“அவ தான் கேட்குறேன்னா, நீங்களும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுறீங்க?...”
பிரசுதி கேலியாக உரைக்க
“என் பொண்ணு ஆசப்பட்டதை நான் மறுக்க மாட்டேன்…”
அழுத்தத்துடன் தட்சேஷ்வர் குரல் ஒலிக்க, பிரம்மரிஷியின் பார்வை தீர்க்கமாக பதிந்தது தட்சேஷ்வரின் மேல்…
சில மணி நேரத்திற்குப் பிறகு,
“வாங்க தாத்தா… விளையாடலாம்….” என பிரம்மரிஷியின் கைகளைப் பிடித்தபடி ஹாலுக்கு வந்தாள் சதி…
“சரி நீங்க விளையாடுங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…..” என நகரப்போன சோமநாதனின் முன் வந்து தடுத்தாள் சதி…
“இங்க வந்ததே வேலை எல்லாம் மறந்து இருக்கணும்னு தான்… இங்கயும் வந்து வேலை பார்க்கணும்னு சொன்னா எப்படி?... ப்ளீஸ் மாமா… வாங்க விளையாடலாம்…”
சதி கெஞ்ச, அவரும் சரி என்றார் சிரிப்புடன்…
முதலில் பிரசுதியின் கண்களில் துணியை கட்ட அவரின் கைகளுக்கு அகப்படாதவாறு அனைவரும் தள்ளி நின்று கொண்டு பிரசுதியிடம் விளையாடினர்…
அடுத்தடுத்து ஒவ்வொருவராக அகப்பட்டுக்கொள்ள, சதியின் முறை வந்தது…
“என்னப்பா… என்னை பிடிச்சிட்டீங்களே… அம்மாவ பிடிச்சிருந்தா இன்னொரு தடவை அம்மாவ தேட விட்டு விளையாடிருக்கலாம்… இப்போ நான் மாட்டிக்கிட்டேன்… போங்கப்பா…”
சிணுங்கியபடி சிறுபிள்ளையாய் அவள் சொல்ல,
“அதுக்கென்னம்மா?... இப்போ நீ உங்க அம்மாவ பிடிச்சிடு… அவ கண்ணை மறுபடியும் கட்டிடலாம்… சரியா?...” என்றார் அவரும் புன்னகை மாறாமலே…
“டீல்….” என்றபடி அவளது இமைகள் மூடிக்கொள்ள, அதைச்சுற்றிலும் ஒரு துணி அதற்கு பாதுகாப்பாய் நீண்டு கட்டப்பட்டிருந்தது…
“சதி…. அப்பா… இங்க இருக்கேன்….”
தட்சேஷ்வர் மகளின் பின்னேயே வந்தபடி கூற, பிரசுதியோ தட்சேஷ்வரின் முகத்தில் இருந்த அந்த சந்தோஷத்தை இமைக்காமல் கண்டு களித்தார்…
“சதி… இங்க வா… அப்படித்தான்… வா… வா…” தைஜூ அவளுக்கு ஓட்டம் காண்பித்தபடி விளையாடிக்கொண்டிருக்க,
“அதென்ன என் கைக்கு யாருமே மாட்ட மாட்டிக்குறீங்க?...” என மழலையாய் கால்களை தரையில் உதைத்துக்கொண்டிருந்தவளைப் பார்த்து அனைவரும் தங்களை மறந்து சிரித்துக்கொண்டிருந்தனர்….
அந்நேரம் தட்சேஷ்வருக்கு போன் வர, அவர் அதனை எடுத்துப்பார்த்துவிட்டு சோமநாதனையும் சிதம்பரத்தையும் அழைக்க, அவர்களும் தட்சேஷ்வரின் அருகில் வர, மூவரும் பேசிக்கொண்டே அங்கிருந்து அகன்றதும், பிரசுதியும், காதம்பரியும் விளையாட்டை தொடராமல் ஆண்கள் மூவரையும் தேடிச் சென்றனர்…
“சதி… நானும் தாத்தாவும் மட்டும் தான் இப்போ இருக்குறோம்… எல்லாரும் ஏதோ மீட்டிங்க் போட போயிட்டாங்க… அதனால அவங்க வர்றதுக்குள்ள எங்க இரண்டு பேர்ல யாரையாச்சும் ஒருத்தரை அவுட் பண்ணிடு… என்ன ஒகேயா?...”
தைஜூ அவளிடம் சொல்லிக்கொண்டே அங்கும் இங்கும் ஓட, பிரம்மரிஷியின் கண்கள் வாசலை பார்ததது…
“அந்த பைலை கொடு…” என வாங்கி பார்த்தபடியே வந்த ஜெய், பைலை திருப்பி இஷானிடம் கொடுத்துவிட்டு திரும்பியபோது, சதியின் கைகள் அவனது தோளை உரசியது…
சட்டென தன் மீது ஒரு கரம் விழ, யாராக இருக்கும் என்றெண்ணி பார்த்தவன் திகைத்தான்…
“ஹேய்… நான் பிடிச்சிட்டேன்…” என கத்தாமல் இருந்தவளின் அருகே வந்த தைஜூ,
“சதி நீ யாரை பிடிச்சிருக்கன்னு உனக்கு தெரியுமா?....” எனக் கேட்க,
சதியின் கைவிரல்கள் உரசிக்கொண்டிருந்த தோள் அவளுக்கு சட்டென உயிர் கொடுக்க, கண்களை மறைத்திருந்த துணியை அவசரமாக அவிழ்த்து எறிந்ததும்,
அதுவரை மூடியிருந்த இமைக்கதவுகள் திறந்துகொள்ள, அதில் தெரிந்த பிம்பத்தைக் கண்டு மெய்மறந்து போனாள் அவள்….
“ஜெய்……….” என அவள் இதயம் அழைக்க, இதழ்கள் அவனைப் பார்த்த மாத்திரத்தில் மலர்ந்தே போனது…
அருகாமையில் அவளது மந்தகாச புன்னகையைக் கண்டவனுக்கு இதயம் எகிறி குதிக்க, கண்கள் அவள் முகத்தை விட்டு அகலவில்லை சிறிதும்…
“அடிப்பாவி… யாருமே என் கைக்கு மாட்ட மாட்டிக்குறாங்கன்னு புலம்பினதெல்லாம் கடைசியில என் அண்ணனை பிடிக்கத்தானா?...”
சிரிப்புடன் தைஜூவின் குரல் காதோரமாய் கேட்க, பட்டென ஜெய்யின் தோளை உரசி நின்ற தனது கரத்தினை எடுத்துக்கொண்டாள் சதி…
அவள் கையை எடுத்துக்கொண்டதும், அதற்கு மேலும் அங்கே நிற்காது சட்டென தனதறைக்குச் சென்றுவிட்டான் ஜெய்…