(Reading time: 18 - 36 minutes)

" பிரபு , இது பூ இல்லை . என் மனசு .. என் சந்தோசம் .. இந்த பூவை நீ எடுத்துகிட்டு உன் கஷ்டத்தை எனக்கு கொடுத்துருவியாம் " என்றாள்  நந்திதா வாஞ்சையுடன் .. காதலும் கனிவும் மட்டும் வழிந்த அவள் குரலில் கண் திறந்தவன் அவளது முகத்தை பார்த்தான் .. மாலை மயங்குகிற நேரம், சூரியனும் மேகமெனும் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள தேவதையாய் அவன் முன் நின்று அவனது கோபத்தையும் துயரத்தையும் யாசகமாய் கேட்டவளை பார்த்ததும் அவனுக்குள் ஏதோ பிசைந்தது .. சந்துருவிற்கு தனது கோபத்தை விட , நந்திதா தன்னை மீறி முடிவெடுக்கிறாள் என்ற எண்ணம் தான் மிகவும் உறுத்தலாய் இருந்தது .. மேலும் ,பிரேமை பற்றி நன்கு தெரிந்தும் அவனது கைகளை அவள் பிடித்திருந்த விதத்தில் ஏதோ தனது பொம்மையை பறிகொடுத்த சிறுவன் போலத்தான் மனம் சிணுங்கினான் அவன் .. ஆனால் இப்போ அவன் முன் நிற்பது அவனது நந்திதா . அவனது நந்து , சிறு வயதில்  இருந்தே தன்னை சுற்றி சுற்றி வந்தவள் .. அவள் தனக்கானவள் .. இதோ  , இப்படி  பொழுது சாய்ந்தும் கூட, தனக்காக காத்திருப்பவள் இவள்  என்ற எண்ணமே மேலோங்க  ஒட்டு மொத்த கோபத்தையும் தனது இறுகிய அணைப்பில் காட்டினான்  சந்துரு ..

" பிரபு அத்தான் " என்று அதிர்ச்சியாய்  நந்து அழைப்பது கூட உணராமல் அணைப்பை இன்னும் இருக்கியவனின்  சூடான கண்ணீர் அவள் முதுகை நனைத்தது ..

" அத்தான் " என்றாள்  மீண்டும் ..

" குணா போன மாதிரி , நீயும் என்னை விட்டுட்டு போயிருவியா நந்தும்மா " என்றான் உயிர் வருடும் குரலில் .. நொறுங்கித்தான் போனாள்  நந்து .. இதுவரை அவனது மாறுதலுக்கு காரணமாய் இருந்ததாய் எண்ணி சந்தோஷப்பட்டவளே  அவனை உடைத்து விட்டாளோ  ..?

" மாட்டேன் .... உங்களை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன் அத்தான் .. என் உயிர் போனாலும் கூட , உங்களோடுதான் இருப்பேன் " என்றாள்  அவள் ஆத்மார்த்தமாய் .. அவனது அணைப்பு கொஞ்சம் தளர்ந்து இருந்தது .. ஆனால் இன்னும் அவள் அவனை அரவணைப்பாய் அணைத்து  கொண்டாள்  ..காமம் என்ற வார்த்தைக்கு முற்றிலும் இடமில்லாமல் , அன்பும் ஆதரவும் மட்டுமே அந்த அணைப்பில் அடங்கி இருந்தது ..

" என்னை மன்னிச்சிருங்க அத்தான் " என்றாள்  நந்துவும் சமாதானமாய் .. அவளை தன்னிடம் இருந்து பிரித்து அமர்ந்தான் சந்துரு .. அவன் முகத்தில் என்ன இருக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை ..

" அத்தான் " என்றாள்  மிருதுவாய் ..

" ம்ம்ம் "

" என் மேல கோபமா ?"

" இல்லைன்னு சொல்லுவேன்னு நினைக்கிறியா ?"

" எதுக்கு அத்தான் இவ்வளவு கோபம் ?"

" உனக்கு தெரியாதா நந்து ?"

" நான் என்மேல உள்ள கோபத்தை சொல்லல .. உங்க மேல நானும் , என் மேல நீங்களும் கோபம் கொள்வதற்கு காரணம் தேவையா ?"

" ...."

" என்ன அத்தான் ?" என்று விழிகள் விரிய அவள் கேட்கவும் , லேசாய் அவன் இதழில் புன்னகை தவழ்ந்தது ..எத்தனை அழகாய் சொல்லி விட்டிருந்தாள்  அவள் .. உன்மீது  நானும் என் மீது நானும் கோபம் கொள்ள காரணம் தேவையா ? எத்தனை உரிமையான வார்த்தைகள் அவை ? உன்மீது எனக்கும் , என் மீது உனக்கும் உரிமைகள் உண்டு  என்பதையல்லாவா பறை சாற்றிவிட்டாள்  அவள் .. அவளுக்கே தெரியாமல் , அவனது கோபத்தை  கரைத்து விட்டிருந்தாள்  நந்து ..

" ம்ம்ம் ஒன்னும் இல்லடா .. மேல சொல்லு " என்றான் அவளது விரல்களை பிடித்து கொண்டு ..

" சுபி மேல உங்களுக்கு இருக்குற கோபத்துக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியும் அத்தான் " என்றாள்  நந்து ..

" எப்படி ?" என்று கேட்காமல் " கதிர்  சொன்னானா ?" என்றான்

" ம்ம்ம் " என்று ஆமொதித்தவள் ," ஆனால் எதுக்கு இவ்வளவு கோபம் அத்தான் " என்றாள் 

அவள் எந்த ஊர் பாஷை பேசுகிறாள் என்பது போல பார்த்து வைத்தான் சந்துரு ..

" குணா மரணத்திற்கு அவ காரணம்ன்னு உனக்கே தெரியும் .. அப்போ கோபப்படாம எப்படி இருப்பேன் ?"

" சரி , ஆனா எதுவரை இந்த கோபம் ? சுபி சாகுற வரையா ?"

" இல்ல நான் சாகுற வரை " என்றிருந்தான் சந்துரு ..

" அபத்தமாய் பேசாதிங்க அத்தான் .. "

" என்னை வேறென்ன சொல்ல சொல்லுற ? அவளை மன்னிகனும்னு நான் நினைச்சதே இல்லாத மாதிரி பேசாதே நந்து .. உங்க யாருக்குமே தெரியாது என் மனப்போராட்டம் .. இன்னைக்கு மட்டும் அவளுக்கு ஏதோ ஒன்னு ஆகி இருந்தா " என்றவன் குரல் நடுங்க அவளது கைகளை பற்றி கொண்டான் ..

" ஆனா , ஆனா  .. அவ முகத்தை பார்த்தாலே குணா தான் நியாபகத்துக்கு வரான் .. "

" குணா அண்ணா மரணத்துக்கு அவ மட்டும் தான் காரணமா ? நீங்க காரணம் இல்லையா ?" என்று சாட்டையாலே அவன் மனதை அடித்தாள்  நந்து ..

" என்னை கொலைக்காரன்னு சொல்றியா நீ ?" என்றான் அவன் விழி இடுங்க ...

" ஆமா " என்று அவள் கூறும்போதே துடிதுடித்தான் சந்துரு ..

" குணா அண்ணா உங்களோடுதானே தங்கி இருந்தார் அத்தான் ? நீங்க நினைச்சிருந்தா அவர் மனசை கண்டு பிடித்திருக்க முடியாதா ?"

" கண்டுபிடிச்சு இருந்தா இப்படி விட்டுருப்பேனா ?" என்றான் கோபமாய் ..

" ஒரு நாளில் , பெரும்பாலான நேரம் அவரோடு இருந்த உங்களுக்கே அவர் மனசில் இருக்குறது தெரியாதபோது , கொஞ்ச நேரம் காலேஜ்ல பார்குற சுபத்ராவுக்கு மட்டும் என்ன தெரியும் ?"

".... "

" சுபத்ரா குணா கிட்ட காதலாய் பேசி பழகுனதை நீங்க பார்த்திங்காலா ? என்னைக்காவது உங்களை எல்லாம் தவிர்த்து குணாவிடம் மட்டும் க்ளோஸ் ஆ பழகி இருக்காங்களா ? "

" இல்லை " என்பது போல தலை அசைத்தான் அவன் .

" உங்ககிட்ட பழகுற மாதிரி தானே குனாகிட்டையும் பழகினாங்க .. உங்களுக்கோ , இல்லை கதிர் அண்ணாவுக்கு ஏன்  சுபி மேல காதல் வரலை ?" என்று கேட்டாள்  அவள் ..

" அப்படி எல்லாம் எங்களுக்கு தோணினதே இல்லை .. அவளும் அப்படி பழகலை " என்றான் ..

" அப்போ குணாவுக்கு காதல் வந்ததுக்கு யார் காரணம் ? பிரேம் தானே ? எய்தவன் பிரேம் .. அம்புதான்  சுபி .. இதே கோபத்தை நீங்க பிரேம் மீது காட்டி இருந்தா நான் இப்படி விளக்கம் சொல்லி இருக்க மாட்டேன் அத்தான் .. ஆனா இங்கு பாதிக்க பட்டது சுபத்ரா .. தன்னை சுத்தி இப்படி ஒரு நாடகம் நடக்குதுன்னு தெரியாமலே மாட்டிகிட்டாங்க ... நான் முதன்முதலில் காலேஜ் ஜாய்ன்  பண்ணப்போ , நாம எப்படி சந்திச்சொம்னு ஞபாகம் இருக்கா ?"

"ம்ம்ம்ம் " என்று புருவம் உயர்த்தினான் சந்துரு ..

" அன்னைக்கு , கவீன்  சீனியர் கிட்ட மாட்டினதும் , அவன் என்னை மாட்டி விட்டதும் எனக்கே தெரியாமல் நடந்த விஷயம் ... அங்க நான் ஒரு பகடைக்காய் மாதிரி .. அன்னைக்கு என்மேல நீங்க ஏன் கோபப்பட்டிங்க ? இப்படி அறிவில்லாமல் மாட்டிகிட்டேன்னு தானே ? ஆனா என்னை வெறுக்கலையே ? கிட்டதட்ட சுபி கூட அப்படித்தானே ? தன்னை வெச்சு இப்படி எல்லாம் நடந்ததுன்னு சுபிக்கு தெரியுமா ? குணாவின் காதலை நிராகரிக்கும்போது அவங்க பேசின விதத்தை தவிர, வேறென்ன தப்பு பண்ணினாங்க அத்தான் ?" என்று சிறு பிள்ளைக்கு  உரைப்பது போல  விளக்கி கேட்டாள்  அவள் ..

அந்த அமைதியான சூழலா ? அல்லது பேசுவது அவன் மனதுக்கு பிடித்தவளா ? ஏதோ ஒரு காரணத்தினால் கொஞ்சம் பொறுமையாய் அவளது பேச்சினை உள்வாங்கினான் சந்துரு .. அவள் பேச்சினில் இருந்த உண்மை அவனை சுட்டது .. அவன் மௌனமே அதை பறைசாற்ற மேலும் தொடர்ந்தாள் நந்து ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.