(Reading time: 16 - 32 minutes)

திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்க அந்த விடியற்காலையில் துஷ்யந்த் வீட்டில் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி இனிதே நடைவேறியது... இவ்வளவு தூரம் எந்தப் பிரச்சனையுமில்லாமல் நாட்கள் நகரவே, கோமதி மனதில் நிம்மதி... ஆனால் ஜோசியர் சொன்னதை நினைத்து விஜிக்கு இன்னும் கூட கலக்கமாக தான் இருந்தது...

இந்த நிகழ்விற்கு நர்மதாவின் பெற்றோரும் வந்திருந்தனர்... துஷ்யந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டான்... முதல் முறையாக இன்று தான் நர்மதாவின் பெற்றோர் அவனை நேரில் பார்த்தனர்...  அப்போது அவனுடன் உரையாடிய வரையில் அவர்கள் மனதிற்கு திருப்தியே...

இங்கு நிகழ்ச்சி நிறைவடைந்ததும், கோமதியும், விஜியும் நர்மதாவின் பெற்றோருடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று, நர்மதாவிற்கும் நலங்கு வைத்து சடங்குகள் செய்தனர்...

அன்று மதியத்திற்கு மேல தங்களது வீட்டில் கோமதியும், விஜியும் கல்யாண வேலைகள் குறித்து பேசிக் கொண்டிருந்த போது தான், அந்த பேச்சும் வந்தது...

"விஜி... இந்த புடவையை வாணிக்காக எடுத்து வச்சிருக்கேன்... அவக்கிட்ட இதை கொடுத்துட்டு வந்துட்றியா..??"

"நானெல்லாம் அங்க போக மாட்டேன் அண்ணி... அந்த கேடுகெட்டவ வீட்டுக்கெல்லாம் என்னை போக சொல்லாதீங்க அண்ணி... ஆமாம் அந்த வாணிக்கு எதுக்காக புடவை..??"

"வாணிக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே.. அவளோட புருஷனோட குடும்பம் நம்ம எஸ்டேட்ல வேலை செஞ்சுக்கிட்டு வராங்க... அவளுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து அந்த எஸ்டேட்டே கெதின்னு வாழ்ந்துட்டா.. அவ புருஷன் இறந்ததுக்குப் பிறகும் நமக்கு அவ விசுவாசியா இருந்திருக்கா.. நம்ம வீட்ல என்ன விஷேஷம் நடந்தாலும் அவளுக்கு துணி எடுத்து கொடுப்போம்... இத்தனை நாள் அவ எங்க இருந்தான்னு தெரியாம இருந்துச்சு... இப்போ தான் தெரிஞ்சிடுச்சே... நம்ம வீட்ல ரொம்ப நாள் கழிச்சு நடக்குற விஷேஷம், அவளுக்கு எடுத்து கொடுக்கலைன்னா எப்படி..??"

"நீங்க சொன்ன விசுவாசம் தான் இப்போ காணாம போச்சே அண்ணி... இப்போ அவ சேர்ந்திருக்க இடம் சரியில்லையே... அந்த கேடுகெட்டவ கூட சேர்ந்து நம்மக் கிட்ட எல்லாம் மறைச்சிட்டாளே அண்ணி.. இன்னும் அவளை நீங்க தூக்கி வச்சு பேசறீங்க.."

"இங்கப் பாரு விஜி... சின்ன வயசுல ராஜா அங்க போகும் போதெல்லாம், " அக்கா அக்கான்னு வாணி பின்னாடி சுத்திக்கிட்டே இருப்பான்... அவனா அவகிட்ட உதவி கேட்ருப்பான், அதை எப்படி அவளால மறுக்க முடியும்..??"

"நீங்க ஏன்தான் இப்படி அப்பாவியா இருக்கீங்களோ தெரியல அண்ணி..??"

"சரி அப்போ நீ போகமாட்ட, பேசாம நானே போய் கொடுத்துட்றேன்.."

"நீங்களும் அங்க போகக் கூடாது அண்ணி..." விஜி சொல்லிக் கொண்டிருந்த போதே, துஷ்யந்த் அங்கு வந்தான்...

"அம்மா... நான் வேணும்னா இதை எடுத்துட்டுப் போய் வாணி அக்காக் கிட்ட கொடுக்கட்டுமா..?? அவனுக்கு கங்காவை பார்க்க ஒரு காரணம், அதனாலேயே அவனே கொண்டுப் போவதாக கூறினான்.

"சரி ராஜா... நீயே கொடுத்துட்டு வந்துடு... சும்மா கொடுத்துட்டு வராத... அவளை நான் கல்யாணத்துக்கு வரச் சொன்னேன்னு சொல்லு.." என்று அனுப்பி வைத்தார்.

"அண்ணி... நாமளே அங்க போகக் கூடாதுன்னு நான் சொல்றேன்... நீங்க என்னடான்னா, ராஜாவை அங்க அனுப்பறீங்க... எனக்கு இது சரியாப்படல அண்ணி... அந்த கேடுகெட்டவ ராஜா மனசை மாத்திட்டான்னா..??"

"இங்கப்பாரு விஜி... ராஜா ஒன்னும் சின்ன குழந்தையில்ல... அவனை நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது... கட்டுப்பாடு விதிச்சா தான் மீறனும்னு தோனும்... நாம அவனை நம்பறோம்னு தெரிஞ்சா தான் அவனும் நம்மள புரிஞ்சு நடந்துப்பான்... அதனால நீ கவலைப்படாத.." என்று ஆறுதல் சொன்னார்.. ஆனால் விஜிக்கு தான் நடப்பது நல்லதாகவே இருக்கனுமே.. என்றிருந்தது.

துஷ்யந்த், வீட்டிற்கு வரும்போது வாணி வீட்டில் இல்லை... கங்கா மட்டும் தான் இருந்தாள்... இந்த நேரம் துஷ்யந்தை அவள் இங்கு எதிர்பார்க்கவில்லை...

"வாங்க... உள்ள வாங்க.."

"வாணி அக்கா இல்ல.."

"வாணிம்மா மார்க்கெட் வரைக்கும் போயிருக்காங்க..." என்ன சாப்ட்றீங்க காபி இல்ல டீ.."

"எதுவும் வேணாம்... இது அம்மா வாணி அக்காக்கு கொடுக்க சொல்லி கொடுத்தாங்க.. அவங்களை கல்யாணத்துக்கு கண்டிப்பா வரச் சொன்னாங்க.."

"வாணிம்மாவை மட்டும் தான் கல்யாணத்துக்கு கூப்பிடுவீங்களா..?? என்னல்லாம் கூப்பிட மாட்டீங்களா..??"

"நான் அம்மா சார்பா தான் வாணி அக்காவை கூப்ட்றேன்.."

"சரி உங்க சார்பா என்னை கூப்பிடுங்க... உங்க கல்யாணத்தை நேர்ல பார்க்க எனக்கு ஆசைய இருக்கு தெரியுமா..??"

"ப்ளீஸ் கங்கா... இன்னும் எவ்வளவு தான் என்னை கஷ்டப்படுத்தி பார்க்கப் போற...?"

"ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க... கவலைப்படாதீங்க நான் கல்யாணத்துக்கு வந்து உங்களுக்கு தர்மசங்கடத்தை கொடுக்க மாட்டேன்... நான் சும்மா தான் கேட்டேன்... இப்பவே நான் உங்களை வாழ்த்தறேன்... உங்க வாழ்க்கை இனியாவது சந்தோஷமா அமையட்டும்.." என்றாள்..

"நீ இல்லாத அந்த வாழ்க்கை எனக்கு எப்போதும் சந்தோஷத்தை கொடுக்காது கங்கா.." என்று வழக்கம் போல் மனதில் நினைத்தவன், ஒரு விரக்தி சிரிப்பை அவளுக்கு பதிலாக உதிர்த்துவிட்டு  சென்றான்... அவனுடைய சிரிப்பில் உள்ள விரக்தியை அவளும் கண்டுக் கொண்டாள்... இருந்தும் இதுதான் அவனுக்கு நல்லது என்று தனக்குதானே அவள் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

ப்ரண்ட்ஸ், அடுத்த இரண்டு அத்தியாயங்கள், கல்யாணத்துக்கு முந்தைய இரவு காட்சிகளை கொண்டதாக இருக்கும்... அதுதான் இந்த கல்யாணம் நடக்குமா..?? நடக்காதா..?? என்பதை தீர்மானிக்கும்... கல்யாணம் நின்றால், எப்படி, யார் மூலம் நிற்கும்...? ஒருவேளை கல்யாணம் நடந்தால், எப்படி, யாருக்கும் யாருக்கும் நடக்கும்..? நீங்க என்ன நினைக்கீறீங்க ப்ரண்ட்ஸ்... உங்கள் கருத்துக்களுக்கு ஆவலாக காத்திருக்கிறேன் நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.