(Reading time: 8 - 16 minutes)

18. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

யங்கி தன்னிலை மறந்து ஆழ்ந்த துயிலில் இருந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் அவர் மெல்ல கண் விழித்தார்….

விழித்ததுமே, அவர் கண்டது முதலில் யுவியைத்தான்… எனினும் அவர் கண்கள் தேடியது த்வனியை…

பின் தான் ஒருவரின் மடியில் படுத்திருப்பதை உணர்ந்தவர் மெல்ல நிமிர்ந்து பார்த்ததும் அவர் விழிகளில் சட்டென நீரின் உதயம்… 

Piriyatha varam vendum

“ஒன்னுமில்லை அத்….” என்று வார்த்தையை முடிக்கும் முன்,

“வள்ளி…” என்ற கதறலோடு அவளைக் கட்டிபிடித்து தேவி கதற ஆரம்பித்ததும்,

“தேவிம்மா… என்ன ஆச்சு?... எதுக்கு இப்படி அழற?....” என யுவி பதற்றத்துடன் கேட்க

அவர் அவளை விட்டு விலகி, அந்த அறை முழுவதும் தனது பார்வையை சுழற்ற, அங்கு அம்மூவரைத் தவிர வேறு யாருமில்லை…

“என்ன தேவிம்மா?... என்ன ஆச்சு?... என்ன பார்க்குற?...” என்ற யுவியின் கேள்வியை அலட்சியப்படுத்தியவர், மருமகளின் அருகில் வந்து அவளின் கையைப் பிடித்துக்கொண்டு யுவியின் அருகில் வந்தார்….

“வேலா… நீ தான் என் உயிர்… நான் அதை மறுக்கலை… ஆனா, இதோ இங்க இருக்குறாளே இவள், எனக்கு உன்னை விட முக்கியம்… அவ சந்தோஷத்துக்கு என்னாலயும் சரி உன்னாலயும் சரி ஒரு சின்ன கஷ்டம் கூட வர நான் அனுமதிக்க மாட்டேன்…” என சொல்லியவரை அமைதியாக பார்த்தவன் எதுவும் பேசவில்லை…

“உன்னை நம்பி வந்தவ இவ… இவளுக்கு நீ என்ன பதில் சொல்லப்போற வேலா?... முதலில் இவளுக்கு ஒரு பதில் சொல்லிட்டு நீ உன்னோட மற்ற சந்தோஷத்தை கவனி…” என படபடப்புடன் பேசியவரை அப்போதும் அமைதியாகவே பார்த்தான் யுவி…

“நான் பேசிட்டே இருக்கேன்… நீ எதுவும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் வேலா?... சொல்லு… இப்போ நீ சொல்லப்போறீயா இல்லையா?...” என கோபம் கொண்டு பேசியவரின் கைகளைப் பிடித்தவள்,

“அத்தை எதுக்கு இப்போ இவ்வளவு கோபம்?... என்ன ஆச்சு அத்தை?...” என்று வள்ளி ஊடே வந்து கேட்க…

“நீ சும்மா இரும்மா… உனக்கு எதுவும் தெரியாது… இன்னைக்கே இதுல ஒரு முடிவு எடுத்தாகணும்… இனியும் இதை வளரவிட்டா அப்புறம் நிலைமை நம்ம கை மீறி போயிடும்….” என்று மருமகளிடம் கூறியவர்,

மகனிடம், “இதுக்கும் மேல சுத்தி வளைச்சு பேச நான் விரும்பலை வேலா… நேரா விஷயத்துக்கு வரேன்….” என்றவர்,

“இவ யாரு உனக்கு?....” என்ற கேள்வியை அவன் முன் வைக்க, அவன் அமைதி காத்தான் அப்போதும்…

“வாயைத் திறந்து பேசு வேலா… உங்கிட்ட தான் கேட்குறேன்… சொல்லு இவ யாரு உனக்கு?...” என மருமகளை மகனின் முன் நிற்க வைத்து கேட்க,

“ஏன் தேவிம்மா அது உனக்குத் தெரியாதா?....” என அவனும் பதில் சொல்ல

“எனக்கு தெரியும் வேலா… உனக்குத் தான் தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நீ நடிக்குறியான்னு தான் எனக்குத் தெரியலை….” என்றார் அவர்….

“அத்தை… நீங்க….” என்று வள்ளி பேச ஆரம்பித்த போது தேவி அவளைக் கையமர்த்தி தடுத்த தேவி,

“என் மருமக இவ தான்… இவ மட்டும் தான்… வேற யாரும் வர்றதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன் வேலா…. அதை நீ புரிஞ்சிக்கோ….”

“இப்பவும் இவ தான உன் மருமக… அப்புறம் என்ன தேவிம்மா?...”

“இப்போ மருமகளா இருக்குறவ எப்பவும் இருக்கணும்னு தான் நானும் விரும்புறேன்… ஆனா நீ அதை.... அதை….” என்று பேச முடியாமல் தவித்தவர், வள்ளியை மனதில் வலியுடன் பார்க்க…

அவள் அவர் அருகில் வந்து பேச முயற்சிக்க எண்ணிய போது, வேண்டாம் என தலைஅசைத்த யுவி…

“ஹ்ம்ம்… சொல்லு தேவிம்மா… அதை…” என எடுத்துக்கொடுக்க…

“நீ அதை எங்க மறந்து போயிடுவியோன்னு பயமா இருக்குப்பா…. பயமா இருக்கு எனக்கு….” என கண் கலங்கியவர்,

“நான் சொன்னா கேட்பதான வேலா…. சொல்லு செய்வதான?...”

“கண்டிப்பா தேவிம்மா… சொல்லு என்ன செய்யணும்?....”

“த்வனியை மறக்கணும்… அவளை நீ இனி நினைக்க கூடாது…. அவ உன் வாழ்க்கையில வரவும் கூடாது….” என அழுத்தமாய் அவர் சொல்ல,

“நானே செத்து மண்ணோடு மண்ணாகி போனாலும், அவ நினைவு என்னை விட்டு போகாது தேவிம்மா… என் வாழ்க்கையே அவ மட்டும் தான்….” என அவன் சற்றும் பிசிறு இல்லாமல் சொல்ல…

அவர் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்து விட்டார்…

“தேவிம்மா…” என்று பதறியபடி அருகில் வந்தவனை தூர நிற்கும்படி சொன்னவர்,

“நான் சொன்னாலும் நீ கேட்க மாட்டியா வேலா?.....”

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்…. ஆனா, இது மட்டும் என்னால முடியாது தேவிம்மா… மன்னிச்சிடு….” என அவன் உறுதியாக சொல்ல

அவர் தொய்ந்து துவண்டு போனார்…

“இப்ப நீ முடிவா என்னதான் சொல்லுற வேலா?...”

“என் த்வனியை என்னால விட்டுக்கொடுக்க முடியாதுன்னு சொல்லுறேன் தேவிம்மா இனியும்….”

“அப்ப உன்ன நம்பி வந்த இவ நிலைமை?...” என சொல்லிக்கொண்டே எழுந்தவர், வள்ளியின் கைப்பிடித்து கேட்க….

“வள்ளிக்கு எந்த துன்பமும் வராது தேவிம்மா…” என்று அவன் சொல்ல…

அவர் முற்றிலும் குழம்பி போனார்…

“நீ பேசுற வார்த்தைகளின் அர்த்தம் உனக்கு புரியுதா இல்லையா வேலா?...”

“நல்லாவே புரியுது தேவிம்மா… உனக்கும் புரியணும்னு தான் நான் ஆசப்படுறேன்….”

“ஹ்ம்ம்… ஆசை… அதுதான் நிராசையா போயிட்டிருக்கே என் கண் முன்னாடியே… இனி என்ன ஆசைப்பட்டு என்ன பிரயோஜனம்?...” என அவர் விரக்தியுடன் சொல்ல…

“உன்னோட எந்த ஆசையும் நிராசையா ஆகாது தேவிம்மா… நான் உயிரோட இருக்குற வரை….” என்று அவன் சொன்னதும், அவருக்கு சற்று தெம்பு வந்தது…

மெல்ல மகனின் அருகே சென்றவர், அவனின் முகம் பற்றி,

“அப்போ அம்மா ஆசையை நிறைவேத்தி வைப்ப தான வேலா?...”

“நிச்சயம் தேவிம்மா… ஆனா அது த்வனியை பத்தி இருந்தா என்னை மன்னிச்சிடு… அவளை விட்டுக்கொடுக்க முடியாது என்னால….” என அவன் மீண்டும் விடாப்பிடியாக சொல்ல…

“த்வனி… த்வனி… த்வனி… அவ என்னடா செஞ்சா உனக்கு?... என்ன செஞ்சா?... உன்னை பைத்தியமா அலைய தான வச்சா?... முழுசா எட்டு வருஷம் உன்னை கொன்னுட்டு தான இருந்தா?... வேற என்னடா செஞ்சா அவ உனக்கு?...” என்று கோபத்துடன் அவர் மகனின் சட்டையைப் பிடித்து கேட்க, அவன் அமைதியாக இருந்தான்…

“என் பிள்ளையை நான் இந்த எட்டு வருஷத்துல எவ்வளவு தொலைச்சிருப்பேன்னு உனக்கு தெரியுமா?... என் பிள்ளையை அவன் பேர் சொல்லி கூப்பிட விட்டியா நீ?... இந்த எட்டு வருஷமா?... இல்ல தான?... அவ உன் பெயரை ஒரு தடவை உச்சரிச்சான்னு சொல்லி அதன் பின்னாடி உன் பெயர் சொல்லும்போதெல்லாம் அவள் நினைவு உனக்கு வந்துடக்கூடாதுன்னு, நீ கேட்டுகிட்டதுக்கு இணங்கி நம்ம வீட்டிலயும் உன்னை யாரும் அப்படி கூப்பிட வேண்டாம்னு நானே சொன்னேனேடா… இவ்வளவு ஏன் உனக்காக உன் கல்யாண பத்திரிக்கையில கூட உன் முழுப்பெயர் நான் சேர்க்கலை… இதோ இங்க நிற்கிறாளே உன் மனைவின்னு இந்த சமூகத்துக்கு அறிமுகமானவ…. இவளுக்குத் தெரியுமா உன் பெயர்?...” என ஆதங்கத்துடன் அவர் கேட்க,

அவன் தொண்டை வறண்டு விழிகளில் நீர் திரண்டு விட்டது… எனினும் அதை காட்டிக்கொள்ளாமல், அவன் வார்த்தைகள் எதுவும் திரட்டாமல் நிற்க….

“ப்ரத்யுஷ்…” என்றாள் வள்ளி….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.