(Reading time: 11 - 21 minutes)

07. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

ந்தவிதமான முன்னறிவிப்புமின்றி விடுமுறை நாளன்று,பாண்டியனின் வீட்டுக்கு யஸ்வந்தின் குடும்பம் வந்துவிட்டார்கள்.

பூக்களை கட்டிக்கொண்டிருந்த அவந்திகா,கார் சத்தம் கேட்கவும் வெளியே வந்து பார்த்தாள்.

யஸ்வந்தின் குடும்பம் வந்திருக்க,அவர்கள் கையில் தாம்புலத்தட்டு வேறு இருந்தது.

எதற்காக வந்திருப்பார்கள் என்று ஓரளவு யூகிக்க முடிந்தாலும்,”இதென்னடா வம்பு”என்று தான் தோன்றியது.நிச்சயம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ முடியவில்லை.

அவர்களை பார்த்து சம்பிரதாயத்திற்காக,பற்களைக் கூட வெளியே காட்ட முடியாமல் உதடுகளை விரித்து,கஷ்டப்பட்டு சிரித்துவிட்டு,’வாங்க’என்ற வரவேற்பை தலையசைப்புடன் கொடுத்துவிட்டு,அறைக்குள் போய்விட்டாள்.

பாண்டியன் அவர்களை மருத்துவமனையில் முன்பே பார்த்திருந்தாலும்,இப்போது எதற்கு வந்திருக்கிறார்கள் என்று பார்க்கவும்,குமார் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்.

சாரதி அய்யரும் அங்கே வந்துவிட,”வாங்க சார்”என்று அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்று அமர வைத்தார்.

குமார் சுற்றி வளைக்காமல்,”உங்ககிட்ட சம்மந்தம் பேச வந்திருக்கோம்.இது எங்க பையனோட ஜாதகம்”என்று பாண்டியனிடம் கொடுத்தார்.

“என் பொண்ணுக்கு இன்னும் கல்யாண வயசு வரலீங்களே..ஒரு 5 வருஷம் கழிச்சு தான்,கல்யாண பேச்சு எடுக்கறதா இருக்கேன்”என்றார்.

தாமரையின் மனது,’அதுக்குள்ள எம் மகனுக்கு தலையே நரைச்சுப் போயிடுமே’என்று வருத்தப்பட,”நானும் அத தான் யோசிக்கறேன்”என்று குமார் மனைவியிடம் ரகசியம் பேச,அவர்களது மகன் அவர்களை முறைத்தான்.

“என்ன டேமேஜ் பண்றத விட்டுட்டு,அவங்ககிட்டு பேசுங்க”என்று கூறி..மூவரும் ஒரே மாதிரி நினைத்து,அடுத்தவரின் மனதில் உள்ளதை புரிந்துகொண்டு,’நாங்கள் நல்லதொரு குடும்பம்..பல்கலைக்கழகம்’என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக்கும் என்று நிரூபிக்க..தாமரை வேறு வழியில்லாமல் தானே பேச ஆரம்பித்தார்.

“பொண்ணுக்கு 23 வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிடறது நல்லதுன்னு டாக்டரே சொல்றாங்கண்ணா”என்று ஆரம்பிக்க..

“இன்னும் 22 கூட ஆகலையே”என்று பிடிகொடுக்காமல் பேசினார்.

மகனின் கையை அழுத்தி தன்னுடைய அலுப்பை குரலில் வராமல் சமாளித்தவர்,”எங்க பையனும்,உங்க பொண்ணும் விரும்பறாங்க..எங்களுக்கு எங்க பையன் சந்தோஷம் தான் முக்கியம்.அதான் பேச வந்துட்டோம்..கொஞ்ச நாள் காத்திருக்க தயார் தான்.ஆனால் என் பையனுக்கு இப்போ விட்டால்,இன்னும் பத்து வருஷம் கழிச்சு தான் கல்யாண யோகம் இருக்குன்னு ஜோசியர் சொல்லிட்டார்”என்றதும் யஸ்வந்திற்கு புரை ஏறிவிட்டது.

‘நாற்பது வயசுலையா கல்யாண யோகம்...அதுக்கு நான் நேரடியா அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கறேனே’என்ற பாவனையில் அவன் அமர்ந்திருக்க..பாண்டியனுக்கு அவர்களது சிறுசிறு செய்கைகள்,சமிக்கைகள் எல்லாம் சிரிப்பை வரவழைத்தன.

இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டவர்,”என் மருமகன் ஒரு ஆர்மிமேனா இருக்கணும் என்பது தான் என்னோட முதல் கண்டிஷனே”என்று அவர் கண்டிஷன் போட ஆரம்பிக்க..

யஸ்வந்த் வழக்கம் போல முந்திக்கொண்டு,”உங்க பொண்ணு அந்த கண்டிஷனை கடைபிடிக்கலையே”என்று அவரிடமே,அவரது மகளைப் பற்றி புகார் வாசிக்க,உள்ளிருந்து அவந்திகாவோ பல்லைக் கடித்தாள்.

‘நேற்று என்னவோ..யார் முக்கியம் என்று கேள்வி கேட்டு,ஒரு வார்த்தை சொல்லாமல் போனை வைத்துவிட்டு,,இன்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்ததும்மில்லாமல்,போட்டு வேறக் கொடுக்குறானே..பாவிப்பய..எனக்குன்னு காதலிக்க கிடைச்சிருக்கான் பார்..’என்று தன்னையும் சேர்த்து திட்டிக்கொண்டு,தன்னுடைய விரல்களில் பொம்மை..(நெயில் ஆர்ட்)வரைந்து கொண்டிருந்தாள்

பாண்டியன் பதில் சொல்லாமல் இருக்கவும்,எழுந்த சாரதி..”காபி போட்டுக் கொண்டு வர்றேன்”என்று கிளம்பவும்..

“அவந்திகாவை போட்டுட்டு வர சொல்லலாமே”என்றார் தாமரை..

“பொண்ணு பார்க்கறேன்னு வர்றவங்களுக்கு,எங்க பொண்ணு காபி போட்டுக் கொடுக்காது..”என்று அவர் புதிதாய் விளக்கம் சொல்லிவிட்டு சென்றார்.

இதென்ன விசித்திரமாக இருக்கிறது என்று தாமரை அவந்திகா எங்கிருக்கிறாள் என்று ஆராய,பாண்டியன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி பேசினார்.

“நீங்க பொண்ணு பார்க்க வந்திருக்கீங்கன்னு என் பொண்ணுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு..அதனால தான் ரூம்க்குள்ள போயிட்டு இன்னும் வரலை..இந்த மாதிரி நேரத்தில என் பொண்ணை காட்சிப் பொருளா நான் நிற்க வைக்க விரும்பமாட்டேன்.என்னோட மனசு புரிஞ்சு தான் குட்டிம்மா உள்ளே இருக்கு..”,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.