வீட்டிற்குள் புயலென வந்து சோபாவில் தொப்பென்று அமர்ந்த மகனை வியப்போடு பார்த்தார் சோமநாதன்…
“என்னப்பா?... என்னாச்சு?...” என அவனருகில் வந்தவரை தடுத்தவன்,
தனது தலையைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ள,
“ஜெய்… என்னாச்சுப்பா… தலைவலிக்குதா?... இரு இரு அப்பா காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்…” என்றவர் வேகமாக சமையலறைக்குள் சென்றதும், அங்கிருந்து எழுந்து தனதறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டான் ஜெய்…
டீவியை ஆன் செய்து சத்தத்தைக் கூட்டிவிட்டு, ரிமோட்டை தூக்கி கட்டிலில் எறிந்தான் அவன் ஆத்திரத்தில்…
பின் தனது அலமாரியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த அந்த பொக்கிஷத்தை கையில் எடுத்தான்…
பார்வை அந்த பொக்கிஷத்திலேயே இருக்க, கண்களில் வலியும், ஏக்கமும், ஆதங்கமும் ஒருசேர வர, அவன் தவித்து போனான்…
அதை வலியோடு பார்த்தவன், பட்டென்று தரையில் முட்டியிட்டு விழுந்தான்…
மனதினுள் அடைத்து வைத்திருந்த அவனது காதல் உள்ளிருந்து உந்த, கைகள் தானாக இருபக்கமும் விரிய, விழிகள் தன்னையும் அறியாமல் மேலே பார்க்க, உதடுகள் அப்பவோ இப்பவோ என போராட, கடைசியில் அவனையும் மீறி வெடித்தது அவனது காதல்…
ஜெய்யின் வீட்டுக்கு வந்தவள் எப்படி உள்ளே செல்ல என யோசித்துக்கொண்டிருந்த போது,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...
படிக்க தவறாதீர்கள்...
“சதிம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……………………………………………………….” என அவன் கத்த,
இங்கே அவளது இதயத்தில் ஓர் அதிர்வு… உடல் முழுவதும் சிலிர்த்து போனது அவளுக்கு… கண்கள் தானாக கலங்க, நெஞ்சில் அழுத்தி கை வைத்திக்கொண்டவளுக்கு வார்த்தைகள் ஏனோ வரவில்லை… உதடு கடித்து அழுகையை அடக்க ஆரம்பித்தவளை அதிர்ச்சியோடு தைஜூ பார்க்கையில், அவள் அங்கிருந்து உள்ளே ஓடினாள் வேகமாக…
“சதி… நில்லு….” என்ற தைஜூவின் குரல் சதியின் காதில் விழுந்ததாக தெரியவே இல்லை…
ஜெய்யின் அறையில் இருந்த டீவியின் சத்தம் அவனது குரலை அறைக்கு வெளியே வராமல் தடுக்க, சதி எப்படி அவனது அறை நோக்கி சென்றாள் என்று அவளுக்கே தெரியாது போக, அவனது அறைக்கதவை தட்ட முயல,
சட்டென்று கண் திறந்து கதவை நோக்கி ஒரு பார்வையை செலுத்தினான் ஜெய்…
சதியின் கை கதவை தட்டப்போகும் முன்னமே அவளின் கைப்பிடித்து தட்டவிடாமல் தடுத்து அவளை ஹாலுக்கு இழுத்து வந்தாள் தைஜூ…
மீறி போக முற்பட்டவளின் தோள்களைப் பிடித்து உலுக்கிய தைஜூ அவளின் மோன நிலையை அறுக்க முற்பட, சதி தெளிந்தபாடில்லை…
அக்கம் பக்கம் பார்த்தவள், அருகில் டீப்பாயின் மேல் இருந்த கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து சதியின் முகத்தில் அடித்து தெளிக்க, சதி அப்படியே ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்தாள்…
அந்த நேரம் சரியாக கையில் காஃபியுடன் வந்த சோமநாதன், தைஜூ, சதி இருவரையும் பார்த்துவிட்டு வாங்க என்ற புன்சிரிப்போடு ஹாலுக்கு வர,
சோபாவில் சாய்ந்து கண் மூடியிருந்த சதியினைப் பார்த்ததும், கையில் வைத்திருந்த காஃபியை டீப்பாயில் வேகமாய் வைத்துவிட்டு,
“தைஜூ, என்னாச்சும்மா சதிக்கு?... ஏன் ஒருமாதிரி இருக்குறா?...” என அவளின் அருகில் அமர்ந்து அவளின் நெற்றியில் கைவைத்து பார்த்தார்…
“அது வந்து அங்கிள்…” என ஆரம்பித்தவள், இறுக விழி மூடி இருந்த சதியின் முகத்தினைப் பார்த்துவிட்டு,
“இல்ல அங்கிள், வழக்கம்போல படிச்சிட்டு வீட்டுக்குப் போயிட்டிருந்தோம்…. திடீர்னு சதி ஒரு மாதிரி வருதுன்னு என் தோள் மேல சாஞ்சிகிட்டா வண்டியில போயிட்டிருக்கும்போது… வீட்டுக்கும் இன்னும் கொஞ்ச தூரம் போகணும்… பக்கத்துல ஹாஸ்பிட்டல் போகலாமுன்னு பார்த்தா இவளை இப்படியே வண்டியிலேயே கூட்டிட்டு போறது சரியில்லைன்னு தோணுச்சு… அதான் என்ன பண்ணன்னு யோசிச்சப்ப, உங்க வீட்டுக்குப் பக்கத்துல வந்ததே அப்பதான் நினைவுக்கு வந்துச்சு… அதான் உடனே இங்க கூட்டிட்டு வந்தேன்…” என முழு நீளமாக எங்கும் திக்காமல் திணறாமல் சொல்லி முடித்தாள் தைஜூ…
“நல்ல காரியம் செஞ்சம்மா நீ… இரு நான் உடனே போய் ஜெய்யை வர சொல்லுறேன்… நீ சதியை பார்த்துக்கம்மா…” என எழப்போனவரை தடுத்தவள்,
“இல்ல அங்கிள்… நீங்க இருங்க… அண்ணன் எங்க இருக்குறார்ன்னு சொல்லுங்க… நான் போய் கூட்டிட்டு வரேன்…” என சொல்ல,
“அதோ அந்த ரூம் தான்ம்மா…” என அவர் கைகாட்டிய திசையில் பார்த்தவளுக்கு, சதி சற்று நேரத்திற்கு முன் வந்த அறை இதுதான் என்ற நினைவும் அவளுக்கு அப்போது வராமல் இல்லை… இருந்தாலும் சோமநாதனிடத்தில் அவள் அதை காட்டிக்கொள்ள இயலாதே…
“தட்… தட்…” என்ற கதவு தட்டும் ஓசை அவனது காதில் டீவி சத்தத்தையும் மீறி விழ, அது தந்தையாக இருக்கும் என்று தோணவில்லை அவனுக்கு…
விரைந்து சென்று கதவை திறந்தவன், அங்கு தைஜூவினைப் பார்த்ததும், சற்றே புருவத்தை உயர்த்திவிட்டு,
“வா தைஜூ…” என்றான் கஷ்டப்பட்டு லேசாக வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு…