(Reading time: 13 - 26 minutes)

மனதோர மழைச்சாரல்... - 12 - வத்ஸலா

ரிஷி கேட்ட கேள்விக்கு சஞ்சா மௌனத்தையே பதிலாக்க 'பதில் சொல்லு சஞ்சா ....' சற்றே உறுதியாக ஒலித்தது ரிஷியின் குரல்.

மெல்ல திரும்பி ரிஷியின் முகம் பார்த்தவன் 'என் பொண்ணுடா இவ' என்றான் நிதானமான குரலில் 'நான் தான் இவளுக்கு அப்பா போதுமா?'

'எப்படிங்க சார்? மறுபடியும் சொல்லுங்க...' சஞ்சாவை ஊடுருவியது ரிஷியின் கத்திமுனை பார்வை.

Manathora mazhai charal

'இல்லைடா... உண்மை அதுதான்... தப்பு செஞ்சவன் நான்தான். தங்கச்சி கல்யாணம் முடியட்டும்னு பார்த்தேன் அதுக்குள்ளே... இப்படி எல்லாம்.... '

சின்ன புன்னகையும், பெருமூச்சும் ஒன்றாக வெளிப்பட மார்புக்கு குறுக்காக கை கட்டிக்கொண்டு இடம் வலமாக தலை அசைத்தபடியே தெளிவான குரலில் சொன்னான் ரிஷி 'பொய் சொல்றியே  சஞ்சா...'

'இல்லைடா .... இதுதான் உண்மை.... அதான் குழந்தை என்னை தெளிவா டாடின்னு கூப்பிடறாளே அப்புறம் உனக்கு ஏன்டா சந்தேகம்?' ரிஷியின் முகத்தை தவிர்த்து பார்வையை வேறுபுறம் திருப்பிய படியே சொன்னான் சஞ்சா.

'குழந்தை கூப்பிட்டா???? நோ....' என்றான் அழுத்தமாக 'சஞ்சா..... இந்த உலகமே இதுதான் உண்மைன்னு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். எனக்கு என் சஞ்சாவை தெரியும். எனக்கு என் மேலே இருக்கிற நம்பிக்கையை விட உன் மேலே இருக்கிற நம்பிக்கை அதிகம்டா .'.

ரிஷியின் வார்த்தைகளில் எதிரொலித்த உறுதியும், நம்பிக்கையும் சஞ்சாவின் பார்வையை சட்டென அவன் பக்கம் திருப்பியது.

'உன்னாலே தப்பு பண்ணவே முடியாதே சஞ்சா...' புன்னகை மாறாமல் சொன்னான் ரிஷி. நண்பனின் அன்பிலும், நம்பிக்கையிலும் நெகிழ்ந்து போனவனின் பார்வை மெல்ல தாழ்ந்தது. அங்கே நின்றிருந்த பெண்கள் இருவரும் நண்பர்களை மாறி மாறி ரசித்திருந்தனர்.

'நீ என்கிட்டே எதையோ மறைக்கிறே சஞ்சா. அது மட்டும் நல்லா புரியுது.. அவனுங்க எனக்குத்தான் குறி வெச்சிருக்காங்க. இந்த குழந்தைக்கும் எனக்கும் நிச்சியமா ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு சஞ்சா. அது உனக்கும் தெரியுமோன்னு தோணுது. எதுவா இருந்தாலும் சொல்லுடா.'

எதுவுமே பேசாமல் ஒரு பெருமூச்சுடன் குழந்தையை தன்னோடு இறுக்கிக்கொண்டு முத்தமிட்டான் சஞ்சா.

'சொல்லு சஞ்சா .... ப்ளீஸ்...' பொறுமை இழந்தவனாக ரிஷியின் குரல் கொஞ்சம் உயர சடக்கென கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தது பார்த்தது குழந்தை. அதன் பார்வை ரிஷியின் மீது முதல் முறையாக பதிய ஏனோ அவனையே இமைக்காமல் பார்த்திருந்தது அது.

You might also like - Vidiyalukkillai thooram... A story that focuses on social problems!

திரும்பினான் சஞ்சா. ரிஷியின் முகம் பார்த்து கேட்டான் 'நிஜமாவே உனக்கு இந்த சஞ்சா மேலே நம்பிக்கை இருக்கா?'

'அதைத்தானேடா சொல்லிட்டு இருக்கேன்'

'இந்த சஞ்சா எது செஞ்சாலும் உன் நல்லதுக்குதான்ற நம்பிக்கை இருக்கா?'

'கண்டிப்பா சஞ்சா...'

'அப்போ இந்த விஷயத்திலே இதுக்கு மேலே வேறே எந்த கேள்வியும் கேட்காதே. எதையும் துருவாதே. பேசாம எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அருந்ததியை கூட்டிட்டு லண்டன் போற வழியை பாரு. அதுதான் உனக்கு நல்லது. இந்த விஷயத்தை என்கிட்டே விட்டுடு இவனுங்களை நான் பார்த்துக்கறேன்.'

'அதுக்கு வாய்ப்பே இல்லை. இந்த பிரச்சனை முடிவுக்கு வராம நான் எப்படிடா? எனக்கும் இந்த குழந்தைக்கும் எதோ ஒரு சம்மந்தம் இருக்குன்னு எனக்கும் தோணுது. உண்மை எனக்கு தெரிஞ்சே ஆகணும். அதுவரைக்கும்.... '

'அறிவிருக்கா உனக்கு? சொல்றேன்லே... சட்டென இடைமறித்து எகிறிய சஞ்சாவின் குரல் உயர, அவன்  கண்களில் கொஞ்சம் தீவிரம் பரவியது .அங்கே சில நொடி மௌனம்.

'என் வார்த்தைக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுப்பேன்னு நம்பறேன். அப்புறம் உன் இஷ்டம்... நான் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிட்டு வரேன்' என்றபடி நகரப்போனான் சஞ்சா. அவன் தோள் மீது கை வைத்தான் ரிஷி.

'குழந்தைக்கு நான் சாப்பாடு கொடுத்து கூட்டிட்டு வரேன். என் கிட்டே குடு...'

'இல்லைடா நான் பார்த்துக்கறேன்...' அவன் பக்கம் திரும்பவில்லை சஞ்சா.

'சரிடா. அதான் சொல்லிட்டே இல்ல. இனிமே மறுபேச்சு இல்லை. நீ என்ன சொன்னாலும் கேட்கறேன். இந்த விஷயத்திலே இனிமே நான் யார்கிட்டேயும் எதுவும் கேட்க மாட்டேன் போதுமா.. .?' சஞ்சாவின் முகத்தில் கொஞ்சம் நிம்மதியின் சாயல்.

'இப்போ நீ குழந்தையை தூக்கிட்டு போனேனா சம்மந்தி வீட்டுக்காரங்க முன்னாடி அது உன்னை 'டாடி'ன்னு கூப்பிட்டுச்சுன்னா நல்லா இருக்காதுடா. இந்த கல்யாணம் முடியற வரைக்கும் குழந்தை என் கூட இருக்கட்டுமே.'

ரிஷி சொல்வது சரி என்று தோன்ற ஒரு நொடி அவனை திரும்பி பார்த்துவிட்டு தீக்ஷாவின் பக்கம் திரும்பினான்.

'பட்டுச்செல்லம்... உனக்கு இது யாருன்னு தெரியுமா?' ரிஷியை நோக்கி விரல் நீட்டி கேட்டபடியே தீக்ஷாவின் முகம் பார்த்தான் சஞ்சா.

சில நிமிடங்களாக ரிஷியின் முகத்தையே ஆழ்ந்து பார்த்திருந்த குழந்தையிடம் சின்ன  சிரிப்பு 'என...க்....கு தெ...ரி....யும்.. எங்க வீட்டிலே  போட்டோ இருக்கு... அழகாக தலை ஆட்டியபடியே சொன்னது அது.

குழந்தையின் கொள்ளை அழகு சிரிப்பில் தொலைந்தே போனான் ரிஷி 'அப்படியா? என்னை தெரியுமா குட்டி பாப்பாக்கு. நான் யாரு?' அதனருகே குனிந்து, தலை சாய்த்து புன்னகையுடன் கேட்டான் அவன்

'அ..ப்...பா...' முகத்தில் இருந்த சிரிப்பு கொஞ்சம் கூட மாறாமல் சொன்னது குழந்தை. ரிஷியின் உடல் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது. சஞ்சாவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

சட்டென சுதாரித்துக்கொண்டு குழந்தையை பார்த்து சொன்னான் சஞ்சா ' அப்பா நான்டா. இது ரிஷி அங்கிள் செல்லம்.....'

'இல்லை நீ டாடி.. இது அப்பா...' குழந்தையிடமிருந்து தெளிவாக வந்தது பதில். ரிஷியின் முகத்தில் அதிர்ச்சியை விட சுவாரஸ்யம் அதிகமாக பரவியது. அவன் பார்வை தனிச்சையாக அருந்ததியை தொட்டது. அவள் முகத்தில் நிறையவே திகைப்பு.

சுவாரஸ்ய புன்னகையுடன் திரும்பி குழந்தையை நோக்கி கை நீட்டினான் ரிஷி ' குட்டி பாப்பா அப்பாட்ட வாங்க பாப்போம்...' தாவியே விட்டிருந்தது அவனிடம். அதன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் ரிஷி. அவனுக்குள்ளே ஏதோ ஒரு நிறைவு பரவுவதை நன்றாக உணர முடிந்தது அவனால். அதற்குள் இந்த விளையாட்டை இங்கேயே நிறுத்தி விட வேண்டிய அவசரத்தில் உள்ளே புகுந்தான் சஞ்சா

'தீக்ஷா செல்லம் டாடி, அப்பா... எல்லாம் நான் தான். இது ரிஷி அங்கிள். அப்பா இல்லை. இவரை நீ அப்பான்னு கூப்பிட கூடாது சரியா?' அவன் குழந்தையின் முகம் பார்த்து படபடவென பேச பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவனை திருதிருவென பார்த்தது குழந்தை.

'டே... அதை ஏன்டா மிரட்டுறே. குழந்தை பொய் சொல்லாது' குறும்பு புன்னகையுடன் சொன்னவனால் தனது பார்வை மறுபடியும் அருந்ததியை தொடுவதை தவிர்க்கவே முடியவில்லை. முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டாள் அவள்.

'சும்மா விளையாடாதே ரிஷி.. குழந்தையோட மனசிலே கண்டதையும் பதிய வைக்காதே .' என்றவன் 'பட்டு பாப்பா... இது அப்பான்னு உனக்கு யாரு சொன்னாங்க?' என்றான்.

'மாமா...'

'பார்த்தியா???' என்றான் சஞ்சா கொஞ்சம் நிம்மதியாக. 'சொல்லிக்கொடுத்து கூட்டிட்டு வந்திருக்காங்க ரிஷி. நீ இதையெல்லாம் மனசிலே போட்டுக்காதே சரியா? அவசரமாக சொன்னவன் குழந்தையை பார்த்து தீக்ஷா பாப்பா மாமா ராங்கா சொல்லி இருக்காங்க. இது ரிஷி அங்கிள் ஒகே வா.?' என்றான்.

அது மெல்ல தலை அசைத்தது. 'சரி வாடா நாம சாப்பிடலாம்..' ரிஷி நகர குழந்தையையும் அவனையும் ஒன்றாக அனுப்ப மனமே இல்லாமல் அவர்களையே பார்த்திருந்தான் சஞ்சா. என்ன தோன்றியதோ அவர்களை பின் தொடர்ந்தாள் அருந்ததி.

எதை பேசுவது எப்படி துவங்குவது என்றே புரியாத இறுக்கம் இருவருக்குமிடையில்.

தனது கையிலிருந்த வாட்சை கழட்டுவதும் அதை மறுபடியும் அணிவதுமாக தவிப்பை வெளிக்காட்டாமல் இருக்க முயன்றுக்கொண்டிருந்தாள் அஹல்யா. ஒரு கட்டத்தில் வாட்ச் கழன்று கீழே விழ குனிந்து அதை எடுத்தான் சஞ்சா. அதை வாங்கிக்கொள்ள அவனை நோக்கி கை நீட்டினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.