.

“என்னா மணி நீ மட்டும் வர்ற. வெற்றியைக் காணும்”

“அது பக்கத்து ஊருல ஏதோ சேவ சண்ட நடக்குதுன்னு அதுக்குப் போய் இருக்கான்”

“ஓ சரி,  ஏன்யா தேவிப்பொண்ணு நம்ம வீட்டுல வேலை செய்யுது.  நீ என்கிட்ட சொல்லவே இல்லை”

“என்னங்க ஐயா சொல்றீங்க.  நான் உங்களுக்கு தெரியும்ன்னு இல்லை நினைச்சேன்.  கிட்டத்தட்ட ரெண்டு மாசமா வேலை செய்யுதே.  நீங்க பாக்கலை, மீனாம்மாகூட  உங்ககிட்ட சொல்லலையா”

“யோவ் அம்பது வயசுக் கிழவி வந்தாலே அவ என்னை மாடிக்குத் தொரத்திடுவா.  இதுல பதினஞ்சு வயசுப் பொண்ணு வந்தா என்னைய கீழ விடுவான்னா நினைக்கற”, நல்லதம்பி சொல்ல, இந்த மனுஷன் கண்ணுல தேவிப்பொண்ணு பட்டுடுச்சே.  இனி என்ன ஆகுமோ என்று மணி அதிர்ந்தான்.

“ஏன்யா படிக்கறப் புள்ளைய வேலைக்கு அனுப்பி விட்டுருக்க.  அதுவும் நல்லாப் படிக்கற புள்ள வேற.  நீயும் வெற்றியும் வேலைக்குப் போயிட்டு அதைப்  பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம் இல்லை”, மிக யோக்கியமானவன் போல பேசினான் நல்லதம்பி.

“இத்தினி வயசுக்கு மேல வேலைக்கு எல்லாம் என்னால போவ முடியலை ஐயா.  அஞ்சல போன பொறவு மனசு நொந்து நொந்து உடம்பு வேற கெட்டுப்போச்சு.  வெற்றியும் என்னைய மாதிரிதான்.  சேவ சண்டை, பஞ்சாயத்து அப்படியே சுத்திட்டு இருந்துட்டானா, அவனாலயும் வேலைக்கு எல்லாம் ஒரு இடத்துல பொருந்தி உக்கார முடியலை.  என் உடல் நிலையைப் பார்த்து  தேவிப்பொண்ணுதான் நீ கவலைப்படாத நைனா, உன்னையும், அண்ணனையும் நான் பார்த்துக்கறேன் அப்படின்னு சொல்லிடுச்சு”, தங்களின் பொருப்பில்லாத்தனத்தை ஏதோ பெரும் சாதனை போல சொன்னான் மணி.   

இப்படி ஒரு தகப்பனுக்கு அப்படி ஒரு ஏமாளிப் பொண்ணு.  தேவியை நினைத்து ஒரு நிமிடம் வருந்திய நல்லதம்பி அடுத்த நிமிடமே இவர்களின் இந்த பொருப்பில்லாத்தனத்தை தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.  தேவி பொருள் ஈட்டி வருவதால்தான் இப்பொழுது மணியின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.  முதலில் அதை நிறுத்த வேண்டும்.  முதலில் தன் வீட்டில் இருந்தே அதை ஆரம்பிக்க வேண்டும்.  அதுவும் தேவி தன் வீட்டிற்கு வேலைக்கு வரும்வரை அவளை நெருங்குவதும்  மிகக் கடினம்.  கடினம் என்பதை விட மீனாவின் பாதுகாப்பு முறையால்  முடியவே முடியாது.  முதலில் அவளை வேலையை விட்டு நிறுத்தியே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.  சிறிது நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான் நல்லதம்பி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.