(Reading time: 22 - 44 minutes)

11. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

திகள் பதிப்பகம்

"நீங்க மீட்டிங்க்கு எல்லாம் அரேஞ்மென்ட்டும் செஞ்சு வைங்க... நான் ஒரு மணி நேரத்துக்குள்ள இங்கிருந்து கிளம்பிடுவேன்... அப்படியே லேட்டானாலும், நீங்க மீட்டிங்கை ஆரம்பிச்சு பேசிக்கிட்டு இருங்க நான் அதுக்குள்ள வந்துடுவேன்..." என்று தன் அலுவலக மேனேஜரிடம் உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான் துஷ்யந்தன்...

பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருந்தும், இன்னும் கங்காவை காணவில்லை... பூஜையை அவள் கைகளால் தான் செய்ய வேண்டும், இந்த பதிப்பகம் ஆரம்பித்ததில் இருந்து, கங்கா கையால் தான் இந்த மூன்று வருடங்களாக பூஜை நடைபெறுகிறது... இவனும் இன்று இந்த பூஜையில் கலந்துக் கொள்வது அவளுக்காக தானே... அதனால் அவளை பார்க்காமல் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை... அவன் இப்போது இளங்கோவின் அலுவலக அறையின் வெளியே உள்ள வராண்டாவில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்... அவன் பார்வையோ அந்த பதிப்பகத்தின் நுழைவு வாயிலையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது... அவனை அதிக நேரம் ஏமாற்றாமல் ஆட்டோவில் வந்து இறங்கினாள் கங்கா...

ட்டோவில் வந்து இருவரும் இறங்கும் போதே, கோமதி, விஜியோடு.. நர்மதாவின் குடும்பத்தாரும் அங்கு காத்திருந்தார்கள்...  "அய்யோ லேட் ஆயிடுச்சுப் போலயே என்று புலம்பியப்படியே அவர்கள் அருகில் வந்தாள் நர்மதா... யமுனாவும் உடன் வந்தாள்...

"என்ன நர்மதா இது..?? நான் அப்பவே எல்லோரும் ஒன்னா போயிடலாம்னு  சொன்னேனே கேட்டியா...?? பெரிய காரா தான் சம்பந்தி வீட்ல அனுப்பி வச்சிருந்தாங்க... நல்லா தாராளமா இடமும் இருந்துச்சு... கூடவே வந்தா லேட்டாயிருக்காதுல்ல.." என்றார் மல்லிகா...

"சாரிம்மா... ஆட்டோக் கூட சீக்கிரம் கிடைச்சுடுச்சு... இருந்தும் வழியில ட்ராஃபிக்.." என்றாள்...

"பரவாயில்ல விடும்மா... ஒன்னும் லேட்டாகல... நாங்கல்லாம் வந்து 10 நிமிஷம் தான் ஆகுது... இருந்தும் என்னோட ப்ரண்டும் கூட வரப் போறா.. அதுக்கு ஏத்த மாதிரி கார் அனுப்புங்கன்னு நீ உரிமையா சொல்லலாம்மா... இன்னும் ஏன் உனக்கு தயக்கம்..." என்று கோமதி கேட்டார்...

"அய்யோ அப்படியில்ல... கோவிலுக்கும் போக வேண்டியிருந்துச்சு அதான்..." நர்மதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, செல்வா அங்கு வந்தான்...

"அம்மா நான் ஓனர் கிட்ட பேசிட்டேன்... புது கலெக்‌ஷன்ல்லாம் எடுத்து வைக்க சொல்லியிருக்கேன்... உள்ளே போலாமா..??" என்றான்...

அவனைப் பார்த்ததும் இவனுமா கூட வந்திருக்கான்... என்னை டென்ஷன் ஆக்கவே வருவான் போல... என்று அவனைப் பார்த்து முறைத்தாள் அவள்...

"ம்ம் போலாம்டா..." என்று செல்வாவை பார்த்து சொன்ன கோமதி, பின் நர்மதாவுடன் நின்றிருந்த யமுனாவை பார்த்து,

"இந்த பொண்ணு தான் உன்னோட ஃப்ரண்டா நர்மதா..??" என்றுக் கேட்டார்.

"ஆமாம்... இவ யமுனா... என்னோட பெஸ்ட் ப்ரண்ட்... என்னோட தான் வொர்க் பண்றா..." என்று அறிமுகப்படுத்தினாள். யமுனாவும் எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் என்று கரம் கூப்பினாள்..

"யமுனா... நான் தான் கோமதி, நர்மதாவிற்கு மாமியாரா வரப் போறேன்... இது விஜி என்னோட தம்பி பொண்டாட்டி... இது செல்வா என்னோட இரண்டாவது மகன்.." என்று அவரே அறிமுகப்படுத்திக் கொண்டார்... யமுனாவும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.. ஆனால் மனதிலோ சிந்தனைகள்...

ஆட்டோவில் வரும்வரை கங்காவை பற்றி சிந்தித்துக் கொண்டு வந்தவளுக்கு, இங்கு வந்ததும் துஷ்யந்தைப் பற்றிய சிந்தனைக்கு மனம் தாவியது...

துஷ்யந்தை இன்றாவது பார்க்கலாம் என்று அவள் நினைத்தாள்... அவனை ஏற்கனவே புகைப்படத்தில் அவள் பார்த்திருக்கிறாள் தான்... நர்மதா அவன் புகைப்படத்தை காட்டியிருக்கிறாள்... ஆனால் நர்மதாவும் அவனை புகைப்படத்தில் மட்டும் தானே பார்த்திருக்கிறாள்... அதுதான் அவளின் உறுத்தலே...

 திருமணத்திற்கு முன் மணக்க போகும் பெண்ணை பார்க்கும் சந்தர்ப்பங்களை ஆண்கள் எதிர்பார்ப்பார்கள், ஆனால் இன்று வரை துஷ்யந்த் அப்படி இல்லாமல் இருக்க காரணம் என்ன...?? இப்போதெல்லாம் புடவை எடுக்க இருவரும் ஜோடியாக செல்வதெல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டது, ஆனால் துஷ்யந்த் இந்த சந்தர்ப்பங்களை கூட பயன்படுத்திக் கொள்ளாத காரணம் என்ன..?? இவள் மனம் குழம்பும்படி இல்லாமல் கூட இருக்கலாம்... எல்லாம் அம்மா விருப்பப்படியே நடக்கட்டும் என்று கூட நினைக்கலாம் அவன்... ஆனால் அவனுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லையோ என்று தான் அவளுக்கு நினைக்க தோன்றுகிறது... அப்படி நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும் அவளால் முடியவில்லை...

ஆனால் இவள் மட்டும் தான் இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்... இதையெல்லாம் சிந்திக்க வேண்டிய நர்மதாவோ இன்னும் கூட இந்த திருமணத்தை மனதார ஏற்றுக் கொள்ள அவளால் முடியவில்லை, பின் எப்படி இதெல்லாம் அவள் சிந்தனையில் உதிக்கும்...

அவளின் அன்னை மற்றும் சகோதரனுக்கோ, இப்போது எந்த மாதிரி உடையெடுக்கலாம் என்ற சிந்தனை மட்டும் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது... நர்மதாவின் தந்தை தான் யமுனாவைப் போல் யோசித்துப் பார்ப்பார்... ஆனால் அவரும் கல்யாண வேலைகளில் இறங்கிவிட அவருக்கு கூட அதெல்லாம் தோன்றவில்லை, அதனால் யாருமே ஏன் துஷ்யந்த் வரவில்லை என்று கேட்கவில்லை... யமுனா மட்டும் அந்த சிந்தனைகளோடு அவர்களுடன் கடைக்குள் நுழைந்தாள்...

கேட்டை திறந்துக் கொண்டு கங்கா நுழையும் போதே, துஷ்யந்த் தான் அவளுடைய கண்களுக்கு தெரிந்தான்... அவளையே பார்த்துக் கொண்டு அவன் நின்றிருக்க, அவனை பார்த்து அவள் மெலிதாக புன்னகைத்தப்படி நடந்து வந்தாள்... அது அவனுக்கு அவளிடம் இருந்து அரிதாக கிடைக்கும் பொக்கிஷம் என்பதால் அதை அவனுடைய மனப் பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொண்டான்...

அவனையே பார்த்தப்படி அவள் நடந்து வந்துக் கொண்டிருக்க, என்றுமில்லாமல் இன்று அவள் துஷ்யந்தின் கண்களுக்கு வித்தியாசமாக தெரிந்தாள்... எப்போதும் போல் மிக எளிமையான தோற்றத்தோடு தான் அவள் இருந்தாள்... இருந்தும் என்ன வித்தியாசம் அவன் யோசிக்க, அப்போது தான் அவள் தலையில் இருந்த பூவை கவனித்தான்... ஆட்டோவில் இருந்து இறங்கி, ட்ரைவருக்கு பணம் கொடுத்துவிட்டு நிமிர்ந்த போது, அவள் தலையில் வைத்த பூக்கள் அவளின் தோள்களின் மீது குடியேறியிருந்தது... அவளும் அதை கவனிக்கவில்லை....

இத்தனை நாட்களில் அவள் பூ வைத்து அவன் பார்த்ததில்லை... குன்னூரில் இருந்த போது சில நாட்கள் அவள் பூ வைத்து பார்த்திருக்கிறான்... ஆனால் சென்னை வந்ததிலிருந்தே அவள் மிகவும் எளிமையாக தன்னை மாற்றிக் கொண்டாள்... தன்னந்தனியாக ஒரு பெண்ணாய் அவள் வாழ அவளாகவே இது போன்ற மாற்றங்களுக்கு தன்னை பழக்கிக் கொண்டாள் என்பதை அவனால் உணர முடிந்தது....

அவன் அருகில் வந்தவளோ புன்னகைத்தப் படி இருந்த முகத்தை மாற்றாமலேயே, "சாரி லேட்டாயிடுச்சா... உங்களுக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு இளங்கோ சொன்னான்... நான் தான் இளங்கோ பேர்ல அர்ச்சனை பண்ணலாம்னு கோவிலுக்குப் போய்ட்டேன்... அதான் வர லேட்.." என்றாள்.

"ஹே அதெல்லாம் இல்ல... இன்னும் டைம் இருக்கு.... நீ லேட்டால்லாம் ஒன்னும் வரல.." என்று அவனும் அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க... அதற்குள் அங்கு வந்த ரம்யாவோ...

"வாணிம்மா அக்கா வந்தாச்சு..." என்று குரல் கொடுத்துக் கொண்டே அருகில் வந்தவள், "என்னக்கா... இவ்வளவு லேட்டா வர்றீங்க... சார்க்கு மீட்டிங்க்கு டைம் ஆயிடுச்சுப் போல, போன் மேல போனா வந்துக்கிட்டு இருக்கு..." என்றாள்..

அவன் லேட்டாகவில்லை என்று சொன்னான்,  ரம்யாவோ வேறு மாதிரி சொல்ல, என்னவென்று அவனை இவள் கேள்வியாய் பார்க்க, "நிஜமா இன்னும் மீட்டிங்க்கு டைம் இருக்கு கங்கா... மீட்டிங் பத்தி சில இன்ஸ்ட்ரக்‌ஷன் கேக்க, போன் பண்ணாங்க.." என்று விளக்கம் கொடுத்தான்... இவளுக்காக தான் அவன் அப்படி சொல்கிறான் என்று கங்காவிற்கும் புரியத்தான் செய்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.