(Reading time: 8 - 15 minutes)

28. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

" சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்

சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேணும்

வண்ண வண்ண கண்ணனுக்கு என்ன வேண்டும்

ninaithale Inikkum

வட்டமிட்டு பாடிடும் கன்னி வேண்டும் " தூரத்தில் பழைய பாடல் ஒலிக்க , தன் கண்ணெதிரே ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்த நந்திதா , சந்தரபிரகாஷை ஆசையுடன் பார்த்தார் நளினி .. சந்துருவை நளினி பிரபு என்று அழைப்பது போல நந்திதாவும் " பிரபு வேணாம் " என்று சிணுங்கி சிரிக்க , அத்தை மகளின் கைகளுக்குள் குறுகுறுப்பு ஏற்படுத்தி ரசித்து சிரித்தான் அவன்.. சிரித்து கொண்டே இருந்தவளுக்கு லேசாய் மூச்சு திணறவும்

" டேய் பிரபு போதும் டா விளையாட்டு " என்றார் நளினி .. ஆனால் அவனோ விளையாட்டுத்தனம் குறையாமல்

குறுகுறுப்பூட்ட ,

" வேணாம் ..வேணாம் " என்று நந்துவும் மூச்சு திணற சிரிக்க

" ஹேய் " என்று அதட்டல் போட்டாள்  சுபாங்கினி .. விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மட்டுமல்ல , அங்கு இருந்த பெரியவர்களுமே  அவளின்  அதட்டலில் அதிர்ந்து நின்றனர் .. விடிந்தால் திருமணம் என்பதால் , பெண் வீட்டார் சிலரும் அங்கு இருக்க , சட்டென அக்காவின் அருகே ஓடி வந்தாள்  நளினி ..

" அக்கா ... "

" என்ன புள்ளைய பெத்து வெச்சு இருக்க ? ஏன் என் மருமகளை கொல்ல  பார்க்கிறானா  அவன் ? "

" ஐயோ , என்ன பேச்சு அக்கா இதெல்லாம் ? சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான் .. "

" சின்னவங்க தப்பு பண்ணா பெரியவங்க தடுக்கணும்தாயி ..அதை விட்டுட்டு இப்படி வேடிக்கை பார்க்க கூடாது "

" தப்புதான் அக்கா .. மன்னிச்சிருங்க .. " என்று சந்துருவை தூக்கி கொள்ள

" என்ன உன் பையனை வெச்சே , இந்த வீட்டையும் சொத்தையும் பறிச்சிட்டு போகலாம்னு பார்க்கறியா ?" என்றாள்  சுபாங்கினி .. அவர்களை பேச்சின் அர்த்தம் புரியாவிடினும் அந்த சூழ்நிலை சரியாய் இல்லை என்பதை உணர்ந்த நந்திதா , நளினியின் காலை கட்டி கொண்டு " அத்தை தூக்கு " என்றாள்  .. ஒரு கையில் சந்துரு இருக்க  இன்னொரு பக்கம் நந்திதாவையும்  தூக்கி கொண்டு அங்கிருந்து சென்றாள்  நளினி ..

" போறதை பாரு ! ஏற்கனவே எல்லாரு மனசையும் கலைச்சிட்டா ..இதுல பையனை வெச்சு சொத்தை எடுக்க பார்குறா " என்று சுபாங்கினி  கூறியது ஞானப்ரகாஷின் காதில் விழுந்தது .. அப்போதுதான் வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவர் , சுபாங்கினியின் கோபமான பேச்சும் பார்வையும் போகும் திசையை பார்த்து கொதித்தே விட்டார் .. இருப்பினும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் மனைவியை தேடி போனார் ..

அங்கு, நளினியின் கழுத்தை கட்டி கொண்டு அழுதான் சந்துரு .. அவனை பார்த்து இளையவளும் அழ தொடங்கினாள் ..

" அம்மா மன்னிச்சிரும்மா ..என்னால தானே பெரியம்மா உன்னை திட்டினாங்க ?"

" பிரபு அத்தான் அதாத (அழாதே ) அதாத (அழாத ) " தனது பிஞ்சு விரலால் அவன் கன்னத்தை வருடினாள்  நந்திதா.. அவள் தொட்டவுடன் அவளை போலவே கன்னத்தை தொட்டு " அழாத அம்மு " என்றான் சந்துரு .. இருவரின்  செயலிலும் மனம் கனிந்து அமர்ந்திருந்தார் நளினி ..

" நளினி "

" என்னங்க ?"

" என்ன நடந்துச்சு ? ஏன் சந்துரு அழறான் ? டேய் என்னடா பண்ணின " என்று மகனை பார்த்து அவர் உறும

" அட எதுக்கு நீங்க வந்ததும் வராததுமாய் அவனை திட்டுறிங்க ?" என்றார் அவர் ..

" இவன் எதுவும் பண்ணாம உன் அக்கா ஏன் கத்திட்டு போறாங்க " என்றார் அவர் ..

" என் அக்காவின் கோபம் உங்களுக்கு தெரியாதத ?" சமாதானமாய் பேச முயன்றார் நளினி ..

" உன்னை ஒன்னு கேட்கவா நளினி ?"

" ம்ம்ம் "

" சந்துருவுக்கும் நந்திதாவுக்கும் .......... " என்றிழுத்தவர், அர்த்தமுள்ள பார்வையை சிந்தி " அப்படி ஏதும் நினைப்பில் இருக்கியா நீ ?" என்றார் ..

கணவரின் முறைப்பில் உள்ளங்கை சில்லிட " என்னங்க நீங்க ..சின்ன பசங்க ரெண்டு பேரும் .. இப்ப போயி " என்று  ஆரம்பிக்கவும்

" இப்போ இல்ல , எப்பவுமே அது நடக்காது ..  சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ண ஹெல்த் இஸ்யு வரும்னு தெரியும்ல நளினி ? ஒரு டாக்டரா இருந்துகிட்டு நானே இதுக்கு எப்படி சரி சொல்லுவேன் ? அது மட்டும் இல்ல , உன் அக்கா பேச்சை கேட்டதானே ? சொத்துக்காக பாசம் கொண்டாடுரோம்னு சொல்லுறாங்க .. வேணாம் நளினி உன் மனசுல அப்படி ஏதும் எண்ணம் இருந்தா விட்டுரு .. நந்து சந்துருவுக்கு இல்லை "

" அது வந்து "

" சொன்னதை கேளு " என்றுவிட்டு அங்கிருந்து சென்றார் அவர் .. அவர் சொன்னதில் ஏதும் புரியாவிடினும் " நந்து சந்துருவுக்கு இல்லை " என்று சொன்னது மட்டும் சந்துருவுக்கு தெளிவாய் மனதில் பதிந்தது ..

" அம்மா , நந்து எனக்கு தான் .. அவ கூடத்தான் நான் இருப்பேன் .. " என்று நந்துவின் கைகளை அவன் இறுக பற்றி கொண்டான்.. நளினியின் மடியில் இருந்த நந்து இப்போ சந்துருவின் அருகில் ஒட்டி கொண்டாள்  ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.