(Reading time: 9 - 17 minutes)

05. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

ய் விஷ்ணு, நீ அதிகம் பேசிவிட்டாய். நீ கூறியது உண்மையென்றால், உனக்கு ஒரு சவால். உனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறேன், இன்றில் இருந்து சரியாக 90 நாட்கள், அதாவது 3 மாதம் நீ பூமிக்குச் செல்லலாம், இந்த 3 மாதம், கடவுளாகிய நாங்கள் உன் வாழ்வில் எந்த வித குறுக்கீடும் செய்யமாட்டோம், நல்லதோ, கெட்டதோ, எல்லாம் உன் கையில்தான். நீ எங்களை வணங்கவும் தேவையில்லை அதேபோல் திட்டவும் குடாது. இந்த 3 மாதத்திற்குள் நீ கூறியது போல் அந்தப் பெண்ணை உன் மீது காதலில் விழச் செய்து, அத்துடன் உன் பிரச்சனைகள் அனைத்தையும் நீ சரி செய்துவிட்டால்,  எங்கள் மீது நீ கூறிய குற்றச்சாட்டுகளை நான் ஒற்றுக் கொள்கிறேன், அது மட்டும் அல்லாது நீ அந்தப் பெண்ணுடன் மகிழ்ச்சியோடு வாழவும் வழி செய்கிறேன். ஆனால் இந்த 3 மாதத்திற்குள் உன்னால் அது முடியாமல் போனால் நீ கூறியது அனைத்தும் தவறு என்று ஒற்றுக் கொண்டு, இங்கு நரகத்தில் தரப்படும் தண்டனைகளையும் அனைத்தையும் நீ அனுபவிக்க வேண்டும். இந்தச் சவாலுக்கு சம்மதமா? என்ன டீலா நோ டீலா?” எமன் சற்று கோவம் கலந்த கூரலில் கூறினார்.

அவர் கூறிய வார்த்தைகள் என் காதில் தேன் வந்து பாய்ந்ததை போல் இருந்தது. நான் மீண்டும் என்னுடைய அனுவை பார்க்க போறேன், அதுவும் இந்த முறை எனக்குத் தொல்லைகள் கொடுத்துவந்த இந்தக் கடவுள்களின் தொந்தரவுகள் இல்லாமல். இந்தச் சவாலை ஏற்பதால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை, இருப்பினும் இந்த எமன் கூறுவதை நம்பலாமா? என்று எனக்குள் ஒரு கேள்வி.

“எமன் சார் நீங்கச் சொல்வதை கேட்பதற்கு நல்லாதான் இருக்கு ஆனால் இந்த 3 மாதம் எந்தக் கடவுள் தொந்தரவும் இருக்காது என்று நான் எப்படி நம்புவது, அப்படியென்றால் இந்த 3 மாதம் எந்தப் பிரச்சனையும் வாராது என்று சொல்றிங்களா?” நான் கேட்டேன்.

unakkaga mannil vanthen

“பிரச்சனையே வராது என்று கூரவில்லை, எங்களால் எந்தப் பிரச்சனையும் வராது என்றுதான் கூறினேன்” எமன் கூறினார்.

“நீங்கச் சொல்வது எனக்குப் புரியவில்லை” நான் கேட்டேன்.

“நீ செய்யும் காரியங்களுக்கான விளைவு உன்னையே சேரும், அது உனக்கு நல்லதாகவும் இருக்கலாம், அல்லது பிரச்சனையாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு தீயில் விரல் வைத்தால் அது சுடத்தான் செய்யும் அதை என்னால் ஒன்றும் செய்ய முடியாது, புரிகிறதா?” எமன் கூறினார்.

எனக்குப் புரிவது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. இருந்தாலும் அனுவை பார்க்க, மீண்டும் காதலிக்க எனக்குக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.

“ஓகே எமன் சார், நான் உங்கள் வார்த்தையை நம்பி இந்தச் சவாலுக்கு ஒற்றுக் கொள்கிறேன். இந்தச் சவாலில் நான் வென்றுவிட்டால் நீங்கச் சொன்னது போல் செய்யவேண்டும் வார்த்தை மாறமாட்டிங்களே” மீண்டும் உறுதிப்படுத்தி கொள்வதற்காகக் கேட்டேன்.

“ஏய் மானிடா, எனக்கு நீதிமான் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. நான் கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டேன்” எமன் கூறினார்.

“பிரபு என்ன இப்படி கூறிவிட்டிர்கள், இறந்த இவன் எப்படி மீண்டும் உயிரோடு பூமிக்கு செல்ல முடியும், அதற்கு நம் சட்டத்தில் வழி இல்லை” நடுவில் குறுக்கிட்டார் சித்ர குப்தர்.

நான் அவரை முறைத்தபடி என் மனதில் நினைத்துக் கொண்டேன் “துரோகி, சாமி வரம் கொடுத்தாலும் இந்த புசாரி தடுக்கிறது பார்”.

சிறிது நேரம் யோசித்துவிட்டு எமன் சித்ர குப்தரை பார்த்து “ இவனது பாவ புண்ணிய கணக்கு விபரம் எனக்கு வேண்டும்” என்று கேட்டார்.

உடனே சித்ர குப்தர் தனது கணினியில் எதோ செய்தார். பின்னர் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு டிவியை காண்பித்து “இதோ பிரபு இவனது பாவ புண்ணிய கணக்கு” என்று கூறினார்.

அந்த டிவியில் சிகப்பு, பச்சை என விதவிதமான கலரில் கோடுகளும், எண்களும்,  எழுத்துகளும் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை, அதில் சிகப்பு கோடு பெரிதாகவும், பச்சை கோடு சிறிதாகவும் இருந்தது. அதைப் பார்க்கும் போது எனக்குள் எதோ தவறு நடக்கப்போவதாகத் தோன்றியது. அதே பயத்தோடு சித்ர குப்தரை பார்த்தபோது அவர் என்னைக் கிண்டலாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“இவன் இவ்வளவு பாவங்களா செய்திருக்கிறான்” என்று கேட்டுவிட்டு என்னை முறைத்தார் எமன்.

எனக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை அதனால் மௌனமாக நின்றேன்.

“இவன் செய்தது சிறு சிறு தவறுகள்தான் பிரபு, நம்மைத் திட்டியதும் சேர்ந்துதான் இவன் பாவ கணக்கு இவ்வளவு அதிகமாக உள்ளது” சித்ர குப்தர் கூறினார்.

“அப்படியென்றால் இவன் நம்மைத் திட்டியதை முழுமையாக அகற்றிவிட்டுக் காட்டுங்கள் குப்தரே” எமன் கூறினார்.

“ஒரு நிமிடம் பிரபு” என்று கூறிவிட்டு தன் கணினியில் எதோ சிறிது நேரம் செய்துவிட்டு “இதோ பிரபு” என்று கூறினார்.

இப்போது சிகப்பு கோடு மிகவும் சிறியதாக இருந்தது. அதைப் பார்த்துவிட்டு “இவன் யாருக்கும் பெரியதாக எந்த கெடுதலும் செய்யவில்லை போலும்” என்று என்னைப் பார்த்து கூறினார் எமன்.

“எமன் சார் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நான் பெரிய ஆள் எல்லாம் இல்ல. நான் ஒரு டம்மி பீசு, எனக்கு என்னுடைய பிரச்சனைக்காக உங்களைத் திட்டவே நேரம் இல்ல அதுல எங்கிருந்து மற்றவர்களுக்கு நான் கெடுதல் செய்வது.” எனக்குப் பயமெல்லாம் விலகி சற்று நக்கலாகப் பதில் கூறினேன்.

எமன் என்னை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு “ இவன் செய்த நல்ல காரியங்கள் பெரியது ஏதேனும் இருந்தால் கூறுங்கள் குப்தரே” என்று சித்ர குப்தரை பார்த்துக் கூறினார் எமன்.

“இவன் பல முறை ரத்த தானம் செய்துள்ளான் பிரபு, அதுவே இவன் செய்த மிகப் பெரிய நல்ல காரியம்” சித்ர குப்தர் கூறினார்.

“அது உயிர் காக்கும் காரியம் அல்லவா, அதற்காக இவனுக்குக் கட்டாயம் சொர்கம் கிடைக்கும் அல்லவா குப்தரே” எமன் வினவினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.