(Reading time: 9 - 18 minutes)

அமேலியா - 06 - சிவாஜிதாசன்

Ameliya

வாழ்க்கை வானில் விதி என்னும் காற்றில் பறக்கும் காய்ந்த இலைகளைப் போல அமேலியாவின் வாழ்வு அமைந்துவிட்டது. சில நேரங்களில் அவள் நினைப்பதுண்டு, மனித வாழ்வே கற்பனைகளும் கனவுகளும் நிறைந்தது தானா. நாம் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லையென்றால், அது கிடைத்தது போல் கற்பனையில் வாழ்க்கை நடத்துகிறோம். அங்கு ஒரு புது உலகம் பிறக்கிறதே, அந்த உலகத்தின் பெயர் என்ன? சிலர் அதை பைத்தியக்கார எண்ணங்கள் என்று சாதாரணமாக கூறிவிட்டு செல்வதுண்டு. அப்படியென்றால் நிஜம் என்று கூறும் இந்த வாழ்க்கை பைத்தியக்கார எண்ணம் என்று சொல்லிவிடலாமா?

சிறுவயதில் தான் மட்டும் தனியாக இந்த உலகத்தை சுற்றிவர வேண்டும் என்பது அமேலியாவின் ஆசை. அவள் ஒரு கதையைக் கேட்டிருக்கிறாள். உறவுக்கார பெரியவர் தன் தந்தையிடம் செய்தித்தாளில் தான் படித்த செய்தியை பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தச் செய்தி அமேலியாவின் காதுகளிலும் விழுந்தது.

யாருடைய துணையும் இல்லாமல் தன்னந்தனியே ஒருவன் பாராசூட்டில் உலகை சுற்றி வருகிறானாம்  இதுவரை பாதி உலகை சுற்றிவிட்டானாம் என்று கூறிக் கொண்டிருந்தார் பெரியவர்.

அந்த பெரியவர் முகமது யூசுபிடம் பேசி முடித்ததும் தன் தந்தையிடம் சென்றாள் அமேலியா. பாராசூட் என்றால் என்னவென்று விசாரித்தாள்.

அது ஒரு பெரிய பலூன், அதுல பறந்து போலாம்.

எவ்வளவு உயரத்துல பறக்கலாம் என்று கேட்டாள் அமேலியா ஆச்சர்ய விழிகளோடு

நமக்கு எவ்வளவு உயரத்துல பறக்கணும்னு ஆசையோ அவ்வளவு உயரத்துக்கு அந்த பலூன் போகும் .

அந்த பறவைகளை விட உயர்வா பறக்கலாமா?

நிச்சயமா

அந்த பலூன் எவ்வளவு பெருசு இருக்கும்? .

நம்ம வீடு அளவுக்கு இருக்கும்.

அடேங்கப்பா! அவ்வளவு பெரிய பலூனா? அமேலியாவின் கற்பனைகள் நாலாபுறமும் சிறகடித்து பறந்தன. உடனே கடைத்தெருவுக்கு ஓடி பலூன் ஒன்றை வாங்கி வந்தாள். அதில் காற்றை நிரப்பி வானில் பறக்கவிட்டாள். அந்த பலூன் காற்றில் ஆடியபடி மேலே மேலே சென்றது. அந்த பலூனில் தானும் பறந்து மேலே இருந்து உலகத்தையே பார்ப்பது போல் அவளுக்கு குதூகலம்.

இன்னும் கண்களைத் திறக்காமல்  பீரங்கியினுள் படுத்துக் கொண்டிருந்தாள் அமேலியா. உறக்கம் என்று கூற முடியாது, பசி மயக்கத்தில் படுத்துக்கொண்டிருந்தாள். எத்தனை நாள் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூட அவளால் கூற முடியாத நிலையில் அவள் இருக்கிறாள். பல கோரமான கனவுகள் வேறு அவளை தொல்லைபடுத்தியது. இந்த உலகில் கடவுளுக்கு பிடிக்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அது நான் தான். கடவுளுக்கு தன்னை பிடித்திருந்தால் இந்த நிலையில் தன்னை அவதிப்படும்படி செய்வாரா என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

மெல்ல மெல்ல குளிர் கூடியது. வேகமாக சென்று கொண்டிருந்த கப்பலின் வேகம் மெல்ல குறையத் தொடங்கியது. மணி சரியாக விடியற்காலை  நான்கைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. கட்டுப்பாடு அறையில், கப்பலின் கேப்டன் துறைமுக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  பேசிக் கொண்டிருந்தார். ராணுவ வீரர்கள் சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். யுத்த களத்தையே பார்த்துப் பார்த்து சலித்திருந்த அவர்கள் தங்கள் சொந்தங்களை மறுபடியும் காணும் ஆவலில் களைத்திருந்த அவர்களின் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைந்தன.   

துறைமுகமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாலும் அங்கு நிலவிய குளிர் அவர்களை சோதனைக்குள்ளாக்கியது. குளிரைப் போக்க சிலர் புகைத்துக்கொன்டே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்த வானிலை செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இருபது வயது கடந்த பருவப்பெண் ஒருத்தி அமெரிக்காவின் குளிர் வானிலையை விளக்கிக் கொண்டிருந்தாள்

என்றும் இல்லாத அளவிற்கு இம்முறை அமெரிக்கா குளிரின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது .நயாகரா நீர் வீழ்ச்சியே உறையும் அளவு குளிரின் தாக்கம் மிகுதியாய் இருக்கின்றது .பள்ளிகளின் விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது, மக்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வானிலை ஆய்வு மையம் சொல்லுறத இந்த பொண்ணு என்னவோ கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச போல தலையை ஆட்டி ஆட்டி பேசுது என்று சலித்து கொண்டான் ஒருவன்.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தது. துறைமுக அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்ற விரைந்தனர். கப்பலில் உள்ள பொருட்களை இறக்குவதற்கு ராட்சத கிரேன்களும் பணியாட்களும் ஆயத்தமானார்கள்.

கப்பலில் உள்ள பொருட்களை ஏற்றி செல்ல பல லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திற்கும் பாதுகாப்பாக ராணுவத்தினர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.

இறந்துபோன ராணுவ வீரர்களின்  உறவினர்கள் கனத்த இதயத்துடன் கலக்கத்தோடு நின்றுகொண்டிருந்தனர், கணவனை இழந்த மனைவி, பிள்ளையை இழந்த பெற்றோர்கள், தந்தையை இழந்த பிள்ளைகள் இப்படி பல்வேறு சொந்தங்கள் அங்கே குழுமியிருந்தனர்.

உயிர்நீத்த ராணுவவீரர்களின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை ராணுவத்தினர் மரியாதையோடு சுமந்து வந்தனர். அதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், அந்த பெட்டிகள்  ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு  வண்டிகள் அவ்விடத்தை விட்டு கிளம்பின. உறவினர்களும் அவ்வண்டிகளைப் பின் தொடர்ந்தனர்.

.பயங்கரமான பனி மழை அந்நேரத்தில் பொழியத் தொடக்கி எல்லோரையும் உலுக்கியது. தூரத்தில் இருந்து பார்த்தால் அங்கு கடற்கரையோ துறைமுகமோ இருப்பது கூட தெரியவில்லை. அதுமட்டுமல்ல, எதிரில் இருப்பவர் யார் என்று தெரியாத அளவு பனித்திரை அந்த இடத்தை ஆக்கிரமித்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.