(Reading time: 22 - 44 minutes)

ம்யாவிற்கும் கங்காவிடம் இருந்த வித்தியாசம் கண்ணில் பட, "ஹை அக்கா பூ வச்சிருக்கிங்களா..?? ரொம்ப அழகா இருக்கீங்க.." என்றாள்... அப்போது தான் கங்காவிற்கும் நர்மதா பூ வைத்தது ஞாபகத்திற்கு வந்தது... அப்போது அங்கு வந்த வாணியும் அதை கவனித்தார்...

கோவிலில் குருக்கள் கொடுக்கும் பூவை தலையில் வை என்று சொன்னால் கூட வேண்டாமென்றிடுவாள்... இப்போது எப்படி இந்த அதிசயம் நடந்தது என்ற ஆச்சர்யத்தோடு கங்காவை பார்த்தார்...

"அது தெரிஞ்ச ஒரு பொண்ணு அன்பா கொடுத்தது, அதான் மறுக்க முடியல..." என்று விளக்கம் கொடுத்தாள்... பின் கோவிலில் கொடுத்த விபூதி, குங்கும பிரசாதத்தை எடுத்தவள், "இந்தாங்க வச்சிக்கோங்க..." என்று துஷ்யந்திடம் நீட்டினாள்.. அவனும் அதை எடுத்து வைத்துக் கொண்டான்.

பின் வாணியிடம் நீட்ட, அவரும் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார்... பின் அவள் கையாலேயே எடுத்து ரம்யாவிற்கு வைத்தாள்... அப்போது அங்கு வந்த இளங்கோ...

"என்ன கங்கா... சீக்கிரம் வர சொன்னேன் இல்ல... இப்போ தான் நீ கோவிலுக்குப் போகனுமா...??" என்றான்.

"அதான் வந்துட்டேன் இல்ல இளங்கோ... அப்புறம் என்ன..?? உன்னோட பேர்ல தான் அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன், இந்தா பிரசாதம்.." என்றவள், அவள் கையாலேயே அந்த பிரசாதத்தை அவனுடைய நெற்றியில் வைத்தாள்... அதை துஷ்யந்த் ஒரு ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஏன் இளங்கோ... அண்ணன், அண்ணியால தான் பூஜையில கலந்துக்க முடியல, அப்பா மட்டுமாவது வந்திருக்கலாமே..."

"அண்ணனுக்கு இன்னும் ஜுரம் சரியாகல கங்கா... இந்த நேரத்துல அப்பாவும் இங்க வந்துட்டா... குட்டிப் பொண்ணை வச்சுக்கிட்டு அண்ணி தனியா ரொம்ப கஷ்டப்படுவாங்க... அதான் அவர் வரலன்னு சொல்லிட்டாரு... நான் கூட உன்னை மாதிரி தான் ஃபீல் பண்ணேன், அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா..??

நான் வரலன்னா என்னடா..?? அதான் கங்காவும் துஷ்யந்தும் இருக்காங்கல்ல, எங்களையெல்லாம் விட, அவங்க ரெண்டுப்பேருக்கும் உன்னோட நலனில் ரொம்ப அக்கறை இருக்கு... அப்புறம் ஏன் கவலைப்படுறன்னு சொன்னாரு..."

"என்னத்தான் அப்பாவே சொன்னாலும், பெத்த அப்பாவா அவரோட ஆசிர்வாதம் தான் உனக்கு வேணும்... அவர் இந்த பூஜையில கலந்துக்கறது தான் நல்லா இருக்கும்..."

"கங்கா... பெத்தவங்களோட ஆசிர்வாதம் நம்ம கூட எப்பவும் இருக்கும்... அப்பா இப்போ இங்க இல்லன்னாலும், அவரோட நினைப்பெல்லாம் இங்க தான் இருக்கும்... இளங்கோவை அவர் அங்க இருந்தே ஆசிர்வாதம் பண்ணுவாரு... அதனால நீ அதை நினைச்சு கவலைப்படாம, வா வந்து பூஜையை ஆரம்பி..." என்றான் துஷ்யந்த்...

"நீங்க சொல்றதும் சரி தான்..." என்று அவன் சொல்லை ஆமோதித்தவள், சரி வாங்க பூஜையை ஆரம்பிக்கலாம்.." என்று அனைவரோடும் பூஜை செய்ய அச்சகத்திற்குள் சென்றாள்.

முதலில் நர்மதாவிற்கு பட்டுப் புடவை எடுக்க, பட்டுப் புடவை செக்‌ஷனுக்கு சென்றார்கள்... நர்மதாவும், யமுனாவும் புடவையை செலக்ட் செய்யட்டும் என்று, பெரியவர்கள் எல்லாம் அவர்களுக்கு அருகிலேயே சேர் போட்டு உட்கார்ந்திருக்க, செல்வாவோ நர்மதாவின் தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தான்..

நர்மதா, யமுனா இருவரும் எந்த ஒரு ஆர்வமுமில்லாமல், புடவையை புரட்டிக் கொண்டிருந்தனர்... யமுனாவிற்கோ அந்த துஷ்யந்த் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருக்க, நர்மதாவோ, செல்வா சொன்னதையே மனதில் நினைத்துக் கொண்டு இருந்தாள்...

அதிக விலையில் புடவை எடுக்கப் போவதாக கோமதி சொல்லிக் கொண்டிருக்க, அவ்வளவு விலையில எதுக்கும்மா புடவை எடுக்கனும், கொஞ்சம் குறைவான விலையிலேயே எடுக்கச் சொல்லுங்க..." என்று நர்மதா கூறினாள்... அதற்கு கோமதியும் சம்மதித்தார்...

ஆனால் அவர் சொன்ன குறைவான விலையின் ஆரம்பமே இருபதாயிரம், அதிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வரை மதிப்புள்ள புடவைகளை எடுத்து காண்பித்து கொண்டிருந்தார் அங்கு இருந்த விற்பனையாளர்...

இதுல பிடித்த புடவை என்று ஏதாவது எடுக்கப் போய், அது அதிக விலையாக இருந்தால், இவள் சும்மா சீன் போட்டுட்டு, வேண்டுமென்றே அதிக விலையில் எடுத்துவிட்டதாக நினைப்பார்களோ என்றிருந்தது அவளுக்கு, அதுவும் அதற்காக தான் ஒருவன் இங்கு வந்திருக்கிறானே... அவனே அப்படி சொன்னாலும் சொல்வான் என்ற தயக்கமும் சேர்ந்தது...

அவன் என்ன சொன்னால் என்ன..?? அதை ஒரு பொருட்டாக நினைக்கக் கூடாது என்று மனம் நினைத்தாலும், அவனும் அந்த குடும்பத்தை சார்ந்தவன் தானே, அவன் சொல்வதை எப்படி சாதாராணமாக நினைத்து ஒதுக்க முடியும்...

ஒருவேளை அவன் இங்கு இல்லாமல் இருந்திருந்தால், அதையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல், ஆர்வத்தோடு புடவை எடுத்திருப்பாளோ...?? ஆனால் இப்போது அவள் மனதில் தயக்கமே சூழ்ந்திருந்தது...

இருவரும் ஈடுபாடில்லாமல், புடவையை புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த கோமதியோ, "என்னம்மா புடவையெல்லாம் பிடிக்கலையா..?? நாங்க எப்போ துணி எடுக்கனும்ன்னாலும் இந்த கடைக்கு தான் வருவோம்... உனக்கு இங்க பிடிக்கலன்னா சொல்லு, வேற கடைக்குப் போகலாம்..." என்றார்.

"அம்மா இதெல்லாம் புது கலெக்‌ஷன்ஸ், இன்னும் மத்த கடைங்களுக்கெல்லாம் வந்திருக்காதும்மா... ஓனர் சொன்னதால இதெல்லாம் உங்களுக்கு காமிக்கிறேன்... இன்னும் கூட இருக்கும்மா... எல்லாத்தையும் எடுத்துப் போட்றேன், பிடிச்சதை எடுத்துக்கோங்கம்மா..." என்று அந்த விற்பனையாளர் கூறினார்...

"இங்கேயே பார்க்கலாம் ம்மா... கலெக்‌ஷன்ஸ்ல்லாம் நல்லா தான் இருக்கு..." என்று யமுனாவும் கூறினாள்..

"எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எடுக்கனும்னு நர்மதா யோசிக்கிறான்னு நினைக்கிறேன்... நீங்களே உங்க மருமகளுக்கு புடவை செலக்ட் பண்ணுங்கம்மா..." என்று மல்லிகாவும் கூறினார்...

"நம்ம வயசானவங்க, நமக்கு இப்போ இருக்க பேஷன்ல்லாம் தெரியுமா..?? நாம பழைய மாடலா தான் எடுப்போம்... ஒன்னு வேணா செய்யலாம், செல்வா இதெல்லாம் நல்லா செலக்ட் பண்ணுவான்... சில சமயத்துல எனக்கும், விஜிக்குமே அவன் தான் புடவை செலக்ட் பண்ணி கொடுப்பான்... அதனால அவனையே கூப்பிடலாம்.." என்றவர்... கொஞ்சம் தள்ளி நின்றிருந்தவனை கூப்பிட்டார்... அவனும் அருகில் வந்தான்...

"செல்வா... ஏண்டா அங்க நின்னுக்கிட்டு இருக்க, இங்க நர்மதாவுக்கு புடவை செலக்ட் பண்ண உதவலாம்ல.."

"அம்மா... நான் எதுக்கும்மா..?? அதான் கூட யமுனாவும் இருக்காங்களே... ரெண்டுப்பேரும் செலக்ட் பண்ணட்டும்..."

"எடுக்கற புடவை எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கனும்டா... அதுக்கு தான் சொல்றேன்... நீயும் உதவி செய்..." என்று அவர் சொன்னதும், அவனால் மறுக்க முடியவில்லை...

ஒருமுறை இறுக கண்களை மூடித் திறந்தவன், பின் புடவைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்... நர்மதாவிற்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்து எடுத்த புடவைகளை நேரடியாக நர்மதாவிடம் காட்டாமல், யமுனாவிடம் காண்பித்து...

"யமுனா... இது உங்க ப்ரண்டுக்கு பொருத்தமா இருக்கும்... உங்களுக்கு பிடிச்சிருக்கா பாருங்க..." என்று அவளையும் சேர்த்துக் கொண்டான்... அவன் காண்பிக்க காண்பிக்க யமுனாவும் ஈடுபாட்டோடு புடவை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள்...

கடைசியாக ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் இது மூன்றும் சேர்ந்து தங்க நிற பார்டர் உள்ள புடவையை அவன் தேர்ந்தெடுக்க, அது நர்மதாவிற்கும், யமுனாவிற்கும் கூட பிடித்திருந்தது... விலையும் அதிகமாகவே இருந்தது... அதை யமுனா, நர்மதா மேல் வைத்துக் காட்ட, மற்றவர்களுக்கும் அது பிடித்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.