இதற்கு இடையில் அமுதாவும் அமுதனும் அங்கு வந்துவிடவே அவர்கள் வினிதாவின் திடிர் மாற்றத்தை பற்றி சொன்னதைக் கேட்டு அவர்களின் முகத்தில் குழப்பரேகைகள்!
“ஏன் நீங்க யாரும் வினிதாவின் மாற்றத்தை பற்றியும் அவள் இப்படி இருப்பது பற்றியும் எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை?” வினிதாவின் அண்ணி கேட்க, மற்றவர்களிடம் பதிலில்லை. என்னவென்று அவர்களிடம் சொல்வார்கள்? சொன்னால் தான் அவர்கள் நம்புவார்களா? தங்கள்மீது தவறு இருப்பதால் மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்.
மகேன், ரூபன் மற்றும் அவன் தந்தை மூவரும் வினிதாவின் வீட்டுக்கு சென்று சேரும்போது ஹாலில் அனைவரும் அமர்ந்து இருந்தாலும் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. சித்ராவின் குழப்பமான முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை மகேன் புரிந்துக் கொண்டான். சிறிய அறிமுகத்துக்கு பிறகு, வினிதாவின் அண்ணன் கையில் இருந்த சில புகைப்படங்களை வாங்கி அவர்களிடம் கொடுத்தாள் சித்ரா.
அதை பார்த்த ரூபனுக்கு இப்படங்களை ஏன் போட்டோஷாப் செய்தார்கள்? என்றே அவனுக்கு நினைக்க தூண்டியது . அதை அவர்களிடமே கேட்க அங்கு இருந்தவர்கள் அவனை வினோதமாக பார்த்தனர்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“ரூபன் இந்த படம் எல்லாம் எங்க வீட்டு பங்க்ஷனில் (funtion) எடுத்தது”. அவர்கள் அதை சொன்ன பின்னரே அவன் அப்படத்தை சற்று உற்று பார்த்தான்.. அதில் ஓர் உருவம் மட்டும் தெளிவு இல்லாமல் இருந்தது.. ஒரு படத்தில் வினிதாவின் அண்ணன் ஒருவரின் தோளில் கை போட்டதுபோல் நிற்க, ஆனால் அவரின் பக்கத்தில் யாரும் இல்லாமல் இருந்தது.
மற்றோரு படத்தில், அது அவர்களின் குடும்ப படம் போலும், அதில் புதிய பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள். அவளின் இருவிழிகளும் சிவந்து இருக்க, முகத்தில் வெறியும், உதட்டில் நினைத்ததை சாதித்தைபோல புன்னகையும் இருந்தது. மற்ற எல்லா படங்களும் அமுதாவின் கைக்கு வந்தது, ஆனால் குடும்ப படம் மட்டும் அவள் பார்க்கவில்லை. மற்ற படங்களை போல்தான் அதுவும் இருக்கும் என நினைத்து அப்படத்தை பார்க்கவில்லை அவளும்.
இதை மற்றவர்கள் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், ரூபனின் அப்பாவிற்கு மட்டும் ஏதோ புரியவதுபோல் இருந்தது.
“இப்படங்கள் மட்டும் இல்லை வினிதா எங்களுடன் பிடித்த எல்லா புகை படத்திலும் அவளின் உருவம் மங்களாக தெரிகிறது..” என வினிதாவின் அண்ணன் சொல்லிக் கொண்டியிருக்கையில் பூட்டி இருந்த அந்த ஏதிர் அறைக்கதவு தானாக திறந்துக்கொண்டது.
அனைவரும் அந்த அறையை பார்த்துக்கொண்டே சோபாவிலிருந்து அவர்கள் எழுந்திருக்கையில் அவர்கள் கண்ணில் பட்டது ஒரு பொம்மை.!
சித்ராவும் அமுதாவும் அந்த பொம்மையை எங்கேயோ பார்த்திருப்பதாக நினைக்கையில் வினிதாவின் அறைக்கதவும் அந்த எதிர்அறையின் கதவும் சாற்றிக்கொண்டது! சித்ராவும் அனிதாவும் உடனே வினிதாவின் அறையை நோக்கி ஓட, அவ்விருகதவுகளும் மீண்டும் திறந்துக்கொள்ள அவர்கள் இருவரும் திடீர் ப்ரேக் போட்டதுபோல் அங்கேயே நின்று விட்டனர். அவர்களுக்கு பயம் எடுத்துக் கொள்ள அமுதாவின் அருகில் சென்று நின்றுக்கொண்டனர்.
ரூபனின் அப்பா மட்டும் அந்த எதிர் அறையை நோக்கி நடக்கையில் அந்த கதவு மீண்டும் ஒருமுறை திறந்து சாத்தியது. அவர் அந்த கதவை திறக்க முயல, “ஹா ஹா ஹா” என சிரிக்கும் சத்தமே அங்கு இருந்த அனைவருக்கும் கேட்டது.
பயத்தில் வினிதாவின் அண்ணி அவரின் கணவனை நெருங்கி நிற்க, சித்ராவும் அனிதாவும் பயத்தில் கைகளை பிடித்துக்கொண்டனர். ரூபனோ, “என்னாடா நடக்குது இன்னைக்கு காலையில் இருந்து? ஒரே மாயாஜாலமா இருக்கு!” என்று மனதில் நினைக்க, மற்ற ஆண்கள் ரூபனின் அப்பாவையே பார்த்தபடி இருந்தனர்.
ரூபனின் அப்பா கண்ணை முடி மனதை ஒருநிலை படுத்த நினைக்கையில், வினிதாவின் அண்ணன், “நாங்க வினிதாவை எங்கள் வீட்டுக்கு இப்போவே அழைத்து செல்ல போகிறோம்... இங்கே ஏதோ சரியில்லைனு மட்டும் புரியுது... நாங்க அவளை அங்கு அழைத்துபோய் அவளுக்கு என்னவென்று பார்த்துக் கொள்கிறோம்!!” என”அதிரடியாய் சொன்னார்.
ரூபனின் அப்பா கண்ணை மூடியநிலையிலே, “வினிதாவின் உயிருக்கு ஆபத்து. நீங்க அவளை உங்களுடன் அழைத்து செல்லலாம்! ஆனால் அதுவே அவளுக்கு வினையாகிவிடும்!” என எச்சரிக்கையில்
“ஹா ஹா ஹா.. அவளை யாரும் இந்த வீட்டை விட்டு வெளியே அழைத்து செல்ல முடியாது! நான் விட மாட்டேன்! அவளை விட மாட்டேன்! விடவே மாட்டேன்! நான் அவளை என்னுடன் கூட்டி செல்வது உறுதி… உன்னால் என்ன செய்ய முடியும்? முடியாது!! அவளை யாராலும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது!! இன்னும் சில தினங்களில் அவள் என்னுடன் பறப்பாள்…. ஹா ஹா ஹா!!!” என்று சத்தமாக சிரிப்பு தொடர்ந்தது.
இது யாரின் குரல்?? இந்த குரலில் ஏன் இவ்வளவு வெறி?? மற்றவர்கள் யோசித்தாலும், இது அமுதாவுக்கு மிக பரிட்சியமான குரலாக தோன்றியது! இந்த குரலை எங்கோ கேட்டு இருக்கிறோம் நினைக்கையில் அவளின் மெமரி சற்று மெதுவாகவே வேலை செய்தது.