(Reading time: 8 - 15 minutes)

18. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

தி சொன்ன வார்த்தைகளில் அவளை திரும்பி பார்த்தவன், அவள் விழிகளில் தனது பார்வையை ஓட விட்டான் சிறிது நேரம்…

விழிகள்!!!!... சாதாரணமாக பார்த்தால் அவை வெறும் விழிகள் மட்டும் தான்… மனித உடலில் இருக்கும் ஒரு உறுப்பு…. ஆனால், அதில் தெரியும் உயிர்ப்பு, ஜீவன், துடிப்பு, தவிப்பு, எல்லாம் அவனுக்கு மட்டுமே தெரியும்…

தெரிந்தும் என்ன பயன்?... அவன் அவளின் விழிக்கடலில் நீந்த மறுத்தான்… அதில் மீனாய் வாழ மட்டும் மறுத்தான்…. கரையிலேயே நின்று துடித்துக்கொண்டிருந்தான்…

அவளை சேர வேண்டுமென்ற தவிப்பு அவனுள் கோடி மடங்கு உதிக்கும்போதெல்லாம், அவன் அமைதி காத்திடுவான்…

அவள் பேரலையாய் உயர்ந்து அவனை தன்னுள் எடுத்துக்கொள்ள முனைந்தபோதும், அவன் அவளின் அலைக்கரங்களில் சிக்காது லாவகமாய் தப்பித்தான்…

இன்றும் அவன் நழுவி நழுவி போக, அவள் மெதுவாக பேச்சுத்தூண்டில் போட, அவன் சிக்குவது போன்ற நிலையில் இருந்தான்…

அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவளுக்கு வெட்கம் பல மடங்கு பெருக, அதை முகத்தில் பட்டும் படாமல் படரவிட்டு, கன்னத்தில் தன் கை வைத்து, அவனை ரசிக்க ஆரம்பித்தாள்…

ரசித்துக்கொண்டே இருந்தவளுக்கு அவன் பார்வை திகட்டவே இல்லை… மேலும் மேலும் அவன் விழிகளுக்குள் அடங்கிக்கொள்ள துடித்தவள், அவனை சற்றே சீண்ட எண்ணம் கொண்டாள்…

“என்ன ஜெய் அப்படி பார்க்குறீங்க?...”

சட்டென வந்துவிட்ட அவளது கேள்வியில் தடுமாறிடாது, அவன் எந்த பதிலும் சொல்லாது அவன் அவள் விழிகளில் மட்டுமே கவனம் செலுத்தினான்…

“ஜெய்… உங்ககிட்ட தான் கேட்குறேன்….” என்றவள் அவனின் முன் தன் கையை ஆட்ட, அவன் பேசினான்….

“நானும் உங்கிட்ட ஒன்னு கேட்கணும்…”

“கேளுங்க…. பட் அதுக்கும் இப்படி பார்க்குறதுக்கும் என்ன சம்பந்தம்?...”

“நிறைய இருக்கு….” என்றவன் சற்று இடைவெளிவிட்டுவிட்டு,

“காலேஜுக்குள்ள இருக்குற உன்னை வந்து அவங்க சந்திக்க வாய்ப்பு இல்லாத பட்சத்துல, நீ பைரவ் கட்டுப்பாட்டுக்குள்ள எப்படி வந்த அன்னைக்கு?...”

அவன் இப்படி ஒரு கேள்வியை சட்டென கேட்பான் என எதிர்பாராதவள், திகைத்தாள்…

அவளது திகைப்பு அவள் விழிகளிலும் பிரதிபலிக்க, அவன் பார்வை கூர்மையாகியது…

“நான் உங்கிட்ட தான் கேட்குறேன்…. சொல்லு… ம்ம்…..” என அவன் எடுத்துக்கொடுக்க,

“அது……….. வ……ந்……து……..” என அவள் இழுத்தாள்…

“சொல்லு… அன்னைக்கு என்ன நடந்துச்சு?....”

அவன் அழுத்தம் கொடுத்து கேட்க, அவள் கைகளை பிசைந்தாள்… பார்வையை அவனிடமிருந்து விலக்கி தரையை வெறித்தாள்…

“கேட்டீயே… என்ன சம்பந்தம்னு… உண்மை சொல்லும்போது உன் பார்வை நேரா இருக்கும்… பொய் சொல்லும்போதோ, இல்லை மறைக்கும்போதோ உன் பார்வை இப்படி தரையில இருக்கும்….”

அவனது வார்த்தைகள் மெதுவாக ஒவ்வொன்றாக அவள் செவிகளில் விழுந்து முடிக்க, அவள் பட்டென நிமிர்ந்தாள்…

“அவங்க காலேஜுக்குள்ள வர வாய்ப்பே இல்லைன்னும்போது, நீயா தான் வந்திருக்கணும்…. ஆனாலும் நீயா வரலை… உன்னை வரவைச்சிருக்காங்க… அது எப்படின்னு தான் என் கேள்வி?...”

அவன் தெளிவாக கேட்க, அவள் அமைதியாக இருந்தாள் என்ன சொல்லவென்று தெரியாமல்…

“என் கெஸ் சரின்னா, என் பேரை சொல்லித்தான் உன்னை வெளிய வரவழைச்சிருக்கணும்… என்ன சொல்லி உன்னை வெளிய வர வைச்சான் அந்த பைரவ்?... நான் செத்துபோயிட்டேன்னா?....”

அவன் கேட்டு முடித்ததும், பதறியபடி அவனை பார்த்தவள்,

“அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்…..” என கெஞ்ச, அவள் உடல், அந்த நாளின் நினைவில் நடுங்க ஆரம்பித்தது….

அவள் நடுக்கத்தையும், பதட்டத்தையும் கண்டவனுக்கு மனம் துடிக்க, அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவள் முகத்தினை உற்று நோக்கியபடி,

“சொல்லு… நேரடியா அவனே பேசி உன்னை வர வச்சிருக்கமாட்டான்னும் எனக்கு தெரியும்… அப்போ இடையில இருக்குற ஆள் யார்?...”

அவன் பைரவைப் பற்றி சரியாக கணித்து சொல்லி, விடையை நெருங்கிவிட, அவள் அதற்குமேலும் தாமதிக்காது, விடையை அவனிடம் கொடுத்தாள்…

அன்று காலேஜில் இரண்டு பெண்கள் தன் காதுபட பேசிய விவரத்தையும், அதன் பின் அவனைத் தேடி அந்த இடத்திற்கு வந்து, இரத்தத்தைப் பார்த்து மயங்கியதையும் தெரியப்படுத்த, அவனின் நரம்புகள் புடைத்தது…

“யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிடுவியா?... அந்த பொண்ணுங்கதான் அப்படி பேசினாங்கன்னா நீ யோசிக்கமாட்டீயா?...”

காட்டமாக அவன் கேட்க, அவள் அவனை முறைத்தாள்…

“உயிரா இருக்குறவங்களுக்கு ஆபத்துன்னு சொன்னா, துடிக்காம, எங்க எப்போ எப்படின்னு ஆராய்ச்சி தான் செய்வாங்களா?...”

“ஆமா நாலையும் யோசிச்சிட்டு தான் கிளம்பணும்…”

“ஓஹோ… அப்படியா?... அன்னைக்கு என்னை காப்பாத்த வந்தப்போ கூட நின்னு நிதானமா நான் அவங்க பிடியில தான் இருக்குறனா இல்லையான்னு ஆராய்ச்சி எல்லாம் செஞ்சிட்டு தான் வந்தீங்க இல்ல???....”

இப்போது அவளின் கேள்வியில் அவளை முறைக்க நினைத்தவனுக்கு சிரிப்புதான் வந்தது… அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவன் அமைதியாக இருந்த நேரம், “சார்… யுவர் ஆர்டர்… ப்ளீஸ்…” என்ற குரல் வர, சதி மௌனமானாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.