(Reading time: 12 - 23 minutes)

15. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ன்யா, அந்த தேவிப்பொண்ணுக்கு  ஏதோ ஒரு வாரமா காய்ச்சல் விடவே இல்லையாம்.  அதைக் கூட்டிட்டு அவ அப்பனும், அண்ணனும் சென்னைக்கு போயிட்டாங்களாமே.  நிஜமாவா....... உன்கூடவேதானே சுத்திட்டு இருப்பாங்க, என்கிட்ட இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலை நீ”, காலை காபியை அவன் ரூமிற்கு எடுத்து வந்த மீனா நல்லதம்பியிடம் கேட்டாள்.

“ஆமாம் மீனா.  இங்க காட்டினப்போ அவங்க ஏதோ டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்ன்னு சொன்னாங்க போல.  நம்ம ஊருல ஒரு வசதியும் இல்லையே, அதான் மணியோட தூரத்து சொந்தக்காரன் யாரோ சென்னைல இருக்காங்க போல, அங்க போனா எல்லா வசதியுமே இருக்கும்ன்னு கிளம்பிட்டாங்க”, நல்லதம்பி பதிலளிக்க மீனா அவனை சந்தேகமாகவே பார்த்தாள்.

“என்னால நம்பவே முடியலையே.  அவங்க ரெண்டு பேரும், அத்தனை பொருப்பானவனுங்களா.  அஞ்சல முடியாம படுத்தாக்கூட அப்படியே அவ தலைல தண்ணியக் கொட்டி வேலைக்கு அனுப்புவானுங்க.  இங்க தேவிக்கு முடியலைன்னு சென்னைக்கு கூட்டிட்டுப் போற அளவுக்கு நடக்குதுன்னா, எப்படி நம்ப முடியும்”

Vidiyalukkillai thooram

“மீனா, அவங்க எதுக்கு சென்னைக்குப் போறாங்கங்கற  உண்மை விஷயத்தை உனக்கு மட்டும் சொல்றேன்.  நீ உன்னோடவே வச்சுக்கோ. வேற யார்க்கிட்டயும் சொல்லிடாத.  முக்கியமா தேவி சொந்தக்காரங்களுக்கோ, இல்லை அவ பள்ளிக்கூடத்துக்கோ தெரியக்கூடாது”

“என்ன உண்மை விஷயம்.  பீடிகை எல்லாம் பெரிசா இருக்கு. ரொம்ப இழுக்காம டக்குன்னு விஷயத்துக்கு வா”

“அது மணியோட சொந்தக்காரன் சென்னைல இருக்கான்னு சொன்னேன் இல்லை.  ரெண்டு வாரம் முந்தி மணி அவனை எங்கயோ பாத்து பேசி இருக்கான் போல.  அந்தாள் மணி குடும்பத்தை பத்தி கேக்க, அவனும் தேவி வீட்டு வேலை செஞ்சுட்டு ஸ்கூல் போயிட்டு வர்றதையும், இவனும், வெற்றியும் நம்ம தோப்புல வேலை செய்யறதைப் பத்தியும் சொல்லி இருக்கான்”

“அவனுங்க ரெண்டு பேரும் வேலை செஞ்சானுங்களாமா.  ஏதோ அஞ்சலை மூஞ்சிக்காக வேலை செய்யாம மட்டை ஆகிக் கிடந்ததை கண்டுக்காம விட்டேன்.  ஊரெல்லாம் போய் அப்படியே வேலை செஞ்சி கிழிச்சா மாதிரி பேசி இருக்காங்க”, மீனா பொரிய ஆரம்பித்தாள்.

“அதை விடு மீனா.  நான் சொல்ற விஷயத்தை கேளு.  மணியோட சொந்தக்காரன், தேவி வீட்டு வேலைல எவ்ளோ சம்பாதிக்குதுன்னு கேட்டுட்டு, சென்னை வந்தாங்கன்னா அவளுக்கு ஒரு வீட்டுலேயே அத்தனை சம்பளம் கிடைக்கும்,  அதுவும் தவிர மணிக்கும், வெற்றிக்கும் செக்யூரிட்டி வேலை ரொம்ப சுலபமா கிடைச்சுடும்.  எதுக்கு இங்க கஷ்டபட்டுட்டுன்னு சொல்லி இருக்கான்”

“ஆமாம் குடிகாரனுங்களுக்கு ஏத்த வேலைதான்.  எவன்னா திருடன் வந்தா, இவங்க சாவிய எடுத்து கொடுப்பானுங்க”, நக்கலடித்தாள் மீனா.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

“அது சரிதான்.  ஆனா இவனுங்க எங்க வேலைக்குப் போகப்போறானுங்க.  அந்தப்பொண்ணை மட்டும் வேலைக்கு அனுப்பிட்டு   இவனுங்க ஊரை சுத்தற ஐடியால இருக்கானுங்க.  இங்க மாதிரியே காலைலயும், சாயங்காலமும் வேலை செஞ்சுட்டு படிக்க வேண்டியதுதான் அந்தப் பொண்ணு இனிமே.  ஒரு  மாசம் அவன் சொந்தக்காரன் வீட்டுல இருந்துட்டு அப்பறம் வீடு பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தான் மணி.  இனி அவங்க இந்தப் பக்கம் வர்றது சந்தேகம்தான்”

“ஹ்ம்ம் பாவம் அந்த தேவி. அஞ்சலை இருந்த வரை சந்தோஷமா அது உண்டு அது படிப்பு உண்டுன்னு இருந்துச்சு.  அவப்போனா சனி வந்து அந்தப் பொண்ண பிடிச்சுடுச்சு.  வீட்டு வேலைலையே நல்ல பணம் வரும்ன்னு கண்டுட்டானுங்கன்னா எங்க இருந்து அவனுங்க அவளை படிக்க அனுப்பப் போறாங்க.  முழு நேரமும் வீட்டு வேலை செய்ய விட்டுடுவாங்களே”, அந்த சனியனே தன் கணவன்தான் என்ற உண்மை தெரியாமல் புலம்பியபடியே போனாள் மீனா.

நல்லதம்பி சொன்னதை மீனா அப்படியே நம்ப காரணம் இருந்தது.  இங்கிருந்து கிளப்பிய தேவியின் குடும்பத்தை பக்கத்து ஊரில்  இருக்கும் தோப்பில் சாமான்களை போட வைத்த நல்லதம்பி அங்கிருந்த அவனின் விசுவாசமான வேலையாளின் துணையுடன் சென்னைக்கு அனுப்பி வைத்தான்.  தேவிக்கு காய்ச்சல் விடாததால் முதலில் அவளை டாக்டரிடம் காட்டி, அவளிற்கு சரியான பிறகு மணிக்கும், வெற்றிக்கும் சிகிச்சை என்ற பெயரில் அந்தப் பணியாளே அவர்கள் இருவரையும் இரண்டு, மூன்று முறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.  ஆனால் மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும்போது முழு போதையில் வந்தவர்களைப் பார்த்து அதிர்ந்து நின்ற தேவியிடம், இப்பொழுது வெறும் டெஸ்ட் மட்டும்தான் எடுக்கிறார்கள் என்றும், எல்லாப் பரிசோதனைகளும் முடிந்த பின்தான் சிகிச்சை ஆரம்பிக்கும் என்றும் கூறி, மேலும் உடனே மொத்தமாக குடியை நிறுத்தினால் அவர்கள் உயிருக்கே அது ஆபத்தாக முடியும் என்றும் கூற தேவியும் அதை நம்பிவிட்டாள்.

மீனா தன் அண்ணனிடம் சொல்லி தேவி குடும்பம் அங்கு வந்துள்ளதா என்று பார்க்க சொல்ல அவனும் அவர்களை கண்காணிக்க, அதில் நல்லதம்பி கூறியபடியே அவர்கள் சென்னையில் இருப்பதும், தேவியை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றதும் ஊர்ஜிதமானது.   நல்லதம்பி மணியின் சொந்தக்கார குடும்பம் என்று சொன்னது தன் பணியாள் குடும்பத்தைத்தான்.  அவனைப் பற்றி மீனாவிற்கு தெரியாததால்.  அவளும் நல்லதம்பி சொன்னதை நம்பி தேவியை மறந்துவிட்டாள்.

மணியையும், வெற்றியையும் பரிசோதனை, சிகிச்சை என்ற பாவனையில் இரண்டு வாரங்கள் அந்தப் பணியாள் கூட்டிக்கொண்டு அலைந்தான்.

இரண்டாம் வார முடிவில் தேவியிடம் வந்தவன் மருத்துவர் சில மருந்துகளை அவர்களுக்கு கொடுத்துள்ளதாகவும், அவர்களை மதுக்கடை அருகில் இல்லாத இடத்துக்குக் கூட்டிப்போகுமாறு கூறியதாகவும் கூறினான்.  தேவி அவனிடம் தன் ஊருக்கு திரும்பினால் அவர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்று கூற, அவன் அவர்கள் சாமான் வைத்துள்ள நல்லதம்பியின் தோப்பிலேயே தங்கலாம் என்று கூறினான்.  அவளும் அங்கு அக்கம்பக்கம் எந்தக் கடையும் இல்லாததால் ஒத்துக்கொண்டாள்.  ஒருவாறாக அனைத்தையும் ஏறக்கட்டிக்கொண்டு தேவியின் குடும்பம் மொத்தமாக நல்லதம்பியின் தோப்பில் குடியேறியது.

அந்தப் பணியாள் வேலு தினம் வெற்றிக்கும், மணிக்கும் கொடுக்கும் மருந்துகளால் அவர்கள் முக்கால்வாசி நேரம் தூக்கத்திலேயே இருப்பார்கள் என்றும், மதுவையும் உடனடியாக நிறுத்தாமல் கொஞ்ச கொஞ்சமாகவே நிறுத்த வேண்டும் என்றும் கூறினான்.  தேவியும் அவன் சொல்வதை நம்பி தன் குடும்பத்திற்காக எந்தப் பிரதிபலனும்(!!!!!!) பாராமல் செலவழிக்கும் நல்லதம்பிக்கு  நெஞ்சார நன்றி கூறினாள்.  வெற்றியையும், மணியையும் வேலு பார்த்துக் கொள்வதால் தேவி சும்மா சோம்பிக் கிடக்காமல் காலையில் நல்லதம்பியின் வயலில் வேலை செய்ய ஆரம்பித்தாள். 

நல்லதம்பியின் சித்தப்பாவிற்கு கல்யாணம் ஆகவில்லை, அவருக்கு அவனின் லீலா வினோதங்கள் அனைத்தும் தெரியுமாதலால் இந்தப் பெண்ணை ஏதோ ஒரு நோக்கத்துடன்தான் அவன் இங்கு குடியேற்றி உள்ளான் என்று புரிந்து கொண்டார்.  இருந்தும் அவனின் தயவில் அவர் இருப்பதால் பெரிதாக எதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

முதல் மாத முடிவில் நல்லதம்பி அந்தத் தோப்பு வீட்டை அடைந்தான்.  அவன் வந்த நேரம் உலக அதிசயமாக வெற்றியும், மணியும் குடிக்க ஆரம்பிக்கவில்லை.

“வாங்கய்யா, நல்லா இருக்கீங்களா?”, திடீரென்று வந்து நின்ற நல்லதம்பியை வரவேற்றான் வெற்றி.

“என்னையா இது, அதிசயமா இருக்கு.  ரெண்டு பெரும் தெளிவா இருக்கீங்க?”, என்று கேட்க அப்பொழுது அங்கு வந்த வேலு, அவர்கள் குடிக்க ஆரம்பிக்க இன்னும் அரை மணி இருப்பதாக கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.