(Reading time: 16 - 32 minutes)

ளங்கோவிற்கு இன்னும் கூட நர்மதா தான் துஷ்யந்திற்கு பார்த்திருக்கும் பெண் என்பதை நம்ப கஷ்டமாக இருந்தது...  அது யாரோ ஒரு பெண் எனும்போதே அவளுக்காக வருத்தப்பட்டவன்... இப்போது நர்மதா தான் அந்த பெண் என்று தெரிந்தும், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறான்...

ஏற்கனவே யோசித்தது தான், இந்த திருமணம் வெறும் பேச்சளவில் இருந்திருந்தால், ஏதாவது செய்திருப்பான்... ஆனால் இப்போது எதை செய்து இந்த திருமணத்தை நிறுத்துவது என்றும் புரியவில்லை... ஆனால் அதற்காக நர்மதாவிற்கும், துஷ்யந்திற்கும் திருமணம் நடக்கட்டும் என்று சாதாராணமாகவும் இருக்க முடியவில்லை...

அதுவும் அங்கு யமுனாவும் உடன் இருந்த நிலையில், அவளே துஷ்யந்த் பற்றி கேட்ட நிலையில் இவன் என்னவென்று சொல்வான்..?? துஷ்யந்த் பற்றி சொல்ல வேண்டுமானால், கங்காவைப் பற்றியும் சொல்ல வேண்டும்... யமுனாவிடம் கங்காவை பற்றி எப்படி கூற முடியும்..?? சரி கங்கா விஷயத்தை மறைத்து துஷ்யந்தை தவறானவன் என்று சும்மா கதைக்கட்டி சொல்லலாம்.. ஆனால் இவன் வாயினால் அவனை நல்லவன் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்..?? அப்படியே மனசாட்சிக்கு விரோதமாக துஷ்யந்தைப் பற்றி சொன்னால், ஆதாரமில்லாமல் ஒருவரை குறை கூற முடியுமா..?? அவன் எந்த விதத்தில் தவறு செய்தவன் என்று சொல்வது..??

மனம் வெகுவாக குழம்பி போயிருந்தது... இதற்கு தீர்வு என்ன என்று தெரியவில்லை... துஷ்யந்தோடு கங்காவை தவிர வேறொரு பெண்ணை சேர்த்து வைத்து இவனால் பார்க்க முடியவில்லை... அதுவும் அந்த பெண் நர்மதா எனும்போது அவள் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது... பேசாமல் துஷ்யந்திடம் பேசலாமா..?? என்று யோசித்தான்... பின் அது சரியில்லை என்று நினைத்தவன், கங்காவிடம் இதைப்பற்றி பேசலாம், என்று முடிவு செய்து... ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று அவளை பதிப்பகத்திற்கு வரச் சொல்லி குறுந்தகவல் அனுப்பினான்.

காலையில் தான் பதிப்பகத்தின் பூஜையில் இருவரும் சந்தித்திருந்தனர்... அதற்குள் மாலை திரும்ப சந்திக்க வேண்டுமென்று இளங்கோ சொல்லவே என்னவோ, ஏதோவென்று பதிப்பகத்திருக்கு வந்திருந்தாள் கங்கா..

"என்ன இளங்கோ... காலையில தான பார்த்தோம்.. அதுக்குள்ள என்ன..??"

"கங்கா... நீ நர்மதாக்கு கல்யாணம் முடிவாயிடுச்சுன்னு சொன்னல்ல... அது உண்மை தான்... அவ இன்னிக்கு தான் எனக்கு இன்விடேஷன் கொடுத்தா..."

"நான் சொன்னப்ப நீ நம்பல... இப்போ அது உண்மையாயிடுச்சு பார்த்தீயா..??"

"ஆமாம் இன்னும் கூட நம்ப முடியாததெல்லாம் நடக்குது.."

"என்ன இளங்கோ... புரியற மாதிரி சொல்லு..."

"நர்மதாக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை வேற யாருமில்லை... அது துஷ்யந்த் தான்... இரண்டுப்பேருக்கும் தான் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க.." என்று அவன் சொன்னதும், அவள் மனதிற்கு அந்த செய்தி சந்தோஷத்தை தான் கொடுத்தது... ஆனால் அவன் அடுத்து சொன்ன விஷயங்கள் அவளுக்கு கோபத்தை வரவழைத்தது...

"இன்விடேஷன்ல துஷ்யந்த் பேரை பார்த்ததும், நான் எவ்வளவு ஷாக் ஆயிட்டேன் தெரியுமா..?? நான் இப்படி நடக்கும்னு கனவுல கூட நினைச்சதில்ல... அது யாரோன்னு நினைச்சப்பவே எனக்கு வருத்தமா இருந்துச்சு... இதுல அந்தப் பொண்ணு நர்மதான்னு தெரிஞ்சப்ப, என்னால ஒன்னும் செய்ய முடியலையேன்னு குற்ற உணர்வா இருக்கு.."

"என்ன சொல்ற இளங்கோ... நீ சொல்றதைப் பார்த்தா, நர்மதா துஷ்யந்தை கல்யாணம் செஞ்சுக்கறது தப்புன்னு சொல்ற மாதிரி இருக்கு... துஷ்யந்தை கல்யாணம் செஞ்சுக்க நர்மதா கொடுத்து வச்சிருக்கனும் தெரியுமா..??"

"ஆனா துஷ்யந்தோட மனசுல இடம் பிடிச்சிருக்க ஒரே அதிர்ஷ்டசாலி நீயாக தான் இருப்ப... இன்னொரு பொண்ணுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கறது கஷ்டம்னு உனக்கு வேணும்னா புரியாம இருக்கலாம்... ஆனா எனக்கு அது நல்லாவே தெரியும்.."

"இங்கப் பாரு இளங்கோ... எதுவும் நிரந்தரம் கிடையாது... மனுஷனோட மனசு மாறிக்கிட்டே இருக்கும்... துஷ்யந்த் எப்பவும் இப்படியே இருக்கப் போறதில்ல... கண்டிப்பா அவர் மனசு மாறும்..."

"ஆனா அது எப்போ..??"

"அதுக்கு நாம தான் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கனும் இளங்கோ... அவரை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சத்தே நான் தான்...  அவர் கல்யாண வாழ்க்கைக்கு என்னைக்குமே இடைஞ்சலா நான் இருக்க மாட்டேன்... துஷ்யந்தும் தன்னை நம்பி வந்த பொண்ணுக்கு துரோகம் நினைக்க மாட்டாரு... அப்புறம் அவர் மனசு கொஞ்சம் கொஞ்சமா நர்மதா பக்கம் சாய ஆரம்பிச்சிடும்... கொஞ்ச நாளில் எல்லாம் சரியாயிடும் இளங்கோ..."

"துஷ்யந்தோட மனசு அவ்வளவு சீக்கிரம் மாறாது கங்கா... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? நர்மதாவை துஷ்யந்த் இதுவரைக்கும் நேர்ல பார்த்து பேசவே இல்லை... வசதியான இடங்கிறதால ஏதாவது பிரச்சனை இருக்குமோன்னு நம்ம யமுனாவுக்கே சந்தேகம் வந்துருக்கு... அதை அவளே என்கிட்ட சொன்னா..

அதுமட்டுமில்லாம நர்மதாக்கு ஏற்கனவே லவ் பெயிலியராம்... அவளோட கல்யாண வாழ்க்கை சந்தோஷமா அமையனும்... அப்போ தான் அவளால பழசையெல்லாம் மறக்க முடியும்..." அவன் அப்படி சொன்னதும், ஆட்டோவில் கல்யாணத்தைப் பற்றி பேசும்போது, அவள் முகம் வருத்தத்தை காண்பித்தது இப்போது கங்காவிற்கு ஞாபகத்திற்கு வந்தது...

"ஏற்கனவே லவ் பெயிலியரான நர்மதாவால துஷ்யந்தை புரிஞ்சிக்கவும் வாய்ப்பிருக்குல்ல இளங்கோ..."

"நீ ரொம்ப சுயநலமா மாறிட்ட கங்கா.. உன்னால துஷ்யந்தோட மனசையும் புரிஞ்சிக்க முடியல... ஒரு பொண்ணா நர்மதாவோட மனசையும் புரிஞ்சிக்க முடியல... ஆனா அப்படி என்னால இருக்க முடியாது... உங்களுக்கு நர்மதா மேல அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்.. நீங்க துஷ்யந்த் பத்தி விசாரிங்கன்னு யமுனா என்கிட்ட சொன்னப்போ... துஷ்யந்தோட மனசு என்னன்னு தெரிஞ்சும், அங்க ஒன்னும் சொல்லாம வந்தது எவ்வளவு குற்ற உணர்வா இருக்கு தெரியுமா..??"

"ஆமாம் எனக்கு சுயநலம் தான் இளங்கோ... காலம் முழுக்க துஷ்யந்த் இப்படியே அவர் வாழ்க்கையை அழிச்சுக்காம கல்யாணம் பண்ணி குடும்பமா சந்தோஷமா இருக்கனும்னு நினைச்சேனே... நான் சுயநலவாதி தான்...

அவரை கஷ்டப்பட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சேன்... நர்மதா மாதிரி ஒரு நல்லப் பொண்ணை அவர் கல்யாணம் செஞ்சுக்க போறத நினைச்சு சந்தோஷமும் பட்டேன்... ஆனா இப்போ இந்த கல்யாணம் நின்னா, திரும்ப துஷ்யந்தை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..??

துஷ்யந்தை கூட விடு... அவரோட அம்மாவை பத்தி யோசிச்சியா..?? தன்னோட மகனோட கல்யாணம் நடக்கப் போறத நினைச்சு எவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க... குடும்பமே சந்தோஷமா கல்யாண வேலையை கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க... இப்போ இந்த கல்யாணத்துல பிரச்சனைன்னா, அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்க... இப்போ நீ செய்யப் போற காரியம், எத்தனை பேர் மனசை காயப்படுத்தும் தெரியுமா..??

அதுமட்டுமில்ல, இந்த கல்யாணம் நின்னுடுச்சுன்னா, நான் தான் இதுக்கெல்லாம் காரணம்னு திரும்ப என்னையே குற்றம் சாட்டுவாங்க... ஏன் எனக்கே அது கஷ்டமா தான் இருக்கும்... இதையெல்லாம் மீறி இதை நீ சொல்லதான் போறேன்னா, போய் சொல்லு... ஆனா துஷ்யந்த் இப்படி இருக்க நான் தான் காரணம்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு... பேசாம யாருக்கும் சொல்லாம எங்கேயாச்சும் கண் காணாத இடத்துக்கு நான் போயிட்டா... எல்லாம் ஒரு நாள் சரியாகிடும்..."

"என்ன பேசற கங்கா... இப்படியெல்லாம் பேசாதன்னு நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன்... அப்புறமும் இப்படி பேசினா என்ன அர்த்தம்..??"

"நான் ஒருத்தி இருக்கறது தான் எல்லோருக்கும் இடைஞ்சலா இருக்குன்னு அர்த்தம்... உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்... அதான் எல்லோரையும் விட்டு விலகிப் போயிட்டா நீங்கல்லாம் நிம்மதியா இருப்பீங்க இல்ல.."

"பைத்தியம் மாதிரி பேசாத... நாங்க யாரும் அப்படி நினைக்கல... சரி இப்போ என்னை என்ன பண்ண சொல்ற..??"

"உன்னால துஷ்யந்தோட கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு எனக்கு சத்தியம் செஞ்சுக் கொடு இளங்கோ..."

"கங்கா.."

"இந்த கல்யாணம் நடந்தா, இரண்டுப்பேருமே சந்தோஷமா தான் இருப்பாங்க இளங்கோ... கடவுள் மேல நம்பிக்கை வை.. அதனால எனக்கு சத்தியம் செஞ்சுக் கொடு.."

"அப்போ துஷ்யந்தை பத்தி யமுனா கேட்டா.. நான் என்ன சொல்றது...??"

"இந்த கங்கா விஷயத்தை தவிர்த்து துஷ்யந்தை நினைச்சுப் பாரு.. அப்போ உனக்கு என்ன தோனும்..."

"உன்னோட விஷயத்தை பொறுத்த வரைக்குமே, துஷ்யந்த் தப்பானவர் இல்ல.. உன்னோட பிடிவாதம் தான் இவ்வளவும் நடக்க காரணம்...

"அப்போ துஷ்யந்தைப் பத்தி நீ நல்லவிதமா தானே நினைக்கிற... அதையே யமுனாக்கிட்ட சொல்லு... இப்போ எனக்கு சத்தியம் பண்ணு.."

"சரி சத்தியமா என்னால இந்த கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் வராது.." என்று அவள் கையில் அடித்து சத்தியம் செய்தான்... இரண்டு நாட்கள் கழித்து யமுனா பேசிய போதும், அவளிடம் துஷ்யந்த் பற்றி நல்லவிதமாகவே கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.