(Reading time: 9 - 18 minutes)

11. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

திலீப்பைப் பற்றிய யோசனையிலேயே இருந்தவளுக்கு தன் வாழ்க்கை எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்ற எண்ணம் வந்தது...

சிறு வயதிலிருந்து சரயூவிற்கு அரட்டை அடிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும்… பெரியம்மா பிள்ளைகள், சித்தி பிள்ளைகள், அர்னவ் என அனைவருடனும் எப்போதும் வாயளந்து கொண்டிருப்பாள் சரயூ…

அப்பொழுது அவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாய் தான் வசித்தார்கள் ஒன்றாக சேர்ந்து…

காயத்ரி, வித்யா, சரயூ மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான்… எதிலும் எப்போதும் சரயூவின் சேட்டைகளே அதில் அதிகம் இருக்கும்…

சந்தோஷத்தின் சாயல் முகமெங்கும் எப்போதும் ஒட்டியே இருக்கும் அவளின் முகத்தில்… வீட்டில் தான் அவளது ராஜ்ஜியம் என்றால், அவளுக்கு அமைந்த தோழிகளும் அவளுக்கு பக்கவாத்தியம் போல் அமைந்தது தான் இதில் இன்னும் சிறப்பு…

மற்றவர்களை அவள் பேசி ஜெயித்தாலும் அர்னவிடம் மட்டும் அவளால் பேசி ஜெயிக்கவே முடியாது… இருந்தாலும் வாய் மட்டும் குறையாது அவளுக்கு… அவனுடன் சரிக்கு சரி மல்லுக்கு நிற்பாள்…

இனியும் முடியாது என்ற நிலையில், வித்யா, காயத்ரியையும் உடன் அழைத்துக்கொள்வாள்… அவர்களுடன் சேர்ந்து தம்பியை கலாய்க்கிறேன் என்ற பேர்வழியில் ஆரம்பித்து கடைசியில் அவன் அவர்கள் மூவரையும் கலாய்த்து அனுப்பிடுவான்…

அவனிடம் அசிங்கப்பட்டாலும், எதுவுமே நடக்காதது போல் துடைத்துபோட்டுவிட்டு மீண்டும் அரட்டை அடிக்க ஆரம்பித்திடுவாள் தனது சகோதரிகளுடன் சேர்ந்து…

வெளியே ஷாப்பிங்க் செல்கிறோம் என்ற பெயரில் கடையையே இரண்டாக்கிவிட்டு வருவார்கள் மூவரும்… அரட்டை அடிப்பது அவளுக்கு எவ்வளவு இஷ்டமோ அதே அளவு இஷ்டம் இப்படி வெளியே சுற்றிப்பார்க்க செல்வது…

அவள் இருந்தாலே அந்த இடம் கலகலவென்று இருக்கும்… எந்த நேரமும் பேச்சு, தோழிகளுடன் கான்பெரென்ஸ் கால் என அவளின் எல்லா நாளுமே இனிமையாக கழியும்…இதில் அர்னவுடன் நடக்கும் குட்டி குட்டி சண்டைகளும் அடக்கம்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அதற்கும் மேல் வித்யாவுடனும், காயத்ரியுடனும் சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் இல்லாமல் அவளது ஒருவாரம் நிச்சயமாக கழிந்திடாது…

மனதிற்கு தோன்றிவிட்டால் போதும், துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆடத் தொடங்கிவிடுவாள்…

இது தன் ஸ்டெப், இப்படித்தான் ஆட வேண்டுமென்ற ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாம் அவளுக்கு கிடையாது…

மியூசிக் கேட்டதும் தானாக தனக்கு அந்த நேரத்தில் தோன்றுவதை எல்லாம் ஆடிமுடித்து விடுவாள் கொஞ்சமும் தயக்கம் இல்லாது…

அவளின் இந்த அசத்தலான ஆட்டத்திற்கு வித்யாவும், காயத்ரியும் பிரியமான ரசிகைகள் கூட… ஆனால் அர்னவ் தான் கேலி செய்வான்… இருந்தாலும் அவன் கலாய்க்கிறான் என்று ஆடாமல் விட்டால் அவள் சரயூ ஆகிவிடமாட்டாளே…

சுருள் சுருள் முடிகள் நெற்றியில் விழுந்து, அவள் அங்கும் இங்கும் திரும்புகையில் அழகாய் அசையும் போது அவளைப் பார்ப்போரும் அந்த அசைவில் தொலைந்து தான் போவார்கள் சில கணம் என்றாலும்…

ஆறடி உயரமும் கிடையாது… ஐந்தடி உயரமும் கிடையாது… ஐந்தடிக்குள் பொம்மையாய் உலா வருபவளை அவள் வீட்டில் ரசிக்காதவர்களே கிடையாது…

குட்டையாக இருக்கிறாள் என்ற கிண்டல் காதில் கேட்டபோதிலும், அதை நினைத்து அவள் வருந்தியதில்லை…

அவள் ஒருவேளை அனுஷ்கா மாதிரி உயரமாக இருந்திருந்தால் கூட இவ்வளவு அழகாக இருந்திருப்பாளா என்று சொல்ல முடியாது…

அவளுக்கு அழகே அவளது உயரமும், முடியும், அவளது பேச்சும், அவளது நடவடிக்கையும், எல்லாவற்றிற்கும் மேல் அவள் அவளாக இருப்பது தான் அவளுக்கு கொள்ளை அழகு….

கலகலவென்று பேசுவது மட்டுமல்ல, அவளது சிரிப்பும் எப்போதும் அமைதியாக இருந்ததே கிடையாது...

இது அனைத்திற்கும் மேலானது அவளது பாட்டு…. நின்றால் பாட்டு, நடந்தால் பாட்டு, பேசினால் பாட்டு, விளையாடினால் பாட்டு, படித்தால் பாட்டு, ஏன் படிக்கும்போதும் உறங்கும்போதும் கூட பாட்டு தான்…

மொத்தத்தில் அவள் ஒரு பாட்டு பைத்தியம் என்று தான் வீட்டிலும் அழைப்பார்கள்..

அதிலும், வித்யாவும், காயத்ரியும், சேர்ந்து அவளுக்கு வைத்த பெயர் தான் “நம்ம வீட்டுக்குயில் சித்ரா…”…

அர்னவ் அவள் பாடுவதை கிண்டல் செய்தாலும், ரத்தம் வந்தாலும் விடவா போறீங்க… பாடித்தொலைங்க… கேட்டு தொலைக்கிறேன்… எல்லாம் என் விதி… என்று நொந்து கொண்டே அவளது பாட்டை கேட்டாலும் உள்ளுக்குள் ரசிக்காமல் இருந்ததில்லை…

மேடை ஏறி பாட வேண்டும் என்று கூட அவளுக்குள் ஆசை இருந்தது உண்மைதான்… ஆனால் அதற்கான தருணம் தான் அவளுக்கு வாய்க்கவே இல்லை…

மாறாக அவளுக்கு வாய்த்தது இந்த கல்யாண வாழ்க்கை தான்… இதில் அவளின் அத்தனை சந்தோஷங்களையும் இழந்துவிட்டாள் என்று சொல்வதை விட, இழக்க வைத்துவிட்டான் அவளது அருமைக் கணவன் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்…

ஆரம்ப காலத்தில் அவளை பாட சொல்லி ரசித்தவன், அதன் பின் அவள் பாடவே அனுமதித்ததில்லை…

பாடவேண்டுமென்ற ஏக்கம் பிறந்தாலும் அவன் இல்லாத சமயத்தில் சமையலறையில் வேலை செய்து கொண்டே பாடிக்கொள்வாள்…

கல்யாணம் ஆன புதிதில் அவள் அங்கும் இங்கும் அசையும் நடன அசைவில், அவளது இடைவிடாத பேச்சில், அவளின் சிரிப்பில் என தன்னை அவன் இழந்ததென்னவோ உண்மைதான்… ஆனால் அதெல்லாம் கொஞ்ச காலகட்டம் தான்…

அதன் பின் அவள் தனது அத்தனை சந்தோஷங்களையும் மறந்தவளாகி போனாள்… சின்ன சிரிப்பை கூட அவள் மறந்து தான் போனாள்… அதை விட அவன் மறக்க வைத்திருந்தான் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.