(Reading time: 12 - 23 minutes)

மூங்கில் குழலானதே – 05 - புவனேஸ்வரி

ரவு ! இதயத்தை திறக்கும் கள்ளச்சாவிதானோ ? பகல் பொழுதில் மனிதனுக்கும் தான் எத்தனை போராட்டங்கள் ? துயரம் , கோபம் , போட்டி , கடமை  இப்படி அவனை துரத்தி கொண்டே ஓடுகிறது ஒவ்வொரு வினாடியும் .. !

அப்படி பட்டவனை உயிர்த்தெழ வைப்பது இரவு தானோசூரியனின் ஒளி  கதிர்களின் தாக்கம் நீங்கி , காற்றழுத்தம் அதிகமாகி , சில்லென்ற தென்றல் உலாவரும்  நேரத்தில் , பால்நிலாவும் தாலாட்டினால் பாசாங்கு செய்யுமா உள்மனது ?

அதனால்தான் , இரவில் பகிர்ந்துகொள்ள படும் உரையாடல்கள் பொக்கிஷமாக மனதில் செதுக்கபடுகின்றன ? உறக்கத்தை அர்பணித்து பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் அன்பின் வெளிபாடு என்பதை மனிதன் அறிந்ததுண்டா ?

Moongil kuzhalanathe

எத்தனை கோபம் இருந்தாலும் கூட , அருகில் உறங்குபவனின் / உறங்குபவளின் மெல்லிய அணைப்பில் கரைந்திட வேண்டும் என்ற இயல்பான உணர்வு ஒவ்வொருவரின் மனதிலும் கிளர்கிறதா ? " உனக்காக நான் இருக்கிறேன் " என்ற சிறு வசனத்திற்கு பகலை விட , இரவில் ஷக்தி அதிகம் என்பதை அனுபவித்தது உண்டா .. ?

உலகமே இருளில் மூழ்கில் மனதில் வெளிச்சம் தேடும் அனுபவமே இரவு என்று எண்ணியதுண்டா .. ? பகலெல்லாம் போராடி இரவுக்காக காத்திருந்ததுண்டா .. இரவு வந்தவுடன் நிலவை தேடியதுண்டா ? நிலவு வந்தவுடன் ஒரு கனவு வந்ததுண்டா ? கனவில் கணமும் விரயப்படுத்தாமல் அணுவணுவாய் கரைந்ததும் உண்டா ?

உடலால் மட்டும் அல்ல , மனதாலும் இருவர் சங்கமிப்பதற்கு இரவே இனிய பொழுது என்று உளமார ரசித்தது உண்டா  ? அத்தகைய இரவில் , உரிமை உள்ளவர்களிடம் எதையும் மறைக்க தோன்றுமா என்ன ? சிந்திக்கிறேன் சகிதீபன் .. !

னத்த மழை அவர்களின் வீட்டின் ஜன்னல் கதவுகளை தட்டி தட்டி சங்கீதம் பாடிக்கொண்டிருந்த நள்ளிரவு வேளை ! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அபிநந்தன்.. சில்லென்ற காற்று அவன் கேசத்தை அழைக்க ஏதோ ஒரு உந்துதலில் திரும்பி படுத்தவன் , பாதி தூக்கத்தில் விழி திறந்து பார்த்தான் .. அருகில் நந்திதா இல்லை !

எங்கே போனாள்  இவள் ? என்ற கேள்வியுடன் மொத்தமாய் தூக்கம் களைந்து எழுந்தான் ..

" நந்திதா .... நந்திதா " மெல்லிய குரலில் அவளை அழைத்து கொண்டே அறையெங்கும் தேடினான் .. குளியலறையில் இருக்கிறாளா ? என்று எட்டி பார்த்தவன் அவள் அங்கும் இல்லாமல் போக அறையில் இருந்து வெளிவந்தான் .. சிறிது நேரம் பார்வையின் சுழற்றியதின்  பயனாய் , விஷ்வாநிகாவின் அறையில் விளக்கு எறியவும் , கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ..

அது அவனது பழக்கம் .. சொந்த வீடாக இருந்தாலும் , மற்றவர்களின் உரிமையில் தலையிட கூடாது என்பதில் கண்டிப்பாய் இருப்பான் அவன் .. இப்போதும் தான் உள்ளே நுழைவதை கதவை தட்டி கூறிவிட்டுத்தான் உள்நுழைந்தான் .. அவன் வரும் ஓசை கேட்டு அழகாய் திரும்பினாள்  நந்திதா .. மெல்லிய காற்று அவள் கூந்தலுடன் பின்னி பிணைய , அவள் திரும்பிய நேரம் அவளுக்கு பின்னால் மின்னல் வெட்ட, அவளோ அழகாய் திரும்பி "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் " என்று வாய்மீது விரல் வைத்து சமிக்ஞை காட்டினாள் .. அவள் மடியில் குழந்தையை போல உறங்கி கொண்டிருந்த தங்கையை பார்த்தபடி  பூனை நடை போட்டு வந்தான் .. தங்கையின்  கூந்தலை கோதுகிறேன் என்ற பெயருடன் , மனைவியை உரசிக்கொண்டு அமர்ந்தான் .. மிகமெல்லிய குரலில்

" என்ன ஆச்சு ? " என்றான் ..மிக அருகில் அவன் கிசுகிசுப்பாய் பேசவும் அவள் லஜ்ஜையுற்றாள் .. எனினும் வினி மீது இருந்த அக்கறை அந்த உணர்வுகளை தாண்டிட , வருத்தமான குரலில்

" மீண்டும் அதே கனவுன்னு சொல்லி அழுதா " என்றாள்  நந்திதா ..பதில் ஏதும் கூறாமல் கண்களை இறுக  மூடி கொண்டான்  அபிநந்தன் .. அவன் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்தன . அவனது கரத்தை ஆதரவாய் பற்றினாள்  நந்திதா .. மெல்ல புருவம் உயர்த்தி அவன் பார்க்கவும் , அவள் தனது கைகளை எடுக்க போக , அவன் தனது இரு கரங்களாலும் அவளது கரங்களை சிறைபிடித்தான் .. இருவரின் பார்வையும் பின்னி பிணைந்தது .. கண்களாலேயே இருவரும் பேசிக்கொண்டனர் ..

" என் மீது ஏன் இத்தனை நேசம் ? " - அபி

" சுவாசிப்பதற்கு தேவையா காரணம் ?" - நந்து

" உன் அன்பிற்கு நான் தகுதியானவன் இல்லை  !"

" நீ இல்லை என்றால் என் வாழ்வில் அன்பே இல்லை "

" இன்னும் எத்தனை நாட்கள் காத்திருப்பாய் ?"

" என் ஆயுளையே உனக்கு எழுதி தந்துவிட்டேன் உயிலாக  !"

" நான் மூங்கிலை போல இருக்கமானவன், வெருமையாவன்  "

" என் காதல் உன்னை குழலாக்கிடும் "

விழியும் விழியும் பேசிய பாஷை இருவருக்குமே புரிந்தது போல் , இதழோரம் மெல்லிய புன்னகை கீற்று .. உறக்கத்தில் இருந்த  விஷ்வா , நந்துவின் மடியில் தலைவைத்து கொண்டு , அபியின் கைகளை பற்றி கொண்டாள் .. இம்முறை வாய் திறந்தே பேசினான் அபிநந்தன் ..

" என் தங்கை பாவம் "

" ம்ம்ம்ம் "

" நிறைய அதிர்ச்சிகள் அவளுக்குள் "

"ம்ம்ம்ம் "

" அவ ஒரு குழந்தை "

"ம்ம்ம்ம் "

" அவ வாழ்கையில் சந்தோசம் வந்தா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் " என்றான் அபிநந்தன் .. இது அவனது புதுமுகம் ! இல்லை இதுதான் இவனது உண்மையான முகம் .. அதீத அன்பினை மனதில் சுமப்பவன் இவன் .. ஆனால் அதை எளிதில் வெளிகாட்டிட மாட்டான் .. இதுவரை அவன் வினியிடம் அன்புடன் அதிகம் பேசி அவள் பார்த்ததே இல்லை .. அவனை பொருத்தவரை தினமும் பேசி சிரித்து செயலில் உயர்த்துவது மட்டும்தான் அன்பு என்பது அல்ல .. அது மனதில் இருந்தாலே போதுமானது என்று நினைப்பவன் அல்ல .. இப்போதும் அவன் பேசிய விதத்தை கேட்டு வாஞ்சையுடன் அவனை பார்த்தாள்  நந்திதா ..

" என்ன பார்க்கிற  ?"

" ஒண்ணுமில்ல .. "

" பொண்ணுங்க ஒண்ணுமில்லன்னு சொன்னா அதில் ஆயிரம் காரணம் இருக்கும் "

" ஹா ஹா .. பெண்களை பற்றி அதிகம் அறிந்தவர்தான் நீங்க !"

" 10 சதவிகிதம் அன்பு இருந்தாலும் அதை 100 சதவிகிதமாய் செயலில் காட்ட தெரிந்தவர்கள் பெண்கள் " என்றான்  அவன் கிண்டலான சிரிப்புடன் ..

" ம்ம்கும்ம் .. மனசுக்குள்ள 100 சதவிகிதம் அன்பு இருந்தாலும் அதில் 10 சதவிகிதம் கூட காட்ட தெரியாமல் திரு திருன்னு  விழிப்பவர்கள் தான் ஆண்கள் " என்றாள்  அவளும் கேலியுடன் .. அதை ஏற்றுக்கொண்டு தலையாட்டி

" சரிதான் " என்றான் அபிநந்தன் ..

" இப் யூ டோன்ட் மைண்ட் , என்னை கொஞ்சம் கிள்ள முடியுமா ?" என்று கேட்டாள்  நந்திதா ..

" ஏன் ?"

" இல்லை , கல்யாணம் ஆகிய இத்தனை தினத்தில் இன்னைக்கு தான் என் புருஷனை , நான் சொன்ன பேச்சுக்கு தலையாட்ட வெச்சு இருக்கேன் " என்றாள்  அவள் குறும்பாய் ..

" இதை மறந்துட்டேன் பார்த்தியா , இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பதிலும் பெண்கள் கில்லாடி " என்று கூறினான்  அபி அவளை சீண்டுவதற்காக ..

" நீங்க இப்படி எல்லாம் கூட பேசுவிங்களா ?" என்று விழிவிரிய , மனதில் தோன்றியதை கேட்டாள்  நந்திதா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.