(Reading time: 8 - 16 minutes)

29. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ண்முகத்தின் பரம்பரையில் முதல் குழந்தை ஆணாகத்தான் அதுவரையில் இருந்துவந்தது…

அந்த வம்சத்தில் முதல் குழந்தை ஆணாகத்தான் இருக்கும் என்பது பல தலைமுறைகளாக கண்ட உண்மை…

அதை மெய்ப்பிப்பது போல் சண்முகத்திற்கும், சுந்தரிக்கும் பிறந்தான் திலீப், ஆண் வாரிசாக…

ஆனால் அதற்கு விதிவிலக்காக, திலீப்பிற்கு பெண் குழந்தை பிறக்க, விசாலத்திற்கு அது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகி போனது, விதியின் விளையாட்டா?... அறிந்திருக்கவில்லை யாரும்…

மகளைப் பூப்போல தாங்கிக்கொண்ட திலீப்பிற்கு மனைவியைப் பார்த்த பிறகே நிம்மதியாக இருந்தது…

அவளின் நெற்றியில் இதழ்பதித்து, அவன் கலங்க, அவளோ சிரித்தாள்…

“ரொம்ப வலிக்குதா சரயூ?...”

அக்கறையாய் அவன் வினவ, அவளோ இல்லை என தலையசைத்தாள்…

குழந்தை பிறந்ததும், சரயூ குழந்தையை கவனிக்கும்படி நேர, விசாலமே முழுவதுமாய் சமையலறையை தன் பக்கம் வைத்துக்கொண்டாள்…

சரயூவை சமைக்க விட்டு, அவள் நல்ல பேரெடுக்க, அதைப் பார்த்து விசாலம் சும்மா இருந்திட முடியுமா?... இல்லை அதற்கு அவளின் விசாலமான மனது தான் இடம் கொடுத்திடுமா?...

திலீப் மனைவியையும், மகளையும் உள்ளங்கைகளில் வைத்து தாங்க, விசாலத்திற்கு மனம் குமுறியது…

தன் வீட்டில் அழுகை சத்தம் கேட்க, திலீப்பின் வீட்டில் சந்தோஷம் இருப்பதா?... அதை அவளின் நல்ல உள்ளம் ஜீரணித்திடுமா என்ன எளிதில்?...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தனது மகளின் முதல் வருட பிறந்த நாளை திலீப் அமர்க்களமாக கொண்டாட எண்ணி நெருங்கிய உறவினர்களையும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைக்க, அங்கே ஆரம்பித்தது விசாலத்தின் ஆட்டம்…

திலீப் சொந்தமாக வியாபாரம் தான் செய்து வந்தான்… தனது டிபார்ட்மெண்டல் ஸ்டோரை அவனே தான் கவனித்து வந்தான்… அவ்வப்போது அவனுக்கு உதவியாக சண்முகமும் கடைக்கு செல்வது வழக்கம்…

அந்த தொழிலில் அவன் நிறைய சம்பாதிப்பது பலரின் கண்களுக்கு உறுத்தலாகவே இருந்து வந்தது… எனினும் அதை வெளிப்படுத்திக்கொள்ளாத சில நல்ல உள்ளங்கள் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தனர்…

வந்த கடமையை செய்தால் தானே தூக்கம் வரும்?... அவர்களும் அந்த ரகம் தான் போலும்…

“என்னப்பா திலீப்?... உங்க பரம்பரையிலேயே முதல் குழந்தை எப்பவும் ஆண் வாரிசு தான்.. உன் தாத்தாக்கு தாத்தா, உன் தாத்தா, உன் அப்பா தொடங்கி, நீ வரைக்கும் அப்படித்தான்… இப்போ நீ என்னடான்னா அந்த வழக்கத்தை இப்படி தவிடு பொடி ஆக்கிட்டியே….”

வருத்தத்தோடு சொல்வது போல் நக்கலாக ஒருவர் கேட்க,

“பாவம் திலீப் என்னப்பா செய்வான்?... அவனுக்கு ஆண் வாரிசு பெத்துக்க தகுதி இல்லையோ என்னவோ?...”

நிறைந்த சபையில், பலரின் முன்னிலையில், நாக்கால் அடித்து இன்னொருவர் கேட்க, சட்டென்று ஒரு மாதிரி ஆகிப்போனது அவனுக்கு…

உடனேயே சமாளித்துக்கொண்டு, அவன் பதில் பேசும் முன்னரே,

“இதுவரை எங்க பரம்பரைக்கு முதல் குழந்தை மகாலஷ்மியா பிறக்க குடுத்து வைக்கலை… இப்போ என் பையனால அந்த குறை தீர்ந்து போயிருக்குன்னு நாங்களே சந்தோஷத்துல மிதந்திட்டிருக்கோம்….”

என பேசியவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் சண்முகம் பேச, பேசியவர்களின் முகத்தில் ஈயாடவில்லை…

இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டால் வந்தவர்களுக்கு சாப்பாடு தான் உள்ளே இறங்குமா?... இல்லை விசாலம் தான் பார்த்துக்கொண்டு பேசாமல் இருப்பாளா?...

“ஆயிரம் தான் இருந்தாலும் பெத்த பிள்ளையை விட்டுக்கொடுப்பீங்களா என்ன?... மகன் உடம்புல குறையே இருந்தாலும் அதை மறைக்கத்தான பார்ப்பாங்க பெத்தவங்க?... அதைத்தான் நீங்களும் செய்யுறீங்கன்னு எங்களுக்கென்ன தெரியாதா?...”

சண்முகம் அடுத்து பேசுவதற்கு முன் வெடுக்கென்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர்கள் நகர்ந்து சென்றுவிட, சண்முகத்தின் பார்வை மகனிடத்தில் வந்து நின்றது…

அவர் பேசுவதற்குள், “அப்பா, நேரமாச்சு… நான் போய் சரயூயும், பூஜாவும் ரெடி ஆகிட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன்…” என்றபடி மாடியை நோக்கிச் சென்றான் திலீப்…

“அவங்க சொல்லிட்டுப் போறதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க தம்பி… வயிற்றெரிச்சல் பிடிச்சவங்க, நீங்க நல்லா இருக்குறதைப் பார்த்து பொறுக்க மாட்டாம பேசிட்டு போறாங்க…”

மாடிக்கு வந்த திலீப்பிற்கு, ஆறுதல் சொல்வது போல் ஆரம்பித்த விசாலம்,

“ஹ்ம்ம்… பரம்பரை பரம்பரையா இருந்து வந்த வழக்கம் மட்டும் மாறாம இருந்திருந்தா இவனுங்க எல்லாம் இப்படி பேசுவாங்களா?... என்ன பண்ண?... நமக்கு அதுக்கு விதி இல்லையே… நம்ம தலையில ஆண்டவன் தான் இப்படி எழுதிட்டானே… ஹ்ம்ம்… எல்லாம் நேரம் தான்… சரி விடுங்க தம்பி…” என கவலையோடு சொல்வது போல் சொல்லிவிட்டு வந்தவர்களுக்கு காபி, டீயை எடுத்துக்கொண்டு விசாலம் நகர, திலீப்பின் மனதில் விழுந்தது முதல் காயம்…

ஆனால் அதுவே இன்னும் கொஞ்ச வருடத்தில் ஆறாத வடுவாய் மாறும் என அவன் தான் நினைத்தும் பார்த்திருப்பானா என்ன?...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.