31. கிருஷ்ண சகி - மீரா ராம்
“வாங்க டாக்டர்… எப்படி இருக்கீங்க?...” என மகத்திடம் ஒருவர் நலம் விசாரிக்கையில்,
“நாம போய் எல்லாருக்கும் சாப்பாடு வாங்கலாம்… வா…” என பிரபு பவித்ராவை அழைத்துச் சென்றான்…
விஜய்யும், ருணதியும் மட்டும் அங்கே அமர்ந்திருக்க, விஜய் ருணதியைப் பார்த்து, “நல்லாயிருக்கீங்களா?... பாட்டி, துருவ்… எல்லாரும் எப்படி இருக்குறாங்க?...” எனக் கேட்க,
“எல்லாரும் நல்லா இருக்குறோம்… நீங்க வெளியூரில் இருக்குறதா பாட்டியும், அத்தையும் சொன்னாங்க… பார்க்க நீங்களும் உங்க அண்ணனும் ஒரே மாதிரி இருப்பீங்கன்னும் சொன்னாங்க… ஆனா நிஜமாவே இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருக்குறீங்க…” என சொன்னதும்,
“ஹ்ம்ம்… ஆமா… சட்டுன்னு பார்க்குறவங்க கொஞ்சம் குழம்பித்தான் போவாங்க…” என்றான் அவனும்…
“அத்தை எப்படி இருக்குறாங்க?...”
“ஹ்ம்ம்… இருக்குறாங்க… எப்பவும் உங்களையும், துருவனையும் பத்தி தான் பேச்சு….”
“துருவனை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்…”
“தன் பேரனை யாருக்குத்தான் பிடிக்காம போகும்…” என அவனும் யதார்த்தமாக சொல்லிவிட்டு ருணதியைப் பார்க்க, அவள் முகம் இறுகியிருந்தது…
அதன் பின்னரே அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கு புரிய, “சாரி… ருணதி…. நான்…” என அவன் பேச ஆரம்பிக்கையில், மகத், பிரபு, பவித்ரா என அனைவரும் வந்துவிட, அவன் அமைதியானான்…
அதன் பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு காவேரியைப் பார்க்கச் சென்றனர்…
அவர் கண்விழித்ததும், அவரை இல்லத்துக்கு அழைத்து வந்திருந்தனர் அனைவரும்…
“மதர்… நீங்க ரெஸ்ட் எடுங்க… ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க… சரியா?..”
“இல்ல ராஜா… நான்…”
“மதர்… ப்ளீஸ்… இப்போ எதுவும் பேச வேண்டாம்… ரெஸ்ட் எடுங்க…” என சொல்லிவிட்டு அவன் வெளியே வந்தான்…
“சாரி… ருணதி… நான் எதோ எதார்த்தமா தான் பேசினேன்…. நான் பேசின வார்த்தை உங்களை காயப்படுத்திருச்சு… மன்னிச்சிடுங்க…” என கரம் கூப்பி மன்னிப்பு வேண்ட, பவித்ரா, அவனை புரியாது பார்த்தாள்…
“விடுங்க… இனி இதைப் பத்தி பேச வேண்டாம்…” என்றாள் ருணதி…
“ஆமா இவர் யார்?.. காவேரி அம்மாவைப் பார்க்க வந்தேன்னு சொன்னார்?... எதுக்காக?...” என பவித்ரா பிரபுவிடம் கேட்க
“இவன் பேரு விஜய்… என் ஃப்ரெண்ட்… இப்போதைக்கு இந்த விவரம் போதுமா உனக்கு?..” என கேள்வி கேட்டான் பிரபு…
“ஓ… உங்க ஃப்ரெண்ட் எதுக்கு ருணதிகிட்ட சாரி எல்லாம் கேட்குறாங்க…?...”
“அதை நீ எங்கிட்ட கேட்டா எனக்கெப்படி தெரியும்?... வேணும்னா நீ அவங்கிட்டயே கேளு… இங்க உன் முன்னாடி தான இருக்குறான்… நீயே கேளு…. போ….”
“கேட்குறேன்…” என்றவள், “ருணதியை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?...” என விஜய்யிடம் சென்று கேட்டாள்…
அவளை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாது அமைதியாக இருக்க, அவள் மீண்டும் கேட்டாள்…
பதில் வராது போகவே, “கேட்டது தப்புத்தான்… சாரி….” என்றபடி நகர்ந்தவளிடம்,
“முன்ன பின்ன தெரியாதவங்க உதவி எங்களுக்கு தேவை இல்ல… வழியை விடுங்கன்னு சொன்னது நீங்க தானன்னு யோசிச்சிட்டிருந்தேன்… கவலைப்படாதீங்க… நீங்க சொன்ன மாதிரி எதுவும் நான் சொல்லமாட்டேன்...” என்றதும், அவள் முகத்தின் கோபத்தின் சாயல்…
அதை கண்டு கொண்டவன், “ருணதி என்னோட மாமா பொண்ணு….” என்றான் மெதுவாக…
“என்ன?...” என கேள்வியோடு அவள் சொல்ல
அவளின் அந்த விரிந்த கண்களை அவன் ஆர்வமாக பார்த்தான்…
அவள் மேலும் அதிர்ச்சியாகிவிட, “நான் துருவனோட சித்தப்பா…” என அவன் விளக்கம் கொடுக்க, அவளுக்கு புரிந்தது… மேலும், இவனிடம் ருணதியின் பிரச்சினைக்கு உதவி கேட்கலாமா என்ற எண்ணமும் வர, அவளுக்கு இது என்ன முன் பின் தெரியாத ஒருவனிடம் உதவி கேட்க நினைக்கிறோம் என்ற வியப்பும் வர,
“ஹ்ம்ம்.. சரி…” என விஜய்க்கு பதில் சொல்லிவிட்டு நகர முற்பட்டாள்…
“எங்கிட்ட எதுவோ கேட்க நினைக்குறீங்களா?... கேளுங்க… என்னால முடிஞ்சா செய்வேன் கண்டிப்பா…” என அவனும் சட்டென்று சொல்லிவிட, அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது…
“இல்ல… அது… இல்ல…” என அவள் தயங்க,
“சரி… விடுங்க… பயம் வேண்டாம்… தயக்கமும் வேண்டாம்… உங்களுக்கு எப்போ கேட்கணும்னு தோணுதோ, அப்ப கேளுங்க… சரியா?...” என இருவிழி பார்த்து கேட்க, அவளுக்கு என்னவோ போல் ஆயிற்று….
சட்டென்று அவள் அவனை விட்டு பார்வையை அகற்ற, அவனின் பக்கம் வந்த பிரபு,
“என்னடா?... அவ கேள்விக்கெல்லாம் ஒழுங்கா பதில் சொன்னியா?...” என விஜய்யைப் பார்த்து கேட்டான்…
“அவங்க தயங்குறாங்கடா…”
“அந்த அவங்க எவங்கப்பா?...” என பிரபு வம்பிழுக்க,
“இவங்க தான்…” என பவித்ராவை கைக்காட்டினான் விஜய்…
“டேய்… நீ காலையிலேயேயும் அப்படித்தான் சொன்ன?... அவங்கன்னு… அதுக்குத்தான் உன்னை நான் பார்த்தேன்… நியாபகம் இருக்கா?...”
“ஆமா… நானே உங்கிட்ட அதைப்பத்தி கேட்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்… எதுக்குடா அப்படி பார்த்த என்னை?...”
“அவ நம்மளை விட சின்னப்பொண்ணுடா… அவளை நீ வாங்க போங்கன்னு சொன்னா வேற எப்படி பார்க்குறது உன்னை?...”
“ஓ… அதுதான் பிரச்சினையா?... நான் கூட….” என்றவன் தன் நெற்றி மீது விரல் வைத்து தட்டி சிரித்தான்…
“டேய்… எதுக்கு நீ இப்போ சிரிக்குற?... காரணத்தை சொல்லு…”
“எதுவும் இல்லடா… சும்மாதான்…” என்றான் விஜய் சாதாரணமாக…
பவித்ராவிற்கு அவன் பேச்சு, நடவடிக்கை என அனைத்தும் வித்தியாசமாக தோன்ற, அவள் அது எதையும் அந்த அளவிற்கு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை… அவளைப் பொறுத்தவரை, விஜய், துருவனின் சித்தப்பா, பிரபுவின் நண்பன்… அதையும் தவிர்த்து, ருணதியின் பிரச்சினைகளை சரி செய்ய விஜய்யிடம் உதவி கேட்கலாமா வேண்டாமா என்ற கேள்வியும் மனதினுள் இருக்கிறது… அவ்வளவுதான்…
“நீ சும்மான்னு சொன்னாலும் எனக்கென்னமோ அப்படித்தோணலையே மச்சான்…” என்ற பிரபு அவனை தன் வழிக்குக்கொண்டு வர, முடிவெடுத்தான்…
“சரிடா… சொன்னது நியாபகம் இருக்கட்டும்… அவளை வா, போன்னே சொல்லு… என்ன புரியுதா?...”
“கண்டிப்பாடா… யூ டோன்ட் வொரி மச்சான்… நீ சொல்லுற மாதிரியே கூப்பிடுறேன்…” என்றவனை ஏற இறங்க பார்த்தவன்,
“பவி, இனி இவனும் உனக்கு என்னை மாதிரி சொந்தம் தான்… சரியா?...” என அவளிடம் கேட்டதும்,
“சரிண்ணா…” என அவள் தலையாட்ட, விஜய், இதழில் புன்னகை பூத்தது…
அதைக் கண்டவன், “டேய்… மச்சான்… அவளுக்கு நீயும் என்னை மாதிரி அண்ணன்னு சொன்னேன்…” என அவன் காதருகில் சொல்ல, அவன் பிரபுவை முறைத்தபடி,
“அத நீ சொல்லாத… அவ சொல்லட்டும்…” என்றான் கோபம் மாறாதபடி…