(Reading time: 9 - 17 minutes)

04. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

போனை வைத்ததும், திலீப்பின் மனம் அவள் தன் வாழ்வில் வந்த தருணங்களை நினைவுபடுத்த, அவனும் அதனுடன் சென்றான்…

“திலீப்… இன்னைக்கே வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்துடு… நாளைக்கு லீவ் போடணும்… நினைவிருக்குல்ல…” என திலீப்பின் அப்பா சண்முகம் கேட்டதும்,

“ஹ்ம்ம்… சரி…” என்றபடி பைக் கீயை எடுத்து கொண்டு சென்று விட்டான் அவன்…

“என்னப்பா… அண்ணன் இப்படி போறான்?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

“வேற எப்படிம்மா போவான்?... அவன் சும்மாவே பேசுறதுக்கு காசு கேட்பான்… நாளைக்கு பொண்ணு வேற பார்க்கப் போறோம் உன் அண்ணனுக்கு… அப்போ கேட்கவா வேணும்?...”

“அதுவும் சரிதான்…” என திலீப்பின் தங்கை சுகன்யா சிரித்ததும், சண்முகத்திற்கும் அந்த சிரிப்பு தொற்றிக்கொண்டது…

“திலீப் என் மூத்த பையன்… இது சுகன்யா… திலீப் தங்கச்சி… இன்னொரு பையன் இப்போ மும்பையில வேலை பார்த்துட்டிருக்கான்..” என சண்முகம் திலீப்பினையும் தன் குடும்பத்தினையும் அறிமுகப்படுத்தியதும், திலீப் மரியாதை நிமித்தமாக பெரியவர்களை பார்த்து லேசாக சிரிக்க,

அடுத்தடுத்து பெரியவர்கள் தத்தமது கதைகளை பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் சட்டென்று, பெண்ணையும் வர சொல்லுங்க… பார்த்துடலாம்… எனவும், பெண்ணை அழைத்து வந்தார்கள்…

தழைய தழைய புடவை, கொஞ்சம் பூ, சற்றே அலங்காரம், பெண் பார்க்க வந்திருப்பவர்களுக்காக அதுவும் அம்மா வேண்டிக்கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே… என எந்த ஒரு அலட்டலும் இல்லாது சாவி கொடுத்த பொம்மை போல் அச்சபையில் வந்து நின்று பெரியவர்கள் அனைவருக்கும் வணக்கம் சொன்னாள் சரயூ…

டிகிரி முடித்திருந்தாள்… அது ஒன்றே அப்போது அவள் பெற்ற பட்டம்… அடுத்த பட்டத்தை பெற அவள் முயன்ற நேரம், வீட்டில் அவளை வேறு ஒரு பட்டத்திற்கு தயாராக மாற்ற முடிவெடுத்தார்கள்… ஆம்… இன்னொரு வீட்டின் மருமகளாய் தன் வீட்டில் இருக்கும் மகளை மாற்றும் பட்டம் தான் அது…

அதுவும் காலங்காலமாய், நடப்பது தானே… பெற்றவர்களை பொறுத்தவரைக்கும் பெற்ற கடன் கழிய வேண்டுமே… எனில் நான் பாரமா என்று கேட்டால், அப்படி எல்லாம் இல்லை, எல்லாம் நடக்க வேண்டிய வயதில் நடந்திட வேண்டும் அல்லவா, கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என பேச ஆரம்பித்திடுவார்கள் உடனேயே…

எனவே எந்த வாக்குவாதமும் செய்யாது, நாளை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றதும் சரி என்றதோடு விட்டுவிட்டாள் சரயூ… இல்லையென்றால், அதற்கும் ஒரு பூகம்பம் வெடிக்கும்… அது எதற்கு வம்பு என அவள் மாப்பிள்ளையை பார்க்க போகும் எந்த ஒரு ஆர்வமும் இல்லாதே ஒப்புக்கொண்டாள் சரயூ…

நாளை வருபவர்கள் வரட்டும்… பார்த்துக்கொள்ளட்டும்… முன்னாடி போய் நில் என்று சொல்வார்கள் அவ்வளவு தானே… கண்ணாடி முன் நின்று முகம் பார்த்து கொள்வது போல் அங்கே போய் நின்று தரையை பார்த்துக்கொள்ளவேண்டியது தான் கண்ணாடியாய் நினைத்து… என மனதிற்குள் முடிவெடுத்து வைத்திருந்தாள் அவள்…

மாப்பிள்ளை வீட்டார் வந்ததும், பையன் அழகா இருக்குறான்… பார்க்க நல்லா தான் இருக்குறார் ஜம்முன்னு… என தோழிகளின் கேலிப் பேச்சுக்கள் காதில் விழுந்த போதிலும் அவள் அதனை கண்டுகொள்ளவில்லை…

அத்தனை பேரின் நடுவிலும் அவள் நிற்பதற்கு கொஞ்சம் சிரமமாய்த்தான் இருந்தது… பின்னே அனைவரின் பார்வையும் அவள் ஒருத்தியின் மேல் இருக்கும் பட்சத்தில் அவளால் தரையை விட்டே பார்வையை எடுக்கமுடியவில்லை…

“இங்க உட்காரும்மா…” என அவளை அழைத்த ஒரு பெண்மணி,

அவளிடம், “என்ன படிச்சிருக்கம்மா?..” எனக் கேட்டதும்,

“பி.எஸ்.சி.. கம்ப்யூட்டர் சயின்ஸ்…” என்றாள் சரயூ…

“ஓ… சரிம்மா…” என்ற பெண்மணியும் அதன் பின் அமைதியாகி விட,

அவளருகில் வந்த சுகன்யா, “அண்ணி…” என்றபடி பார்த்து சிரிக்க, சரயூவும் லேசாக சிரித்தாள் அவளைப் பார்த்து…

“இவர் தான் என் அண்ணன் திலீப்… பாருங்க… பார்த்து சொல்லுங்க… பிடிச்சிருக்கான்னு….” என அவள் சொன்னதும், சரயூ நிமிரவே இல்லை…

“அட வெட்கப்படாம பாருங்க அண்ணி…” என சரயூவின் காதருகே சுகன்யா கிசுகிசுக்க, சரயூவிற்கு சிரிப்பு தான் வந்தது…

பின்னே பொம்மை போல் வந்து நிற்பவளிடம் வெட்கப்படாதே என்று சொன்னால், பாவம் அவள் தான் என்ன செய்வாள் சிரிக்காமல்?... பொம்மை எந்த ஊரில் வெட்கப்பட்டது… இல்லை வெட்கப்படத்தான் தயங்கியது?.. என மனதினுள் நினைக்கையிலே சிரிப்பும் வர, அதனை அப்படியே தனக்குள்ளேயே மறைத்தும் வைத்துக்கொண்டாள்…

அப்போது ஒரு பெண், அவளை எழுந்து நிற்க சொல்ல, “இது எதற்காக?...” என யோசித்த வண்ணம் அவள் இருந்த போது,

“இல்ல பொண்ணு ரொம்ப குட்டையா இருக்கும்போல தெரியுது… அதான் மாப்பிள்ளை பக்கத்துல நிக்க வச்சி பார்த்துட்டா தெரிஞ்சிடும்ல…” என சொல்லி கூட அந்த பெண் முடிக்கவில்லை,

சரயூவின் மாமா, “அதெல்லாம் எங்க பொண்ணு குட்டை கிடையாது நீங்க நினைக்குற அளவுக்கு… மாப்பிள்ளை கொஞ்சம் வளர்த்தி.. அதனால எங்க பொண்ணு உங்களுக்கு அப்படி தெரியுறா… வேணும்னா, மாப்பிள்ளையை எழுந்து அங்க நிற்க சொல்லுங்க… பொண்ணையும் எழுந்து இங்க நிற்க சொல்லுவோம்… இரண்டு பேரு உயரமும் பொருத்தமா இருக்குதான்னு பார்க்கலாம்…” என சொன்னதும், சரயூவிற்கு மாமாவின் மேல் மதிப்பு கலந்த மரியாதை வந்து போனது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.