(Reading time: 6 - 12 minutes)

05. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

நினைவுகளில் இருந்து மீண்ட நித்திலா, தாத்தாவும் நேத்ராவும் அருகில் வந்த உடன் முகத்தை இயல்பாக்கி கொண்டு எப்போதும் போல நேத்ராவை வம்புக்கு இழுத்தாள்.

"ஹே ஷிவ் அவ தான் கெழவி இப்படி மார்னிங் ஜாக்கிங் வாக்கிங்ன்னு லொங்கு லொங்குன்னு போறா..உனக்கு என்ன இன்னும் பிட்டா தான இருக்க? அதும் அந்த முறுக்கு மீசை, பைசெப்ஸ் எல்லாம் செமயா வெச்சுகிட்டு இந்த கெழவி கூட போன எல்லாரும் உன்னை என்ன நினைப்பாங்க சொல்லு?"

"அது தானே, ஹே நேத்ரா நாளைல இருந்து உன்கூட நான் வர மாட்டேன் அப்புறம் ஏரியா பிகர்ஸ் எல்லாம் என்னை என்ன நினைப்பாங்க? நிலா கரெக்ட்டா தான் சொல்றா" என்று சிவநேசன் சொல்லவும் ஜிவுஜிவென சிவந்தது நேத்ராவின் முகம்.

நமட்டு சிரிப்புடன் இருவரும் 'ஹைபை' கொடுத்துக் கொண்டனர். இருவரையும் முறைத்து விட்டு காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள் நேத்ரா. நித்திலா சிரித்துக் கொண்டே காரை கிளப்ப, சிவநேசன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார்.

கார் வீட்டை அடையும் வரையில் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக வந்தவளை அவ்வப்போது திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டனர் இருவரும்.

கார் வீடு வாசலில் நுழையும் போதே நேத்ர கதவை திறக்க, சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள் நித்திலா. இது என்ன பழக்கம்? என்று கேட்க திரும்பும் முன்னர் 'படார்' என கார் கதவை சாத்திவிட்டு நேரே வீட்டின் பின் கட்டிற்கு சென்றாள் நேத்ரா.

காரை நிறுத்தி விட்டு இருவரும் வீட்டின் பின் புறம் செல்ல, அங்கே கோமதியின் தோளில் சாய்ந்தவாறு அவள் ஏதோ கூறி கொண்டிருக்க கோமதி சமாதானம் செய்வது தெரிந்தது. இது தெரிந்தது தான்.. அவள் பாட்டி செல்லம்.. அம்மாவிற்கு அடுத்தது எல்லாமே பாட்டி தான்..!!

ஆனால் நித்திலா அப்படி அல்ல.. தந்தை மற்றும் தாத்தாவின் செல்லம்..!!

தாத்தாவும் பேத்தியும் வருவதை கண்டதும் நேத்ராவை விளக்கி நிறுத்தி விட்டு கோபத்துடன் திட்ட ஆரம்பித்தார் கோமதி,

"வாங்க ஐயாவுக்கு என்ன வாலிபம் திரும்புதோ? என் பொம்மு குட்டி கெழவின்னா நீர் யாரு? என்ன உம்ம குசும்பு தனத்தை இந்த அருந்த வாலு கூட சேர்ந்துக்கிட்டு காட்டுறீங்களாகும்?"

"ஏய் என்னவ? சும்மா ஏதோ நம்ம சின்ன குட்டிக்கிட்ட வம்பிழுத்தேன் அம்புட்டு தான், வேற ஒன்னும் இல்ல கோமதி"

"ஹ்ம்ம்கும், ஏதோ பிகருன்னு சொன்னீங்களாம்? யாரு இந்த வாலு சொல்லி கொடுத்துச்சா?" என நித்திலாவின் காதை அவர் வலிக்காமல் திருக,

"ஐயோ கோம்ஸ் நான் சொல்லலை அதை ஷிவ் தான் சொன்னாரு" என்று அவள் போட்டு கொடுத்துவிட்டு கண்ணடிக்க, கண்களாலேயே

'என்னம்மா இப்படி பண்ணிட்டியே மா" என்று சொன்னவர்,

"நானா... நான்.. இல்லையே.. நான் அப்படி சொல்லுவேனா டீ?" என கோமதியின் அருகில் அவர் வர,

"இங்க பாரும் அங்கேயே நில்லும், சுகர் வர்ற வயசுல பிகரு கேட்குதாக்கும்.. இன்னைக்கு காபி ரெண்டு பேருக்கும் 'கட்'" என்று தன் தீர்ப்பை சொல்லிவிட்டு,

"வா சின்னக்குட்டி போலாம்.. உனக்கு பர்ஸ்ட் கிளாஸ் பில்டர் காபி தாரேன்" என்று அவளை கொஞ்சிக் கொண்டு சென்றார். பின்னல் திரும்பி இருவரையும் பார்த்தவள்.

"வெவெவேவ" என்று பழித்து விட்டு  போக, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கண்ணடித்து விட்டு அடுத்த குறும்பு தனத்தை செய்ய ஆயுதமானனர்.

பின் பகுதியில் இருந்து முன்பக்கம் இருந்த காலி இடத்தில போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் வந்து அமர்ந்தவர்கள், வேலை செய்யும் பொன்னம்மாவை அழைத்தனர்.

"பொன்ஸ் இங்க வாயேன்" என்று நித்திலா அழைக்க, வாயெல்லாம் பல்லாக வந்தாள் பொன்னம்மா. தன் சின்னம்மாவின் மூத்த வாரிசு ஆயிற்றே!!

"கோம்ஸ் காபி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க, உனக்கே தெரியும்ல எனக்கும் தாத்தாக்கு காபி இல்லாம வேலை ஓடுமா?! காலைல வேற குளிருல போய் ஆத்தங்கரைல வரைஞ்சுட்டு வந்தேன்"

"அதன் காலைல பெரியம்மா பிளாஸ்க்குல போட்டு கொடுத்து விட்டாங்களே நிலா கண்ணு" என்று அவள் யோசிக்க,

'இப்போ தான் இவளுக்கு இருக்க அறிவு வேலை செய்யணுமா, ரெண்டாவது டோஸ் காப்பிக்கு இவ்வளவு அக்கப்போறா?' என்ற ரீதியில் சிவநேசனின் சிந்தனை போக அதை கிரகித்த நித்திலா, பொறுமை என கண்களை மூடி திறந்தாள்.

"என்ன தான் ஆச்சி காபி போட்டாலும் உன் கையாள குடிக்கிற ரெண்டாவுது காபி இருக்கு பாரு செம்ம டேஸ்ட், தனி ருசி தான்.. சென்னைல கூட என் ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லிருக்கேன் தெரியுமா? உன் காபியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்" என்று ஒரு 'பிட்டை' போட,

"என் கண்ணு கேட்டு நான் போட்டு தர மாட்டேனா, புள்ள என் காப்பிக்கு ஏங்கி போயிருக்கு" என்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காபியை இருவருக்கும் தந்திருந்தாள்.

உள்ளே இருந்து காபி கப்புடன் சிரித்துக் கொண்டே வந்த நேத்ரா இவர்கள் கைகளிலும் காபி இருப்பதை பார்த்து முதலில் முறைத்தவள், பின் நித்திலா கை நீட்டி சைகையில் அழைக்கவும் சிரித்துக் கொண்டே ஓடி சென்று சிவநேசனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.