(Reading time: 18 - 36 minutes)

மனதோர மழைச்சாரல்... - 07 - வத்ஸலா

தேதோ நினைவுகளில் மூழ்கிப்போய் உறக்கமா? விழிப்புநிலையா? என்று புரியாத நிலையில் கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தாள் அருந்ததி. அறை வாசலில் வந்து நின்றான் ரிஷி. அதை அறியவில்லை அவள். அவளை பார்த்தபடியே வந்தவன் சத்தமில்லாமல் அவளருகில் அமர்ந்தான்.

அவள் இதழோரம் சின்ன புன்னகை. அவளையே ரசித்திருந்தவன் சற்றே குனிந்து இதமாய் காற்றை ஊதி அவள் நெற்றி முடி கலைத்து விட்டான்.. திடுக்கிட்டு கண் திறந்து எழுந்து அமர்ந்தாள் அருந்ததி..

கண்களில் கோபச்சூடு விரவ அவனை பார்த்தாள் 'அன்னைக்குதானே அவ்வளவு திட்டினேன் உங்களுக்கு கொஞ்சம் கூட...'

Manathora mazhai charal

'ஷ்...'  அவள் உதடுகளில் விரல் வைத்தான் ரிஷி. 'போதும் ரோஜாப்பூ... அப்பவே நிறைய திட்டிட்டே ....'

'யாரைகேட்டு உள்ளே வந்தீங்க?'

'யாரை கேட்கணும் நான்? இந்த வீட்டிலே இனிமே யாரும் என்னை எந்த கேள்வியும் கேட்க முடியாது. நீ உள்பட. இப்போ உன்னை அப்படியே தூக்கிட்டு கீழே போறேன் பாக்கறியா? என்று எழுந்தவன் அவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான்.

'விடுங்க என்னை...  யாரவது பார்க்க போறாங்க ...ப்ளீஸ்....  அவள் சிணுங்கிக்கொண்டே இருக்க அதை கண்டே கொள்ளாமல், அவளை ஒரு சுழற்று சுழற்றி தன்னோடு சேர்த்துக்கொண்டு அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு.........

காற்றில் பறப்பது போன்றதொரு சிலிர்ப்பில் மனம் கனிந்து இதழ்களில் வெட்க சிரிப்பு மின்னியது.

மறுபடியும் 'விடுங்க என்னை... யாரவது பார்க்க போறாங்க ...ப்ளீஸ்....  அவள் சிணுங்கிக்கொண்டே இருக்க..... மறுபடியும் , அவளை ஒரு சுழற்று சுழற்றி தன்னோடு சேர்த்துக்கொண்டு அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு.........

மூன்று முறை, நான்கு முறை. அவள் ரசித்து, ரசித்து மகிழ்ந்துக்கொண்டிருந்த போது, திடீரென தனது பின்னால் யாரோ நின்றுக்கொண்டிருக்கும் உணர்வில் சட்டென திரும்பினாள் அருந்ததி.

அங்கே நின்றிருந்தான் ரிஷி.!!!!! இதழோரம் மின்னும் புன்னகையுடன் நின்றிருந்தான் ரிஷி.!!!!! திடுக்கிட்டு எழுந்து நின்றே விட்டிருந்தாள் அருந்ததி. முகம் நிறைய கேள்விக்குறிகளும் ஆச்சரியகுறிகளுமாக அவனைப்பார்த்தாள் அவள். இவன் எப்படி , எப்போது வந்தான்???

என்னதான் இறுக்கமான பார்வை பார்த்தாலும் அவள் மனதின் மிக சின்னதான ஒரு பிரதேசம் சந்தோஷ மழையில் சிறக்கடிக்கதான் செய்தது..

அவன் பார்வை அவள் மீது பதிந்து விலகி, இத்தனை நேரம் இவர்கள் இருவரும் நடித்த அந்த திரைப்படத்தின் அந்த காட்சி ஓடிக்கொண்டிருந்த அவளது மடிக்கணினியில் பதிந்து மறுபடி அவளை சேர்ந்தது.

அவனும் இத்தனை நேரம் அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தானா என்ன? ஏனோ சட்டென திரும்பி நிறுத்தினாள் அதை. என்னதான் இருவரும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றாலும் இருவரின் நினைவலைகளும் ஒரே புள்ளியை தொட்டன. அது அந்த காட்சி படமாக்க பட்ட அந்த தருணத்தின் நினைவுகள்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இந்த காட்சியை விளக்கிக்கொண்டிருந்தான்  படத்தின் இயக்குனர் தனஞ்செயன். அதை கேட்டவுடன் அவள் முகத்தில் குறும்பு ரேகைகள் ஓட அதை பார்த்தபடியே  கேட்டான் ரிஷி 'தனா, இந்த சீனுக்கு டூப் ஏதாவது போட முடியாதா?

'டேய்... ' தாவி வந்தது அவளிடமிருந்து பதில் 'இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்' என்றவள் இயக்குனரை பார்த்து 'தனா டூப் கீப்னு எவனாவது பக்கத்திலே வந்தான் உன்னை கொன்னுடுவேன் தெரிஞ்சுக்கோ' என்று மேக் அப் போட நகர்ந்தாள்.

ஒரு பிரம்மாண்ட படுக்கை அறைக்குள் படமாக்கப்பட இருந்தது அந்த காட்சி. இரண்டு மூன்று டேக்குகள் சென்ற பிறகும் சரியாக வரவேயில்லை. அவனை சீண்டிக்கொண்டே இருந்தாள் அருந்ததி.

அவன் அவளை கையில் ஏந்திக்கொண்டவுடன், கேமரா இயங்குவதற்குள் 'வசி.....அப்படியே கையில் மிதக்கும் கனவா நீ பாடேன் ப்ளீஸ் .....' கிசுகிசுத்தாள் அவள்.

'ஹேய்... சும்மா இருக்க மாட்டியா நீ???'

'ப்ளீஸ் ஒரே ஒரு தடவை....'

'இப்போ உன்னை அப்படியே கீழே போடப்போறேன் பாரு....' என்றவனை முறைத்தாள் அருந்ததி.

கேமரா ஓடிக்கொண்டிருந்தது. அவளை அவன் அப்படியே சுழற்ற முயன்ற நொடியில், அவனது தோள்களை சுற்றி இருந்த தனது கையை சற்றே தளர்த்தி அவள் கொஞ்சமாக முன் பக்கம் சாய, தடுமாறிப்போனான் அவன்.

அவள் விழாமல் காப்பாற்றும் முயற்சியில் நிலை தடுமாறி, விழப்போகிறோம் என்பதை உணர்ந்து, அந்த நிலையிலும் அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டு கீழே விழுந்தான் ரிஷி. அவன் மீது விழுந்தாள் அருந்ததி.

பதறிக்கொண்டு ஓடி வந்தனர் அனைவரும். அவள் கலகலவென சிரித்தபடி எழுந்துக்கொள்ள, 'ராட்சசி...' என்றபடியே எழுந்தவன் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்த இயக்குனரை பார்த்து 'தள்ளி விட்டுட்டா தனா... ' என்றான்.

'ஆமாம்... ஒரு பொண்ணை தூக்கி சுத்த தெரியலை இதிலே பெரிய ஹீரோன்னு  பேரு வேறே...'

'அடி.. ராட்சசி உன்னை... ' அவன் கை ஒங்க அவள் அங்கிருந்து ஓடி விட, அந்த இடமே கலகலத்து போனது. அதன் பின்பு அந்த காட்சியை எடுத்து முடிப்பதற்குள் இயக்குனருக்கு போதும் போதும் என்றானது.

பனிச்சாரல் நினைவுகளில் நீந்திக்கொண்டு இருவரும் சில நொடிகள் அப்படியே நின்றுவிட கலைத்தது கீழிருந்து வந்த மேகலாவின் அழைப்பு 'அருந்ததி...'. தன்னிலை பெற்று அறையை விட்டு வெளியே ஓடி வந்தவள் திகைத்து நின்றாள். கீழே கையில் பெட்டியுடன் மேகலா!!!! அருகில் நின்றிருந்தான் அஸ்வத்.

'அம்மா வீட்டை விட்டு போறேன் மா..'  மொத்தமாய் தோற்றுப்போனதைப்போல் ஒலித்தது மேகலாவின் குரல்.

இத்தனை நேரம் கீழே நடந்த எதையும் அறியாதவளாக தடதடவென படியிறங்கினாள் அருந்ததி. 'ஹேய்.... பார்த்து..' அவள் இறங்கும் வேகத்தில் தன்னையும் அறியாமல் கிட்டத்தட்ட வெளி வந்து விட்ட வார்த்தைகளை உதடுகளுக்குள் புதைத்துக்கொண்டு இறங்கி வந்தான் ரிஷி.

'என்னாச்சுமா??? எங்கே போறே நீ???"

பதிலில்லை மேகலாவிடம். அவர் கண்களில் கோப தாண்டவம். இவனிடம் தோற்று விட்டேனே என்கிற ஆத்திரம். ரிஷியை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் அவர்.

'அப்பா... என்னப்பா...' என்றாள் அருந்ததி. கைகளுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் இயக்குனர். நிமிரவில்லை அவர். பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்தான் ரிஷி.

தே நேரத்தில் சென்னை நகரின் தெருக்களில் வளைந்து திரும்பி ஓடிக்கொண்டிருந்து அந்த கார். காரின் ஜன்னல் வழியே தெரிந்த சென்னை மாநகரம் காருக்குள்ளே அமர்ந்திருக்கும் அந்த பெண்மணியின் பல போராட்டங்களுக்கு சாட்சி!!!

அவர் சந்திரிகா!!!! ஒரு காலத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை ஆட்கொண்ட நாயகி அவர்.!!!. சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்பதே ஒரு காலத்தில் கனவாக, தவமாக இருந்திருக்கிறது அவருக்கு. தவம் செய்யும்போது கூட தெரியாத வலிகளையும்  வேதனைகளையும் ,வரம் கிடைத்த பின்பு அனுபவித்தது தான் மிகப்பெரிய துரதிஷ்டம்.

ஆனால் எந்த நிலையிலும் திரையுலகிற்கு ஏன் வந்தோம் என்று அவர் நொந்துக்கொண்ட நொடி இதுவரை வந்ததில்லை. நடனம் அவரது சுவாசம் என்றால் நடிப்பு அவரது இதயமாகவே இருந்திருக்கிறது.

ஆசை ஆசையாய் சினிமா உலகுக்குள் நுழைந்த சந்திரிக்காவுக்கு ஆரம்பத்தில் கிடைத்த வேடங்கள் அவரை கவர்ச்சி நடிகையாய் அடையாளம் காட்ட துவங்கி இருந்தன.

'ஆமாம் இவளெல்லாம் பெரிய கலை சேவை புரிய வந்திருக்காளாக்கும்' பல நூறு முறை அவர் காதுகளை தொட்டிருக்கின்றன இந்த வார்த்தைகள்.!!!! ஆனால் இந்த விதமான வார்த்தைகள் அவரை என்றைக்குமே பாதித்ததில்லை!!!!. அதே போல் இந்த உலகம் அவரை பார்த்த பார்வையை என்றைக்குமே மாற்றிக்கொண்டதில்லை.!!!!

கடற்கரை சாலையில் கார் நகர்ந்துக்கொண்டிருக்க, ஜன்னலின் வெளியே தெரிந்த அந்த கடற்கரை சந்திரிகாவை பழைய நினைவுகளுக்குள் தள்ளிக்கொண்டு சென்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.