(Reading time: 6 - 12 minutes)

07. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

மித்ரனை அனுப்பி விட்டு மீண்டும் தன்னறைக்கு வந்த வைஷ்ணவின் கண்களில் பட்டது அந்த டைரி. ஹோட்டல் அறையை காலி செய்து விடலாமா?

வீட்டுக்கு சென்று விட்டால் என்ன? அம்மா மட்டும் தான் இருப்பார்.அப்பா எப்படியும் டில்லியில் இருந்து வர இரண்டு நாட்கள் ஆகும்.தொந்தரவு ஒன்றுமே இல்லை தான்..!!

இவ்வாறு யோசித்துக் கொண்டே சென்று அவன் அந்த டைரியை கையில் எடுத்தான்.தொந்தரவு செய்யப்படாத அமைதி இல்லை அவனுக்கு வேண்டியது!! தனிமை..!!

மனம் முடிவு செய்து விட்டது, ஹோட்டல் மேனேஜருக்கு போன் செய்து இன்று ஒரு நாள் இங்கே தங்குவதாக தெரிவித்தான்..!! அவன் அடிக்கடி சென்று தாங்கும் ஹோட்டல் ஆதலால் எந்த பிரச்னையும் இருக்கவில்லை.

'டூ நாட் டிஸ்டர்ப்' கார்டை கதவில் வெளிப்புறமாக மாட்டிவிட்டு, வந்து டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அன்று ஆற்றங்கரையில் நடந்த முதல் சந்திப்பை படிக்கையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏற்றார் போல  அவன் முகபாவங்கள் மாறிக் கொண்டிருந்தது.

மெல்லிய புன்னகை ஒன்று அவ்வப்போது அரும்பி மறைய தவறவில்லை.அவள் மீது கோபம் கொண்டதை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான். கூடவே வியப்பும்!! அவனுக்கு கோபமா??!!

இரண்டாம் சந்திப்பை அவள் எழுதுவதற்கு முன்பு, ஆற்றங்கரையில் தன் 'விசிட்டிங் கார்டை'  அவள் கையில் கொடுப்பது போன்ற ஒரு படத்தை வரைந்திருந்தாள்.

சிறியதாய் தான் வரைந்திருந்தாள்.. ஆனால் அவ்வளவு தெளிவாக துல்லியமாக இருந்தது!! அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவன் , சட்டென்று ஒன்று தோன்ற அவள் பெரிதாய் வரைந்து தனியாக அவனிடம் தந்திருந்த காகித சுருளை பிரித்தான்.  அவன் முந்தைய இரவு பார்த்து விட்டு வைக்கையில் வரிசை மாறி இருக்க வேண்டும்!! முதலில் கோவில் சன்னிதானம் போன்ற இடத்தில கண்மூடி அவள் இருக்க, அவளை ஒற்றை கண் திறந்து பார்த்தபடி அவன்..!!

அவனை இவ்வளவு தத்ரூபமாக அவளால் எப்படி வரைந்திருக்க இயலும்?! அவள் இந்த டைரியையும் வரைபடங்களையும் தந்த முதல் நாள் பார்த்ததிலிருந்து அவன் சந்தேகமும் அவன் வியக்கும் விஷயமும் இது தான்..!!

'உங்களுக்குள்ள ஏதோ பிணைப்பு  இருக்கு' மித்ரனின் வார்த்தைகள் மனதில் எதிரொலிக்க, ஒரு ஆறுதல் பரவுவதை தடுக்க முடியவில்லை அவனால். ஏதோ ஒரு தவிப்புடன் கலந்த அமைதி!!

வேகமாக மற்ற படங்களுக்கு நடுவில் முதல் சந்திப்புக்கான படத்தை தேடி எடுத்தான். வெகு நேரம் அதை கையில் வைத்து பார்த்து கொண்டிருந்தான். தன்னை மட்டும் அந்த படத்தில் பார்த்து வியந்தபடி இருந்தவன் அவளையும் பார்த்தான்.

ஒடித்தால் ஒடிந்து விடுவாளோ என்பது போல தேகம், 'சரியாக சாப்பிட மாட்டாள் போல' நினைத்துக் கொண்டான். 'கொடி இடையாள்' என்று சொல்வது போல இல்லாமல் அதைவிட  ஒல்லி,வெட்டிவிடப் பட்டிருந்த கூந்தல், காற்றில் எல்லாம் அலைபாயவில்லை!! தூக்கி இறுக்கி குதிரைவால் போல் போட்டிருந்தாள். முகத்தில் பிடிவாதமும் வியப்பும்!! முகத்தில் கண்கள் மட்டுமே பெரிதாய்..!!

பேரழகி என்று பாராட்டவும் முடியவில்லை.. அழகில்லை என்று ஒதுக்கவும் முடியவில்லை.. சாதாரண அழகுடன் சரமாரியாக அடிக்கும் தனி அழகு இவள்..!!! நினைத்துக்கொண்டான்.

அவள் அழகை ரசித்தது போதுமென மூளை அலாரம் அடிக்க, தலையை உலுக்கி மீண்டும் டைரியை எடுத்தான்.

ரண்டாம் சந்திப்பு..

அன்று அந்த விசிட்டிங் கார்டை அவன் கொடுத்து விட்டு போன பின் இரண்டொரு நாட்கள் அதை தன்னிடமே வைத்துக் கொண்டு யோசனையுடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள் நித்திலா. புதிதாக யாரோ வந்து எதையோ கொடுத்து விட்டு சென்றால் அதை வைத்துக் கொண்டு சுத்த வேண்டுமா என்ன? இல்லை அந்த கார்டில் இருக்கும் எண்ணிற்கு அழைத்து பேசலாமா?!

இவ்வாறு யோசித்து கொண்டே இருந்தவள் மதுரையில் இருந்து சென்னை வந்து அடுத்த  ஒருவார காலத்தில் அதை மறந்து போனாள். அந்த கார்டை தன் பேக்கில் போட்டவள் அதன் பின் வந்த வேளைகளில் அதன் நினைவே சற்று கூட இல்லாமல் தன் அன்றாட பணிகளில் மூழ்கி போனாள். அங்கே வைஷ்ணவும் இவளின் அழைப்பிற்காக சில நாட்கள் காத்திருந்து பார்த்துவிட்டு தன் அன்றாட பணிகளில் மறந்திருந்தான்!!

இரு மாதங்கள் கழித்து தன் அன்னையின் வற்புறுத்தலின் பேரில் மதுரை விஜயம் செய்தாள் நித்திலா. நெருங்கிய சொந்தத்தில் ஒருவரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் செல்ல வேண்டுமென கோமதி பாட்டி சொல்ல, சென்னையில் இருந்து தன் இருமகள்களுடன்  வந்துவிட்டிருந்தார் சாரதா.

ஒரு வாரம் பாட்டி வீட்டில் கொட்டமடிக்கும் குதூகலத்துடன் நேத்ரா வந்திறங்க, கொஞ்சமும் இஷ்டமில்லாமல் அந்த கல்யாணத்தை நினைத்துக் கொண்டு வந்தால் நித்திலா. அவள் அப்பா இருந்திருந்தால் கண்டிப்பாக வராமல் தப்பித்திருப்பாள் தான்!! அவர் தான் இந்த நேரம் பார்த்து வெளியூர் சென்று விட்டாரே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.