(Reading time: 10 - 19 minutes)

16. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

குடிகாரர்களால் கட்டிய மனைவிக்கு மட்டும் இல்லை அவர்கள் பிள்ளைகளுக்கும் என்றும் துன்பமும், அவமானமும்தான். இந்தக் குடிகாரர்களும் குற்றம் செய்பவர்களே. ஆனால் தண்டனை மட்டும் சூழ இருப்பவர்களுக்கு. இதில் நம் நாட்டில் பாதித் திருமணங்கள் அத்தகைய கனவான்களைத் திருத்துவதற்காகவே நடைபெறுகிறது. இருவது, முப்பது வருடம் பெற்று வளர்த்தவர்களால் செய்ய முடியாத அதிசயத்தை வந்த பெண் அடுத்த நாளே செய்து விடுவாள் போல. அவர்கள் செய்யும் திமிர்த்தனங்களுக்கு மாட்டுவது என்னவோ ஒன்றும் அறியாத பெண்கள்தான்.

வலி, வலி, வலி உடலாலும் மனதாலும் தேவி அனுபவித்தது இதை மட்டுமே.  நாட்கள் நரகமாகக் கழிந்தது. தேவிக்கு இந்த மரண வேதனைக்கு இறந்து விடலாம் போல இருந்தது. ஆனால் நல்லதம்பி தேவிக்காக செய்திருக்கும் முதலீட்டுக்கு அத்தனை எளிதில் அவளை விட்டுவிடுவானா. மணியும், வெற்றியும் பிணத்திற்கு சமமாகத்தான் அந்த வீட்டில் இருந்தார்கள். அவளின் அழுகையோ, கதறலோ அவர்களை அசைக்கவில்லை. நல்லதம்பிக்கு தேவி கிடைத்துவிட்டதால் இன்னும் மகிழ்ந்து அவர்களை தண்ணீரிலேயே குளிப்பாட்டினான். அனைத்தையும் பார்க்கும் வேலுவிற்கு தேவி மீது பரிதாபம் ஏற்பட்டாலும் அவனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அவனிற்கு இருப்பதும் பெண்ணல்லவா. நல்லதம்பியும் அவன் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடம் வேலுவை வெளியில் அனுப்பி விடுவான். அதனால் தேவி படும் துன்பம் பாதிக்கு மேல் அவனுக்குத் தெரியாது. இரண்டாவது நல்லதம்பியை பகைத்துக் கொள்வது நல்லபாம்பு புத்திற்குள் கை விடுவது போல. சேதாரம் கை விடுபவர்களுக்குத்தான். அதனால் அவனால் முடிந்ததாக தேவியை தற்கொலைக்கு முயல்வதிலிருந்து காப்பாற்றினான். அதே நேரம் அவளை வேளைக்கு உணவருந்தவும் வைத்துவிட்டான்.

வேலுவின் மீதும் தேவிக்கு கோவமே. இப்படி ஒரு ஈனப் பிழைப்பிற்கு பதில் தன்னை இறக்க விட்டிருக்கலாமே என்று. இந்தத் துன்பங்களுக்கு எல்லாம் தன் அன்னை ஆவி ரூபத்தில் வந்து இவர்களை வதம் செய்ய மாட்டாளா என்று அவள் அன்னையை தினம் தினம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

Vidiyalukkillai thooram

அவளின் அன்னை ஆவி ரூபத்தில் வேலை செய்தாளோ, இல்லை கடவுளுக்கே தேவி படும் வேதனை பொறுக்கவில்லையோ அவளின் துன்பங்களுக்கு ஒரு முடிவு வந்தது.

You might also like - Rojavai thalattum thendral... A breezy romantic story 

சாதாரணமாக மாலை ஐந்து மணிக்கே வீட்டிற்கு வரும் நல்லதம்பி கடந்த சில மாதங்களாக எழு, எட்டு மணிக்கு வருவது மீனாவிற்கு சந்தேகத்தை கிளப்பியது. முதல் ஒரு மாதம் வரை அவள் இதை கவனிக்கவில்லை. சாயங்கால வேளைகளில் அவள் கோவிலிற்கு சென்று வீடு திரும்ப எழு மணி ஆகிவிடும். அதற்குள் நல்லதம்பியும் வீடு திரும்பி விடுவான். அடுத்த மாதத்தில் தேவியுடன் இருக்கும் நேரத்தை அவன் அதிகப்படுத்தியதால் அவன் வீடு திரும்ப எட்டு, ஒன்பது என்று ஆனது. முதலில் அவள் நினைத்தது அவனிற்கு வேறு ஏதோ பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்று. ஆனால் தொடர்ந்து அவன் தாமதமாக வர மீனா விழித்துக் கொண்டாள். இது வரை அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் எதுவும் நிரந்தரமில்லாதது. ஒரு வாரமோ இல்லை இரண்டு வாரமோ அதும் தினம் தினம் எல்லாம் போக மாட்டான். மீனாவிற்கு எங்கே இப்பொழுது உள்ள தொடர்பு நிரந்தரமாக ஆகிவிடுமோ என்ற பயத்தில் நல்லதம்பியைக் கண்காணிக்க ஆள் ஏற்பாடு செய்தாள்.

அவனாலும் முதல் இரு வாரங்களுக்கு எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. மீனாவிற்கு தெரியவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவே நல்லதம்பி மிக மிகக் கவனமாக தேவி இருக்கும் இடத்திற்கு செல்வான். ஒரு வழியாக நல்லதம்பி தினம் செல்வது அடுத்த ஊரில் இருக்கும் அவனின் தோப்பிற்கு என்பது வரை கண்காணிக்க முடிந்தது.

அவன் வந்து கூறிய செய்தியைக் கேட்ட மீனாவால் முதலில் நம்பக்கூட முடியவில்லை. நல்லதம்பி பெண்பித்தனாக இருந்தாலும் தனியாக ஒரு பெண்ணிற்கு வீடு எடுக்கும் அளவிற்கு போனதில்லை. அப்படி அந்தப் பெண்ணிற்காக செய்யும் அளவிற்கு பெண் யாராக இருக்கும் என்ற யோசனைக்கு சென்றாள். நல்லதம்பியை வேவு பார்த்தவனாலும் அவள் யார் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மீனா நல்லதம்பியின் சித்தப்பாவிற்கு அழைத்துக் கேட்க முதலில் எதையும் கூற மறுத்த அவரும், பின் மீனாவின் மிரட்டலில் அனைத்தையும் கூறினார். அவரும் அந்தப் பெண் தேவி என்று கூறவில்லை.

மீனாவிற்கு மனதில் முதல் முறையாக பயம் வந்தது. என்னதான் அண்ணன், அப்பா என்று நல்லதம்பியை மிரட்டினாலும் அவன் இந்த அளவிற்கு ஒரு பெண்ணிற்கு செய்ய வேண்டும் என்றால் எங்கே தன் கையை விட்டு போய் விடுவானோ என்று அச்சம் கொண்டாள். தன் அண்ணனை அழைத்துக் அனைத்தையும் கூற, அவன் உடனே வேலையைத் தொடங்கி பெண் தேவி என்பதிலிருந்து, அவள் அங்கு வந்த நாள் தொடங்கி நடந்த அனைத்தையும் விளக்கினான்.

பெண் தேவி என்றவுடன் முதலில் மீனாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து வந்தது ஆத்திரம், தன்னை இந்த நல்லதம்பி எந்த அளவிற்கு முட்டாள் ஆக்கி இருக்கிறான் என்று. எப்பொழுது ஒரு பெண்ணுடன் வீடு எடுத்துத் தங்கும் அளவிற்கு வந்துவிட்டானோ இனியும் அவனை அவன் போக்கில் விடுவது நல்லதல்ல என்ற முடிவிற்கு வந்தாள் மீனா. அதுவும் அவன் மறுபடி பெண்கள் பின்னால் இதைப் போல் செல்லாத அளவிற்கு முடிவு கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினாள். இதை அவள் சிறிது காலம் முன்கூட்டியே செய்திருக்கலாம், தேவியாவது தப்பி இருப்பாள். காலம் கடந்த மீனாவின் முடிவினால் நல்லதம்பியை விட பாதிக்கப்பட்டதென்னவோ மறுபடி தேவிதான்.

தேவியின் நரக வாழ்க்கை மூன்று மாதங்கள் முடியும் நிலையில் அவள் மிகவும் சோர்வாகவும், அடிக்கடி மயங்கவும் ஆரம்பித்தாள். முதலில் அதை பெரிய விஷயமாக எடுக்காத நல்லதம்பி ஒரு நாள் முழுவதும் தேவி வாந்தியும், மயக்கமுமாக இருக்க பயந்து விட்டான். அவளை வெளியில் இருக்கும் மருத்துவ மனைக்கு கூட்டிக் கொண்டு போக முடியாத நிலை. முன்னைப் போல தேவியை மணியையோ, வெற்றியையோ வைத்து மிரட்ட முடியாது. அவளே முடிந்தால் அவர்களை கொன்று விடும் ஆத்திரத்தில்தான் இருந்தாள். எனவே அவன் வயலில் வேலை செய்யும் கிழவியை அழைத்து விஷயத்தைக் கூற அவரும் தேவியைப் பரிசோதித்துவிட்டு அவள் கற்பமாக இருப்பதாகக் கூற முதல் முறையாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான் நல்லதம்பி. அந்தக் கிழவி கூறியவுடன் அவன் கண் முன்னால் முதலில் வந்தது மீனாவின் உருவமும், அவளின் வாத்தைகளும்தான். அவன் மூலமாக குழந்தை என்று ஏதேனும் பெண் வந்து நின்றால் அவளோடு சேர்த்து அவனுக்கும் சமாதி என்ற அவளின் வார்த்தைகள்.  

எப்படியேனும் இந்தக் குழந்தையை அழித்து விடுமாறு அந்தக் கிழவியிடம் கூற தனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட அந்த வீட்டை விட்டுக் கிளப்பாமலேயே எப்படி அந்தக் கருவை அழிப்பது என்ற யோசனைக்குப் போனான் நல்லதம்பி. வேறு வழி இல்லாததால் முதலில் தேவிக்கு கடிதம் வாங்கிய டாக்டர் தயவை நாட அவர் வெளி ஊரில் இருப்பதாகவும் அந்த வார இறுதியில் ஊருக்கு வந்த பின் அவரைத் தொடர்பு கொள்வதாகவும் கூற அவனும் காலதாமதத்தால் ஏதேனும் பிரச்சனை வருமா என்று கேட்டு ஒரு பிரச்சனையும் வராது என்ற மருத்துவரின் பதிலில் நிம்மதி அடைந்தான். அவன் நிம்மதி எல்லாம் அந்த ஒரு நாள் மட்டும்தான்.  

தேவியை சோதித்த கிழவி, நல்லதம்பியின் சித்தப்பாவிடம் விஷயத்தைக் கூற அவர் உடனே மீனாவிற்கு அழைத்து தேவி கருவுற்றிருப்பதைக் கூறி விட்டார். மீனாவின் ஆத்திரமும், பழி வாங்கும் உணர்வும் அதிகரித்தது. அவள் தன் அண்ணனை அழைத்து அன்றே தன் திட்டத்தைத் செயல் படுத்த சொன்னாள். அதற்கு அவன் மறுநாள் நல்லதம்பி அங்கு இருக்கும்போதுதான் அவர்களை ஒரு வழி செய்ய வேண்டும் என்று கூறி மீனாவை நல்லதம்பியிடம் எதைப் பற்றியும் கேட்க வேண்டாம் என்று கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.