(Reading time: 13 - 26 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 06 - வத்ஸலா

ன்று காலையில் ஏதோ ஒரு வேலையாக தங்களது கல்லூரிக்கு வந்திருந்த கோகுல் அவனது அம்மாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக சரவணனை பார்க்க சென்றான்.

'அம்மாவுக்கு பரவாயில்லைடா. இங்கே வான்னு கூப்பிட்டா வர மாட்டேன்றாங்க. என்ன பண்றதுன்னு தெரியலை. ஆங்... மறந்தே போயிட்டேன் பாரு. உன் காரை சீக்கிரம் திருப்பி கொடுத்திடறேன்.'

'குடு. குடு. இப்போ என்ன அவசரம்? நிதானமா குடு.. ஆத்திலே இன்னும் மூணு கார் இருக்கு.'  புன்னகையுடன் சொன்னான் கோகுல்.

Katrinile varum geetham

அவனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன் தனது நண்பனிடம் மிக இயல்பாக சொன்னான் 'நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சரவணா. இன்னைக்கு சாயங்காலம் நான் பொண்ணு பார்க்க போறேன். என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணுடா அவ. சீக்கிரமே நிச்சயதார்த்தம் இருக்கும்.'

சரவணனின் மனதிற்குள் ஒரு மின்னல் 'வீட்டிலே எல்லாரும் போறீங்களாடா?'

'ஆமாம். அப்பா, அம்மா, பெரியம்மா, பெரியப்பா எல்லாரும்தான் ஏன்?'

'இல்லைடா இன்னைக்கு காலேஜ் முடிஞ்சதும் நான் உங்க வீட்டுக்கு வரலாம்ன்னு நினைச்சேன். சும்மாதான்... உன் கூட கொஞ்ச நேரம் பேசணும் போலே இருக்கு.' நண்பனின் வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் கள்ளம் புரியவில்லை கோகுலுக்கு.. அவன் மீது சந்தேகம் துளியும் வரவில்லை. சந்தேகபடும்படியான சந்தர்ப்பம் எதுவும் இதுவரை வந்ததும் இல்லை.

'வாயேன்டா. ஏழு மணிக்குள்ளே வந்திடுவேன். அதுக்கப்புறம் வாயேன்.. அப்படியே நாங்க இல்லாதப்போ வந்தாலும், லக்ஷ்மி மாமி ஆத்திலே தான் இருப்பா. உன்னை தெரியுமே லக்ஷ்மி மாமிக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு நான் வந்திடுவேன்.' சாதரணமாக சொன்னான் கோகுல்.

அவ்வளவுதான் கோகுல் நகர்ந்த சில நிமிடங்களில் திட்டம் தயாராக இருந்தது சரவணனிடம்!!!. கோகுல் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வேதாவை அங்கே அழைத்து சென்று வீட்டை காட்டிவிடும் திட்டம்!!!. இது அவள் நம்பிக்கையை அதிகமாக்கிவிடும் என்ற தைரியம்!!!

நேரம் மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் வருவதற்கான ஏற்பாடுகளுக்காக வீட்டையே மாற்றிபோட்டுக்கொண்டிருந்தார் அப்பா. மகளின் திருமணம் கிட்டத்தட்ட முடிவாகி விட்ட மகிழ்ச்சி அவரிடத்தில்.

'கோதை, கேசரியும், பஜ்ஜியும் பண்ணிடுமா. காபி டிகாஷன் போட்டு வெச்சிடு' அப்பா சொன்ன வேலைகளையெல்லாம் பேசாமல் செய்துக்கொண்டிருந்தாள் கோதை. கோகுலை பற்றியே பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

'கோகுலும் தங்கமான பையன். அவன் அளவுக்கு இல்லைன்னாலும் உங்க அக்காவும் நன்னாதானே படிச்சிருக்கா.. நீ தான் கோகுலை பார்த்திருக்கியே நீ சொல்லுமா 'கோகுலுக்கும் வேதாக்கும் ஜோடி பொருத்தம் பிரமாதமா இருக்கும் இல்லையாமா????'

அந்த கடைசி வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவளால். அதுவரை பேசாமல், பொறுத்துக்கொண்டு இருந்தவளுக்கு சுளீரென வலித்தது. இதயத்தை யாரோ பிடுங்கி தூரமாய் எறிந்துவிட்ட வலி.

'அவன் எனக்கானவன். கோகுல் எனக்கானவன்' உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று கூவியது.  அவனிடம் ஓடி சென்று அவன் தோள் சாய்ந்துக்கொண்டு அவன் அணைப்பில் கண்களை இறுக மூடிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. இது போன்ற உணர்வுகள் இதுவரை அவளுக்கு தோன்றியதே இல்லை.

'அவன் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்' மறுபடி ஒருமுறை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு முகம் கழுவிக்கொண்டு, பீரோவிலிருந்து பட்டு புடவையை கையில் எடுத்தாள் அவள்.

'நோக்கு எதுக்குமா பட்டுப்புடவை???' கேட்டார் அப்பா. நீ சாதாரண புடவை கட்டிக்கோ போறும். உன்னை பொண்ணு பார்க்க வரும்போது நீ நன்னா அலங்காரம் பண்ணிக்கலாம். இப்போ அக்காவுக்கு மேலே நீ அலங்காரம் பண்ணிண்டு நின்னேனா நன்னா இருக்காதுமா'

அப்பா சாதரணமாகத்தான் சொன்னார். ஆனால் ஏனோ சட்டென கண்களில் நீர் கட்டிக்கொண்டது அவளுக்கு. அப்பாவுக்கு இதெல்லாம் புரியவேயில்லை.

'நான் போய் பூ பழமெல்லாம் வாங்கிண்டு வந்திடறேன். நீ அக்காவுக்கு ஃபோன் பண்ணி அவ கிளம்பிட்டாளான்னு கேளு' சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் அப்பா.

எதுவுமே பிடிக்கவில்லை அவளுக்கு. கோகுலை உடனே பார்த்து விட வேண்டுமென்று மட்டுமே தோன்றிக்கொண்டிருந்தது. 'கோகுல்.....' வாய் விட்டு உச்சரித்தாள் அவன் பெயரை.

சரியாக அந்த நொடியில் ஒலித்தது அவள் வீட்டுத்தொலைப்பேசி. அக்காவாக இருக்குமோ? என்ன சொல்வது அவளிடம்??

யோசித்தபடியே எடுத்து 'ஹலோ' என்றாள் கோதை.

அவள் குரலை அடையாளம் கண்டு கொண்டிருக்க வேண்டுமவன்!!! 'நான் கோகுல் பேசறேன்' மென்மையிலும் மென்மையாகி அவன் குரல் மறுமுனையிலிருந்து அவள் செவி தொட்டது.

சரேலென்றொரு ஆனந்த பிரவாகம் அவளுக்குள்ளே. வேறெதுவுமே பேசத்தோன்றவில்லை அவளுக்கு ' நீங்க எப்போ வருவேள்???" கேட்டே விட்டிருந்தாள் அவள்.

நிச்சியமாக அப்படி ஒரு கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அவன். சிரித்து விட்டிருந்தான் கோகுல் ' கோதைப்பொண்ணு... நோக்கு என்னடா அவ்வளவு அவசரம்???"

'இல்லை நேக்கு...' அவள் குரல் கரைந்தது

'என்னாச்சுடா???.'

'அப்பா, நீங்க அக்காவைதான்  பொண்ணு பார்க்க வரேள்ன்னு நினைச்சிண்டு இருக்கார். நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க சீக்கிரம் வருவேளா ப்ளீஸ்'

அவள் சொன்னவுடனேயே என்ன நடந்துக்கொண்டிருந்திருக்கிறது என்று புரிந்து விட்டது அவனுக்கு. 'கோதைப்பொண்ணு...' என்றான் இதமாக 'நான் சீக்கிரம் வந்து என்ன பண்ணட்டும்?? உன்னை அப்படியே தூக்கிண்டு வந்திடட்டுமா?'

'ம்??? ம்ஹூம்......'

'என்ன ம்ஹூம்??? அப்போ வேறே என்ன பண்ணணும்? நேக்கு கோதையைதான் பிடிக்கும் கோதையை மட்டும்தான் பிடிக்கும்ன்னு சொல்லணுமா?'' இதமாய் அவள் காது மடல் வருடியது அவன் குரல்.

'ம்...' கொஞ்சம் சிலிர்ப்புடன் வந்தது பதில்.

'கோதைப்பொண்ணு.... நீ என்ன பண்றே ஜம்முனு ஒரு பச்சை கலர் புடவை எடுத்து கட்டிண்டு, காதிலே ஜிமிக்கியெல்லாம் போட்டுண்டு ரெடியா இருப்பியாம். நான் இதோ ஓடி வந்திடுவேனாம். அங்கே வந்து நீ சொன்ன மாதிரியே சொல்வேனாம்  சரியா?'

'ம்...'  என்றாள் குளிர் சிரிப்புடன்.

'சில நாட்களுக்கு முன் தனக்காக பெண் பார்க்க வந்தவளால் இன்று இந்த வார்த்தையை கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை!!!! அவள் என்னவளாகிக்கொண்டிருக்கிறாள் என்பதற்கான அடையாளமல்லவா இது!!'! அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்தவனுக்குள் சந்தோஷ சாரல்.!!!

உற்சாகம் மறுபடியும் தொற்றிக்கொள்ள அப்பா வருவதற்குள் அவன் சொன்னபடியே தயாராகி இருந்தாள் கோதை. வீட்டுக்குள் வந்தவர் அவள் தயாராக நிற்பதை ஏற இறங்க பார்த்தார். என்ன தோன்றியதோ அவளை எதுவும் சொல்லவில்லை.

'அக்காவுக்கு ஃபோன் பண்ணியா?' கேட்டார் அப்பா.

'ஐயோ... இல்லைப்பா மறந்துட்டேன்' அப்பாவின் முகத்தில் கோபம் பரவியது.

கைப்பேசியை எடுத்து அவளை அழைக்க முயன்றார் அப்பா. கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது!!!. கொஞ்சம் பதறியவராக மறுபடி மறுபடி முயன்று கொண்டிருந்தார் அவர். எந்த பயனும் இல்லை. நேரம் கடந்துக்கொண்டிருந்தது.

ங்களது வீட்டை விட்டு கிளம்பினர் கோகுல் குடும்பத்தினர். அங்கே சரவணனின் காரில் கோகுலின் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள் வேதா.

சில நிமடங்கள் கரைந்திருக்க கம்பவுண்ட் சுவற்றில் பளபள எழுத்துக்களில் 'கோகுலம்' என்ற பெயர் மின்னிய அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது சரவணனின் கார்.. அவர்கள் வீட்டு கார் எண்ணை பார்த்தவுடனேயே வெகு இயல்பாக கதவை திறந்து விட்டான் வாசலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி.

கோகுலின் நண்பனாக அவன் அவ்வபோது வந்து போவதால் செக்யூரிட்டிக்குமே அவன் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. சுவாதீனமாக சொந்த வீட்டுக்குள் நுழைவதை போல் நுழைந்தான் சரவணன்.

காரை விட்டு இறங்கி அவள் பக்கம் வந்து 'இறங்குங்க மேடம்...' என்றான் இதழ்களில் ஒட்டிக்கொண்ட சிரிப்புடன். கண்கள் மின்ன, சுற்றி சுற்றி பார்த்தபடியே இறங்கினாள் அந்த அப்பாவி பெண் வேதா. வீட்டுக்குள் லக்ஷ்மி மாமி மட்டுமே இருப்பார் அவரை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு.

தே நேரத்தில் கோதையின் வீட்டை அடைந்தனர் கோகுல் குடும்பத்தினர். வேதா இன்னமும் வந்திருக்கவில்லையே!!!! குழப்பமும், பதற்றமும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்க வீட்டுக்குள் இங்குமங்கும் நடந்துக்கொண்டிருந்தார் அப்பா.

நேரம் நகர நகர அவளோடு ஒத்துழைக்காமல் போட்டி போட்டுக்கொண்டிருந்த சுவாசத்தை தேடி பிடித்து சுவாசித்துக்கொண்டு சின்ன புன்னகையுடன்  தனது அறைக்குள் அமர்ந்திருந்தாள் கோதை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.