(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 04 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

பாரதி இரண்டு இளைஞர்களையும் இழுத்துக்கொண்டு சுகுணா இருந்த இடம் வந்தபொழுது, அவர்  எப்படி விழுந்த பொழுது இருந்தாரோ  அதைப் போலவே இப்பொழுதும் இருந்தார்.  ஒரே ஒரு மாறுதல்... கையில் தண்ணீர் பாட்டில் இருந்தது...

“நினைச்சேன்... ஏங்க இங்க என்ன ஷூட்டிங்கா நடக்குது.... சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கறீங்க... டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகற அளவுக்கு இல்லைனாலும் பாவம் அவங்களை எழுப்பி அந்தப் பக்கத்துல இருக்கற மேடைலயானும் உக்கார வச்சிருக்கலாம் இல்லை...  அம்மா வாங்க மெதுவா எந்திரிங்க...”, அனைவரையும் பார்த்து கத்தியபடியே சுகுணா எழுந்துகொள்ள உதவினாள் பாரதி.

கால் பிசகி இருந்ததால் சுகுணாவால் எழுந்துகொள்ள முடியவில்லை... பாரதி சென்று ஒரு ஆட்டோவை அழைத்து வந்தாள்....

“தம்பிங்களா, அப்படியே அம்மாவை பூவைப் போல தூக்கி ஆட்டோ உள்ள உக்கார வைங்க பார்க்கலாம்.... அவங்க வலில லேசா முகம் சுளிச்சாக்கூட உங்களை,  வச்சு செய்வேன்... எப்படி வசதி”, பாரதி பேசி முடிப்பதற்குள் அவளிடம் அடிவாங்கிய இளைஞர்கள்  சுகுணாவைத் தூக்கி ஆட்டோவில் உட்கார வைத்திருந்தார்கள்... அத்துடன் நில்லாமல் விடாமல் மன்னிப்பு வேண்டும் படலமும் நடந்தது....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“ஆட்டோ அண்ணாச்சி பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல் போங்க... அப்படியே ரெண்டு தெரு தள்ளி எங்க பைக் நிக்குது.... அந்த வழியா போனீங்கன்னா அதை நாங்க எடுத்துட்டு உங்க பின்னாடியே வர்றோம்... அப்பறம் தம்பிங்களா, பைக்கை எடுத்துட்டு அப்படியே எஸ் ஆகிடலாம்ன்னு நினைக்காதீங்க... மரியாதையா ட்ரீட்மெண்ட் முடியறவரை இருந்து ஆகற செலவைக் கட்டிட்டு போறீங்க”,என்ற பாரதிக்கு  அவர்களால் தலையாட்ட  மட்டுமே முடிந்தது.

மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காண்பிக்க, அவர் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்தார்.  பாரதி சுகுணாவை எக்ஸ்ரே எடுக்க  அழைத்து சென்றாள்.

“அக்கா எங்கக்கிட்ட இப்போ பணம் ஐநூறு ரூபாய்தான் இருக்குக்கா... நாங்க வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரோம்.....”

“டேய் யாருக்கிட்ட டகால்ட்டி வேலை காட்டறீங்க... இப்போ வீட்டுக்குப் போயிட்டு அப்படியே பணத்துக்கு டிமிக்கி கொடுக்கலாம்ன்னு பாக்கறீங்களா... நீ உங்க வீட்டுக்குப் ஃபோனைப் போடு...”

“அக்கா வேணாம்க்கா... வீட்டுல தெரிஞ்சா எங்களைத் தொலைச்சு கட்டிடுவாங்கக்கா....”

“டேய் இதெல்லாம் இடிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.... இடிச்சப்பறமும் என்ன தெனாவட்டா திரும்பிக் கூட பாக்காம போனீங்க... நீ உங்க வீட்டுக்கு ஃபோனைப் போடறியா.... இல்லை நான் போலீஸ்க்கு ஃபோனைப் பண்ணவா...”

“இல்லைக்கா நானே பண்றேன்... வீட்டுல கேட்டா என்ன சொல்றதுக்கா...”

“நீ என்ன பண்ணினியோ அதை சொல்லு... அப்படியே வீட்டுல இருக்கற கிரெடிட், டெபிட் எல்லா கார்டையும் எடுத்துட்டு வர சொல்லு.... பணம் கட்ட வசதியா இருக்கும்”, பாரதி சொல்ல தங்கள் தலையெழுத்தை நொந்தபடியே போன் செய்தான் இடித்ததில் ஒருவன்.

சுகுணா திறந்த வாய் மூடாமல் பாரதியையே பார்த்திருந்தார்... அவர்களால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை... என்ன ஒரு தைரியமான பெண் இவள் என்று....

சுகுணாவின் எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் காலில் தசை கிழிந்திருப்பதாக வர, இரண்டு வார காலம் கட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறிய மருத்துவர் காலில் கட்டை போட்டு அனுப்பினார்.

டுத்த அரைமணியில் அந்த இளைஞர்களின் பெற்றோர் வர, அவர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள்.

“டேய் என்னடா ஆச்சு.... யாருக்கோ அடிபட்டுடுச்சு... உடனே வாங்கன்னு சொன்ன... கடைசில அடிபட்டது உங்களுக்கா...

தங்கள் பெற்றோர் வந்தவுடன் தைரியம் பெற்ற இளைஞர்கள் நடந்ததை மாற்றி சொல்ல ஆரம்பித்தார்கள்...

“அப்பா நாங்க வண்டி ஓட்டிட்டு போகும்போது இந்த அம்மா நடுல வந்துட்டாங்க... அப்போ தெரியாம அவங்க மேல இடிச்சுட்டோம்... அதுக்கு இந்த பொம்பளை எங்களை போட்டு அடிச்சுட்டு இங்க இழுத்துட்டு  வந்துட்டாப்பா...”,என்று அதுவரை அக்கா, அக்கா என்று அழைத்தவர்கள் பெற்றோரைப் பார்த்தவுடன் மரியாதையின்றி பாரதியை பேச ஆரம்பித்தார்கள்.  ‘அடப்பாவிங்களா இப்படி பொய் சொல்கிறார்களே’ என்பது போல் அவர்களைப் பார்த்தார் சுகுணா.

“ஏம்மா என்னம்மா இதெல்லாம்... இப்படியா அடிப்ப... பெரிய ரௌடியா நீ.... உனக்கு என்னைப் பத்தி தெரியாது... மொதல்ல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து உன்னை உள்ள தள்றேன் பாரு”,அவர் கத்த சுகுணா நடந்ததை சொல்ல வர... பாரதி பேசிய இளைஞனை பளார் என்று ஒரு அரை விட்டாள்... அவன் ‘அம்மா’ என்று கன்னத்தைப் பிடிக்க...

“உங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சா... Good... இப்போ நடந்த உண்மைய அப்படியே சொல்லு பார்க்கலாம்... மறுபடி பொய் சொன்ன அடுத்த செவுளும் பிஞ்சுடும்....”, என்று கூற அதற்கு மேல் பொய் கூறாமல் நடந்ததை அப்படியே ஒப்பித்தான் அந்த இளைஞன்.

“ஏம்மா ஏதோ சின்ன பசங்க தெரியாமப் பண்ணிட்டாங்க... அதுக்கு நீ அவங்களை புத்தி சொல்லித் திருத்தி இருக்கலாம்... இப்படியா அடிப்ப....”

“என்னது  புத்தி சொல்றதா... ஏன் நான் ஏதாவது அறிவுரை இயக்கம் நடத்தறேன்னு யாராவது உங்கக்கிட்ட சொன்னாங்களா...  இந்த அடி அடிச்சே நீங்க வந்த உடனே உங்கப் பையன் எப்படி மாத்தி பேசறான் கேட்டீங்க இல்லை... அப்பறம் சின்னப் பையன்னா வீட்டுக்குள்ள உக்கார வச்சு கொஞ்ச வேண்டியதுதானே சார்... எதுக்கு வெளிய கோவில் மாடு மாதிரி சுத்த விட்டிருக்கீங்க... இந்த அம்மா காலைப் பாருங்க... இன்னும் ரெண்டு வாரத்துக்கு எழுந்து நடமாட முடியாது... அவங்க பாட்டுக்கு ஓரமா நடந்துட்டு இருந்தாங்க... என்னமோ சோழாவரம் ரேஸ் ஓட்டறா மாதிரி வந்து இடிச்சுட்டு நிக்கக் கூட இல்லை.... போயிட்டே இருந்தானுங்க... இவனுங்களை கூப்பிட்டு நான் புத்தி சொல்லணும்”,என்று கூற தன் மகனை முறைத்தார் அவர்... இவனால் நான் பேச்சு கேட்க வேண்டியதாக இருக்கிறதே என்று....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.