(Reading time: 16 - 32 minutes)

12. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

loveதிடிரென நர்மதா பத்திரிக்கையை நீட்டியதும் இளங்கோவிற்கு ஆச்சர்யமாகி தான் போனது... கங்கா சொன்னபோது கூட, அவள் ஏதோ தெரியாமல் சொல்கிறாள் என்று தான் நினைத்தான்... ஆனால் அது உண்மையாகி போனது... அதற்கு மேலும் அவனை சிந்திக்க விடாமல் நர்மதா பேசினாள்...

"என்னடா... திடிர்னு வந்து பத்திரிக்கையை நீட்றாளேன்னு நினைக்காதீங்க ண்ணா... எல்லாமே திடிர்னு முடிவானது தான்... நாம லாஸ்ட் டைம் மீட் பண்ணோமே, அப்போதான் அம்மாவும் அப்பாவும் அவங்க வீட்டுக்குப் போய் நிச்சயம் பண்ணாங்க... அவசர அவசரமா நடக்கறதால நான் கொஞ்சம் குழப்பத்துல இருந்தேன்... அதான் இந்த விஷயத்தை யமுனாவை தவிர யார்க்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கல... சரி பத்திரிக்கையெல்லாம் அடிச்சதும் உங்கக் கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்... தப்பா நினைச்சுக்காதீங்க.."

"என்னம்மா நீ... இதுக்காகல்லாம் யாராவது தப்பா நினைச்சிப்பாங்களா..?? என்கிட்ட எதுக்காக பார்மாலிட்டிஸ்ல்லாம் பார்க்கிற... கல்யாணத்துக்கு முன்னாடி நாள் வந்து நீ சொன்னாலும், நான் கல்யாணத்துக்கு வருவேன்... நான் எதுவும் தப்பால்லாம் எடுத்துக்க மாட்டேன்... அதை விடு, கல்யாணத்துல ஏதோ குழப்பம்னு சொன்னியே... இப்போ அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே... உனக்கு இதுல பரிபூரண சம்மதம் தானே..??" என்று அவன் கேட்டதும்,

"ஆமாண்ணா... அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு..??" என்று அரை மனதாக சொன்னவள்,

"நீங்க இதை சாதாரணமாக தான் எடுத்துப்பீங்கன்னு எனக்கு தெரியும்... ஆனா உங்க ஆளு தான், இன்னும் உங்கக்கிட்ட விஷயத்தை சொல்லலைன்னு ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டா.." என்று யமுனாவை பார்த்துக் கொண்டே கூறினாள்... யமுனாவோ பதிலுக்கு நர்மதாவை முறைத்தாள்..

இளங்கோவோ ஒரு புன்சிரிப்போடு நர்மதாவின் திருமணப் பத்திரிக்கையை எடுத்து படிக்க ஆரம்பித்தான்... அதில் மணமகன் பெயர் இருக்கும் இடத்தில்,

V.Dhushyanthan.

Chariman of DR groups of company..

என்ற பெயரை பார்த்ததும் அவன் விழிகள் கொஞ்சம் அதிர்ச்சியைக் காட்டியது... அதை நர்மதா கவனித்தாளா..?? என்று தெரியவில்லை... ஆனால் யமுனா அதை கவனித்தாள்...

"DR க்ரூப் ஆஃப் கம்பெனிஸோட சேர்மனா..?? இந்த கம்பெனிய பத்தி நான் கேள்விப்பட்ருக்கேன் நர்மதா... இது ரொம்ப பெரிய இடம்... அவங்க எப்படி உங்க வீட்ல சம்பந்தம் பண்றாங்க.."

"அது அப்பாக்கு தெரிஞ்சவங்க மூலமா வந்த சம்பந்தம் அண்ணா..." என்று அவள் சொன்னதும், அவன் "ஓ.." என்றான்... அதற்குள் நர்மதாவுக்கு அவளுடைய அம்மாவிடம் இருந்து அழைப்பு வர, அந்த ரெஸ்ட்டாரன்டில் அன்று கொஞ்சம் கூட்டமாகவே இருந்தது... தன் அன்னையிடம் கொஞ்சம் சத்தமாக பேச வேண்டும் என்பதால், அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து,

"அம்மா தான் பேசறாங்க... நீங்க பேசிக்கிட்டு இருங்க.. அம்மாக்கிட்ட பேசிட்டு வந்துட்றேன்.." என்றவள் கொஞ்சம் தள்ளிச் சென்று பேசினாள்... இங்கு யமுனாவோ... இளங்கோவிடம்...

"DR க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் உங்களுக்கு தெரியும்னா, நர்மதாவுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை துஷ்யந்தையும் உங்களுக்கு தெரியுமா..?? அவர் எப்படி..??" என்றுக் கேட்டாள்.

"அது.. அது... அந்த கம்பெனிய பத்தி தான் கேள்விப்பட்ருக்கேன்... அந்த மாப்பிள்ளையை பத்தி ஒன்னும் தெரியாது..."

"ஓ... நீங்க பத்திரிக்கையை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆனீங்களா..?? அதான் உங்களுக்கு அந்த துஷ்யந்த் பத்தி தெரிஞ்சிருக்குமோன்னு கேட்டேன்.. ஆனா உங்களுக்கும் அவரைப் பத்தி தெரியாதா..??"

"அதான் நர்மதாக்கிட்டேயே சொன்னேனே... அவங்க ரொம்ப பெரிய இடம்னு தெரியும்... அவங்க நர்மதா வீட்டோட எப்படி சம்பந்தம் வச்சிருக்காங்கன்னு யோசிச்சேன்... அதான் அப்படி.. ஆமாம் என்னாச்சு.. துஷ்யந்த் பத்தி தெரியுமான்னு ஏன் கேட்ட..??"

"நீங்க சொன்னீங்கல்ல பெரிய இடம்னு.. அதை நினைச்சு தான் அப்படிக் கேட்டேன்... கல்யாணம் முடிவாகி பத்திரிக்கையெல்லாம் அடிச்ச்சாச்சு... இதுவரைக்கும் நர்மதாவோ, இல்லை அவளோட அப்பா, அம்மாவோ இன்னும் மாப்பிள்ளையை நேர்ல பார்க்கவே இல்ல...

மாப்பிள்ளையோட அம்மா என்ன சொல்றாங்கன்னா... தன்னோட அம்மா விருப்பப்படி நர்மதாவை கல்யாணம் செஞ்சுக்க துஷ்யந்த் ஒத்துக்கிட்டதா சொல்றாங்க... அவர் வேலையில ரொம்ப பிஸி, அதான் அவரால நர்மதாவை பார்க்க வர முடியலன்னு சொல்றாங்க...

அவங்க சொன்னமாதிரின்னா ஓகே தான்... ஆனா ஏதாவது தப்பா இருந்தா, இப்போல்லாம் சாதாரண குடும்பங்களிலேயே பையனோட தப்பை மறைச்சு, அந்த பொண்ணை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுக்கறாங்க... இது வசதியான இடம்... இங்கேயும் அதே மாதிரி இருந்துச்சுன்னா, அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.."

"ம்ம் நீ சொல்றதும் சரிதான்... ஆமாம் நர்மதா என்ன நினைக்கிறா... அந்த துஷ்யந்தை நேர்ல பார்க்க ஆசைப்பட்றாளா..?? அவளுக்கு இந்த மேரேஜ்ல சம்மதம் தானே.. ஏன்னா நான் கேட்டதுக்கு ஏனோதானோன்னு அவ பதில் சொன்னா... அதான் கேட்டேன்.."

"நீங்க நினைச்சது தான் கரெக்ட்..." என்றவள், நர்மதா வருகிறாளா..?? என்று ஒருமுறை திரும்பி பார்த்தாள்... பின் அவனிடம் பேச ஆரம்பித்தாள்...

"உங்க ரெண்டுப்பேரையும் பாசமலர்னு கிண்டல் செஞ்சாலும்.. நீங்க நர்மதா மேல அக்கறையா இருக்கீங்கன்னு தெரியும்... அதனால உங்கக்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்...

நர்மதா படிக்கும்போது ஒருத்தனை லவ் பண்ணியிருக்கா... அது ஒன்சைட் லவ்... அவன் கிட்ட இவ லவ்வை சொன்னதுக்கு அவன் அக்சப்ட் பண்ணிக்கலன்னாலும் பரவாயில்ல... இவக்கிட்ட கொஞ்சம் கடுமையாவே பேசியிருக்கான்... இருந்தாலும் அவனை இவளால மறக்க முடியலன்னு தான் நினைக்கிறேன்... கேட்டா, அப்படில்லாம் இல்லன்னு தான் சொல்லுவா...

கல்யாணமே வேண்டாம்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தா... அப்புறம் அவளோட பேரண்ட்ஸ்க்காக தான் ஒத்துக்கிட்டா.. அதுக்காக தான் நான் கவலைப்பட்றதே... ஏற்கனவே லவ் பெயிலியர் ஆன அவளுக்கு, இந்த மேரேஜ் லைஃப் நல்லா அமையனுமில்லையா..?? அதுவும் தப்பா போய்டுச்சுன்னா... அப்புறம் அவ வாழ்க்கையே கஷ்டமாயிடும்..."

"என்ன யமுனா... ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற... நர்மதாவோட நல்ல மனசுக்கு, அவளுக்கு எல்லாம் நல்லப்படியாக தான் நடக்கும்... அதனால நீ பயப்படாத..."

"நானும் அப்படித்தான் நினைச்சுப்பேன்... இருந்தாலும் நடக்கறது நடக்கட்டும்னு சும்மாவும் இருக்க முடியாது... நர்மதாவோட அம்மாவும், அப்பாவும் துஷ்யந்தோட பேமிலிய பார்த்து, துஷ்யந்தும் நல்லவரா இருப்பார்னு நம்பறாங்க... எனக்கும் அப்படிதான் தோனுது... இருந்தும் நீங்க கொஞ்சம் அந்த துஷ்யந்த் பத்தி விசாரிக்கிறீங்களா..?? வெறும் நம்பிக்கை மட்டும் இல்லாம, துஷ்யந்த் பத்தி தெளிவா தெரிஞ்சா நல்லது தானே..."

"சரி நான் விசாரிச்சுப் பார்க்கிறேன்..." என்று இளங்கோ கூறினான்... போன் பேசிவிட்டு நர்ம்தாவும் வரவே... அதோடு அந்த பேச்சை இருவரும் நிறுத்திக் கொண்டார்கள்... பின் சிறிது நேரம் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.