(Reading time: 26 - 51 minutes)

15. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

ரேயா இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை….அவளை யாரும் இவ்வளவு மரியாதை இன்றி நடத்தியதும் இல்லை….வந்தனா ஆன்டி மேல் அவளுக்கு வெகு மரியாதை உண்டு. ஸ்ரெடெய்ட் ஃபார்வர்ட் ஆஃபீஸர். இவள் குடும்பம் மீது அக்கறை உள்ளவரும் கூட. இன்று கல்லூரி விழாவில் ஆதிக் அரெஸ்ட் நாடகம் நடத்திய போது இவளே அவரைத்தான் அழைக்க முனைந்தாள். ஆனால் இது என்ன விதமான நடவடிக்கை?

பொது இடத்தில் போலீஸ் யூனிஃபார்மில் வந்து இவளை இப்படி இழுத்துச் சென்றால்??? அதுவும் இத்தனை வருடமாய் இவள் இதயத்தை அறுக்கும் துன்பம் முடிவுக்கு வரும் வேளையில்….துடித்தபடி ஆதிக்கைப் பார்த்தாள். அவனிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன இதயத்தில்.…

“ஆன்டி விடுங்க ஆன்டி…அவங்க எதுவும் தப்பா செய்யலை ஆன்டி..” வந்தனா கையில் இருந்து விடுபட முனைந்தாள். அவரோ அவளை இன்னும் வேகமாய் அழுத்தமாய் இழுத்தபடி நடந்தார்.

Eppadi solven vennilave

ஆதிக்கோ அவசரமாக ரேயுவைப் பார்த்து ”நீ அவங்க கூட வீட்டுக்கு போ ரேயு….ஐ’ம் ஜஸ்ட் கம்மிங் ஆஃப்டர் யூ…” கெஞ்சலும் ஆறுதலுமாய் சொன்னவன்

“ஒரு SP பப்ளிக்ல DGP ஐ இன்சல்ட் செய்த மாதிரி ஆகிட கூடாது….” அழுத்த குரலுக்கு மாறி இருந்தான்.

இந்த வார்த்தைகள் வந்தனாவை குத்தியிருக்க வேண்டும். அவர் பிடியின் அழுத்தம் குறைந்தது. ஆனாலும் விடவில்லை. “அன்றில் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்….வா அப்பாட்ட பேசிக்கலாம்…”

“வாங்க ஆன்டி அப்பாட்டயே பேசுவோம்…” ரேயாவும் ஒரு முடிவோடுதான் இருந்தாள்.  அவள் குரலிலும் உறுதி இருந்தது. பயந்து சாகவும், பதறி தவிக்கவும், குழம்பி நோகவும் அவள் என்ன பத்தொன்பது வயதிலா இருக்கிறாள்?

இத்தனை வருடம் எத்தனையாய் தவித்தாயிற்று. இதற்கு மேலும் காத்திருப்பதில் பொருள் ஒன்றும் இல்லை. அதோடு அப்பா இவளுக்கு வேறு வரன் பார்க்கிறார் என்பது போல் கல்லூரி சேர்மன் சொன்னதும் ஞாபகத்தில் இருக்கிறது. வேறு புது குழப்பம் முளைக்கும் முன் அப்பாவிடம் மனம் திறந்து பேசிவிட வேண்டும்.

“சரி என் கூட வா…” இவள் கையை விட்டுவிட்டு வந்தனா நடக்க தொடங்கி இருந்தார்.

“இல்ல ஆன்டி என் கார் இங்கதான் இருக்குது… அதுலயே வரேன்.”

“அப்டில்லாம் உன்ன தனியா விடமுடியாது…” மறுத்தார் வந்தனா.

அவரை வினோதமாய் பார்த்தாள் ரேயா. அப்படியானால் ஆதிக் சென்னையில் இருக்கும் வரையுமே ரேயா இனி எங்கும் தனியாக போக கூடாதாமா?

“ஆதிக் நீங்க என் கார்ல வீட்டுக்கு வந்துடுங்க……கீ கார்ல தான் இருக்குது..”

ஆதிக்கை எந்த காரணத்தை கொண்டும் தான் விட்டுக் கொடுக்க தயாராயில்லை என்பதை காண்பிப்பதில் ரேயா உறுதியாய் இருந்தாள். முளைத்த சிறு புன்னகையுடன் அவளுக்கு சம்மதமாய் சற்றே தலை அசைத்தான் அவன். பால்வண்ண பருவத்தில் பதின் வயதில் பார்த்தவளுக்கும் இவளுக்கும்தான் எத்தனை வித்யாசம்?? அந்த சூழலிலும் அவளை ரசிக்கத் தோன்றியது அவனுக்கு…

அவளும் அவன் மீதிருந்து பார்வையை விலக்காமலே வந்தனாவின் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். அவன் பார்த்துக் கொள்வான்…என்னவன்….எனக்குப் போதுமானவன்…. பள்ளி நாட்கள் போல் இப்போது தவிப்பில்லை….ஏதோ ஒரு நிறைவு…திருப்தி…சூழ்நிலையைத் தாண்டி இன்று அவன் அவளுக்குப் பெரிதாக தெரிகின்றான்… விழியால் பருகி உயிரில் சேமித்தாள் அவனை.

வந்தனாவின் வாகனம் நகர்கிறது. ஆதிக் அவளுடைய காரில் அவர்களைப் பின் தொடர்கின்றான்.  இடப்புறம் இருந்த கண்ணாடியில் தன் வாகனத்தைப் பின் தொடரும் தனது காரை பார்த்த வண்ணம் இருக்கிறாள் ரேயா. தன் காரில் இருந்து அவசரமாய் இறங்கியவளை அப்படியே தன் காரில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறார் டிஜிபி வந்தனா. அதனால் ரேயாவின் மொபைல் அவளது காரிலேயே கிடந்து போனது.

சரித்ரனுக்கு தனது இன்ட்யூஷன் மேல் இருந்த நம்பிக்கையை விடவும் கூட இப்பொழுது வேறு ஒரு விஷயம் உறுதியாக தெரிகின்றது.  ரேயா ஆதிக்கை விரும்பி இருக்கிறாள் என்பது தான் அது. அவள் இப்பொழுது ஒரு பிஸினஸ் உமன். பலருடனும் பேசி பழக வேண்டிய சூழலில் இருப்பவள். ஆண்களிடம் தயங்கி விலகி ஓடுவது அவள் வழக்கம் கிடையாது எனினும் எல்லோருடனும் ஒரு கோடு கிழித்தது போல் தான் பழகுவாள்.

அவள் உரிமை எடுத்துப் பழகுவதெல்லாம் குடும்பத்திற்குள் மட்டும் தான். ஆண் நட்பென்பது அறவே கிடையாது அவளுக்கு. ஆனால் ஆதிக் பற்றி அவள் குறிப்பிட்ட எதிலும் இயல்பான ரேயாவைக் காணமுடியவில்லை சரித்ரனால். அதோடு அவள் பேசிய விதம்….காயம் வெளிப் பட்டு விடக் கூடாதென மூடிப் பேசும் வகை. சரித்ரனுக்கு தன் ஒன்றுவிட்ட தம்பிக்கு ரேயாவை மணம் முடிக்கலாம் என்ற எண்ணமும் ஆசையும் இருக்கிறதுதான். அவள் படிப்பு முடியட்டும் என்ற நினைவில் தான் அந்த பேச்சை அவன் தொடங்காதிருந்ததே.

ஆனால் இப்பொழுதோ ஆதிக்கும் அவளும் ஒருவரை ஒருவர் விரும்பி இருந்தால் அவர்களை சேர்த்து வைப்பதை தன் முதல் கடமையாக எண்ணினான் அவன். காதலின் வலியும் சுகமும் அறிந்தவனல்லவா…? அதோடு ரேயாவின் நல் வாழ்க்கை என்பது அவனது வெறும் ஆசை அல்ல, அது அவனது தேவை. அவனைப் பொறுத்தவரை அவள் நன்றாக வாழ்ந்தாக வேண்டும்…..ஷாலுவுக்கு மட்டுமல்ல அவனுக்கும் அவள் தங்கை அல்லவா?

அப்பொழுது பேசும் பொழுது அவள் ஆதிக் பற்றிய பேச்சை தவிர்க்கிறாள் எனப் புரிந்ததால் பேச்சை முடித்துக் கொண்டிருந்தான் அவன். ஆனால் இதை இவன் இதோடு விடுவதாய் இல்லை. அவள் மனம் நோகாமல் உண்மையை கண்டு பிடித்து அவனாலான எல்லாவற்றையும் செய்தாக வேண்டும். மனதிற்குள் உறுதி பூண்டிருந்தான்.

இப்பொழுது அவனுக்குள் வேறு ஒரு எண்ணம். இயல்பாய் இருப்பது போல் காண்பித்துக் கொண்டாலும் ரேயா ஆதிக் பற்றிய  பேச்சில் உணர்ச்சி வசப்பட்டாள் எனபது நிஜம். ஒழுங்காய் அலுவலகம் சென்று சேர்ந்துவிட்டாளா? ஹி வாஸ் கன்சர்ன்ட்….

அவளது அலுவலகத்திற்கு அழைத்தான். அவள் மட்டுமல்ல ராஜ்குமாரும் அங்கு இல்லை எனத் தெரியவும் அவனுக்குள் ஏனோ ஒரு தவிப்பு வந்து உட்கார்ந்தது. தந்தை மகள் இருவரில் ஒருவராவது அலுவலகத்தில் இல்லாமல் இருப்பது என்பது அவனறிந்தவரை அசாத்யம்.

ஆக திரும்பவுமாக ரேயாவைத் தொடர்பு கொண்டான். இப்பொழுது ஆதிக் அருகிலிருந்த ரேயாவின் மொபைல் சிணுங்கியது. அத்தான் காலிங்… அதைக் காணவும் இணைப்பை ஏற்றான் ஆதிக்.

“ஹலோ…”

ரேயாவின் எண்ணில் ஒரு ஆண் குரல் பதில் அளிக்கவும் ஒரு நொடி எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று சரித்ரனுக்குப் புரியவில்லை..

“ஹலோ….நான் ரேயாவோட ப்ரதர் இன்லா பேசுறேன்….ரேயாட்ட பேசனும்..”

“ஐ’ம் சாரி…என்னைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்குமான்னு தெரியலை…ஐ’ம் ஆதிக்…..ரேயு வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன்….அவ மொபைல் மட்டுமில்ல அவ காரும் இப்போ என் கைலதான் இருக்குது… பை த வே நீங்களும் இப்ப ரேயா வீட்டுக்கு வரமுடியுமா?...ஒரு முக்கியமான விஷயம் பேசனும்….”

“முக்கியமான விஷயம்னா….?” ரேயு என்ற ஆதிக்கின் வார்த்தையிலேயே சரித்ரனுக்கு தேவையான அத்தனை விளக்கமும் கிடைத்துவிட்டதுதான். ஆனால் இப்பொழுது ஆதிக்கின் திட்டம் என்ன என்பதும் அன்றிலின் மனநிலை என்ன என்பதும் அவனுக்குத் தெரிந்தாக வேண்டுமே.

“நான் ராஜ்குமார் அங்கிள்ட்ட எங்க வெட்டிங் பத்தி பேசப் போறேன்….என் பேரண்ட்ஸை கூட்டிட்டு வரக் கூட டைம் தரல டிஜிபி வந்தனா மேம்…ரேயுவ அவங்க கையோட கூட்டிட்டுப் போறங்க…..இந்த சிட்டுவேஷன்ல நீங்க அங்க இருந்தா நல்லா இருக்கும்…”

“ஷ்யூர்…நான் இப்பவே கிளம்புறேன்…வீ’’ல் மீட் தேர்..” இதைவிட பெரிய விளக்கம் எதையும் கேட்டுக் கொண்டிருக்க இது நேரமில்லை. கிளம்பிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.