(Reading time: 22 - 44 minutes)

பூஜை முடிந்ததும் பிரசாதமாக வீட்டிலிருந்து செய்து எடுத்து வந்த சர்க்கரைப் பொங்கலை எல்லோருக்கும் இலையில் வைத்து கொடுத்தாள் கங்கா.. எல்லோரும் அதை சாப்பிட்டப்படியே பேசிக் கொண்டிருந்தார்கள்..

இந்த நாளில் ஒரு நல்ல புத்தகத்தை பதிப்பிடுவார்கள், இந்த முறை பள்ளியிலேயே மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை கொடுப்பதற்கான ஆர்டர் கிடைத்திருந்தது, அதை இன்று ஆரம்பிக்கலாம் என்று பேசி முடிவெடுத்தனர்... பின் போன வருடம் பள்ளி சார்ந்தது இல்லாமல், இவர்கள் பதிப்பிட்ட மற்ற புத்தகங்களில் எது அதிகமாக விற்பனையானது என்று கணக்கிட்டார்கள்... அதில் சகுந்தலா எழுதிய புத்தகம் தான் முதலில் இருந்தது... உடனே அங்கு வேலை செய்த ஊழியர் ஒருவர்...

"அதுக்கு தான் நான் இளங்கோக்கிட்ட ஏற்கனவே சொன்னேன்... சகுந்தலாவையே சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டு பூஜைப் பண்ணி பத்திரிக்கையில போட்டா, நம்ம பதிப்பகத்துக்கும் பேர் கிடைக்கும், வாசகர்களுக்கும் சகுந்தலாவை பத்தி தெரியும்னு.. ஆனா அவன் தான் கேக்கவே இல்லை.." என்றார்.. உடனே துஷ்யந்தோ...

"அண்ணா இப்போ சகுந்தலா பூஜைப் பண்ணா என்ன..? இல்ல கங்கா பூஜைப் பண்ணா என்ன..? எல்லாம் ஒன்னு தான்.." என்றதும், கங்கா இளங்கோவை பார்க்க, அவன் இவள் பக்கம் திரும்பவே இல்லை...

"அதாவது என்ன சொன்னேன்னா... சகுந்தலா வந்திருந்தாலும் கங்கா பூஜைப் பண்ணா தான் இளங்கோக்கு திருப்தி, அதைத் தான் சொன்னேன்.." என்றதும், இளங்கோவும் அதை ஆமாம் என்பது போல் ஆமோதித்தான்...

"போங்க இளங்கோ அண்ணா.. எனக்கும் சகுந்தலாவோட ரைட்டிங் ரொம்ப பிடிக்கும்... அவங்களை வர வச்சிருந்தா நான் நேர்லேயே பார்த்திருப்பேனே.." என்றாள் ரம்யா..

இவன் நான் தான் சகுந்தலான்னு தெரிஞ்சு பேசறானா..?? இல்ல தெரியாம பேசறானா..?? என்று கங்கா குழம்பினாள்... இந்த பெயரில் இவள் கதையெழுதுவது அவனுக்கு எப்போதும் தெரியவே கூடாது என்று நினைத்தவள், அந்த பேச்சை மாற்றும் விதமாக,

"ஆமாம் உங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கையெல்லாம் அடிச்சாச்சா..?? எப்போ எங்களையெல்லாம் இன்வைட் பண்ணப் போறீங்க..??" என்று அவனிடம் கேட்டதும், துஷ்யந்த் பதில் சொல்வதற்கு முன்னரே,

"ஏன் துஷ்யந்த் பத்திரிக்கை வச்சு தான் கல்யாணத்துக்குப் போகனுமா என்ன..?? துஷ்ய்ந்த் ஒன்னும் யாரோ இல்ல.. அந்த பார்மாலிட்டிஸ்ல்லாம் எங்களுக்கு தேவையில்லை.." என்று இளங்கோ கூறினான்.

"அதானே சார் கல்யாணத்துக்கு பத்திரிக்கையெல்லாம் கொடுக்கனும்னு இல்ல... அதில்லாமேயே நாங்க கல்யாணத்துக்கு போவோம்.." என்று ரம்யாவும் கூறினாள்.

வாணியோ, இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த, இப்போ என்னாச்சு உனக்கு.. என்பது போல் ஒரு பார்வை பார்த்தார்... ஆனால் இதுக்கெல்லாம் மெனக்கிடாமல் அவள் கொடுத்த சர்க்கரைப் பொங்கலை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தான் துஷ்யந்த்...

ஏனோ அவன் சகுந்தலாவை பற்றி பேசிய எரிச்சலில் தான் இப்படி அவனிடம் கேட்டாள் அவள்... கல்யாணமே வேண்டாம் என்றவனை என்னென்னவோ பேசி சம்மதிக்க வைத்தவளே இவள் தான், இப்போது இவளே அவனிடம் எப்படி பேசிவிட்டாள்... இனியாவது கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்... ஆனால் இவளை விடவும் மற்றவர்கள் அவனிடம் எவ்வளவு மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது..

பின்பு சிறிது நேரத்தில்  எல்லோரிடமும் அவன் விடைப்பெற்று கிளம்பும் போது, "மீட்டிங் சக்சஸ் புல்லா அமைய வாழ்த்துக்கள்.." என்றாள் அவள், அவனும் ஒரு புன்னகையோடு "தேங்க்ஸ்.." என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

பெண்களுக்கு தேவையானவற்றையெல்லாம் எடுத்து முடித்தார்கள்... யமுனாவிற்கும் கோமதி ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார்... அவள் வேண்டாமென்று மறுத்தும் அவர் கேட்கவில்லை... பின் அவள் அதை வாங்கிக் கொண்டாள்... இன்னும் என்னென்ன எடுக்க வேண்டுமோ, அதை சாப்பிட்டு முடித்ததும் எடுத்துக் கொள்ளலாம் என்று செல்வா எல்லோரையும் ஒரு உயர் ரக அசைவ உணவகத்திற்கு கூட்டிக் கொண்டு போனான்...

அங்கு நான்கு பேர் உட்காரும்படியான இருக்கைக்கள் போடப்பட்டிருந்தது... யமுனாவும், நர்மதாவும்.. கோமதி மற்றும் விஜியோடு உட்கார, செல்வா நர்மதாவின் குடும்பத்தோடு உட்கார்ந்துக் கொண்டான்... கோமதியும், விஜியும் ரெஸ்ட் ரூம் சென்றிருக்க, நர்மாதா அந்த ரெஸ்ட்டாரன்ட்டை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்...

"ஏ நர்மதா... என்ன இந்த ஹோட்டலை விலைக்கு வாங்கப் போற ஐடியா ஏதாவது வச்சிருக்கியா என்ன..?? அப்படி பார்த்துக்கிட்டு இருக்க..??"

"இல்லடி... இந்த ரெஸ்ட்டாரன்ட்டைப் பார்த்தா.. ஒவ்வொரு அயிட்டமும் செம காஸ்ட்டிலியா இருக்கும்னு நல்லா தெரியுது... சிம்பிளா ஏதாவது ஒரு ஹோட்டல்ல லன்ச்சை முடிச்சிட்டு ஷாப்பிங்கை கன்டினியூ பண்ணியிருக்கலாம்... அதை தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..." என்று அவள் பதில் சொல்லவும்,

"ஹே ஏதோ நாம ஷாப்பிங் போனப்ப தான் பட்ஜெட் போட்டு சாப்பிட்டோம்... இங்கேயும் வந்து ஏன்டி அதே திங்க்கிங்ல இருக்க... இவங்கெல்லாம் இதுபோல ரெஸ்ட்டாரன்ட்டுக்கு தான் வருவாங்க... நீயும் அதுக்கு இப்பவே பழகிக்க... இப்போ இந்த மெனு கார்டை பார்த்து ஏதாவது அயிட்டத்தை முடிவுப் பண்ணு... இதுல இருக்க பேரை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு.." என்றாள் யமுனா.

"ஹே நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராய் இல்லை.. நாம எப்பவும் சாப்ட்ற பிரியாணி இல்ல ப்ரைட் ரைஸ் இதுல ஏதாவது ஒன்னை ஆர்டர் செய்வோம்.." என்றாள்..  இவர்கள் பேசியதையெல்லாம் செல்வாவும் கேட்டுக் கொண்டிருந்தான்...

கோமதியும், விஜியும் வந்ததும், "என்னம்மா என்ன சாப்ட்றதுன்னு முடிவுப் பண்ணீட்டீங்களா..??" என்று இருவரையும் பார்த்து கோமதி கேட்டார்.

"எங்க ரெண்டுப்பேருக்கும் சிக்கன் ப்ரைட் ரைஸ் மட்டும் போதும்.." என்றாள் நர்மதா..

"என்னம்மா... அதெல்லாம் அடிக்கடி சாப்ட்றது தானே.. வேறெதாவது ஆர்டர் பண்ணி சாப்பிடுங்களேன்.." என்று அவர் சொன்னதும்,

"தெரியாத அயிட்டத்தை ஆர்டர் பண்ணிட்டு, அது நல்லா இல்லன்னா அப்புறம் அது வேஸ்ட் ஆயிடும்.. அதுக்கு தான் வெறும் ப்ரைட் ரைஸே போதும்.." என்று விளக்கமாக கூறினாள் நர்மதா..

அதற்கு கோமதி ஏதோ சொல்ல வர, இடையில் குறுக்கிட்ட செல்வா.. "அம்மா எனக்கு தெரிஞ்ச அயிட்டத்தை நானே எல்லோருக்கும் ஆர்டர் செய்றேன்... சாப்பிட்டு பார்க்க சொல்லுங்க.. நல்லா இருக்கும்.. அம்மா உங்க மருமக ரொம்ப சிக்கனம் தான்... இப்படியே இதை எப்பவும் கடைப்பிடிச்சா, நம்ம சொத்தையேல்லாம் ஏழேழு தலைமுறைக்கு கட்டி காப்பாத்தலாம் போலயே.." என்றான்...

அவன் என்னவோ அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டு சாதாரணமாக தான் இப்படி சொன்னான்... ஆனால் நர்மதாவிற்கோ, இவள் நடிப்பதாக அவன் குத்திக் காட்டி சொல்கிறான் என்று நினைத்து அவனை முறைத்தாள்... அவனோ, இவ எதுக்கு காலையில இருந்து நம்மள முறைச்சிக்கிட்டே இருக்கா..?? என்று நினைத்தவன், அதற்குள் ஆர்டர் எடுக்க வந்தவரிடம் திரும்பி உணவு வகைகளை ஆர்டர் செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.