(Reading time: 6 - 12 minutes)

01. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

ன் தென்றலாக நீ வருவாய், மதி மயக்கும் மாருதம் தருவாய்

காத்திருப்பேன் அன்பே, உயிர் ஆதாரமே..........

“ஸ்வேதா, ஸ்வேதா எங்கடி இருக்க”, கையில் ஏகப்பட்ட ஐட்டங்களுடன் ஸ்வேதாவை ஏலமிட்டபடியே வந்தார் லக்ஷ்மி. பத்துவின் நாயகி. கௌஷிக், ஸ்வேதாவின் அன்னை.

“ஏம்மா கத்தற. இங்க பெட்ரூம்லதான் இருக்கேன். ஊருக்கு எல்லாம் எடுத்து வச்சிண்டு இருக்கேன்”, என்று கூற பெட்ரூமிற்குள் நுழைந்தாள் லக்ஷ்மி. லக்ஷ்மியின் கையிலிருக்கும் ஐட்டங்களைப் பார்த்து ஜெர்க் ஆனாள் ஸ்வேதா.

“அம்மா, என்னமா இது நான் மூணு மாசம்தானே அமெரிக்கா போறேன். அங்கயே பெர்மனன்ட்டா இருக்கப் போறா மாதிரி எதுக்கு இத்தனை பாக் பண்ணி இருக்க. கிராண்ட் ஸ்வீட்ஸ்ல கூட இவ்ளோ பொடி வரைட்டீஸ் இருக்காது போல இருக்கு”, கிட்டத்தட்ட பதினைந்து Ziplock கவர்கள், பிளஸ் எட்டு ஊறுகாய் பாட்டில்கள் என்று, இரு கை கொள்ளாத அளவில் சாமான்களுடன் நின்றிருந்த லக்ஷ்மியை பார்த்துக் கேட்டாள் ஸ்வேதா.

“இதெல்லாம் உனக்குன்னு யாருடி சொன்னா..... நோக்குதான் எல்லாம் எப்படி பண்ணனும்னு சொல்லிக் கொடுத்து இருக்கேனே. அங்கதான் அப்பா, அம்மாவைத் தவிர எல்லாம் கிடைக்கறதாமே. அப்பறம் என்ன. நீயே பண்ணிக்கோ”

“அது சரி. அப்பறம் எதுக்கு இத்தனை பாக்கெட். ஏதானும் கடை ஆரம்பிக்கற ஐடியால இருக்கியா”

“ச்சே ச்சே, நான் மட்டும் ஆரம்பிச்சேன்னு வைய்யி..... இப்போ இருக்கற அத்தனை மசாலா கம்பெனியும் மூடிட்டு போ வேண்டியதுதான். மத்தவாளோட போட்டி போடறது எனக்கு எப்பவுமே பிடிக்காது”

“ஹ்ம்ம் ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாதும்மா. சரி விஷயத்துக்கு வா, எதுக்கு இத்தனை ஐட்டம். உன்னோட friend யாரோட பசங்களுக்கானும் தூக்கிண்டு போகணுமா”

“இல்லடி, இதெல்லாம் ஹரிக்கு. அவன் இருக்கற எடத்துக்குத்தானே நீ போகப்போற. பாவம்டி புள்ள. வெளில சாப்பிட்டு ஒத்துக்காம ஜூரம் வந்து எத்தனை கஷ்டப்பட்டான். இந்தப் பொடி, ஊறுகாய் எல்லாம் கொடுத்தியானா ஆத்துலயே சமைச்சு சாப்பிடுவான் இல்லை..... அதுக்குத்தான். ஜானு மாமிக்கூட வேண்டாம்னுதான் சொன்னா. நான்தான் அதெல்லாம் ஸ்வேதா கொண்டுபோவான்னு சொல்லிட்டேன்”, என்று கூற, ஸ்வேதா கோவத்தில் புஸ் புஸ்ஸென்று மூச்சு விட ஆரம்பித்தாள்.

“அம்மா நோக்கே இதெல்லாம் ஓவரா இல்லை. ஹரிக்கு உடம்பு சரியில்லாம இருந்தது மூணு மாசம் முன்னாடி. அதுவும் சாதாரண வைரல் fever. அதுக்கு எதுக்கு இத்தனை நாள் கழிச்சு சாமான் கொடுத்துவிடற. ஜுரம் வந்து போனப்பறம் இத்தனை நாள் வெளிலதானே சாப்பிட்டார்”

“மூணு மாசம் முன்னாடியோ, இல்லை மூணு நாள் முன்னாடியோ வந்த ஜுரம், வந்ததுதானே”

“அம்மா ஏம்மா இப்படி லாஜிக்கே இல்லாம, கன்னாபின்னான்னு கவுன்ட்டர் அடிக்கனும்ன்னே பேசற. கௌரி மன்னி கௌஷிக்கை கல்யாணம் பண்ணினதுல நம்மாத்துல நடந்த ஒரே மாத்தம் உனக்கு வந்திருக்கற வாய்தான்”

“ஏண்டி பாவம், கௌரியை இழுக்கற. அவளே பாவம் ஆத்தையும் பார்த்துண்டு, கௌஷிக், கிருஷ்ணா ரெண்டு பேர்கூடயும் அல்லாடிண்டு, வேலைக்கும் போயிண்டு கஷ்டப்படறா”

“யார் மன்னி கஷ்டப்படறாளா. இதை மூணு வயசு ஆன க்ரிஷ்ணாக்கூட ஒத்துக்க மாட்டான்ம்மா. சரி விடு. நான் எல்லாத்தையும் பாக் பண்ணி முடிச்சுட்டு எடம் இருந்தா இதை எல்லாம் வச்சுக்கறேன்”

“என்னது எடம் இருந்தாலா, உன்னோட டிரஸ்ல ஏழெட்டை குறைச்சுட்டு இதை எல்லாம் எடுத்துண்டு போ. ஹரி சாமான்தான் முக்கியம். மத்ததெல்லாம் அப்பறம்தான் சொல்லிட்டேன்”

“அம்மா, இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன். மொதல்ல இத்தனை சாப்பாடு ஐட்டம் தூக்கிண்டு போனேன்னு வச்சுக்கோ, என்னை இமிக்ரேஷன்லையே நிக்க வச்சுடுவான். அப்பறம்தானே அமெரிக்கா போய் ஹரிக்கிட்ட கொடுக்கறது”

“நீ சும்மா கதை அடிக்காதடி, அதெல்லாம் ஈஸியாக் கொண்டு போலாமாம். அலமேலு அவளோட மாட்டுப்பொண்ணு உண்டாயிருக்கான்னு, அவளைப் பாக்க போன மாசம் அமெரிக்கா போனா இல்லை, அப்போ அவளுக்கு பிடிக்கும்ன்னு மீனெல்லாம் கூட காய வச்சு எடுத்துண்டு போனாத் தெரியுமோ. நீ என்னமோ பிசாத்து பொடிக்கு இல்லாத அலட்டு அலட்டிக்கற”

“எங்க இருந்தும்மா உனக்கு மட்டும் இந்த information எல்லாம் கிடைக்கறது. கமலஹாசன் கருவாடு எடுத்துண்டு போனதை நைஸா அலமேலு ஆன்ட்டி எடுத்துண்டு போனான்னு சொல்றயா”

“பார்த்தியா கமலஹாசன், அத்தனாம் பெரிய நடிகரே அலட்டிக்காம எடுத்துண்டு போய் இருக்கார். நோக்கென்னடி”

“அம்மா அது சினிமாலம்மா. அதுவும் ஆட்டோல. சரி விடு. நீ ஹரிக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் கொடு. மொதல்ல அதை அடுக்கிடறேன். அப்பறமா எடம் இருந்தா என்னோடது வச்சுக்கறேன். அப்படியே இல்லைன்னாக் கூட, ரெண்டே டிரஸ் எடுத்துண்டு போய் தோச்சு தோச்சு போட்டுக்கறேன், போறுமா”, இவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும்போது வாசலில் இருந்த அழைப்பு மணி ஒலி எழுப்பியது. லக்ஷ்மி யார் என்று பார்க்க செல்ல, லக்ஷ்மி வைத்து விட்டுச் சென்ற பொட்டலங்களை எப்படி எடுத்துப் போவதென்ற கலக்கத்துடன் பார்த்தாள் ஸ்வேதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.