(Reading time: 22 - 43 minutes)

33. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ரயூ சொன்ன வார்த்தைகளை நம்பமுடியாமல், திகைப்புடன் நின்றிருந்தான் திலீப்…

தரையில் சரிந்து முகம் மூடி குலுங்கி குலுங்கி அழும் மனைவியை ஒருவித கவலையுடன் பார்த்தவன்,

“எ….ன்…ன…  சொ….ல்…..லு….ற?.... ச…ர…யூ….?.... என…க்குப்….. பு….ரி….யலை….”

வார்த்தைகள் வராது அவன் திக்கித்திணறி கேட்க,

முகம் மறைத்து அழுது கொண்டிருந்தவள், கலங்கிய விழிகளுடன் கணவனை ஏறிட்டு பார்த்தாள் கலக்கத்துடன்…

“உங்க தம்பி எங்கூட கொஞ்சம் சிரிச்சுப் பேசுறது கூட உங்களுக்குப் பிடிக்கலை… அவரை வெறுத்தீங்க… உண்மையா இல்லையா?...”

சரயூ சட்டென கேட்க, அவன் விழிகள் பெரிதானது…. சொற்களை தன் உதடுகளுக்குள்ளே மறைத்தும் கொண்டான்…

அவள் கேட்பதற்கு அவனால் இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்?... உண்மைதானே அவள் சொல்வது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“சரயூ… நான்….”

அவன் பேச்சை மாற்ற முனைய,

“நான் சொன்னது உண்மையா இல்லையா?... சொல்லுங்க…”

“உண்மைதான்…. ஆனா அவனை எனக்கு சின்ன வயசில இருந்தே பிடிக்காது… அதனால அவன் மேல ஒரு வெறுப்பு, என் அடிமனசுல இருந்துட்டே தான் இருந்தது…. உங்கிட்ட பேசுறான் அப்படிங்கிறதுக்காக மட்டும் இல்ல….”

அவன் அவசர அவசரமாக விளக்க முனைய, அவள் அவனையேப் பார்த்தாள்…

அவள் பார்வையின் வீச்சு தாங்காது அவன் தலை குனிந்து கொள்ள, அவள் அமைதியாக இருந்தாள்…

அவளின் அமைதி அவனுக்கு வலிக்க,

“நீ எங்கிட்ட மட்டுமே பேசணும்… நீ எனக்கு மட்டும் தான்ற எண்ணம் எனக்குள்ள முழுசா பரவி கிடக்கு…. அத என்னால அலட்சியம் செய்ய முடியலை… அதனாலயே அவங்கிட்ட நீ பேசுறதை நான் தடுத்தேன்… உன் மேல எனக்கிருக்கிற அலாதி அன்பினால வந்த விளைவு தான் இது…”

அவன் குற்ற உணர்ச்சியோடு சொல்ல,

“உங்க தம்பிகிட்ட பேசக்கூடாதுன்னு தடுத்தீங்க சரி…. என் கூடப்பிறந்தவங்கிட்ட நான் பேசுறதுக்கும் தடை போட்டீங்களே…. அது எதுக்காக?..” எனக் கேட்டாள் அவள் நிதானமாக….

சட்டென அதிர்ந்து போனவனாய் அவளைப் பார்த்தான் திலீப்…

“சொல்லுங்க திலீப்… என் தம்பிகிட்ட நான் பேசுறதும் ஏன் உங்களுக்குப் பிடிக்காம போச்சு?... அது கூட நீங்க என் மேல வச்சிருக்குற அலாதி அன்பினால தானா?... சொல்லுங்க…”

“…………….”

“அவன் பொறந்ததிலிருந்து நான் அவன் கூடவே இருந்திருக்குறேன்… நான் பெத்துக்கலைன்னாலும் அவன் எனக்கு ஒரு புள்ளை மாதிரி தான்…. எத்தனை வருஷ பந்தம் எங்களோடதுன்னு தெரியும் தான உங்களுக்கு?... தெரிஞ்சும் அவங்கிட்ட பேச தடை போட்டீங்க… அதையும் மீறி நான் பேசினப்போ எங்கிட்ட எறிஞ்சு விழுந்தீங்க… உள்ளுக்குள்ள வலிச்சாலும் நான் அதை விலக்கி வச்சிட்டு என் தம்பிகிட்ட பேசினேன்… அவனும் உங்களை புரிஞ்சிக்கிட்டதால தானாகவே விலகினான் எங்கிட்ட இருந்து… அது தெரியுமா உங்களுக்கு?...”

“…………….”

“கூடப்பிறந்த பொறப்பு மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது…. என்னைப் பொருத்தவரைக்கும் அவன் எனக்கு தம்பியா கிடைச்சது எந்த ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியமோ எனக்கு தெரியலை… இந்த பத்து வருஷமா தான உங்களை எனக்குத் தெரியும்?... அதுக்கும் முன்னாடியே அவனை எனக்கு தெரியும்… என் வாழ்க்கை உங்களோடதான்னு முடிவான பின்னாடி, பிறந்த வீட்டை விட்டு வந்தேன் இந்த வீட்டுக்கு உங்களுக்கு மனைவியா… ஆனா அதுக்காக, என்னைப் பெத்தவங்களையும், என் தம்பியையும் உதற சொல்றது எந்த விதத்துல நியாயம் திலீப்?....”

“…………….”

“ஒரு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு வரும்போது தான் பிறந்ததிலிருந்து வளர்ந்த வரை உள்ள எத்தனை விஷயங்களை, எத்தனை சொந்தங்களை இழக்குறான்னு உங்களுக்குப் புரியாது திலீப்…. ஒரு பொண்ணா இருந்து பார்த்தா தான் அந்த வலியும் வேதனையும் புரியும்….”

“……………….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.