(Reading time: 22 - 43 minutes)

ன்ன வகையான உறவு இது?... கணவன் செய்தது தவறு என்று தெரிந்தும், அவன் மனம் திருந்துவதற்காக, தன்னை வருத்திக்கொண்டு, உண்மையை சொல்லாமல் காத்திருக்கும் பெண்… இந்த சூழ்நிலையில், உண்மையும் வெளிவர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, அதனால் தவிக்கும் கணவனின் உள்ளத்தைக் காண சகிக்காத அவளின் மன்னிப்பு…

பேசாமல் இருந்து, சற்று விலகி இருந்து அவளின் இருப்பிடம் தன் மனதில் எது என்று புரிய வைத்தாளே, அவள் இந்த வீட்டில் இல்லாத நாட்களில்…

மன்னிப்பு கேட்டதும், அதை ஏற்று, உடனே கிளம்பி தன்னுடன் வந்து, தனக்கு தன் நடவடிக்கையை தெரிய வைத்தாளே….

மனம் திருந்திய கணவனை எண்ணி சந்தோஷம் கொண்டாலும், அவனது மன்னிப்பை முழு மனதோடு ஏற்கவும் முடியாமல், அதே நேரம், கணவன் துடித்து அழுவது பொறுக்காது, ஓடிவந்து என்னை பிள்ளைபோல் அள்ளிக்கொண்டாளே….

இதோ, இன்றும், உண்மையை சொல்லி வருந்தவைத்துவிட்டோம் என்ற உணர்வில் மன்னிப்பை என்னிடத்தில் யாசகமாய் கேட்டு நிற்கிறாளே…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

இது தான் மனைவியா?... மனைவி என்பவள் இப்படித்தான் இருப்பாளா?... அவள் ஆயிரம் துயர் கொண்டாலும், அதனை விதி என்று தாங்குபவள், கணவனின் ஓர் துயரினைக் காண முடியாது தவித்துப் போகும் விந்தையும், இந்த உறவில் தான் நிகழுமா?...

இப்படிப்பட்ட ஓர் உறவை தான் நான் இத்தனை நாள் கொத்தித்தின்றேனா?... ஊர் சொன்னது, உலகம் சொன்னது, அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று… என் மனதில் பிறர் நஞ்சை விதைத்ததற்கு நான் என்னவளின் சந்தோஷத்தையும், அவள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அறுவடை செய்தது எந்த விதத்தில் நியாயம்?...

தர்மமே இல்லாது அவளை தான் தண்டித்தேனே…. போதும்…. அவள் பட்ட துயர் அனைத்தும் போதும்… இனியாவது அவள் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கவேண்டும்… அதற்கு நான் அவளருகில் இருக்கக்கூடாது…

அவன் மனம் நொடிப்பொழுதில் முடிவு செய்திட,

அவளின் கைப்பிடித்து அவள் கும்பிடுவதை தடுத்தவன்,

“சத்தியமா உன்னைப்போல ஒரு மனைவி யாருக்கும் கிடைக்காது…. நான் கொடுத்து வைச்சவன் சரயூ… கொடுத்து வச்சவன்…. அதே நேரத்துல என்னைப்போல துரதிஷ்டசாலியும் யாரும் கிடையாது சரயூ… போதும்… நீ என்னால பட்ட கஷ்டமெல்லாம் போதும்… இனியாவது நீ எந்த துன்பமும் இல்லாம இருக்கணும்…”

அவன் வலியோடு துக்கமாய் சொல்லிவிட்டு எழுந்து கொள்ள, அவள் கைப்பிடித்து அவனைத் தடுத்தாள் அடி எடுத்து வைக்க முடியாமல்…

அவன் சட்டென அவளை திரும்பி பார்த்து, “நான் போறேன் சரயூ… தடுக்காத… அதான் எல்லாருக்கும் நல்லது….” என தயங்கி தயங்கி கூற,

“என்னை இன்னும் தவிக்க விடப்போறீங்களா திலீப்?....”

அவள் இதழ்கள் மெல்ல உரைத்துவிட்டு அவன் விழி பார்க்க, அவன் விழியிலிருந்து வந்த ஒரு துளி நீர் அவளது இதழ்களில் பட, அவள் இதழ்கள் துடித்தது..

துடித்த அவளது மலரிதழ்களை, அதற்கு மேலும் தவிக்க விடாமல், தனது அதரங்களால் அணைத்துக்கொண்டான் திலீப் அழுத்தமாக….

அவனின் முத்த அணைப்பில் அவள் கட்டுண்டு கிடக்க, அவனும் தான் செய்த தவறுகள் அனைத்திற்கும், மன்னிப்பு கேட்டுக்கொண்டான் காதல் என்னும் முத்தத்தினால்…

சில நிமிடத்திற்குப் பிறகு அவன் அவள் இதழ்களை விடுவிக்க, அவள் தன் முகத்தினை அவன் நெஞ்சில் வைத்து சாய்த்து தன் தளிர்க்கரங்களினால் அவன் முதுகை வளைத்து பிடித்து, அவனை இறுக அணைத்துக்கொள்ள, அமைதியின்றி அலைந்து கொண்டிருந்த அவன் மனதை நிம்மதியாக அமைதியடைந்தது அவளின் தாலாட்டு அணைப்பில்….

சில நாழிகைக்குப் பின், அவனிடமிருந்து விலகியவள், அவனைப் பார்க்க, அவனும் பார்த்தான்…

“கோவிலுக்குப் போயிட்டு வரலாமா சரயூ?...”

“ம்ம்… போகலாம்….”

“சரி நீ கிளம்பி ரெடியாயிரு… நான் வெளியே போயிட்டு வந்துடுறேன்…”

“எதும் வேலை இருக்கா?...”

“ஆங்…. இல்லை…. ஒருத்தர் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டி இருக்கு…. இன்னைக்கு வர சொன்னார் வந்து வாங்கிக்கோங்கன்னு… அதான்…”

“சரி… போயிட்டு வாங்க….”

“ம்ம்… சரி….” என எழுந்து கொண்டவன், பின் என்ன நினைத்தானோ, மெல்ல குனிந்து அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு, இதழ்களில் சிரிப்புடன் நகர, அவளும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள் சந்தோஷமாக….

சில மணி நேரத்திற்குப் பிறகு, தன் செல்போனுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்து புன்னகைத்தபடி போன் செய்தாள் சரயூ….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.