“சதி… இந்த தோசையை அப்பாக்கு கொண்டு கொடு…”
சமையலறையிலிருந்து பிரசுதியின் குரல் கேட்க,
“இதோ வரேன்மா….” என்றபடி அவரின் அருகில் சென்றாள் சதி…
“இந்தா பிடி… டைனிங்க் டேபிள் மேல கொண்டு போய் வை… நான் வரேன்…”
“ம்ம்… அங்கதான் தோசைன்னா, இங்கயும் அதே தானா?...” என மெல்ல அவள் முணுமுணுக்க,
“என்னடி நீயா பேசிக்கிற?...”
பிரசுதி சந்தேகமாய் கேட்க
“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா… இதோ கொண்டு போறேன்னு சொன்னேன்…” என சிரித்த சதியை,
“யாரு… நீதான?......” என்றபடி பிரசுதி முறைக்க, அங்கிருந்து வேகமாக அகன்றாள் சதி…
“அப்பா… தாத்தா… மாமா… எல்லாரும் சாப்பிட வாங்க…” என குரல் கொடுத்துக்கொண்டே அவள் டைனிங்க் டேபிளுக்கு வர, அனைவரும் சில நிமிடத்தில் அங்கே வந்திருந்தனர் இஷானையும் ஜெய்யையும் தவிர்த்து…
“என்ன ஜெய்யையும் இஷானையும் காணோம்… தூங்குறாங்களா இரண்டு பேரும் இன்னும்?...”
கேள்வியோடு அவர்கள் இருவரையும் எதிர்பார்த்து காத்திருந்தாள் சதி…
நேரம் போனதே இருவரும் வந்தபாடில்லை…
“ஜெய் ராத்திரி பேசினாரே… நல்லா இருக்குறேன், பயப்படவேண்டாம்னு… அப்புறம் ஏன் இன்னும் வரலை இங்க?...”
நகத்தை கடிக்காத குறையாக அவள் அவனைத் தேடிக்கொண்டிருந்தாள்…
அப்போது இஷானும் ஜெய்யும் இல்லாததைக் கண்டு, சிதம்பரம் கேள்வி எழுப்ப,
“அவங்க இரண்டு பேரும் காலையிலயே கிளம்பி போயிட்டாங்க அண்ணா… மதியம் தான் வருவாங்க… நீங்க சாப்பிடுங்க…” என்றபடி சிதம்பரத்திற்கு பரிமாற ஆரம்பித்தார் பிரசுதி…
“சீக்கிரமா கிளம்பி போனதெல்லாம் சரிதான்… இரண்டு பேரும் சாப்பிட்டாங்களா?.. ஜெய்க்கு உடம்பு சரி ஆயிடுச்சா?...”
கவலையோடு கேட்ட சிதம்பரத்திடம்,
“ஜெய் ராத்திரியே சரி ஆகிட்டான்…” என பிரம்மரிஷி சொல்ல…
“ஆமா மாமா எங்கிட்ட சொன்னார்… நீங்க தூங்கிட்டிருந்தீங்க… அதான் எழுந்து வந்ததும் சொல்லிக்கலாம்னு நானும் இருந்துட்டேன்….” என்றார் சோமநாதனும்…
“காலையில அவன் எங்கிட்ட சொல்லிட்டு தான் வெளிய கிளம்பினான்…. பிரசுதியும், காதம்பரியும், அவங்களை சாப்பிட வச்சுத்தான் வெளிய அனுப்பினாங்க… அதனால நீங்க கவலைப்படாம சாப்பிடுங்க….” என பிரம்மரிஷியும் சதியைப் பார்த்துக்கொண்டே கூற, அவளின் முகத்தில் சற்றே தெளிவு வந்திருந்தது….
அனைவரும் சாப்பிட்டு முடித்து பேசிக்கொண்டிருந்த போது, தட்சேஷ்வரின் அருகே வந்தமர்ந்தாள் சதி…
“என்னடா… தூக்கம் வருதா?...”
மகளின் தலையை வருடியபடி வாஞ்சையுடன் தட்சேஷ்வர் கேட்க,
“ஆமா, அவ எந்திச்சு வந்ததே 9 மணிக்கு… மணி இன்னும் பத்தையும் தொடலை… அதுக்குள்ள அவளை மறுபடியும் தூங்க சொல்லுறீங்களா நீங்க?...”
கோபமாக பிரசுதி கணவரை முறைக்க,
“சின்னப்பொண்ணுடி… பயணக்களைப்பு இருக்காதா?... தூங்கட்டுமே கொஞ்ச நேரம்…”
அவர் மகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பேச, அவள் முகம் கனிந்தது…
“இன்னும் மூணு மாச குழந்தை பாருங்க உங்க மக… ஏழு கழுதை வயசாகுது… இன்னும் கொஞ்சிட்டு இருக்கீங்க….”
மனைவிக்கு பதில் சொல்லும் விதமாய் பேச முனைந்தவரை தடுத்தாள் சதி…
“அப்பா…….”
“என்னம்மா?.... சொல்லுடா….”
“வந்ததுல இருந்து எங்கேயுமே போகலைப்பா… இந்த இஷான் குரங்கு வேற இல்ல… அவன் இருந்தா அவனை அடிச்சிட்டே இருக்கலாம்… நேரம் போகும்… இப்போ அவனும் இல்லாம போர் அடிக்குதுப்பா…”
“ஏண்டி என் பையனை அடிக்குறது உனக்கு டைம் பாஸா?...”
ஆத்திரத்தோடு பிரசுதி சதியைப் பார்க்க,
“சுத்திப்பார்க்க போகலாம்மா… ஆனா பாரு வெளிய மழை பெய்யுது… மழை விட்டதும் போகலாம் சரியா?...”
“மழை விட்ட மாதிரியே தெரியலப்பா… எனக்கு போர் அடிக்குது….”
மகளின் முக வாட்டம் அவரை வருத்த,
“சரி கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாரும் விளையாடலாம்… உனக்கு நேரம் போயிடும்… அதுவரை டீவி பாரு… சரியா?...”
“நிஜமா விளையாட வருவீங்களாப்பா?...”
“நிஜமா வரேன்மா….” என்றதும்,
“தேங்க்ஸ்ப்பா…” என துள்ளிக்குதிக்காத குறையாக தைஜூவை இழுத்துக்கொண்டு சென்ற மகளை பார்த்துக்கொண்டே இருந்தார் தட்சேஷ்வர் புன்னகையுடன்…