(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 02 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

புல்லெட் அரை வட்டம் அடித்து நின்று தலையிலிருந்த ஹெல்மெட்டை கழட்டிய உடனேயே வந்திருப்பதை யாரென்று உணர்ந்த மக்கள் அமைதியாக இரு பிரிவாகப் பிரிந்து நின்றார்கள்.  அமைதியாக இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வதை நிறுத்தவில்லை.

“அடங்கிட்டீங்களா.... Good.... எதுக்கு இப்போத் தகராறு......”, என்று புல்லட்டில் இருந்த உருவம் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டபடி கேட்க ஆரம்பிக்க.....

“தங்கச்சிம்மா தகறாரெல்லாம் ஒண்ணும் இல்லைமா.... சும்மாதான் பேசிட்டு இருந்தோம்.....”

“எப்படி மாரி,  மூக்காலையே பேசினீங்களா...... மணி மூக்குல இருந்து ரத்தம் வருது...... உன் ஒரு கண்ணு வீங்கி இருக்கு...”

“அது வந்தும்மா பேசிட்டுதான் இருந்தோம்.... திடீர்ன்னு கை கலப்பு ஆகிடுச்சு.... எல்லாம் இந்த மணிப் பயலாலதான்ம்மா....”

“நீ என்ன பண்ணின மணி.....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“தங்கச்சி மாரி சொல்றதை நம்பாத..... சும்மா சும்மா எதுனாலும் கையைத் தூக்கிட்டு கிளம்பிடறான்.....”

“டேய் யாருடா தூக்கினா......”

“ஹலோ ரெண்டு பேரும் சண்டைய நிறுத்திட்டு என்ன நடந்ததுன்னு சொல்றீங்களா....”

“தங்கச்சி நீயே நியாயத்தை சொல்லு...... உனக்கேத் தெரியும்...... இந்த ஏரியால இருக்கற முக்காவாசிப் பேர் தினக்கூலிக்குப் போறவங்க..... அதுல வர்ற பணமே கொஞ்சம்தான்..... அதுலயும் இந்த ஆம்பளைங்க பாதி துட்டை டாஸ்மாக்ல தண்டம் அழுதுட்டு மிச்சம்தான் வீட்டுப் பொம்பளைங்க கைல கொடுப்பாங்க.... ஏதோ நீ அடிக்கடி வந்து அவங்களைப் பிடிச்சு கத்தி இப்போ தினம் அப்படிங்கறது வாரத்துக்கு மூணு நாள் ஆகி இருக்கு.... ஆனாலும் மொத்த வருமானம் எல்லாக் குடும்பத்துக்கும் கம்மிதான்......”

“இதெல்லாம் தெரிஞ்சதுதானே..... புதுசா அதனால என்ன சண்டை......”                                                                   

“உனக்குத்தான் தெரியுமே.... இங்க இருக்கறவங்க எல்லாருமே இவன் வேலை செய்யற  ரேஷன் கடைலதான் எல்லா சாமானும் வாங்கறாங்க..... அவங்க வருமானத்துக்கு வெளிக்கடைல எப்படி வாங்க முடியும்.... இதெல்லாம் இந்த சோமாறிக்கு நல்லாத் தெரியும்.... தெரிஞ்சும் ரேஷன் கடைல இருந்த சாமான்ல முக்காவாசியை எடுத்து வெளி ஆளுங்களுக்குக் கொடுத்துட்டான்.... இப்போ ஏரியா ஆளுங்க போய் கேட்டா இந்த மாசம் சாமான் இல்லை.... எல்லாம்  காலி ஆகிடுச்சுன்னு கதை விடறான்..... நீயே சொல்லு தங்கச்சி..... அரிசி, பருப்பு இல்லாம எப்படி இந்த மாசம் முழுக்க இங்க இருக்கறவங்க இருக்கறது.....”

“என்ன மணி இது.... நீயும் இந்த ஏரியா ஆளுதானே.... இவங்க கஷ்டம்தானே உனக்கும்..... அதிக பணம் வருதுன்னு நீயே இப்படிப் பண்ணலாமா.....”

“மாரி சொல்றான்னு நீயும் புரியாமையே பேசறியே தங்கச்சி.... நான் போய் அப்படி பண்ணுவேனா.... அதுவும் சுத்தி முத்தி எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தம்.... அப்படியே இல்லாட்டாலும் இத்தனை வருஷமா கூட இருந்தவங்க..... நான் போய் அவங்க வயத்துல அடிப்பேனா.....”

“அப்போ உன் கடைக்கு சாமான் வரவே இல்லைன்னு சொல்றியா மணி....”

“இல்ல தங்கச்சி.... சாமானெல்லாம் கரெக்டா கோடௌன்ல இருந்து வந்துச்சு..... மார்க்கெட்ல அந்த பெரிய துணிக்கடை வச்சிருக்காரே நாராயணன் அவங்க குடும்பத்துல யாருக்கோ கல்யாணமாம்.... அதனால சமையலுக்கு கம்மி வெலைல சாமான் வேணும்னு  அந்தாள் போய் ஏரியா கவுன்சிலர்கிட்ட பேசி இருக்காரு..... இந்தாள் ரேஷன் சாமானை கொஞ்சமா விலை ஏத்தி வச்சு அந்தாள் கிட்ட காச வாங்கிட்டு  சரக்கை அவருக்கு அனுப்ப சொல்லிட்டான்.... அதனால முக்கால்வாசி சமையல் பொருள் எல்லாம் கல்யாணம் நடக்கற இடத்துக்கு போய்டுச்சு.....  மீதி இருந்த வரைக்கும் இவங்களுக்கு கொடுத்தேன்....”

“ஏன் மணி.... அந்தாளுங்க அப்படி பண்ணினதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியதுதான.....”

“ஆமா நான் சொன்ன உடனே அவங்க அவன்  மேல நடவடிக்கை எடுத்துட்டுதான் வேற வேலை பார்ப்பாங்க.... சும்மா காமெடி பண்ணாத தங்கச்சி..... நம்ம ஊர் கவுன்சிலர் ஆளும் கட்சி ஆளு.... அவனை எதிர்த்து ஒரு புகாரும் கொடுக்க முடியாது.... மீறிப் பண்ணினா ஒண்ணு என்னைய வேலைய விட்டு தூக்குவான்.... இல்லைன்னா மொத்தமா தூக்கிடுவான்.....”

“உன் கஷ்டம் புரியுது மணி.... பாரு மாரி இந்த மாதிரி ஒரு சிட்டுவேஷன்ல நீ என்ன பண்ணி இருப்ப....”

“தங்கச்சி இவன் இதை முன்னமே சொல்லி இருந்தான்னா அந்த கவுன்சிலரை ஒரு வழி பண்ணி இருப்போம்...”

“நீ பாட்டுக்கு அந்த ஆள் வீட்டு முன்னாடிப் போய் நின்னு கத்துவேன்னுதான் உன்னாண்ட சொல்லல நான்.... இவன் என்ன பெரிய ஹீரோவா..... எப்போப் பார்த்தாலும் அடிதடின்னு கிளம்பிடறான்.....”

“உனக்கு என்னாத் தெரியும் மணி.... அடி உதவறா மாதிரி அண்ணன் தம்பிங்க கூட உதவ மாட்டாங்க தெரிஞ்சுக்கோ.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.